என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • எளிய வானியல் நிகழ்வை அவரவர் வீடுகளிலேயே செய்து பார்க்கலாம்.
    • உரிய நேரத்தில் சமதள பரப்பளவில் ஏதேனும் ஒரு உருளையான பொருளை செங்குத்தாக வைத்து அதன் நிழல் விழவில்லையா என்பதை பார்க்கலாம்.

    திருச்சி:

    தினமும் சூரியன் நமக்கு மேல் உச்சியில் செல்வதுபோல தெரிந்தாலும், ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டுமே மிகச் சரியாக உச்சியில் வரும். அப்போது ஒரு பொருளின் மேல் விழும் சூரிய வெளிச்சத்தின் விளைவாக, நிழல் அப்பொருளின் பரப்புக்கு உள்ளேயே விழுவதால் அதன் நிழலைப் பார்க்க முடியாது.

    இந்த நிகழ்வு வெறும் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே நடைபெறும். இந்த நாட்களை நிழல் இல்லா நாள் அல்லது பூஜ்ய நிழல் நாள் என்கின்றனர்

    இதன்படி நடப்பாண்டு திருச்சி மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, மணிகண்டம், திருவெறும்பூர் பகுதிகளிலும் நாளை ( வியாழக்கிழமை) புள்ளம்பாடி, லால்குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், முசிறி, தா.பேட்டை, தொட்டியம் பகுதிகளிலும், நாளை மறுநாள் (19-ந்தேதி) துறையூர் உப்பிலியபுரம் பகுதிகளிலும் நிழல் இல்லா நாள் அமைகிறது.

    இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்க திருச்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன் கூறுகையில்,

    இந்த எளிய வானியல் நிகழ்வை அவரவர் வீடுகளிலேயே செய்து பார்க்கலாம். உரிய நேரத்தில் சமதள பரப்பளவில் ஏதேனும் ஒரு உருளையான பொருளை செங்குத்தாக வைத்து அதன் நிழல் விழவில்லையா என்பதை பார்க்கலாம்.

    உங்கள் ஊரில் எப்போது நிழல் இல்லா நேரம் என்பதை அறிந்து கொள்ள https:// alokm.com/zsd.html என்ற இணையதளத்தில் சென்று, ஊர் பெயரை தட்டச்சு செய்தால் உரிய நேர விவரம் கிடைக்கும் என்றார்.

    • தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
    • தேர்தலையொட்டி பிரதமர் மோடி 9 முறை தமிழகத்துக்கு வந்து இருக்கிறார்.

    கோவை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கோவை வி.கே.கே.மேனன் சாலையில் நடந்த இந்தியா கூட்டணி கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். இதை யாராலும் மாற்ற முடியாது.

    தேர்தலையொட்டி பிரதமர் மோடி 9 முறை தமிழகத்துக்கு வந்து இருக்கிறார். அவர் 9 முறை அல்ல, 100 முறை தமிழகம் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது.

    தமிழகம் வந்த பிரதமர் மோடி, திராவிட இயக்கத்தை அழித்து விடுவேன் என்று பேசி உள்ளார். ஒரு பெரிய பதவியில் இருந்து கொண்டு இப்படி பேசுவது அந்த பதவிக்கு அழகல்ல. இந்த திராவிட இயக்கம் ரத்தம் சிந்தி தோன்றியது. ஆதிக்கவாதிகளிடம் இருந்து மக்களை பாதுகாக்க தோன்றிய இந்த இயக்கத்தை காப்பதற்கு பலர் தங்களது இன்னுயிர்களை சிந்தி உள்ளனர். இந்த இயக்கத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள்.


    திராவிட இயக்கம் என்றால் அண்ணா தொடங்கிய தி.மு.க., எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. தான். இந்த இயக்கத்தை எவராலும் அழிக்க முடியாது. நமது நாட்டில் பிரதமர் என்ற பதவியில் பலர் இருந்துள்ளனர். பாரதிய ஜனதாவைச் சேர்ந்த வாஜ்பாயும் இருந்துள்ளார். அவர் அற்புதமான தலைவர். ஆனால் தற்போது இருக்கும் பிரதமர் மோடி, ஆணவத்தில் இருக்கிறார். இப்படிப்பட்ட பிரதமரை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை.

    நாங்கள் இதுபோன்று எத்தனையோ பேரை பார்த்து விட்டோம். உங்கள் பயமுறுத்தல் எல்லாம் எங்களிடம் பலிக்காது. இங்கு அந்த கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்தல் விதிகளை மீறி பேசி வருகிறார். அவர் முன்னாள் போலீஸ் அதிகாரியாக இருந்தவர். அவருக்கு விதிமுறைகள் எல்லாம் தெரியாதா?

    தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள காலை உணவுத்திட்டம், கனடா நாட்டில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இப்படி பிற மாநிலத்துக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் கடைபிடிக்கும் திட்டமாக இருக்கிறது. கோவை மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்கள். இது தொழிலாளர்களின் கோட்டை. எனவே நீங்கள் அனைவரும் உதய சூரியனுக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிலிண்டர்கள் வெடித்ததில் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.
    • விபத்து குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை வடபழனியில் உணவகத்தில் கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து விபத்துக்குள்ளானது.

    சிலிண்டர்கள் வெடித்ததில் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.

    இந்த விபத்தில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    காலை நேரத்தில், பரபரப்பாக இயங்கிக்கும் கொண்டிருக்கும் வடபழனி பகுதியில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மலைவாழ் மக்களின் வசதிக்காக பஸ் மற்றும் மின்சார வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.
    • ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பள்ளிக்கூடங்கள் அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    நாகர்கோவில்:

    இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் காலை விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பழங்குடியின மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கக்கூடிய கற்றுவா, பத்துகாணி, ஆறுகாணி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோர் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

    இந்த பிரசாரத்தில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பினுலால் சிங், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது மலைவாழ் மக்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் விஜய் வசந்த் கூறியதாவது:-

    மத்தியில் மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் பா.ஜனதா அரசை விரட்டியடிக்க நீங்கள் அனைவரும் எங்கள் இருவருக்கும் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். பழங்குடியின மக்கள் வாழக்கூடிய மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் மீது அங்கு ஆளும் பா.ஜனதா அரசு கலவரங்களை ஏற்படுத்தி தாக்குதல் நடத்தியது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

    மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் சொல்ல முடியாத சித்ரவதைகளுக்கு ஆளாகினர். இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து வந்து அதை வீடியோவாக வெளியிட்ட அவல நிலை பா.ஜனதா ஆளுகிற மாநிலத்தில் நடைபெற்றது. நம் நாட்டில் அமைதியும், சமாதானமும், ஒற்றுமையும் நிலவ மக்கள் அனைவரும் அன்புடனும், சந்தோஷத்துடன் வாழ்வதற்கு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக அமர வேண்டும். அப்போதுதான் நமது நாட்டின் ஜனநாயகமும், அரசியலமைப்புச் சட்டமும் காப்பாற்றப்படும்.

    குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ரப்பர் தொழிற்சாலை விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்படும். மலைவாழ் மக்களின் வசதிக்காக பஸ் மற்றும் மின்சார வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பள்ளிக்கூடங்கள் அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். எனவே இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உங்கள் விஜய் வசந்த் ஆகிய எனக்கும், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தாரகை கத்பர்ட்டுக்கும் கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் இன்று (புதன்கிழமை) காலை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இருந்து இறுதிக்கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் அவர் மண்டைக்காடு புதூர், மணலிவிளை, கூட்டுமங்கலம், கல்லத்திவிளை, காட்டுவிளை, நடுவூர்க்கரை, சேரமங்கலம், பரப்பற்று, பெரியவிளை, மணவாளக்குறிச்சி, முட்டம், அம்மாண்டிவிளை, திருநயினார்குறிச்சி, வெள்ளிமலை, வெள்ளிச்சந்தை, ஈத்தங்காடு, மேலமணக்குடி, கொட்டாரம், அஞ்சுகிராமம் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். நாகர்கோவிலில் மாலை அவர் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

    • 19-ந்தேதி நடக்கும் வாக்குப்பதிவை முன்னிட்டு இன்றும், நாளையும் 10 ஆயிரத்து 214 பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடக்கிறது. இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குகள் பதிவாக வேண்டும் என்பதற்காக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    அந்த வகையில் வாக்களிக்க சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்குகிறது. பயணிகள் முறையாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    சென்னையில் இருந்து நாளை (வியாழக்கிழமை) மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு ஊர்களுக்கு புறப்பட உள்ள 2 ஆயிரத்து 92 வழக்கமான சேவைகள் மற்றும் 1,785 சிறப்பு சேவைகளில் கிட்டத்தட்ட 95 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    தொடர்ந்து இன்று (புதன்கிழமை) புறப்படும் பஸ்களிலும் போதுமான இருக்கைகள் காலியாக இருக்கின்றன. நாளை (வியாழக்கிழமை) சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள், கூட்ட நெரிசலை தவிர்க்க, தங்கள் பயணத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    19-ந்தேதி நடக்கும் வாக்குப்பதிவை முன்னிட்டு இன்றும், நாளையும் 10 ஆயிரத்து 214 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த 2 நாட்களில் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்து 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதேபோல், தேர்தல் முடிந்து, வருகிற 20 மற்றும் 21-ந் தேதிகளில் 8 ஆயிரத்து 304 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு, திருவண்ணாமலை, அரியலூர், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.

