என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இ-பாஸ் திட்டத்தின் மூலமாக உள்ளூர் வாகனங்களுக்கு நெருக்கடிகள் உருவாகும்.
- உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்படும் சூழல் உள்ளது.
சென்னை:
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வருடத்தில், ஓரிரு மாதங்கள் மட்டுமே, சுற்றுலாப் பயணிகள் குவியும் இடங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகள் அம்மலைவாழ் மக்களின் பெரும் பொருளாதார நம்பிக்கையாக உள்ளது.
ஆனால், உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி அங்குச் செல்லும் வாகனங்கள் இ-பாஸ் பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள திட்டம் இப்பொழுது செயல்படுத்தப்பட்டால், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் சுற்றுலாவை நம்பி வாழக்கூடிய மக்கள் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாவர்கள்.
இதனால் உள்ளூர் மக்கள் பொருளாதார இழப்புகளைச் சந்திப்பார்கள். அது அவர்களுக்குப் பேரிழப்பாக அமையும். மேலும் இ-பாஸ் திட்டத்தின் மூலமாக உள்ளூர் வாகனங்களுக்கு நெருக்கடிகள் உருவாகும். இதனால் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்படும் சூழல் உள்ளது.
ஆகவே இது குறித்து தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து இந்த புதிய கட்டுப்பாட்டினை ரத்து செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இரு மலைத் தலங்களுக்கும் செல்லும் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தக் கூடுதல் காவலர்களை காவல்துறை பணியில் அமர்த்தி இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழக போலீசில் 35 ஆயிரம் பெண் போலீசார் உள்ளனர்.
- பாராளுமன்ற தேர்தல் பணிகள் முடிந்தவுடன் பயிற்சி முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
சென்னை:
'ஸ்காட்லாந்து யார்டு' போலீசுக்கு இணையாக பேசப்படும் தமிழக போலீசுக்கு தலைகுனிவு ஏற்படும் ஒரு சில சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. தனக்கு கீழே வேலை பார்த்த பெண் போலீஸ் சூப்பிரண்டுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போடப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார்.
இன்னொரு உயர் அதிகாரி மீது பெண் அதிகாரி ஒருவர் பாலியல் புகார் கொடுத்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இது போல் உதவி போலீஸ் கமிஷனர் ஒருவர், தனக்கு கீழே வேலை பார்த்த பெண் போலீசிடம் செல்போனில் ஆபாசமான உரையாடலில் ஈடுபட்ட சம்பவமும் நிகழ்ந்தது.
இது போன்ற ஒழுக்க சீர்கேடுகள் திறமைவாய்ந்த தமிழக போலீசுக்கு களங்கம் போன்று எழுந்து நிற்கிறது. இதுபோன்ற களங்கத்தை துடைத்து சென்னை போலீசை முதன்மை போலீசாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இறங்கி உள்ளதாக போலீஸ் கமிஷனர் அலுவலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் தனக்கே உண்டான பாணியில் போலீஸ் கமிஷனர் கடும் நடவடிக்கைகளில் இறங்க போகிறாராம். இதற்காக ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளை மிகவும் கடுமையாக்கவும் கமிஷனர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே தமிழக போலீஸ்துறையில் பணியில் இருக்கும்போது போலீசார் என்னனென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன.
பணி நேரத்தில் போலீசார் செல்போனில் பேசுவதற்கும், 'வாட்ஸ்-அப்' போன்ற தகவல்களை பார்ப்பதற்கும் தடை உள்ளது. பெண் போலீசார் சீருடை அணிந்து பணியில் இருக்கும் போது தலையில் பூ வைப்பது போன்ற அதிக அலங்காரங்களை செய்து கொள்ளாமல் இருப்பதற்கும் கட்டுப்பாடு உள்ளது. பெண் போலீசார் அதிக 'மேக்கப்' போடாமல் தலை முடியை வலை கொண்டையிட்டு மிடுக்காக வரவேண்டும் என்ற அறிவுரைகள் செயல்பாட்டில் உள்ளன.
