என் மலர்
உள்ளூர் செய்திகள்
- உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுதலை.
- சுமார் 1,160 பக்க குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர்.
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், பேராசிரியை நிர்மலா குற்றவாளி என தீர்ப்பு அளித்த நிலையில் தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட மதுரை காமராஜன் பல்கலைகழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி.
கடந்த 2018ம் ஆண்டு கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தாக நிர்மலாதேவி பேசிய ஆடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவியது.

இதையடுத்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் நிர்மலா தேவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவித்தனர்.
இதற்கிடையே, கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய புகாரில், நிர்மலா தேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, சிபிசிஐடி எஸ்.பி.ராஜேஸ்வரி தலைமையில் விசாரணை நடைபெற்றது.
இதுதொடர்பாக சுமார் 1,160 பக்க குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இன்றே தண்டனை விவரத்தை அறிவிக்க வேண்டும் என அரசு தரப்பு வாதம் செய்யப்பட்டது.
ஆனால், நிர்மலா தேவி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், "தண்டனை விவரத்தை நாளை அறிவிக்க வேண்டும். தீர்ப்பு கூறிய அன்றே தண்டனையை கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை.
குற்றம்சாட்டப்பட்டவர் தனது தரப்பு வாதத்தை தெரிவிக்க கால அவகாசம் வழங்க வேண்டும்" என வாதாடினார்.
- பாதிப்புக்காக நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோா் மருத்துவமனைகளை நாடுவதாகக் கூறப்படுகிறது.
- அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டால் சிறுநீரகங்களை பாதுகாக்கலாம்.
தமிழகத்தில் கோடை வெயில் உச்சத்தை எட்டி உள்ள நிலையில், பகல் நேரத்தில் வெளியில் செல்வதைத் தவிா்க்குமாறு சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டு உள்ளன.
இதனிடையே, சின்னம்மை, உயா் ரத்த அழுத்தம், நீா்ச்சத்து இழப்பு, சரும பாதிப்புகள் பரவலாக மக்களிடையே காணப்படுகின்றன. இந்நிலையில், நீா்க்கடுப்பு எனப்படும் சிறுநீா்ப் பாதை தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
அத்தகைய பாதிப்புக்காக நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோா் மருத்துவமனைகளை நாடுவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பொது நல மருத்துவ நிபுணா் டாக்டா் அ.ப.பரூக் அப்துல்லா கூறியதாவது:-
உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து, அதில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் தலா பத்து லட்சம் நெப்ரான்கள் (ரத்த நுண் சுத்திகரிப்பான்கள்) உள்ளன. அங்கிருந்து உருவாகும் கழிவுகள் யூரிடா் எனப்படும் குழாய் கள் மூலம் சிறுநீா்ப்பையில் சேகரிக்கப்படுகின்றன.
பின்னர் அவை யூரித்ரா எனப்படும் குழாய் வழியே சிறு நீராக வெளியேறுகிறது. இந்த கட்டமைப்பைத்தான் சிறுநீா்ப்பாதை என அழைக்கிறோம். இதில் ஏதேனும் கிருமித் தொற்று ஏற்படும் போது சிறுநீா் கழிப்பதில் எரிச்சல், வலி, சிரமங்கள் காணப்படும். இதை அலட்சி யப்படுத்தினால், கிருமிகள் சிறுநீரகங்களைத் தாக்கி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
கோடை காலத்தில் உடலில் போதிய நீா்ச்சத்து இல்லாவிடில் சிறுநீா்ப் பாதையில் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
சமீபகாலமாக அத்தகைய பிரச்சினைகளுடன் பலா் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகின்றனா். அதிலும், பெண்களில் பலா் புறச்சூழ்நிலை காரணமாக சிறுநீரை உரிய நேரத்தில் வெளியேற்ற இயலாமல் இருப்பதால் அவா்களில் பெரும்பாலானோருக்கு கிருமித் தொற்று ஏற்படுகிறது.
