என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 12-வது புரோ கபடி லீக் போட்டி சென்னையில் நடந்து வருகிறது.
- நேற்று நடந்த ஆட்டத்தில் புனேரி பல்தான் அணி வெற்றி பெற்றது.
சென்னை:
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த போட்டியில் புனேரி பல்தான், பெங்களூரு புல்ஸ் இடையிலான ஆட்டம் 29-29 என சமனில் முடிந்தது. தொடர்ந்து
நடந்த டை பிரேக்கரில் புனேரி பல்தான் 6-4 என வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் புனேரி பல்தான் அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. தபாங் டெல்லி 2-வது இடத்திலும், தெலுகு டைட்டன்ஸ் 3-வது இடத்திலும் உள்ளது.
- ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதியா?
- மக்களைப் பாதுகாக்க வேண்டியதே அரசுதான் என்றார் இபிஎஸ்.
தர்மபுரி:
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதலில் தர்மபுரி நகராட்சி அலுவலகம் அருகில் கூடியிருந்த பெருந்திரளான மக்களிடையே எழுச்சியுரை நிகழ்த்தினார்.
செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் தவெக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். அவர்களுக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள் என்றதும் அனைவரும் அமைதி காத்தனர். அதன்பின் இபிஎஸ் பேசியதாவது:
தர்மபுரியில் எழுச்சிப் பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டு பின்பு ஒத்திவைக்கப்பட்டது. காரணம் உங்களுக்குத் தெரியும். கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி நடந்த சம்பவத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.
இந்த ஆட்சியாளர்கள் உரிய முறையில் பாதுகாப்பு கொடுத்திருந்தால் அந்த உயிர்களைப் பாதுகாத்திருக்கலாம். முறையான, சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் யார்? இது மக்கள் கேட்கும் குரல்.
ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதியா? நாட்டு மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணி இதுக்கெல்லாம் பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை. முதல்வரின் கையில்தான் காவல்துறை இருக்கிறது. சரியான முறையில் முதல்வர் உத்தரவிட்டிருந்தால், காவல்துறை சரியான முறையில் செயல்பட்டிருந்தால், பாதுகாப்புக் கொடுக்கப்பட்டிருந்தால், 41 உயிரை இழந்திருக்க வேண்டியதில்லை.
இன்னும் ஆழமாகப் பேசமுடியும். ஆனால் இந்த அரசாங்கம் ஒரு நபர் கமிஷன் அமைத்துள்ளனர், விசாரணை தொடங்கிவிட்டது. அதனால் மேலோட்டமாகத்தான் பேச முடியும். இவ்வளவு பிரச்னை நடந்துவிட்டது. தமிழகத்தை தலை குனிய விடமாட்டேன் என்று ஸ்டாலின் சொன்னார், ஆனால் இன்று தலைகுனிந்து நிற்கும் காட்சியைப் பார்க்கிறோம். நாடே அதிர்ந்துவிட்டது.
இதுவரை எத்தனையோ அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறது, எந்த ஒரு பொதுக்கூட்டத்திலும் இல்லாத அளவுக்கு 41 உயிர்கள் பறி போயிருக்கிறது என்று சொன்னால், இந்த அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும். ஆட்சி உங்கள் கையில் இருக்கிறது, ஆட்சியாளர்களைத்தான் கேட்க முடியும். யார் யார் மீதோ பழி சுமத்தி தப்பிக்கக் கூடாது, ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இனியாவது பொதுக்கூட்டத்துக்கு முறையான பாதுகாப்பு தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
நான் 163 தொகுதியில் மக்களைச் சந்தித்தேன். 5 முதல் 6 மாவட்டத்தில்தான் காவல்துறை பாதுகாப்பு கொடுத்தனர், மற்ற இடங்களில் நம்முடைய கழகத் தொண்டர்கள், கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் தான் பாதுகாப்பு கொடுத்தனர்.
ஆளுங்கட்சி முதல்வர் கூட்டம் நடத்தினால் ஆளே இல்லாத பகுதியில்கூட காவலர்களை நிறுத்தி பாதுகாப்பு கொடுக்கிறீர்கள். அதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆளே இல்லாத இடத்தில் பாதுகாப்பு கொடுக்கும் முதலமைச்சர், ஆயிரக்கணக்கான பேர் இருக்கும் இடத்தில் ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று மக்கள் கேட்கும் கேள்விக்கு முதல்வர் பதில் சொல்லியாக வேண்டும்.
இதற்கெல்லாம் பதில் சொல்வதற்கு மக்கள் 2026 தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள், உங்களுக்குத் தகுந்த பதிலடி வழங்குவார்கள்.