பெரும்பாலான பெண் போலீசார் இந்த கட்டுப்பாடுகளை கடைபிடித்துதான் வருகிறார்கள். அதையும் மீறி ஆண்-பெண் போலீசார் ஒன்றாக பணி செய்யும் போது காதல் தீ பற்றிக்கொண்டு அத்துமீறல்கள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகிறது. பணியில் இருக்கும் போது இது போன்ற செயல்களால் ஆண்-பெண் போலீசாரின் கவனங்கள் சிதறுகின்றன என்ற புகாரும் எழுகிறது.
தமிழக போலீசில் 35 ஆயிரம் பெண் போலீசார் உள்ளனர். காலப்போக்கில் இந்த எண்ணிக்கை 50 ஆயிரமாக கூட மாற வாய்ப்புள்ளது. ஆண் போலீசுக்கு இணையாக பெண் போலீசாரும் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் மிடுக்காக பணியாற்றுகிறார்கள்.
கடந்த 19-ந் தேதி அன்று சென்னையில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்தபோது ஆண் போலீசாருக்கு இணையாக பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நடிகர்-நடிகைகள் ஓட்டுப்போடுவதற்கு வாக்குச்சாவடிகளுக்கு வந்த போது சில போலீசார் தங்களது கடமையை காற்றில் பறக்கவிட்டனர்.
நடிகர்-நடிகைகளை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டினார்கள். அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு போட்டி போட்டார்கள். குறிப்பாக நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்கு வந்த போது தனது கடமையை மறந்து பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அவருடன் 'வீடியோ' படம் எடுப்பதற்கு ஆர்வம் காட்டினார்.
இந்த காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதைப் பார்த்த உயர் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது. இது போல நடிகர்-நடிகைகளுடன் புகைப்படம் எடுப்பதற்கு ஆர்வம் காட்டிய போலீசார் யார்-யார்? என்று விசாரணை நடக்கிறது.
பணியில் இருக்கும்போது ஒழுக்கத்தை காப்பதில் பெண் போலீசார் மட்டும் அல்லாமல், ஆண் போலீசாரும் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னை போலீசில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் விரும்புகிறார்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை காப்பதில் சென்னை போலீசை முதன்மை போலீசாக மாற்றுவதற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இது போன்ற முயற்சியில் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரும் ஈடுபட தொடங்கி உள்ளார். இதற்காக அவர் சாட்டையை சுழற்றி கடும் நவடிக்கையில் ஈடுபட உள்ளதாக சென்னை போலீஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
பணியில் இருக்கும்போது ஆண்-பெண் போலீசார் ஒழுக்கத்தை காப்பதில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பது குறித்து அறிவுரைகள் வழங்கும் பயிற்சி முகாம் ஒன்றும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
பாராளுமன்ற தேர்தல் பணிகள் முடிந்தவுடன் இந்த பயிற்சி முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவிலேயே தமிழக போலீசை முதன்மை போலீசாக மாற்றுவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும், அவர் காட்டிய வழியில் சென்னை போலீசை முதன்மை போலீசாக மாற்றுவதற்கு எல்லா நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாகவும், அதில் வெற்றியும் பெற்றுள்ளோம் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள்-குழந்தைகளுக்கு பாதுகாப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் என்றும், அதோடு போலீசில் ஒழுக்க சீர்கேடுகள் எதுவும் நடக்காமல் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ரெயில்கள் நாடு முழுவதும் முதல் கட்டமாக 124 நகரங்களை இணைக்கும்.
- 12 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.
சென்னை:
சென்னையில் பெரும்பாலான மக்களின் முக்கிய போக்குவரத்து மையமாக இருப்பது மின்சார ரெயில் சேவை. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, திருப்பதி வரையும், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் ஆகிய இடங்களுக்கும் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இந்த பாதையில் சொகுசு ரெயில்களை இயக்க இந்திய ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.
அதன்படி வந்தே மெட்ரோ ரெயிலை குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்க இந்திய ரெயில்வே வாரியம் முடிவு செய்து நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதன்படி விரைவில் சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து அரக்கோணத்திற்கும் வந்தே பாரத் ரெயிலில் செல்லும் வாய்ப்பு பயணிகளுக்கு கிடைக்கும்.