இதைத் தவிா்க்க நாளொன்றுக்கு குறைந்தது மூன்று முதல் நான்கு லிட்டா் வரை தண்ணீா், இளநீா், மோா், எலுமிச்சை சாறை அருந்தலாம். தனி நபா் சுகாதாரம் பேணுவது அவசியம். அதேபோன்று, சிறுநீா் கழிக்கும் இடத்தையும், கைகளையும் சானிடைசா் கொண்டு சுத்தம் செய்தால் கிருமித் தொற்று வராமல் தடுக்கலாம்.
அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டால் சிறுநீரகங்களை பாதுகாக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதிய வகை மரபணுவானது அல்காப்டோனூரியா அல்லது கருப்பு சிறுநீர் நோயை உருவாக்கும் தன்மை கொண்டது.
- மரபணு பகுப்பாய்வு மூலம் இந்த நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் பெரிய அளவிலான பாதிப்பை தடுக்கலாம்
சென்னை:
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உயிர் வேதியியல் துறையை சேர்ந்த நிபுணர்கள், சென்னையை சேர்ந்த நரிக்குறவர் மக்களிடையே ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். அப்போது அவர்களின் உடலில் புதிய வகை மரபணு மாற்றத்தை கண்டுபிடித்தனர்.
இந்த புதிய வகை மரபணுவானது அல்காப்டோனூரியா அல்லது கருப்பு சிறுநீர் நோயை உருவாக்கும் தன்மை கொண்டது. இந்த புதிய வகை மரபணு தொடர்பாக ஆராய்ச்சி தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 3 நாட்கள் தொடர் மருத்துவ கல்வி திட்டம் மற்றும் பகுப்பாய்வு உயிர் வேதியியல் குறித்த பயிலரங்கு நடந்தது. இந்த பயிலரங்கில் நரிக்குறவ மக்களிடையே கண்டு பிடிக்கப்பட்டுள்ள புதிய வகை மரபணு பற்றிய ஆய்வு அறிக்கை பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் நாடு முழுவதும் இருந்து 110 மருத்துவர்கள் பங்கேற்றனர்.
இந்த பயிலரங்கத்தில் அல்காப்டோனூரியா மரபணு மாற்றம் பற்றிய புத்தகமும் வெளியிடப்பட்டது.
இந்த பயிலரங்கத்தில் பேசிய மருத்துவர்கள் கூறியதாவது:-
அல்காப்டோனூரியா நோயை தோற்றுவிக்கும் புதிய வகை மரபணு மாற்றம் கொண்டவர்கள், இளம் வயதிலேயே மூட்டுவலி மற்றும் இதயநோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இவர்களுக்கு சிறுநீர் கருப்பு நிறத்தில் வெளியேறும். அல்லது காற்று பட்டவுடன் சிறுநீர் கருப்பு நிறத்தில் மாறும்.
இது உடலில் ஹோமோ ஜென்டிசிக் அமிலம் எனப்படும் ரசாயனத்தை உருவாக்கி உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த மரபணு மாற்றமானது பரம்பரை வழியாக மிகவும் அரிதாகவே ஏற்படும். மரபணு பகுப்பாய்வு மூலம் இந்த நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் பெரிய அளவிலான பாதிப்பை தடுக்கலாம். மேலும் அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- மெட்ரோ ரெயில் பயணிகளில் 38 லட்சம் பேர் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி வருகின்றனர்.
- ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க இக்கார்டை பயன்படுத்தலாம்.
சென்னை:
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அப்போது ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது, டோக்கன் முறையும் இருந்தது. மெட்ரோ ரெயில் பயணிகளில் 38 லட்சம் பேர் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டை மெட்ரோ ரெயில் நிர்வாகம் நிறுத்தியுள்ளது. அதிகமாக விரும்பி பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் பயண அட்டை இனி பயணிகளுக்கு வழங்கப்படாது.
