என் மலர்
உள்ளூர் செய்திகள்
- காசிக்கு நிகரான சிறப்பும் பெற்றது அவினாசிலிங்கேசுவரர் கோவில்.
- காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
அவினாசி:
கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான சிறப்பும் பெற்ற திருப்பூர் மாவட்டம் அவினாசி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
திருவிழாவையொட்டி 18-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தனர். 19-ந்தேதி இரவு கற்பக விருட்சம் திருக்கல்யாணம் நடந்தது. 20-ந்தேதி காலை 6 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை 9.30 மணி அளவில் தேரில் இருந்து அருள்பாலித்த உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. பின்னர் அதிர்வேட்டுகள் முழங்க காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சிவ... சிவா... என்ற பக்திகோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் தேர் நிலையிலிருந்து சிறிது தூரம் இழுத்து வடக்கு வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது.
மீண்டும் இன்று (திங்கட்கிழமை) காலை 2-வது நாள் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்பு தேர் மாலையில் நிலை வந்து சேர உள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) சிறிய அம்மன் தேர் இழுக்கப்படுகிறது.
- பிரியதர்ஷினி நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
- 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கருதினர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொக்குபட்டியை சேர்ந்தவர் அருண்பாண்டி (வயது21). இவர் பெயிண்டிங் காண்டிராக்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ரெட்டிசந்தூர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி (20) என்பவருக்கும் இன்ஸ்டா கிராமம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பிரியதர்ஷினி நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
நாளடைவில் இது காதலாக மாறி கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கருதினர். இதனால் அவர்கள் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
போலீசார் இருவரின் பெற்றோரையும் வரவழைத்தனர். இதில் பிரியதர்ஷினியின் பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அருண்பாண்டியின் குடும்பத்தினர் சம்மதித்ததால் போலீஸ் நிலையம் அருகில் உள்ள கோவிலில் அருண்பாண்டி மற்றும் பிரியதர்ஷினிக்கு திருமணம் நடைபெற்றது. இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பபடி செல்லலாம் என போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
- பிரம்மோற்சவ விழா, கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் உற்சவ முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், தினமும் ஓரு வாகனத்தில் காலை, மாலை என இரு வேளைகளில் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்நிலையில் விழாவின் 8- நாளான நேற்று, காலை 9.30 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான், வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் யாளி வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை உற்சவர் பெருமான் குதிரை வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்தார்.
தொடர்ந்து இரவு 8 மணிக்கு உற்சவர் முருகப்பெருமானுக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர்.
ஞாயிறு விடுமுறை மற்றும் சித்திரை பிரம்மோற்சவம் என்பதால் நேற்று காலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால் பொது வழியில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் மூலவரை தரிசித்தனர்.
மலைப்பாதையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் திரண்டதால் அரக்கோணம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- தினமும் இரவில் நவநாள் திருப்பலி நடைபெற்றது.
- திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
மணிகண்டம்:
மணிகண்டம் ஒன்றியம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் உள்ள அருள்நிறை அடைக்கல அன்னை ஆலய திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் இரவில் நவநாள் திருப்பலி நடைபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு நற்கருணை பவனியும், இயேசுவின் திருப்பாடுகள் காட்சி எனப்படும் பாஸ்கா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி மாலையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.
நள்ளிரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 4 சப்பரங்களில் அருள்நிறை அடைக்கல அன்னை, செபஸ்தியார், அந்தோணியார் மற்றும் ஆவூர் தேர் என்று அழைக்கப்படும் சப்பரத்தில் உயிர் நீத்த ஆண்டவர் ஆகிய சொரூபங்கள் வைக்கப்பட்டு முக்கிய வீதிகளில் தேர்பவனி நடைபெற்றது.
முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் நேற்று அதிகாலை நிலையை அடைந்தது. விழாவில் நவலூர் குட்டப்பட்டு, ராம்ஜிநகர், சோமரசம்பேட்டை, புங்கனூர், மணிகண்டம், திருச்சி, அம்மாபேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று காலை தேரடி திருப்பலி, புது நன்மை ஆடம்பர கூட்டு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவில் உபய தேர்பவனியும், கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து பட்டிமன்றம் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக மணியக்காரர்கள் சேவியர், ஜெரின் ராஜதுரை, கொத்து மணியக்காரர்கள், கத்தோலிக்க இளைஞர் மன்றத்தினர் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.
- திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நாளை தேர்க்கால் பார்த்தல் மற்றும் நடராஜர் புறப்பாடு நடைபெறுகிறது.