அதுமட்டுமல்ல, ஸ்டாலின் மாடல் அரசு உயர் அதிகாரிகளை, செய்தியாளர்களைச் சந்தித்து இந்த ஆட்சியின் திட்டங்களைச் சொல்ல வேண்டும் என்று பணித்து, இந்த 10 நாட்களாக இந்த ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் என்று சொல்லிவருகிறார்கள். அது சொல்லலாம், ஆனால் கரூரில் நடந்த சம்பவத்தை எப்படி அரசு செயலாளர் சொல்ல முடியும்?
ஒரு நபர் கமிஷன் அமைத்துவிட்டு அரசு செயலாளர்களை வைத்து அரசியல் செய்யவேண்டாம். உங்கள் துறையின் பணிகளை மட்டும் நீங்கள் செய்யவேண்டும். அதைவிட்டுவிட்டு அவர் எப்போது அங்கு சென்றார், இவர் ஏன் கையைக் காட்டவில்லை என்பதெல்லாம் உங்களுடைய பேச்சாக இருக்கக் கூடாது. இதெல்லாம் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தோண்டியெடுத்து தவறான செயலில் ஈடுபடுகின்ற அதிகாரிகளை விடமாட்டேன்.
என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? மக்களின் வரிப்பணத்தில் தான் உங்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே, நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு மக்கள் துயரத்தை எண்ணி துடித்துக்கொண்டிருக்கிறார்கள். மிகப்பெரிய துயர சம்பவத்தை நியாயப்படுத்தி பேசுவது எந்த விதத்தில் சரி? அரசியல்வாதிகள் தப்பித்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அரசு அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும், இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த ஆட்சியிலும், அதிகாரிகளிடமும் அது கிடைக்காது.
சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி நடந்த சம்பவத்தை நியாயப்படுத்தி பேசுகிறார், நீங்க என்ன அரசியல்வாதியா? சட்டத்தைப் பாதுகாப்பது தான் உங்கள் பொறுப்பு. சரியான பாதுகாப்பு கொடுக்காததால் இத்தனை பேரை இன்றைக்கு நாம் இழந்திருக்கிறோம். கரூரில் ஒரு டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடக்கிறது, அப்படியிருக்கும்போது ஏடிஜிபி செய்தியாளர்களிடம் நியாயப்படுத்தி பேசினர், கீழே இருக்கும் அதிகாரி எப்படி நியாயமாக விசாரிப்பார்? இவை எல்லாமே நடந்த தவறை மறைப்பதற்கு அரசு நடத்தும் கண் துடைப்பு நாடகம்.
ஸ்டாலின் அவர்களே இவ்வளவு பிரச்சனை ஏற்பட்ட பிறகும் நீங்கள் திருந்தவில்லை. கூட்டத்தில் மயங்கி விழுந்த பெண்மணியைத் தூக்கிக்கொண்டு செல்கிறார்கள், தலை சாய்ந்து செல்கிறார்கள். இப்படி தமிழர்கள் தலை குனிந்த காட்சிகளைக் கண்டு அனைவரும் பதறிப்போயிருக்கிறார்கள், இதற்கு பதில் சொல்ல வேண்டியது முதல்வர் தானே?
ஒரு நபர் கமிஷன் அமைத்துள்ளீர்கள், எந்த தகவல் என்றாலும் அதை கமிஷனில் தான் கொடுக்க வேண்டும். அதிகாரிகள் மூலம், தன்னுடைய அதிகாரத்தை வைத்து உண்மை சம்பவத்தை மறைத்துவிடலாம் என்றால் நிச்சயமாக நடக்காது, மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும்.
கரூரில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஏன் பதறுகிறார்? மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் இருக்கக் கூடாது, ஆனால் முகத்தில் பயம் தெரிகிறது. அவர் பேச்சில் பயம் தெரிகிறது, மாறி மாறி அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் எல்லாம் உண்மையை மறைத்துப் பேசுகிறார்கள். இதற்கெல்லாம் தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.
பணத்தைக் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்று கரூர் எம்.எல்.ஏ நினைத்துக் கொண்டிருக்கிறார். ஒருமுறை மக்கள் ஏமாந்துவிட்டார்கள், இனியும் மக்கள் ஏமாற மாட்டார்கள். உங்களுடைய போலிக் கொலுசு, போலி வாக்குறுதி இனி எடுபடாது. அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 3 சென்ட் இடம் தன்னுடைய சொந்தப் பணத்தில் வாங்கிக் கொடுப்பதாகவும், வீடுகட்டித் தருவதாகவும் 25 ஆயிரம் பேருக்கு வாக்குறுதி கொடுத்தார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும். இன்றைய முதல்வர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அத்தனையும் வெற்று அறிவிப்பு. அவற்றை எல்லாம் மாவட்ட மக்கள் ஞாபகம் வைத்திருக்கிறார்கள், எப்போது தேர்தல் வரும் என எதிர்பார்க்கிறார்கள். சரியான தண்டனை வழங்குவார்கள்.