இதுகுறித்து இந்திய ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, 'வந்தே பாரத் ரெயில்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, மாநகருக்குள் போக்குவரத்து முறையை மாற்றியமைக்க இந்திய ரெயில்வே திட்டமிட்டு உள்ளது. அதன்படி, முக்கிய பாதைகளில் இயக்கப்படும் மின்சார பயணிகள் ரெயில்களுக்கு பதிலாக, நாட்டில் முதல் முறையாக வந்தே மெட்ரோ ரெயில் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. நகரவாசிகளின் பயணத் தேவைகளைக் கருத்தில் கொண்டு வந்தே மெட்ரோ பல புதிய அம்சங்களைக் கொண்டிருக்கும்.
குறிப்பாக, இந்த ரெயிலுக்கான பெட்டிகள் ஒரு தனித்துவமான கட்டமைப்பைக் கொண்டிருக்கும். அதில் 4 பெட்டிகள் ஒரு யூனிட்டைக் கொண்டிருக்கும். குறைந்தபட்சம் 12 பெட்டிகள் கொண்ட ஒரு வந்தே மெட்ரோ ரெயில் உருவாக்கப்படுகிறது.
மாநகரின் தேவையை பொறுத்து 16 பெட்டிகள் வரை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆரம்பத்தில், 12 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில் இயக்கப்படும். இந்த மெட்ரோ ரெயிலில் தானியங்கி கதவுகள் மற்றும் அதிக வசதியுடன் தற்போது இயங்கும் மெட்ரோ ரெயில்களில் இல்லாத பல அம்சங்கள் இந்த ரெயிலில் இடம் பெறும்.
வந்தே மெட்ரோ ரெயிலின் வேகத்தை குறைப்பதற்கான சமீபத்திய தொழில்நுட்பத்தின் அடிப்படையில், குறைந்த நேரத்தில் அதிக நிறுத்தங்களில் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டே இதனுடைய சேவையை கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயில்கள் நாடு முழுவதும் முதல் கட்டமாக 124 நகரங்களை இணைக்கும். 100 முதல் 250 கி.மீ. தூரத்திற்கு அடையாளம் காணப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. குறிப்பாக, லக்னோ-கான்பூர், ஆக்ரா-மதுரா மற்றும் திருப்பதி-சென்னை உள்ளிட்டவை அடங்கும். ரெயில்கள் பெரிய நகர்ப்புற மையங்கள் மற்றும் செயற்கைகோள் நகரங்களுக்கு இடையே பயணிகளை ஏற்றிச்செல்வதில் கவனம் செலுத்தும். இந்திய ரெயில்வேயின் தற்போதைய தடங்களில் இயங்கும். பயணிகளின் வரவேற்பை தொடர்ந்து அனைத்து பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.
வருகிற ஜூலை மாதம் அதனுடைய சோதனை ஓட்டத்தை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. அதற்கு பிறகு இந்த தரமான சேவைகள் நாட்டு மக்களுக்கு விரைவில் கிடைக்க உள்ளது. இந்த ரெயிலில் உள்ள கூடுதல் அம்சங்களின் விவரங்கள், படங்களுடன் கூடிய தகவல்கள் விரைவில் பொதுமக்களுக்காக அதிகாரப்பூர்வமாக இந்திய ரெயில்வே வெளியிடும்' என்றனர்.
இதுகுறித்து பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை அதிகாரிகள் கூறும்போது, 'வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி நடந்து வரும் நிலையில், இந்திய ரெயில்வே வாரியம் உத்தரவின் பேரில் நாடு முழுவதும் குறுகிய தூரத்தில் இயக்குவதற்கான வந்தே மெட்ரோ ரெயில் பெட்டிகள் பல்வேறு வசதிகளுடன் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயில் எப்போது சேவைக்கு வரும், சோதனை ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அடங்கிய முறையான அறிவிப்பை இந்திய ரெயில்வே வாரியம் அறிவிக்கும்' என்றனர்.
- தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.
- கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மட்டும் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 16-ந் தேதி வெளியானது. அதில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. எனவே பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழுவின் சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழுவின் சோதனை திரும்பப் பெறப்பட்டது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மட்டும் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கடந்த 28-ந்தேதி வரை சோதனைகளில் பிடிக்கப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் குறித்த விவரங்களை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார். அதன்படி, ரூ.179.91 கோடி ரொக்கப் பணம், ரூ.8.65 கோடி மதிப்புள்ள மது வகைகள், ரூ.1.36 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், ரூ.1,083.78 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த நகைகள், ரூ.35.80 கோடி மதிப்புள்ள இலவச பொருட்கள் என ரூ.1,309.52 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
- நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர்.
- இந்தத் தாக்குதலில் முருகன் என்ற மீனவர் படுகாயம் அடைந்தார்.
நாகை:
நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் முருகன் மற்றும் அக்கரைபேட்டையை சேர்ந்த முத்து, முருகவேல், சின்னையன் உள்ளிட்ட 4 பேர் கடந்த 28-ம் தேதி காலை 11 மணியளவில் மீன் பிடி தொழிலுக்காக கடலுக்குச் சென்றனர். அவர்கள் கோடியக்கரையில் தென்கிழக்கே சுமார் 15 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு திடீரென படகில் இலங்கை கடற்கொள்ளையர்கள் வந்தனர். அவர்கள் முருகன் உள்ளிட்ட மீனவர்களிடம் பிடித்து வைத்துள்ள மீன்கள், மீன்பிடி வலைகள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளை கேட்டு மிரட்டினர். ஆனால் மீனவர்கள் அவற்றை கொடுக்க மறுத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களை இரும்பு கம்பி மற்றும் கட்டையால் தாக்கினர். இதில் படகின் உரிமையாளர் முருகனுக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற 3 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய மீன் வலை, ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, டார்ச் லைட், செல்போன், உள்ளிட்ட சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் கொள்ளையடித்து தப்பிச்சென்றனர்.
பலத்த காயங்களுடன் இன்று அதிகாலை 3 மணி அளவில் கரை திரும்பிய மீனவர்களை செருதூர் மீனவர்கள் மீட்டு நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மீன்பிடி தடையை மீறி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது.
மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில் தமிழக எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சம்பவம் நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சென்னை ஐகோர்ட்டுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
- மே 1 முதல் ஜூன் 2 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை கிளைக்கு ஆண்டு தோறும் மே மாதம் விடுமுறை விடுவது வழக்கம். அதன்படி வரும் மே 1-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை காலத்தில் சென்னை ஐகோர்ட், ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, ஐகோர்ட் தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சென்னை ஐகோர்ட்டில் மே மாதம் 8, 9-ம் தேதிகளில் நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, கே.குமரேஷ்பாபு, ஆர்.கலைமதி ஆகியோரும், 15, 16-ம் தேதிகளில் நீதிபதிகள் பி.டி.ஆஷா, ஆர்.சக்திவேல், என்.செந்தில்குமார் ஆகியோரும், 22, 23-ம் தேதிகளில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சி.சரவணன், பி.பி.பாலாஜி ஆகியோரும், 29, 30-ம் தேதிகளில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத், எஸ்.சவுந்தர், வி.லட்சுமிநாராயணன் ஆகியோரும் அவசர வழக்குகளை விடுமுறை காலத்தில் விசாரிப்பார்கள்.
இதேபோல ஐகோர்ட் மதுரை கிளையில் மே 8, 9-ம் தேதிகளில் நீதிபதிகள் பி.வேல்முருகன், அப்துல் குத்தூஸ், பி.தனபால் ஆகியோரும், 15,16-ம் தேதிகளில் பி.வேல்முருகன், பி.வடமலை, கே.ராஜசேகர் ஆகியோரும், 22, 23-ம் தேதிகளில் நீதிபதிகள் ஆர்.என்.மஞ்சுளா, எஸ்.ஸ்ரீமதி, சி.குமரப்பன் ஆகியோரும், 29, 30-ம் தேதிகளில் நீதிபதிகள் ஆர்.விஜயகுமார், எல்.விக்டோரியா கவுரி, ஜி.அருள்முருகன் ஆகியோரும் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள்.
