என் மலர்
உள்ளூர் செய்திகள்
- விஜய் சுதந்திரமாக அரசியலுக்கு வரவில்லை; முழுக்க முழுக்க பாஜக தூண்டுதலே காரணம்.
- விஜய் ஆபத்தான அரசியலை கையிலெடுத்திருக்கிறார்.
திருச்சி:
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுவிலக்கு கொள்கையை வரையறுக்க வேண்டும். அது நடைமுறைக்கு வந்தால்தான் இளம் தலைமுறையை காப்பாற்ற முடியும். அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகளில் இளைஞர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள். அவர்களில் கணிசமானோர் போதையில் பங்கேற்பதை நானே கவனித்து இருக்கிறேன்.
த.வெ.க. தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு அரசு, காவல்துறை அஞ்சுகிறதா? த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை, விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை எனக் கூற வேண்டும்.
விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இல்லை எனில் ஆனந்த் மீதான வழக்கில் எப்படி முகாந்திரம் இருக்கும்?
விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாததற்கு காரணம் என்ன? திமுக-தவெக இடையே மறைமுக டீலிங் உள்ளதா? விஜய் மீது வழக்குபதிவு செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்தது யார்? ஹஸ்கி வாய்ஸில் பேசினால் சோகம் என நம்பி விடுவார்கள் என விஜய் வீடியோவில் அவ்வாறு பேசி உள்ளார்.
மூன்று நாட்கள் சும்மா இருந்துவிட்டு ஆர்எஸ்எஸ் தலைமை சொன்னதும் வீடியோ வெளியிடுகிறார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்னணியில் இயங்கும் விஜய்யின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. விஜய்யை சுற்றி இருக்கும் அனைவரும் பா.ஜ.க. பயிற்சி பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள். திமுக கூட்டணிக்கான சிறுபான்மையினரின் வாக்குகளை விஜய் மூலம் பிரிப்பதே பாஜகவின் திட்டம். பாஜக-அதிமுக கூட்டணியில் கண்டிப்பாக விஜய்யை சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். கரூர் துயர சம்பவத்தில் விஜய்யை காப்பாற்ற பாஜக முயற்சி செய்கிறது.
விஜய் சுதந்திரமாக அரசியலுக்கு வரவில்லை; முழுக்க முழுக்க பாஜக தூண்டுதலே காரணம். விஜய்யின் கொள்கை எதிரியான பாஜகவே அவரை பாதுகாக்க முயற்சிக்கிறது. பாஜக பாதுகாக்க முயல்வதன் மூலம் விஜய்யின் சாயம் வெளுத்துப் போய்விட்டது.
அண்ணா ஹசாரே போன்று விஜய்யை பாஜக பயன்படுத்துகிறது. விஜய்யை பயன்படுத்தி அதிமுகவை அழித்துவிட்டு அந்த இடத்திற்கு வர பாஜக முயல்கிறது.
தமிழக அரசு, காவல் துறைதான் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். மாவட்ட ஆட்சி நிர்வாகம் தோல்வியடைந்து விட்டது. இப்படியெல்லாம் மடைமாற்றம் செய்ய பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
விஜய் ஆபத்தான அரசியலை கையிலெடுத்திருக்கிறார். வெறுப்பு அரசியலை பேசி வரும் விஜய்யால் தமிழ்நாட்டில் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. குற்றவுணர்வே இல்லாமல் ஆட்சியாளர்கள் மீது விஜய் பழிபோட முயற்சிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மகாத்மா காந்தியின் நினைவிடங்களில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
- காந்தியின் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மகாத்மா காந்தியின் நினைவிடங்களில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
டெல்லி ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவரை தொடர்ந்து பா.ஜ.க. தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதராடை அணிந்து வந்து மரியாதை செலுத்தினார்.
ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள காந்தியின் உருவ சிலைக்கு கதராடை அணிந்து வந்து மாலை அணிவித்து மலர் தூவி ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.
- நிர்மல் குமார் உதவியாளரிடமும் போலீசார் நீண்ட நேரம் கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர்.
- இருவரும் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
சென்னை:
கரூரில் விஜய் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது தொடர்பாக போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குறிப்பாக தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர்மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்த போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் இருவரும் முன் ஜாமின் கேட்டு ஐகோர்ட்டில் மனு செய்துள்ளனர். நாளை அந்த மனு விசாரணைக்கு வருகிறது. அதற்கு முன்னதாக இன்று இரவுக்குள் அவர்களை கைது செய்ய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இருவரின் நண்பர்கள் வட்டாரத்தில் இன்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். நிர்மல் குமார் உதவியாளரிடமும் போலீசார் நீண்ட நேரம் கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர்.