ஆனாலும் ஏற்கனவே கார்டு வைத்திருப்பவர்கள் அதை ரீசார்ஜ் செய்து தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மெட்ரோ ரெயில் தரப்பில் கூறியதாவது:-
ஸ்மார்ட் கார்டு விற்பனை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டை வழங்கி வருகிறோம். பொதுப் பயன்பாடு உள்ள அந்த கார்டை ஊக்குவிப்பதற்காக ஸ்மார்ட் கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க இக்கார்டை பயன்படுத்தலாம். ஆனால் சில பயணிகளிடம் இது சென்றடையவில்லை. லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் ஸ்மார்ட் கார்டை தூக்கி எறியக்கூடாது என்று பயணிகள் தெரிவித்தனர்.
- முதுமலைக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு யானைகளுக்கு உணவு கொடுக்கும் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
- நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலுமே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
ஊட்டி:
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் கடுமையான வெயில் நிலவுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். அந்தளவுக்கு வெயிலின் உக்கிரம் இருக்கிறது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்ச்சியான காலநிலை நிலவக்கூடிய மலைபிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளை நோக்கி செல்கின்றனர்.
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த சில வாரங்களாக சுற்றுலா பயணிகள் வருகையானது அதிகரித்து காணப்படுகிறது. வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அலைமோதி வந்தது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து குடும்பம், குடும்பமாக ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் அங்குள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகிறார்கள். படகு இல்லத்தில் படகு சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
முதுமலைக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு யானைகளுக்கு உணவு கொடுக்கும் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலுமே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று ஒரே நாளில் நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை 39 ஆயிரத்து 23 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 23 ஆயிரத்து 78 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளது. இதேபோல் காட்டேரி பூங்காவுக்கு 1,011 பேரும், தேயிலை பூங்காவுக்கு 1,100 பேரும், ரோஜா பூங்காவுக்கு 8 ஆயிரத்து 868 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 4 ஆயிரத்து 680 பேரும், மரவியல் பூங்காவுக்கு 286 பேரும் வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர்.
- கொடநாடு எஸ்டேட் பணியாளர்கள் தேவன், ரமேஷ் மற்றும் சயானின் நண்பர்கள் பாபு, அப்துல்காதர் ஆகிய 4 பேருக்கு தற்போது சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
- வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர் வருகிற ஜூன் மாதம் 21-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
கோவை:
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த சயான் உள்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி அவற்றை வாக்கு மூலமாக பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மேலும் 4 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். கொடநாடு எஸ்டேட் பணியாளர்கள் தேவன், ரமேஷ் மற்றும் சயானின் நண்பர்கள் பாபு, அப்துல்காதர் ஆகிய 4 பேருக்கு தற்போது சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
அவர்கள் 4 பேரும் தனித்தனியாக நாளை(30-ந் தேதி) கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ்நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று ஊட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்ற த்தில் நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் கேரள மாநிலத்தை சேர்ந்த வாளையார் மனோஜ் ஆஜர் ஆனார். அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ், வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர் வருகிற ஜூன் மாதம் 21-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
பின்னர் அரசு தரப்பு வக்கீல் ஷாஜகான் நிருபர்களிடம் கூறியதாவது:- கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற பங்களாவில் தடவியல் நிபுணர் குழு உட்பட பல்வேறு துறையினர் மேற்கொண்ட ஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது எதிர்தரப்பினர் பங்களாவிற்குள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக புலன் விசாரணை நடைபெற்று வருவதால், எதிர்தரப்பினர் பங்களாவில் ஆய்வு மேற்கொண்டால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என அரசு தரப்பு சார்பில் நீதிபதியிடம் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
- பஸ்சின் அடிப்பாகத்தின் தரம் குறித்தும், என்ஜின் உள்ளிட்டவைகள் முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்தும் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- இதையும் பொருட்படுத்தாமல் தொழில் நிமித்தமாகவும், அத்தியாவசிய தேவைக்காகவும் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
