என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஹஸ்கி வாய்ஸில் பேசினால் சோகமா? - விஜயை சாடிய திருமாவளவன்
- விஜய் சுதந்திரமாக அரசியலுக்கு வரவில்லை; முழுக்க முழுக்க பாஜக தூண்டுதலே காரணம்.
- விஜய் ஆபத்தான அரசியலை கையிலெடுத்திருக்கிறார்.
திருச்சி:
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுவிலக்கு கொள்கையை வரையறுக்க வேண்டும். அது நடைமுறைக்கு வந்தால்தான் இளம் தலைமுறையை காப்பாற்ற முடியும். அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகளில் இளைஞர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள். அவர்களில் கணிசமானோர் போதையில் பங்கேற்பதை நானே கவனித்து இருக்கிறேன்.
த.வெ.க. தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு அரசு, காவல்துறை அஞ்சுகிறதா? த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை, விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை எனக் கூற வேண்டும்.
விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இல்லை எனில் ஆனந்த் மீதான வழக்கில் எப்படி முகாந்திரம் இருக்கும்?
விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாததற்கு காரணம் என்ன? திமுக-தவெக இடையே மறைமுக டீலிங் உள்ளதா? விஜய் மீது வழக்குபதிவு செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்தது யார்? ஹஸ்கி வாய்ஸில் பேசினால் சோகம் என நம்பி விடுவார்கள் என விஜய் வீடியோவில் அவ்வாறு பேசி உள்ளார்.
மூன்று நாட்கள் சும்மா இருந்துவிட்டு ஆர்எஸ்எஸ் தலைமை சொன்னதும் வீடியோ வெளியிடுகிறார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்னணியில் இயங்கும் விஜய்யின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. விஜய்யை சுற்றி இருக்கும் அனைவரும் பா.ஜ.க. பயிற்சி பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள். திமுக கூட்டணிக்கான சிறுபான்மையினரின் வாக்குகளை விஜய் மூலம் பிரிப்பதே பாஜகவின் திட்டம். பாஜக-அதிமுக கூட்டணியில் கண்டிப்பாக விஜய்யை சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். கரூர் துயர சம்பவத்தில் விஜய்யை காப்பாற்ற பாஜக முயற்சி செய்கிறது.
விஜய் சுதந்திரமாக அரசியலுக்கு வரவில்லை; முழுக்க முழுக்க பாஜக தூண்டுதலே காரணம். விஜய்யின் கொள்கை எதிரியான பாஜகவே அவரை பாதுகாக்க முயற்சிக்கிறது. பாஜக பாதுகாக்க முயல்வதன் மூலம் விஜய்யின் சாயம் வெளுத்துப் போய்விட்டது.
அண்ணா ஹசாரே போன்று விஜய்யை பாஜக பயன்படுத்துகிறது. விஜய்யை பயன்படுத்தி அதிமுகவை அழித்துவிட்டு அந்த இடத்திற்கு வர பாஜக முயல்கிறது.
தமிழக அரசு, காவல் துறைதான் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். மாவட்ட ஆட்சி நிர்வாகம் தோல்வியடைந்து விட்டது. இப்படியெல்லாம் மடைமாற்றம் செய்ய பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
விஜய் ஆபத்தான அரசியலை கையிலெடுத்திருக்கிறார். வெறுப்பு அரசியலை பேசி வரும் விஜய்யால் தமிழ்நாட்டில் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. குற்றவுணர்வே இல்லாமல் ஆட்சியாளர்கள் மீது விஜய் பழிபோட முயற்சிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.