சமயபுரம்:
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடந்தது. 18-ந்தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 19-ந் தேதி திருக்கல்யாணமும் நடைபெற்றது. நேற்று இரவு தங்கக்குதிரை வாகனம், காமதேனு வாகனத்தில் சாமி, அம்பாள் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் மேஷ லக்னத்தில் சுவாமி தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு மேல் தேர்க்கால் பார்த்தல் மற்றும் நடராஜர் புறப்பாடு நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு கேடயத்தில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. 24-ந் தேதி இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கும், 25-ந் தேதி இரவு பஞ்சபிரகார புறப்பாடும் நடைபெறுகிறது. 26-ந் தேதி காலை 7 மணிக்கு விடையாற்றி மற்றும் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
- சிலர் தனியார் பஸ்களில் சென்னை, பெங்களூரு, கோவை உள்பட பல முக்கிய நகரங்களுக்கு புறப்பட்டனர்.
- தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
சேலம்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி வெளியூர்களில் தங்கி வேலை பார்த்தவர்கள் கடந்த சில நாட்களாக சொந்த ஊர்களுக்கு வந்தனர். பினனர் தேர்தல் முடிந்ததால் அவர்கள் நேற்று மீண்டும் அவரவர் வசிக்கும் இடங்களுக்கு புறப்பட்டனர். இதையொட்டி பஸ் , ரெயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதியது. மேலும் சிலர் தனியார் பஸ்களில் சென்னை, பெங்களூரு, கோவை உள்பட பல முக்கிய நகரங்களுக்கு புறப்பட்டனர். அப்போது தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக தனியார் வாகனங்களை கண்காணித்தனர். மேலும் சேலம் புதிய பஸ்நிலையம், ஓமலூர், வாழப்பாடி, நத்தக்கரை, சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நிர்ணயித்ததை விட அதிக கட்டணம், கூடுதல் நபர்களை ஏற்றி சென்றது உள்பட பல்வேறு சாலை விதிகளை மீறியதாக கூறி 40 ஆம்னி பஸ்களின் உரிமையாளர்களுக்கு ரூ. 85 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
- ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர் கொட்டுவது இதன் சிறப்பாகும்.
- சுற்றுலா தலமாக மாறினால் இப்பகுதி மக்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைவார்கள் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் உள்ள பரப்பலாறு அணையில் பாச்சலூர், பன்றிமலை, வடகாடு பகுதியில் உற்பத்தியாகும் நீரோடைகள் ஒரே இடத்தில் சங்கமிக்கின்றன. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் விருப்பாச்சி மலைக்குன்று வழியாக தலையூத்தில் அருவியாக கொட்டுகிறது.
பல அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது காண்போரை மிகவும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. விருப்பாச்சியில் இருந்து 2 கி.மீ தூரம் பயணித்தால் மலையடிவாரத்தில் பெருமாள் கோவிலை சென்றடையலாம். அங்கிருந்து சிறிது தூரம் சென்றால் நல்காசி விருப்பாச்சி ஈஸ்வரர் கோவிலின் முன் பகுதியில் இந்த அருவியை காண முடியும்.
ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர் கொட்டுவது இதன் சிறப்பாகும். மலையடிவாரத்தில் இன்னொரு அருவியாகவும், தலையூத்து அருவி கொட்டுகிறது. இதனை கீழ் தலையூத்து அருவி என்று அழைக்கின்றனர். மலையடிவாரத்தில் இருந்து பல கி.மீ தூரத்துக்கு இது நங்காஞ்சியாறாக ஓடுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவி இருக்கும் இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
அருவி பகுதியில் நீர் சுழல் மற்றும் சில இடங்களில் ஆழம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி இங்கு யாரையும் குளிக்க அனுமதிப்பது கிடையாது. இருந்தபோதும் உள்ளூர் மக்களும், அருவி பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்பவர்களும் அவ்வப்போது இந்த அருவியில் ஆனந்த குளியல் போட்டுச் செல்கின்றனர். தற்போது தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையிலும் தலையூத்து அருவியில் தண்ணீர் வற்றாத ஜீவநதி போல வருகிறது. இதனைப் பார்த்து பொதுமக்கள் ரசித்தும், புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர். ஒட்டன்சத்திரம் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பரப்பலாறு அணை மற்றும் தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை ஏற்று ரூ.8.22 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இருந்தபோதும் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்து சுற்றுலா தலமாக மாறினால் இப்பகுதி மக்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைவார்கள் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
- நேற்று வேப்பிலை மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
- வேப்பிலை மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
மணப்பாறை:
மணப்பாறை நகரின் மையப்பகுதியில் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நேற்று வேப்பிலை மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் வேப்பிலை மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
பின்னர் மாலையில் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ். குடும்பத்தினர் சார்பில் முதல் தட்டு பூ அம்மனுக்கு செலுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பூத்தட்டுகளை ஏந்தி வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டு சென்றனர். மேலும் மணப்பாறை நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் பூக்கள் எடுத்து வரப்பட்டு, ரதங்கள் அனைத்தும் முனியப்பன் கோவில் முன்பிருந்து ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டு வேப்பிலை மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது.