சமீபத்தில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பிய அரசு பஸ் புறப்பட்ட சில நேரத்தில் வளைவில் திரும்பும் போது பஸ்சின் இருக்கை கழன்று அதில் அமர்ந்திருந்த கண்டக்டர் வெளியே தூக்கி வீசப்பட்டார். இச்சம்பவம் சர்ச்சையை கிளப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக அரசு பஸ்களின் உள்புறத்தில் மழை நீர் வடிகிறதா? பிரேக், ஆக்சிலேட்டர், ஸ்டீயரிங் மற்றும் பஸ்சின் அடிப்பாகத்தின் தரம் குறித்தும், என்ஜின் உள்ளிட்டவைகள் முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்தும் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் பின்பக்க கண்ணாடி இல்லாமலேயே அரசு பஸ் ஒன்று இயங்கி வருகிறது. ஆம், வேளாங்கண்ணியில் இருந்து நாகை நோக்கி செல்லும் அரசு பஸ்சில் பின்புற கண்ணாடி இன்றி முழுவதுமாக திறந்த நிலையில் பஸ் புறப்பட்டது. வேளாங்கண்ணி கடற்கரையோர பகுதி என்பதால் வெளியில் வீசும் குளிர்காற்று பஸ்சின் உள்ளே தான் முழுவதுமாக வீசுகிறது. இதையும் பொருட்படுத்தாமல் தொழில் நிமித்தமாகவும், அத்தியாவசிய தேவைக்காகவும் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த பஸ்சின் பின்னால் சென்ற வாகன ஓட்டிகள் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. திருச்சி பஸ் சம்பவம் பரவலாக பேசப்பட்டு வந்த சில நாட்களுக்குள் நாகையில் பின்பக்க கண்ணாடி இன்றி அரசு பஸ் இயங்கிய சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
- வாழ்த்துச் செய்தியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி.
சென்னை:
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
"தமிழ் எங்கள் உயிரென்ப தாலே-வெல்லுந் தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே" "பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில்வா! எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!" எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்! இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
"தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந்
— M.K.Stalin (@mkstalin) April 29, 2024
தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே"
"பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!"
எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும்… pic.twitter.com/865mQOOnvV
- எந்த தொகுதியில் ஓட்டு குறைந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் தி.மு.க.வில் ஏற்பட்டு உள்ளது.
- தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்ததால் அவர்களும் அறிக்கை தயாரித்து மேலிடத்துக்கு வழங்கி இருக்கிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே 4 முனை போட்டி ஏற்பட்டது.
இப்போது ஒவ்வொரு கட்சியிலும் எந்தெந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்று சர்வே எடுத்து வைத்துள்ளனர். தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் உளவுத்துறை ரிப்போர்ட் அவரிடம் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. அதே போல் தி.மு.க.வுக்கு சொந்தமான தேர்தல் வியூக நிறுவனமும் ஒரு சர்வே எடுத்து வழங்கி உள்ளது. அதில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். அதன் காரணமாகவே தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சித் தலைவர்கள் மரியாதை நிமித்தமாக சென்று பார்த்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்கள் மட்டுமின்றி வேட்பாளர்களும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். ஆனாலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இதில் இன்னும் முழு திருப்தி அடையாமல் உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. காரணம் கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்களோ அதைவிட இந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நினைக்கிறார்.
இதற்கு காரணம் தி.மு.க.வில் நிறுத்தப்பட்ட வசதியான சீனியர் வேட்பாளர்கள் பலர் முழுமையாக பணம் செலவழிக்காமல் கட்சிக்காரர்களை செலவழிக்க வைத்துவிட்டனர். இதில் பல கட்சிக்காரர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டுவிட்டது. இதனால் தி.மு.க. நிர்வாகிகளே சில வேட்பாளர்கள் மீது அதிருப்தியில் உள்ளனர். தேர்தலுக்கே இவர் பணம் செலவழிக்கவில்லை. ஜெயித்த பிறகு நமக்கு என்ன செய்துவிட போகிறார் என்ற விரக்தியில் பேச ஆரம்பித்துள்ளனர். இதுபற்றிய புகார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை சென்றுள்ளது. அவரும் தேர்தல் முடிவு வரட்டும். அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பொறுமையாக உள்ளார். ஏற்கனவே தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்ததால் அவர்களும் அறிக்கை தயாரித்து மேலிடத்துக்கு வழங்கி இருக்கிறார்கள். அதில் யார்-யார் சரிவர பணியாற்றவில்லை. முழுமையான அர்ப்பணிப்புடன் யார்-யார் பணியாற்றினார்கள் என்ற விவரங்களையும் அதில் குறிப்பிட்டு உள்ளனர்.