துயர சம்பவம் நடந்துவிட்டது. முதல்வர் இரவோடு இரவாக வந்து ஆறுதல் சொன்னார். ரைட். துணை முதல்வர் உல்லாசமாக வெளிநாடு போய்விட்டார். ஏங்க இங்கே நாடு பத்தி எரிஞ்சிக்கிட்டு இருக்கு, நாட்டு மக்கள் பதறிக்கொண்டு இருக்கிறார்கள். உடனே தனி விமானம் பிடித்து வருகிறார், பார்த்தார், மீண்டும் விமானம் ஏறி போய்விட்டார். இவரெல்லாம் ஆண்டால் நாடு உருப்படியாக இருக்குமா? மக்கள் உயிரிழந்து துடிக்கும் நேரத்தில்கூட இவர்களுக்கு இரக்கம் இல்லை, உல்லாச சுற்றுப்பயணம் தான் முக்கியம். இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாட்டு மக்கள் உணரவேண்டும்.
ஒரு துணை முதல்வர் இவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்படும்போது எங்கே இருக்கவேண்டும்? தமிழ்நாட்டில் இருந்து தேவையான உதவிகளை செய்துகொடுக்க வேண்டும். அந்த நெரிசலில் சிக்கியவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதையெல்லாம் திட்டமிட்டு செயல்படுத்தி இருந்தால் ஒரு நல்ல துணை முதல்வர் என்று சொல்லலாம். ஆனால் அதையெல்லாம் கருணாநிதி குடும்பத்தில் எதிர்பார்க்க முடியாது.
யார் எப்படி இருந்தால் என்ன? தன் குடும்பம் நன்றாகயிருக்க வேண்டும். மக்களை சுரண்டி உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும். இதுதான் ஆட்சியாளர்களின் குறிக்கோள். இனியாவது அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டத்துக்கு முறையான பாதுகாப்பு கொடுங்கள். இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்று பிரித்துப் பார்க்காதீர்கள். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நம்முடைய சகோதர, சகோதரிகள் யார் இறந்தாலும் அது நம் குடும்ப இழப்பு என்பதை உணரவேண்டும். தி.மு.க. இதை இன்னமும் உணர்ந்தபாடில்லை.
அவர்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஜால்ரா அடிக்கின்றன. திருமாவளவன் உண்மையில் மனசாட்சியோடு பேசுகிறாரா? 41 உயிர் போன நேரத்தில் ஏதேதோ குற்றச்சாட்டுகள் சொல்லி ஆட்சியாளர்களூக்கு தூபம் போடுவதை விட்டுவிடுங்கள்.
இதே திருமா திருச்சியில் மாநில மாநாடு நடத்தினார். அவரை எப்படியெல்லாம் அலைக்கழித்தார்கள் என்பதை அவரே கூறினார். இடது கம்யூனிஸ்ட் விழுப்புரத்தில் மாநாடு நடத்தினார்கள், முழுமையான அனுமதி கொடுக்கவில்லை என்பதை எல்லாம் மறந்து விடாதீர்கள். உங்கள் கட்சிக்கும் இதே நிலை ஒரு காலத்தில் வந்தே தீரும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
இதே அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா இருக்கும்போதும், அம்மா மறைந்த பிறகும் ஆயிரக்கணக்கான போராட்டங்கள் தமிழகத்தில் நடந்தன. அத்தனைக்கும் அனுமதியும் பாதுகாப்பும் கொடுத்தோம். எந்த சம்பவமும் இல்லாமல் எல்லா கட்சிகளும் போராட்டம் நடத்தினார்கள். அதை நாங்கள் ஜனநாயகமாகப் பார்த்தோம், இந்த ஆட்சியில் ஜனநாயகத்தைப் பார்க்க முடியாது.
நாங்கள் எழுச்சிப் பயணக் கூட்டத்துக்கு கரூர் பஸ் நிலையம் பக்கத்தில் ரவுண்டானா இருந்தது, அதற்கு அருகில் இடம் கேட்டோம், விஜயபாஸ்கர் கேட்டார். கொடுக்கவில்லை. இப்போது துயர சம்பவம் நடந்த இடத்தைத்தான் கொடுத்தார்கள், இருந்தாலும் வேறு வழியின்றி அவ்விடத்தில் நடத்தினோம்.