வாரம்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்து தெரிவித்ததாக எச்.ராஜா மீது வழக்கு தொடரப்பட்டது
- தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா தாக்கல் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்
கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்து தெரிவித்ததாக பாஜக நிர்வாகி எச்.ராஜாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, எச்.ராஜா மீது ஈரோடு டவுன் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. எச்.ராஜாவுக்கு எதிரான வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை 3 மாதங்களில் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்கள்தானா? என நீதிபதி ஜெயசந்திரன் கேள்வி எழுப்பினார். அதற்கு எச்.ராஜா தரப்பு, "ஆம்" என்று பதில் அளித்தது.
இதனை தொடர்ந்து வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, விசாரணையை சந்திக்க அறிவுறுத்தி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
- இபாஸ் நடைமுறைகள் குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்கள் கொடுக்க வேண்டும்
- கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 முதல் ஜூன் 30ம் தேதி வரை இ-பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கான தொழில்நுட்ப உதவிகளை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், உள்ளூர் மக்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் இ-பாஸ் நடைமுறைகள் குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டு ஜனவரி 2-வது வாரத்திலேயே பம்ப்செட் உற்பத்தி தொடங்கி விட்டது.
- வெயில் தாக்கம் அதிகம் காணப்படுவதால் விவசாய பயன்பாட்டுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.
கோவை:
தரமான பம்ப்செட் தயாரிப்பில் உலகளவில் கோவை மாவட்ட பம்ப்செட் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் வீடு மற்றும் விவசாய பயன்பாட்டுக்கான பம்ப்செட் தேவை அதிகரித்துள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய பம்ப்செட் தயாரிப்பாளர்கள் கூறியதாவது:-
தேசிய அளவிலான பம்ப்செட் தேவையில் கோவை மாவட்ட தொழில் நிறுவனங்கள் 50 சதவீதத்துக்கும் மேல் பங்களிப்பு கொண்டுள்ளன. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை பம்ப்செட் சீசனாகும். இந்த ஆண்டு ஜனவரி 2-வது வாரத்திலேயே பம்ப்செட் உற்பத்தி தொடங்கி விட்டது. தொடர்ந்து நிலையான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. வெயில் தாக்கம் அதிகம் காணப்படுவதால் விவசாய பயன்பாட்டுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் பம்ப்செட் தேவையும் உயர்ந்துள்ளது. கோவை மாவட்டத்தை போல் குஜராத்தில் பம்ப்செட் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டாலும், நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் கோவை பம்ப்செட் பொருட்களை வாங்கி அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போதைய நிலவரப்படி விவசாய பம்ப்செட் தேவை 15 சதவீதம் வரையும், வீடுகளுக்கான பம்ப்செட் 10 சதவீதம் வரையும் அதிகரித்துள்ளது. மே மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் பம்ப்செட் தேவை மேலும் உயரும். இந்த ஆண்டு சீசன் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூறும் போது, கோவையில் உள்ள பெரும்பாலான குறுந்தொழில் நிறுவனங்களில் வீடுகளுக்கு தேவையான பம்ப் செட் பொருட்களை அதிகம் தயாரிக்கப்படுகிறது. தற்போது நிலையான தேவை காணப்படுகிறது. பெரும்பாலான அரசுத்துறைகளில் பெரிய நிறுவனங்களின் பம்ப்செட் பொருட்களே கொள்முதல் செய்யப்படுகிறது. குறுந்தொழில் நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம் என்றனர்.
- தெப்பக்காடு கும்கி யானைகளை பாகன்கள் தினமும் ஆற்றுக்கு அழைத்துச்சென்று குளிப்பாட்டி அழைத்து வருகின்றனர்.
- தண்ணீரை கண்டதும் குதூகலம் அடைந்த யானைகள், ஆற்றுக்குள் இறங்கி ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தன.