கடந்த தேர்தலை போல் லீடிங் அதிகமாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர். எனவே எந்த தொகுதியில் ஓட்டு குறைந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் தி.மு.க.வில் ஏற்பட்டு உள்ளது. எனவே ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. வில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றி பிரசாரம் செய்திருந்தாலும் சில மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் வேட்பாளர்களுக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அவரது கவனத்துக்கு வந்துள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர்களை அழைத்துச் சென்று ஓட்டுக் கேட்க வேண்டியது அந்தந்த மாவட்டச் செயலாளரின் கடமையாகும். இதற்காக எந்தெந்த பகுதிக்கு எப்போது செல்ல வேண்டும் என்று அட்டவணை தயாரித்து அதன்படி கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த பணியை கூட சில மாவட்டச் செயலாளர்கள் சரிவர செய்யவில்லை என்று ஒன்றிய செயலாளர்கள் தலைமைக் கழகத்துக்கு புகாராக அனுப்பி இருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியில் உள்ள பிரச்சினைகளையும் புகார்களையும் பட்டியலிட்டு அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை சமர்ப்பித்து உள்ளதாக தெரிகிறது.
அ.தி.மு.க.வில் காஞ்சிபுரம், வடசென்னை, தென் சென்னை, கள்ளக்குறிச்சி உள்பட 15 தொகுதிகளின் வெற்றி வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் மீதமுள்ள 25 தொகுதிகளில் உள்ள கள நிலவரம் பற்றி கலக்கத்துடனே உள்ளனர். அ.தி.மு.க.வுக்கு 2-வது இடம் கிடைக்குமா? அல்லது 3-வது இடத்துக்கு தள்ளப்படுமா? என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனால் ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவு வந்த பிறகு அ.தி.மு.க.விலும் அதிரடி மாற்றங்கள் நிகழக் கூடும் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- 16 நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் 3 மகப்பேறு மருத்துவமனைகளிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்படுகிறது.
- வெப்பம் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்த மருந்துகளும், 2.96 லட்சம் ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்டுகளும் கையிருப்பில் உள்ளன
சென்னை:
சென்னையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை எதிர் கொள்ளும் வகையில் பீமனாம்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக செய்யபட்டுள்ள ஏற்பாடுகள், குடிநீர் வசதிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநகருக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 140 நகர்ப்புற நலவாாழ்வு மையங்கள், 16 நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் 3 மகப்பேறு மருத்துவமனைகளிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்படுகிறது.
மேலும் சுகாதாரப் பணி யாளர்கள் மூலம் 75 பொது இடங்களில் ஓ.ஆர்.எஸ். கரைசல் இன்று (திங்கட் கிழமை) முதல் வழங்கப்படுகிறது. கோடை வெயிலில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்தும் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தபப்படுகிறது. தேவையின் அடிப்படையில் கடற்கரை உள்ளிட்ட இடங்க ளில் குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும். வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்து சிகிச்சை வழங்குவதற்கு ஏதுவாக மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
வெப்பம் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்த மருந்துகளும், 2.96 லட்சம் ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்டுகளும் கையிருப்பில் உள்ளன. எனவே அதிகரித்து வரும் கோடை வெப்பத்தால் திறந்த இடங்களில் பணியாற்றுவோர், நீண்ட தூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- பெரியார் ஒளி விருதினை திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழிக்கு வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.
- விருதுகள் வழங்கும் விழா 25.05.2024 அன்று சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்படுகிறது.
சென்னை :
விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.
சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு "அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.