    சென்னையில் இருந்து 6 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு செல்வதாக இருந்தால் போதுமான பஸ்களை இயக்க போக்குவரத்து துறை தயாராக இருக்கிறது. தற்போது நெல்லை, நாகர்கோவிலுக்கு அதிக போட்டி ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பெண்கள், இளைஞர்களிடையேயும், எளிய மக்களிடத்திலும் பா.ஜனதாவிற்கான ஆதரவு அதிகரித்துள்ளது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகன பிரசாரத்தின்போது விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள பா.ஜனதா தேர்தல் அலுவலகத்தில், வடசென்னை பாராளுமன்றத் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பால் கனகராஜ் வடசென்னை தொகுதிக்கான தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். நிகழ்ச்சிக்கு, தமிழக பா.ஜனதா மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னிலை வகித்தார்.

    பின்னர், சுதாகர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பா.ஜனதாவிற்கும், பா.ஜனதா வேட்பாளர்களுக்கும் மிகச்சிறப்பான ஆதரவு கிடைத்து வருகிறது. குறிப்பாக பெண்கள், இளைஞர்களிடையேயும், எளிய மக்களிடத்திலும் பா.ஜனதாவிற்கான ஆதரவு அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்திற்கு வருகை தரும்போதும், பொதுக்கூட்டங்கள் மற்றும் வாகன பிரசாரத்தில் ஈடுபடும் போதும் ஏராளமான மக்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து வருகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் பா.ஜனதாவில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் அதிகளவிலான வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்.பி.க்களாக பாராளுமன்றம் செல்வார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகன பிரசாரத்தின்போது விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், பிரதமர் மோடியின் வாகன பிரசாரத்தின்போது விளம்பர பதாகைகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு ஒரு சட்டம், பிரதமருக்கு ஒரு சட்டமா?. தி.மு.க.வுக்கு வாக்கு வங்கி அரசியல் தான் முக்கியம். பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையில் கூறியதை கண்டிப்பாக நிறைவேற்றுவார். தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாடு முழுவதும் 102 தொகுதிகளிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    • விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை என எச்சரிக்கை.

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக வரும் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் கட்டமாக தமிழகம்- புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (19-ந் தேதி) தேர்தல் நடைபெறுகிறது.

    நாடு முழுவதும் மொத்தம் 21 மாநிலங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகள் முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன. இந்த 102 தொகுதிகளிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அணியில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன.

    அ.தி.மு.க. தலைமையிலான அணியில் அ.தி.மு.க., தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ. மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

    பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., த.மா.கா, அ.ம.மு.க., முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்புக்குழு, புதிய நீதிக்கட்சி, ஐ.ஜே.கே., தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் களம் காண்கின்றன.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வரும் அனல் பறக்கும் பிரசாரம் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது.

    இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைய உள்ளநிலையில் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெளியிட்டார்.
    • கோவை ரைசிங் என்ற தலைப்பில் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

    கோவை:

    தி.மு.க. சார்பில் கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கோவை ரைசிங் என்ற தலைப்பில் கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெளியிட்டார்.

    தி.மு.க. வேட்பாளரின் தேர்தல் அறிக்கையின் முக்கியம் அம்சங்கள் பின்வருமாறு:

    கோவையில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நீர் மாசு கட்டுப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், ஏரிகளில் கழிவு நீர் கலப்பதும் தடுக்கப்படும்.

    கோவை மாவட்டத்தில் பன்னோக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படும்.

    கோவை மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும். முதல் கட்ட பணிகள் உரிய கால நேரத்திற்குள் தொடங்கி முடிவடையும். சிறுவாணி, பில்லூர் ஆறுகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோவை விமான நிலையம் மேம்படுத்தப்படும். புதிய பசுமை தொழில் பூங்காக்கள் நிறுவப்படும்.

    நகை தொழில் புத்துயிர் பெறவும், கிரில் உற்பத்தியாளர்களுக்காகவும் கோவையில் சிட்கோ பூங்கா நிறுவப்படும்.

    விசைத்தறி வளர்ச்சி கவுன்சில் உருவாக்கப்பட்டு மின்சார செலவு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளும் கவனித்துத் தீர்க்கப்படும்.

    பம்புசெட் மற்றும் உதிரிபாகத் தொழில்களில் உள்ள ஜிஎஸ்டி பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.