அதன் அடிப்படையில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் இருவரையும் பிடிப்பதற்கு தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
நேற்று நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் அவர்கள் பங்கேற்கவில்லை. ரகசிய இடத்தில் இருந்தபடி அவர்கள் கட்சி நிர்வாகிகளிடம் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
- மிகச் சிறந்த தனி மனிதர்களை உருவாக்குவது ஆர்.எஸ்.எஸ். உடைய தலையாய கடமை.
- தொலைநோக்கு சமூக பார்வையும் தேச பக்த உணர்வும்தான் இந்த இயக்கத்தின் அடிநாதமாக அமைந்து உள்ளன.
சென்னை:
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவையொட்டி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இன்று உலகத்தின் மிகப் பெரிய தேச பக்த இயக்கமாக ஆர்.எஸ்.எஸ். தனது நூற்றாண்டினை கொண்டாடுகின்றது. மிகச் சிறந்த தனி மனிதர்களை உருவாக்குவது ஆர்.எஸ்.எஸ். உடைய தலையாய கடமை. அதனால்தான் ஆர்.எஸ்.எஸ்.-ன் அத்தனை துணை அமைப்புகளும் பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.
தொலைநோக்கு சமூக பார்வையும் தேச பக்த உணர்வும்தான் இந்த இயக்கத்தின் அடிநாதமாக அமைந்து உள்ளன. அதனால்தான் எத்தனையோ எதிர்ப்புகளுக்கு இடையிலும் சமுதாயம் இந்த இயக்கத்தை மனதார ஏற்றுக் கொண்டிருக்கிறது.
பாரதம் உலகின் உன்னத தேசமாக, உலகத்திற்கு வழிகாட்டுகின்ற தேசமாக உலகின் குருவாக உயரும் நாள் தொலைவில் இல்லை. இந்த வேள்வியில் ஆர்.எஸ்.எஸ்.ன் பங்கு மகத்தானது. அது காலத்தைக் கடந்தும் வெற்றிகரமாக தொடரும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்!
- மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்!
மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர்.
நம் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் RSS இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்! இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி! என்று கூறியுள்ளார்.
- சேமிப்பு கிடங்குகளில் நெல்மூட்டைகள் வைக்க இடவசதி உள்ளதா என்று கேட்டறிந்தார்.
- காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் காணொலி வாயிலாக ஆலோசனையில் இணைந்து இருந்தனர்.
சென்னை:
வடகிழக்கு பருவமழை இந்த மாதம் 20-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல்கொள்முதல் நிலையங்களில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக டெல்டா மாவட்டங்களில் உள்ள கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
நெல்கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக நெல்மூட்டைகள் வைக்கப்பட்டு உள்ளதா? என்று விசாரித்ததுடன் மேற்கொண்டு 'தார்பாய்' தேவைப்படுகிறதா? சேமிப்பு கிடங்குகளில் நெல்மூட்டைகள் வைக்க இடவசதி உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.
மேட்டூர் அணையில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் கடைமடை பகுதி முழுவதும் சென்றடைந்துள்ளதால் குறுவை சாகுபடி விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சருடன் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, டி.ஆர்.பி.ராஜா மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் உள்ள கலெக்டர்கள் காணொலி வாயிலாக ஆலோசனையில் இணைந்து இருந்தனர்.
- பா.ம.க. இளைஞர் சங்கத் தலைவர் பதவியை தமிழ்குமரனுக்கு வழங்கியுள்ளேன்.
- கரூர் துயர சம்பவத்தில் முதலமைச்சர் என்ன செய்ய வேண்டுமோ, அதனை செய்துள்ளார்.
திண்டிவனம்:
தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* பா.ம.க. இளைஞர் சங்கத் தலைவர் பதவியை தமிழ்குமரனுக்கு வழங்கியுள்ளேன். அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று வாழ்த்துவோம்.
* கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை சொல்லி உள்ளேன்.
* கரூர் கூட்ட நெரிசல் போன்ற துயரச் சம்பவங்கள் ஏற்படாமல் அரசியல் கட்சிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு உயிர் கூட பலியாகக்கூடாது. அந்த அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு காவல்துறை வழிகாட்ட வேண்டும்.
* கரூர் துயர சம்பவத்தில் முதலமைச்சர் என்ன செய்ய வேண்டுமோ, அதனை செய்துள்ளார் என்றார்.
இதனிடையே, கரூர் விவகாரத்தில் விஜய் வீடியோ வெளியிட்டது தொடர்பான கேள்விக்கு, முதலமைச்சர் எப்படி காரணமாக முடியும்? என்றார்.