ஊட்டி:
கோடை மழை பெய்யாததால் நீலகிரி மாவட்டம் முழுவதுமே கோடை வெயில் வெளுத்து வாங்குகிறது. இதன் ஒரு பகுதியாக முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வனவிலங்குகள் நீர்நிலைகளை தேடி இடம் பெயர தொடங்கி உள்ளன. மேலும் முதுமலை புலிகள் காப்பகம் தற்போது வறண்டு காணப்படுகிறது. அங்கு பச்சைப்பசேல் பசுமையை பார்ப்பது அரிதாக உள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள சுமார் 25-க்கும் மேற்பட்ட கும்கி யானைகள், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் கட்டிடம் கட்டுமான பணிகள் காரணமாக அங்குள்ள 4 பகுதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நீலகிரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், தெப்பக்காடு கும்கி யானைகளை பாகன்கள் தினமும் ஆற்றுக்கு அழைத்துச்சென்று குளிப்பாட்டி அழைத்து வருகின்றனர். அதன்படி நேற்று கும்கி யானைகள் மாயார் ஆற்றுக்கு அழைத்து வரப்பட்டது. அப்போது தண்ணீரை கண்டதும் குதூகலம் அடைந்த யானைகள், ஆற்றுக்குள் இறங்கி ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தன.
மேலும் அவை ஆழமான பகுதிகளுக்குள் சென்று, தும்பிக்கையால் தண்ணீரை உறிஞ்சி உடல் முழுவதும் வாரி இறைத்து உற்சாக குளியல் போட்டன. முதுமலை மாயார் ஆற்றுக்கு பாகனை சுமந்து வந்த யானை, ஆற்றுக்குள் இறங்கி ஆனந்த குளியல் போடுவது தொடர்பாக வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- நானே முதுகுவலி சிகிச்சைக்காக சென்னையில் தங்கி இருக்கிறேன்.
- திட்டமிட்டு எனக்கு எதிரான சதி வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
சென்னை:
ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையுடன் போனில் பேசியதாகவும் இது தி.மு.க.வில் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் பரவியது.
ஏற்கனவே திருச்சியில் நடைபெற்ற கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பேசிய போது, உயிரே போனாலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடமாட்டேன் என்று கூறினார். அது தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அண்ணாமலையுடன் பேசினார் என்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி துரை வைகோவிடம் கேட்டபோது அண்ணாமலையை தொடர்பு கொண்டு பேசியதாக வெளியாகிய தகவலை மறுத்தார்.
அவர் கூறியதாவது:- அண்ணாமலையுடன் நான் ஏன் பேசப் போகிறேன். நானே முதுகுவலி சிகிச்சைக்காக சென்னையில் தங்கி இருக்கிறேன். இந்த மாதிரி பொய்யான தகவல்களை பரப்பி ம.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே சிண்டு முடிய பார்க்கிறார்கள். இது தி.மு.க.வுக்கும் தெரியும். அவர்களும் நம்ப போவதில்லை. தேர்தலின் போது தி.மு.க. ஒத்துழைக்கவில்லை என்றார்கள். எனக்கும் என் அப்பாவுக்கும் மனஸ்தாபம் என்கிறார்கள். திட்டமிட்டு எனக்கு எதிரான சதி வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
- தென்னை விவசாயிகள் குறைந்த விலைக்கு இளநீரை விற்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் அதிகளவில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. இங்கு விளையும் தேங்காய், இளநீர் உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கோடை வெயில் காரணமாக பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாக்களில் ஒரு டன் இளநீரின் பண்ணை விலை ரூ.15 ஆயிரத்து 500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-
கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் இளநீரை விரும்பி பருகி வருகிறார்கள். இந்த வாரம் நல்ல, தரமான குட்டை, நெட்டை வீரிய ஓட்டுரக மரங்களின் இளநீர்விலை, கடந்த வார விலையை விட ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.39 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒருடன் இளநீரின் விலை ரூ.15 ஆயிரத்து 500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளநீர்வரத்து மிக மிக குறைவாக இருப்பதால் பண்ணைகளில் இளநீர் வாங்குவதில் வியாபாரிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் கூடுதல் விலை கொடுத்து வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். கடுமையான இளநீர் தட்டுப்பாடு காரணமாக வரும் வாரத்தில் இளநீரின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. எனவே தென்னை விவசாயிகள் குறைந்த விலைக்கு இளநீரை விற்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