2022 ஆம் ஆண்டு முதல் கூடுதலாக 'மார்க்ஸ் மாமணி' விருதும் வழங்கி வருகிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொகிறோம்.
முத்தமிழறிஞர் முனைவர் கலைஞர், மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் சித்தரமையா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விசிக-விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வரிசையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக- விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.
இந்த ஆண்டுக்கான "அம்பேத்கர் சுடர்" விருதினை திரைப்படக் கலைஞரும், மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவருமான பிரகாஷ்ராஜ் அவர்களுக்கும்,
பெரியார் ஒளி விருதினை திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்களுக்கும் வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.
அம்பேத்கர் சுடர் - பிரகாஷ்ராஜ், திரைப்படக் கலைஞர்
பெரியார் ஒளி- வழக்கறிஞர் அருள்மொழி, பிரச்சாரச் செயலாளர். திராவிடர் கழகம்
மார்க்ஸ் மாமணி- இரா. முத்தரசன், மாநிலச் செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
காமராசர் கதிர் - பேராயர் எஸ்றா சற்குணம், தலைவர் இந்திய சமூக நீதி இயக்கம்
அயோத்திதாசர் ஆதவன்- பேராசிரியர் ராஜ்கௌதமன்
காயிதேமில்லத் பிறை- எஸ்.என். சிக்கந்தர், மேனாள் மாநிலத் தலைவர் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா
செம்மொழி ஞாயிறு- எ.சுப்பராயலு, கல்வெட்டியலறிஞர்
விசிக விருதுகள் வழங்கும் விழா 25.05.2024 அன்று சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்படுகிறது.
- தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது.
- தமிழக இளைஞர்கள், மாணவிகள், ஏழை கூலித்தொழிலாளர்கள், சிறுவர்கள் முதல் அனைவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள்.
மதுரை:
தமிழகத்தில் ஒரே கட்ட மாக கடந்த 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இதையொட்டி தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டான் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் ஓய்வு எடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் புறப்பட்டார். சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த அவருக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
முதலமைச்சரின் தனிப்பட்ட பயணமாக இது இருந்ததால் அவரை வரவேற்க கட்சியினர் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்தநிலையில் விமான நிலைய வரவேற்பு பகுதியில் தனி நபராக ஒருவர் மட்டும் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சென்ற அவனியாபுரம் உதவி போலீஸ் கமிஷனர் செல்வக்குமார், இன்ஸ்பெக்டர் மணிக்குமார் ஆகியோர் விசாரித்தனர். அவர் மதுரை அய்யர்பங்களாவை சேர்ந்த பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர்பாண்டி என்பது தெரியவந்தது. மேலும் அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு கொடுப்பதற்காக வந்திருப்பதாக தெரிவித்தார். போலீசார் அதற்கு அனுமதி கிடையாது என்று கூறினர். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரிடம் மனுவை தருமாறு போலீசார் கேட்டனர். தரமறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவரிடம் இருந்து மனுவை போலீசார் கைப்பற்றினர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களும் எளிதில் கிடைக்கிறது. இதனால் தமிழக இளைஞர்கள், மாணவிகள், ஏழை கூலித்தொழிலாளர்கள், சிறுவர்கள் முதல் அனைவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் சமூக விரோத செயல்கள், குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. இது மிகவும் எனக்கு வேதனை அளிக்கிறது. ஆகவே தாங்கள் தமிழக மக்களின் நலன் கருதி, துரித நடவடிக்கை எடுத்து போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பு: இத்துடன் தமிழகத்தில் எளிதில் கிடைக்கும் கஞ்சா பொட்டலம் இணைத்துள்ளேன்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து சங்கர்பாண்டியை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை கைது செய்து அவனியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது அப்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது, அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியவர் மற்றும் தற்போதைய பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்திக்கு எதிராக முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்றும் தெரியவந்தது. இதற்கிடையே விமான நிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் கொடைக்கானல் புறப்பட்டு சென்றார்.






