என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ரூ.200 கோடியை கடத்த திட்டமிட்ட அரசியல் பிரமுகரிடம் விரைவில் விசாரணை
    X

    ரூ.200 கோடியை கடத்த திட்டமிட்ட அரசியல் பிரமுகரிடம் விரைவில் விசாரணை

    • வினோத் குமார் ஜோசப்பை அமலாக்கத்துறையினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
    • தமிழகத்தை சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகரிடம் பணியாற்றி வரும் அப்பு என்கிற விநாயகனிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுவதையொட்டி பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். வருமான வரித்துறையினரும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் அடிக்கடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இப்படி பணப்பட்டு வாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் செலவுக்காக துபாயில் இருந்து ரூ.200 கோடி ஹவாலா பணத்தை கொண்டு வர திட்டமிட்டிருக்கும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த வினோத் குமார் ஜோசப் துபாயில் இருந்தபடியே இதுபோன்ற ஹவாலா பண பரிமாற்றங்களை மேற்கொண்டு வந்துள்ளார்.

    இது போன்ற மேலும் பல குற்றச்சாட்டுகளின் பேரில் வினோத் குமார் ஜோசப் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளார். சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர் பயன்படுத்தி ஐ-பேட், செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தபோது தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகருக்காக ரூ.200 கோடி பணத்தை ஹவாலா முறையில் அனுப்ப திட்டமிட்டது உறுதியானது. இது தொடர்பான தகவல்களை வருமான வரித்துறையினர் வெளியிட்டிருந்தனர்.

    இதையடுத்து வினோத் குமார் ஜோசப்பை அமலாக்கத்துறையினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஹவாலா பணப் பரிமாற்ற விவகாரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் தங்களது விசாரணை முடுக்கிவிட்டுள்ளனர்.

    ஹவாலா பண பரிமாற்ற விவகாரம் துபாய், மலேசியா நாடுகளுடனும் தொடர்பில் இருப்பதால் அமலாக்கத் துறையினர் இதன் பின்னணியில் இருப்பவர்களிடம் அடுத்த கட்டமாக விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர்.

    தமிழகத்தை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி பிரமுகருக்கு ஹவாலா பணத்தை சட்ட விரோதமாக கடத்தி வருவதற்கு தேர்தல் பிரசார களத்தில் உள்ள அப்பு என்கிற விநாயகன் என்பவரும் முக்கிய பங்காற்றியிருப்பதும் தெரிய வந்து உள்ளது. துபாயில் இருந்து வந்த வினோத் குமார் ஜோசப்பிடம் நடத்தப்பட்ட விசாரணையில் செல்வம் என்பவரும் ஹவாலா பணப் பரிமாற்ற விவகாரத்தில் திட்டம் தீட்டி செயலாற்றி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தமிழகத்தை சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகரிடம் பணியாற்றி வரும் அப்பு என்கிற விநாயகனிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருக்கு சம்மன் அனுப்ப உள்ளனர்.

    இந்த விசாரணையின்போது ஹவாலா பணப் பரிமாற்ற விவகாரத்தில் யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது பற்றிய தகவல்களை திரட்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் யாருக்காக இந்த பணத்தை அனுப்ப திட்டமிட்டார்களோ? அவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் ஹவாலா பணம் விவகாரத்தில் அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளியும் விரைவில் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுகிறார்.

    Next Story
    ×