- தி.மு.க. ஆட்சியில் மொத்தம் 7 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
- 60 சதவீதம் போக்சோ வழக்குகள் விசாரிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 2023-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 6968 ஆக அதிகரித்திருப்பதாகவும், 2023-ம் ஆண்டில் மட்டும் 67 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன் அதி.மு.க. ஆட்சியில் 2020-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 4338 ஆக இருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 2021-ம் ஆண்டில் 6064 ஆகவும், 2022-ம் ஆண்டில் 6580 ஆகவும், 2023-ம் ஆண்டில் 6968 ஆகவும் அதிகரித்திருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுடன் ஒப்பிடும் போது தி.மு.க. ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் குற்றங்களின் எண்ணிக்கை 60.66 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
2023-ம் ஆண்டில் 67 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
2022-ம் ஆண்டில் 81 குழந்தைகள், 2021-ம் ஆண்டில் 69 குழந்தைகள் என தி.மு.க. ஆட்சியில் மொத்தம் 217 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். தி.மு.க. ஆட்சியில் மொத்தம் 7 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு வளர்ச்சியடைந்து விட்டது, சிசுக் கொலைகள் ஒழிக்கப்பட்டு விட்டன என ஆட்சியாளர்கள் பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தி.மு.க. ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் 28 குழந்தைகள் சிசுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு இந்த புள்ளிவிவரங்களின் மூலம் உறுதியாகியிருக்கிறது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்கான தமிழக மாவட்டங்களில் 53 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில், இதுவரை 20 நீதிமன்றங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. அதனால் 60 சதவீதம் போக்சோ வழக்குகள் விசாரிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கொடைக்கானலில் இதமான வெயில் மற்றும் ரம்யமான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக வார இறுதி நாட்களில் மட்டுமே சுற்றுலா பயணிகள் அதிகமாக காணப்பட்டனர். இந்நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறைகள் என தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
வாரத்தின் இறுதி நாட்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இடைப்பட்ட நாட்களில் சுற்றுலா பயணிகள் இன்றி வறண்ட நிலையும் காணப்பட்டதால் சோர்வடைந்திருந்த சிறு குறு வியாபாரிகள் தற்பொழுது சற்று நிம்மதி அடைந்துள்ளனர். நேற்று முதற்கொண்டே வழக்கத்திற்கு மாறாக சற்று அதிகமான சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கினர். இவர்கள் மேல்மலை கிராம பகுதிகளான மன்னவனூர், பூம்பாறை, பூண்டி, கிளாவரை போன்ற பகுதிகளிலும் அதிகமான சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.
இதே போல் பசுமை பள்ளத்தாக்கு, வனத்துறை சுற்றுலா தளங்களான தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடு, மோயர் சதுக்கம் ஆகிய இடங்களிலும், பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, படகு இல்லங்கள் போன்ற பகுதிகளில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். ஏரிச்சாலை பகுதிகளில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். இருப்பினும் ஒரு சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
குறைவான எண்ணிக்கையில் போக்குவரத்து காவலர்கள் உள்ளதால் போக்குவரத்தை சீர் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. குறைவான எண்ணிக்கையிலான போலீசார் போக்குவரத்தை சீர் செய்வதில் முழு கவனம் செலுத்தினர். தொடர் விடுமுறை நாட்களில் போக்குவரத்து காவலர்களை அதிகப்படுத்துவதை விட நிரந்தரமான எண்ணிக்கையில் காவல் துறையினர் போக்குவரத்துக் காவலர்களை அதிகமாக எண்ணிக்கையில் பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானலில் இதமான வெயில் மற்றும் ரம்யமான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் கும்பக்கரை அருவியிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து ஆனந்தமாக நீராடி மகிழ்ந்தனர். அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- கரூர் துயர சம்பவத்தால் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் நிகழ்ச்சிகளை தள்ளி வைத்துள்ளது.
- புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வருகிற 12-ந்தேதி மதுரையில் இருந்து பிரசார பயணத்தை தொடங்குவதாக இருந்தது. இந்த பிரசார பயணத்தை அகில இந்திய பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைப்பதாகவும் இருந்தது. தினசரி 2 மாவட்டங்கள் என்ற அடிப்படையில் அவரது பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஆனால் கரூர் துயர சம்பவத்தால் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் நிகழ்ச்சிகளை தள்ளி வைத்துள்ளது. பா.ஜ.க.விலும் உண்மை கண்டறியும் குழுவை ஜே.பி. நட்டா நியமித்தார். அந்த குழுவினர் கரூர் சென்று சம்பவம் நடந்த இடங்களை பார்வையிட்டு விசாரித்தனர். இந்த குழுவினர் அடுத்த ஒரு வாரத்துக்குள் தங்கள் அறிக்கையை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பிரசார பயணத்தை தள்ளி வைக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. இதனால் ஜே.பி.நட்டாவின் வருகையும் ரத்தாகி உள்ளது.
