search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காசிமேட்டில் மீன் விலை அதிகரிப்பு
    X

    காசிமேட்டில் மீன் விலை அதிகரிப்பு

    • மீன்பிடி தடைகாலம் வருகிற 15-ந்தேதி முதல் தொடங்க உள்ளது.
    • கடந்த வாரத்தில் கிலோ ரூ.900-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் இன்று ரூ.1300-க்கு விற்பனை ஆனது.

    ராயபுரம்:

    காசிமேட்டில் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 1800-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். வார விடுமுறை நாட்களில் காசிமேட்டில் மீன்வாங்க கூட்டம் அலைமோதும்.

    இந்த நிலையில் மீன்பிடி தடைகாலம் வருகிற 15-ந்தேதி முதல் தொடங்க உள்ளது. தொடர்ந்து 61 நாட்கள் இது நடைமுறையில் இருக்கும். மீன்பிடி தடைகாலத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்பி வரத்தொடங்கி விட்டனர்.

    விசைப்படகு மீனவர்கள் சுமார் ஒருவாரம் முதல் 15 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கி மீன்பிடிப்பது வழக்கம். எனவே குறைந்த அளவிலான விசைப்படகு மீனவர்களே கடலுக்குள் சென்று உள்ளனர்.

    மேலும் கடலுக்குள் சென்ற மீனவர்களும் கரைக்கு திரும்பி வரத் தொடங்கி உள்ளதால் விடுமுறை நாளான இன்று குறைந்த விசைப்படகுகளே திரும்பின. 80 முதல் 90 விசைப்படகுகள் மட்டுமே கரைக்கு திரும்பியதால் பெரிய வகை மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு வரவில்லை. இதனால் மீன்விலை அதிகரித்தது.

    வருகிற 15-ந்தேதி முதல் மீன்பிடி தடை காலம் தொடங்கி விடும் என்பதால் விடுமுறை நாளான இன்று காசிமேட்டில் மீன் பிரியர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. எனினும் பெரிய வகை மீன்கள் விற்பனைக்கு இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். சிறிய மீன்களும் விலை அதிகமாக இருந்தது. வஞ்சிரம், கொடுவா, கானாங்கத்தை, நண்டு, இறால் உள்ளிட்ட மீன்கள் மட்டும் விற்பனைக்கு இருந்தது.

    கடந்த வாரத்தில் கிலோ ரூ.900-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் இன்று ரூ.1300-க்கு விற்பனை ஆனது. இதேபோல் ரூ.400-க்கு விற்பனை ஆன கொடுவா ரூ.600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நண்டு-ரூ.450, இறால்-ரூ.500, நெத்திலி-ரூ.350, கானாங்கத்தை- ரூ.250-க்கு விற்கப்பட்டது. அடுத்த வாரம் முதல் மீன்பிடி தடைகாலம் தொடங்கிவிடும் என்பதால் மீன்விலை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

    Next Story
    ×