    கோழிப்பண்ணை விவசாயிகளின் தீவனம், மின்சாரம் மற்றும் இதர பிரச்சனைகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் தீர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கிருஷ்ணகிரி வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து ராஜ்நாத் சிங் பிரசாரம் செய்தார்.
    • நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் பிரதமர் மோடி என்றார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் மத்திய பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் பேசியதாவது:

    ஆலயங்களின் மாநிலமான தமிழகம் வரும்போது மனம் அமைதி கொள்கிறது.

    பார்லிமென்டில் செங்கோல் வைத்ததன் மூலம் தமிழ் கலாசாரம் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் என்று பேசப்படும் போது நம் நினைவுக்கு வருவது செங்கோல் தான்.

    இன்டர்நெட்டில் ஏற்பட்ட புரட்சியால் யுபிஐ சேவை தற்போது அதிகரித்துள்ளது.

    2014-ம் ஆண்டுக்கு பிறகு மருத்துவ வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. நாடுமுழுவதும் புதிதாக 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன.

    பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் முதல் 25 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

    ஐக்கிய நாடுகள் அவையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக்கூறி தமிழின் பெருமையை மோடி உயர்த்தியுள்ளார்.

    நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் பிரதமர் மோடி.

    நாடு முழுவதும் தமிழ் மொழியைக் கொண்டு செல்ல பிரதமர் மோடி பாடுபடுகிறார் என தெரிவித்தார்.

    • திமுக-வுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பலை வீசுவதாக பிரதமர் மோடி நேற்று பேசியுள்ளார்.
    • இதைப் பார்த்து சிரிப்பதா அல்லது அவரின் பகல் கனவைப் பார்த்து பரிதாபப்படுவதா என தெரியவில்லை.

    காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரம் படப்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    திமுக-வுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பலை வீசுவதாக பிரதமர் மோடி நேற்று பேசியுள்ளார். இதைப் பார்த்து சிரிப்பதா அல்லது அவரின் பகல் கனவைப் பார்த்து பரிதாபப்படுவதா என தெரியவில்லை. தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும் என பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளனர்.

    முதலமைச்சராக இருந்த மோடிக்கு பிரதமரானதும் மாநிலங்களைக் கண்டாலே பிடிக்கவில்லை. மோடி ஆட்சியில் மக்கள் வாழ்வதே போராட்டமாக இருக்கிறது. மிகவும் மலிவான பிரிவினைவாத அரசியல் செய்து வருகிறார்.

    ஜவுளி ஏற்றுமதியில் நம்பர் 1, ரெடிமேட் ஏற்றுமதியில் நம்பர் 1, தோல் பொருள் ஏற்றுமதியில் நம்பர் 1, ஏற்றுமதி ஆயத்த நிலைக் குறியீட்டில் நம்பர் 1, எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் நம்பர் 1, கர்ப்பிணி சுகாதாரக் குறியீட்டில் நம்பர் 1, மகப்பேறுக்கு பிந்தைய கவனிப்பில் நம்பர் 1, 50 சிறப்பு பொருளாதார மண்டலங்களுடன் நாட்டிலேயே நம்பர் 1

    பழனிசாமி அவர்களே இதெல்லாமே நாங்கள் சொன்னவை அல்ல, ஒன்றிய அரசின் புள்ளி விபரங்கள். அதிமுக ஆட்சியில் தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் தரவரிசையில் 14-வது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை, திமுக ஆட்சியமைந்ததும் மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றியுள்ளோம்.

    "நான் ஒன்றிய அரசிடம் விருது வாங்கியுள்ளேன். நீங்கள் ஏதாவது விருது வாங்கினீர்களா? என எடப்பாடி பழனிசாமி நம்மிடம் கேட்கிறார். 'நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்' என்ற படத்திற்கேற்ப, பாஜக அரசு உங்களுக்கு விருது வழங்கியிருக்கும்

    பழனிசாமி அவர்களே நாங்கள் மக்களிடம் விருது வாங்கியுள்ளோம். அது எல்லாவற்றையும் விட பெரியது. இன்னொரு விருது, ஜூன் 4ம்தேதி 40-க்கு 40 என்ற விருது கிடைக்கும் பழனிசாமி அவர்களே Wait and See..!"

    எல்லோருக்கும் எல்லாம், அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம். சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்படாத, நான் முதல்வன் திட்டத்தால் ஏராளமான மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். பல ஆயிரம் மாணவர்களின் கனவுகள், நிஜமாக மாறியுள்ளது.

    இன்னொரு தேர்தல் வாக்குறுதி அல்லாத திட்டம்தான் காலை உணவுத் திட்டம். சுமார் 16 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்.

    இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • தேர்தல் பாஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது என்றால், அந்த கட்சியின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
    • அதிமுக-வுக்கு வாக்களித்தது வேஸ்ட் என அன்புமணி தெரிவித்துள்ளார். அதிமுக-வுக்கு வாக்களித்து நான் வெற்றி பெற்றதனால்தான் நீங்கள் எம்.பி.யாக இருக்கிறீர்கள்.

    தருமபுரி அதிமுக வேட்பாளர் டாக்டர் அசோகனை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது பேசும்போது அவர் கூறியதாவது:-

    தருமபுரியில் மும்முனை போட்டி நிலவுகிறது. அதிமுக, திமுக, பாஜனதா கூட்டணியில் பாமக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

    பாட்டாளி மக்கள் கட்சி நமது கூட்டணியில் 2-வது இடம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது. தற்போது 3-வது இடமல்ல. ஐந்தாவது இடத்திற்கு போய்விட்டார்கள். 2019 தேர்தலில் அதிமுக கூட்டணியில் 2-வது இடத்தில் பாமக இருந்தது. 3-வது இடத்தில்தான் பா.ஜனதா இருந்தது.

    இந்த தேர்தல் பாஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது என்றால், அந்த கட்சியின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதிமுக-வுக்கு வாக்களித்தது வேஸ்ட் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

    அதிமுக-வுக்கு வாக்களித்து நான் வெற்றி பெற்றதனால்தான் நீங்கள் எம்.பி.யாக இருக்கிறீர்கள். ஒரு எம்எல்ஏ கூட இல்லாத நிலையில் மக்கள் அதிமுக எம்.எல்.ஏ.-க்களை தேர்ந்தெடுத்ததன் மூலம் நாங்கள் உங்களை எம்.பி.யாக தேர்ந்தெடுத்தோம்.

    எங்களிடம் பிரதமர் வேட்பாளர் யார் எனக் கேட்கிறார். அவர் மத்திய அமைச்சரவையில் இருந்தபோது ஒரு திட்டத்தையாவது இந்த பகுதிக்கு கொண்டு வந்தாரா?. தமிழக மக்கள் பயன்படும் வகையில் பாராளுமன்றத்தில் பேசினாரா?. பிரதமரை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள். அடிமையாக இருக்க பார்க்கிறீர்கள்.

    மத்தியில் யார் என்பது எங்களுக்கு தேவையில்லை. மக்கள்தான் தேவை. மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். தனித்து போட்டியிட்டால்தான் பாராளுமன்றத்தில் மக்களின் பிரச்சனைகளை பேச முடியும். உங்களுக்கு பதவி வேண்டும். அதனால் கூட்டணி அமைத்துள்ளீர்கள். பாமக அடிக்கடி கூட்டணி மாறிக்கொண்டே இருக்கும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    • பாலகணபதி பேசும் போது, கடந்த முறை வெற்றி பெற்றவர் தொகுதிக்கு எந்த திட்டமும் செயல்படுத்த வில்லை.
    • கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் சென்று ஆதரவு திரட்டினர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.வி.பாலகணபதி காக்களுர், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடுகாடு, மப்பேடு, கூவம், பேரம்பாக்கம் உட்பட பல்வேறு கிராமங்களுக்கு சுட்டெரிக்கும் வெயிலில் வீதி வீதியாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

    அப்போது காக்களுர் பகுதியில் உள்ள டீக்கடையில் பொது மக்களுக்கு டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது வேட்பாளர் பொன்.வி.பாலகணபதி பேசும் போது, கடந்த முறை வெற்றி பெற்றவர் தொகுதிக்கு எந்த திட்டமும் செயல்படுத்த வில்லை.

    வளா்ச்சி திட்ட பணியும் மேற்கொள்ளவில்லை. எனவே எனக்கு ஒருமுறை வாய்ப்பு அளித்தால் தொகுதி மக்களோடு இருந்து மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பேன். எனவே எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    வேட்பாளருடன் மாவட்ட பொது செயலாளர் கருணாகரன், ஆர்யா சீனிவாசன், மண்டல் தலைவர் ராஜேந்திரன், தரவு மேலாண்மை மாநில செயலாளர் ரகு, கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் லட்சுமி காந்தன், காக்களூர் மோகன், அமமுக மாவட்ட செயலாளர் ஏழுமலை, ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் சீனன், மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் தியாகு, முன்னாள் ஒன்றிய செயலாளர் விநாயகம், வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர் பலராமன், கிளை செயலாளர் பார்த்திபன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் சென்று ஆதரவு திரட்டினர்.

    ×