இனி தீபாவளி பண்டிகைக்கு பிறகு பிரசார பயணம் தொடங்கும் என்றும் அப்போது ஜே.பி.நட்டா திட்டமிட்டவாறு பிரசாரத்தை தொடங்கி வைப்பார் என்றும் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.
- சென்னையில் பிறந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ், ஐஐடி மெட்ராஸில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பை முடித்தார்.
- 2018-ம் ஆண்டில் Open AI-யில் ஆராய்ச்சி பயிற்சியாளராக சேர்ந்தார்.
2025ம் ஆண்டுக்கான ஹூருன் இந்தியாவின் (Harun India) கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி 9.55 லட்சம் கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளார். ரூ. 8.15 லட்சம் கோடியுடன் தொழிலதிபர் அதானி, இந்த ஆண்டு 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்தப் பட்டியலில் சென்னையைச் சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பரும் இடம்பிடித்துள்ளார். ரூ.21,190 கோடி சொத்துடன் இவர் இந்தப் பட்டியலில் அங்கம் வகிக்கிறார். 'பெர்ப்ளெக்ஸிட்டி' ஏஐ நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமாக இருந்து வரும் இவர், இந்தியாவின் முன்னணி இளம் கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார். ஸ்ரீனிவாஸ், தற்போது தொழில்நுட்ப உலகில், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு துறையில் முக்கிய நபராக உருவெடுத்துள்ளார்.
Harun India பில்லியனர்கள் பட்டியலின்படி, இந்தியாவில் இப்போது 358 பில்லியனர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
சென்னையில் பிறந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ், ஐஐடி மெட்ராஸில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பை முடித்தார். அதைத் தொடர்ந்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், பெர்க்லியில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
அவரது தொழில்முறை பயணத்தில் முன்னணி AI நிறுவனங்களில் பணியாற்றியதும் அடங்கும். 2018-ம் ஆண்டில், அவர் Open AI-யில் ஆராய்ச்சி பயிற்சியாளராக சேர்ந்தார். அதைத் தொடர்ந்து டீப் மைண்ட் (DeepMind) மற்றும் கூகுளில் பயிற்சி பெற்றார்.
ஸ்ரீனிவாஸ் 2021 செப்டம்பரில் Open AI விஞ்ஞானியாக திரும்பினார். சுமார் ஒரு வருடம் கழித்து, அவர் தனது சொந்த முயற்சிக்கான அடித்தளத்தை அமைக்கத் தொடங்கினார். இது இறுதியில் பெர்ப்ளெக்ஸிட்டி ஏஐ (Perplexity AI) நிறுவ வழிவகுத்தது.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பா.ம.க. இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து முகுந்தன் ராஜினாமா செய்தார்.
- நியமன கடிதத்தை டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மூத்த மகள் ஸ்ரீகாந்தி ஆகியோர் தமிழ்குமரனிடம் வழங்கினார்கள்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்த நிலையில் அன்புமணியை கட்சி பதவியில் இருந்து டாக்டர் ராமதாஸ் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் தனது ஆதரவாளர்களுக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கி வருகிறார். ஏற்கனவே அன்புமணி தலைவராக இருக்கும்போது இளைஞரணி செயலாளராக தமிழ்குமரனுக்கு பதவி வழங்கப்பட்டது. அப்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து வானூர் அருகே நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழுவில் டாக்டர் ராமதாசின் பேரன் முகுந்தனுக்கு இளைஞர் சங்க பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கும் இடையே பொதுக்கூட்ட மேடையில் மோதல் போக்கு உண்டானது. அப்போது ராமதாஸ் நான் சொல்பவர்கள் கட்சியில் இருந்தால் இருக்கட்டும். இல்லையென்றால் வெளியே போகட்டும். இது நான் ஆரம்பித்த கட்சி என்று பேசினார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பா.ம.க. இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து முகுந்தன் ராஜினாமா செய்தார். இதனையடுத்து மீண்டும் தமிழ்குமரனுக்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் பொறுப்பை டாக்டர் ராமதாஸ் தற்போது வழங்கி உள்ளார்.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது, தமிழ்குமரனை நியமித்து உத்தரவிட்டார். அதற்கான நியமன கடிதத்தை டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மூத்த மகள் ஸ்ரீகாந்தி ஆகியோர் தமிழ்குமரனிடம் வழங்கினார்கள். பா.ம.க. இளைஞர் சங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்குமரன் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.