இதைத்தொடர்ந்து வேப்பிலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து இரவு நேரங்களிலும் தாரை, தப்பட்டை முழங்க ரதங்கள் வந்த நிலையில் மணப்பாறை பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. இதையடுத்து சித்திரை திருவிழா வருகிற 28-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
பின்னர் மே மாதம் 12-ந் தேதி பால்குட விழாவும், 13-ந் தேதி காலையில் பொங்கலிடுதல், மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலையில் அம்மன் திருவீதி உலா வரும் வேடபரி நடக்கிறது.
15-ந் தேதி காப்பு கலைதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. பூச்சொரிதல் மற்றும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி, செயல் அலுவலர் அன்பழகன் தலைமையில் செய்து வருகின்றனர்.
- FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்ற இளம்வீரர் என்ற வரலாற்றை வெறும் 17 வயதில் படைத்துள்ளார்.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக, சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் வெல்ல வாழ்த்துகள்.
சென்னை :
கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஜி.குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்ட குகேஷ், அதில் டிரா செய்து 14 சுற்றுகள் கொண்ட போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக விளையாடுவதற்கு தகுதி பெற்ற முதல் இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அவரும் பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்ற இளம்வீரர் என்ற வரலாற்றை வெறும் 17 வயதில் படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக, சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் வெல்ல வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
Congratulations to @DGukesh on an incredible achievement! ?
— M.K.Stalin (@mkstalin) April 22, 2024
At just 17 years old, he's made history as the youngest-ever challenger in the #FIDECandidates and the first teenager to claim victory.
Best of luck in the battle ahead against Ding Liren for the World Chess… https://t.co/L2SEfj4yw6 pic.twitter.com/T70gM66PPX
- திருமண பத்திரிகையில் திருமணம் நடக்கும் மண்டபத்திலேயே ரத்த தான முகாம் நடைபெறும் என்றும் அச்சிடப்பட்டிருந்தது.
- ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
செஞ்சி:
திருமணம் நடந்த இடத்திலேயே ரத்த தான முகாம் நடத்தி மணமக்களும் ரத்த தானம் வழங்கிய வித்தியாசமான நிகழ்ச்சி செஞ்சி அருகே நடைபெற்றது.
செஞ்சியை அடுத்த நரசிங்கராயன் பேட்டையை சேர்ந்த பொறியாளர் ஸ்ரீ கேசவ பிரகாஷ். இவருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த யோகா மருத்துவர் சோனியா ஆகியோருக்கு நேற்று காலை செஞ்சியை அடுத்த அப்பம்பட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமண பத்திரிகையில் திருமணம் நடக்கும் மண்டபத்திலேயே ரத்த தான முகாம் நடைபெறும் என்றும் அச்சிடப்பட்டிருந்தது. அதன்படி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மனிதம் காப்போம் தன்னார்வலர்கள் குழு இணைந்து நடத்திய ரத்த தான முகாம் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று காலை திருமணம் முடிந்தவுடன் 8 மணி அளவில் மணமக்கள் ஸ்ரீ கேசவ பிரகாஷ்-சோனியா ஆகியோர் ரத்த தானம் வழங்கினார்கள். இதனைப் பார்த்த திருமணத்திற்கு வந்திருந்த அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 15-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினார்கள்.
ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் இதுவரை எங்கும் நடைபெறாத வகையில் திருமணம் மண்டபத்திலேயே முகாம் நடத்தி மணமக்கள் உள்பட பலர் ரத்த தானம் வழங்கிய நிகழ்ச்சி இப்பகுதி மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
- சித்திரை திருவிழாவை தொடர்ந்து விவசாயம் செழிக்கும் வகையில் தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.
- முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.35 அடியாக உள்ளது.
கூடலூர்:
மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இதற்காக வைகை அணையிலிருந்து கடந்த 19ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அந்த தண்ணீர் மதுரையை வந்தடைந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சித்திரை திருவிழாவை தொடர்ந்து விவசாயம் செழிக்கும் வகையில் தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர். 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டு படிப்படியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டது. அதன்படி இன்று 272 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து இல்லை. நீர்மட்டம் 58.07 அடியாக குறைந்துள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.35 அடியாக உள்ளது. அணைக்கு 209 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 105 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 104.10 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- கடந்த மார்ச் 16-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமுக்கு வந்தன.
- வருகிற 26-ந் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
கோவை:
பாராளுமன்றத்திற்கு ஏப்.19 முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, கடந்த மார்ச் 16-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமுக்கு வந்தன.
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்களை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கலைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதனால் அந்த மாநிலங்களையொட்டிய தமிழக மாவட்டங்களில் மட்டும் தேவைக்கு ஏற்ப பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு செயல்பாட்டில் இருக்கும் என்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் வருகிற 26-ந் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் கேரள மாநில எல்லையையொட்டி உள்ள கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளான வாளையார், கோபாலபுரம் ஆகிய 2 சோதனை சாவடிகளில் தலா ஒரு நிலையான கண்காணிப்புக்குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட உள்ளதாக கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