இதே அ.தி.மு.க. ஆட்சியில் நான் முதல்வராக இருந்தபோது தி.மு.க.வுக்கு இரண்டு முறை கரூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ரவுண்டானாவில் அனுமதி கொடுத்தோம். இதுதான் அ.தி.மு.க. நடுநிலையோடு நடந்தோம். திராவிட மாடல் அரசு அமைந்தபிறகு 3 முறை ரவுண்டானா அருகில் பொதுக்கூட்டம் நடத்தினீர்கள், உங்களுக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சியை ஒடுக்கும் போக்கை நீங்கள் கடைபிடித்தால் உங்கள் கட்சி எதிர்காலத்தில் காணாமல் போய்விடும். ஆட்சி அதிகாரம் இருப்பதால் தான் இந்த ஆட்டம் போடுறீங்க, இதுக்கெல்லாம் மக்கள் முடிவு கட்டுகின்ற நேரம் வந்துவிட்டது என்பதை ஸ்டாலின் உணரவேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. போதை பொருள் தாராளமாக கிடைக்கிறது. கிராமம் முதல் நகரம் வரை இளைஞர்கள் சீரழிகிறார்கள், நான் பலமுறை சொல்லியும் முதல்வர் கண்டுகொள்ளவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி, பொதுமக்கள் கூடும் இடங்களில் கஞ்சா விற்பனை நடக்கிறது, சிறுமி முதல் முதியோர் வரை பாலியல் சீண்டலுக்கு ஆளாவது இந்த போதை ஆசாமிகளால் தான். கொலை, கொள்ளை நடக்காத நாளே இல்லை. மாணவர்களே, இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று இப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். எல்லோரும் போதைக்கு அடிமையாகி சீரழிந்த பின்னர் சொல்லி என்ன பயன்? இப்படிப்பட்ட முதல்வரை எங்கேயும் பார்க்க முடியாது எந்த திறமையும் இல்லாத பொம்மை முதல்வர்.
இந்த தர்மபுரி மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏதாவது ஒரு பெரிய திட்டம் கொண்டுவந்தார்களா? ஆட்சி போகுற நேரத்தில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுகிறார்களாம், எங்கே பணம் இருக்கிறது? பணமே ஒதுக்கவில்லை. அடுத்த தேர்தலில் வாக்குகளை பெற வேண்டும், என்பதற்காக சுமார் 8 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அத்தனையும் பொய்.
எத்தனை திட்டத்தை அதிமுக ஆட்சியில் அறிவித்தேன், அவற்றை எல்லாம் முடக்கி வைத்திருக்கிறீர்கள். அப்படியிருக்கும்போது எப்படி புதிய திட்டத்தை நிறைவேற்றுவீர்கள்? ஏற்கனவே தமிழக அரசு திவாலாகிவிட்டது. திமுகவின் நான்காண்டுகளில் 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டனர். இந்தாண்டு ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குகிறார்கள். ஐந்தாண்டு முடியும் தருவாயில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் இருக்கும். ஆனால் எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. அப்புறம் எதுக்கு கடன் வாங்குகிறீர்கள்? எதுவும் தெரியவில்லை. திறமையான முதல்வராக இருந்தால்தானே நிர்வாகம் தெரியும், இவர் பொம்மை முதல்வராக எதுவும் தெரியாமல் ஆட்சி நடத்துகிறார்.
இந்த கடனை எல்லாம் மக்கள்தான் கட்ட வேண்டும். உங்கள் தலையில்தான் எல்லாமே விழும். எப்படி கடனை கட்ட முடியும்.? அவர் கடனை வாங்கிவிட்டு போய்விடுவார், வரி மூலமே திருப்பிச் செலுத்த வேண்டும்.
மின்கட்டணம் இந்த ஆட்சியில் 67 சதவீதம் உயர்த்திவிட்டனர். தொழிற்சாலை, கடைகளுக்கு பீக் ஹவர் கட்டணம் என்று தனியாக வசூலிக்கிறார்கள். இதெல்லாம் உண்மைதானே? திமுககாரருக்கு தில்லு திராணி தெம்பு இருந்தால் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். இந்த கேள்வியை கூட்டத்தின் வாயிலாக கேட்கிறேன். மக்கள் கருத்தின் அடிப்படையில் பேசுகிறேன்.
10 ரூபாய் என்றால் யார் ஞாபகம் வருது? நேற்று வீடியோவில் என்னைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார். தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5,400 கோடியுமாக இந்த 4 ஆண்டுகளில் 22,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். இதையெல்லாம் அதிமுக ஆட்சிக்கு வந்தால் விசாரிப்போம், கவலைப்படாதீர்கள். இந்த 22 ஆயிரம் கோடி பணத்தை வைத்துக்கொண்டுதான் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
உதயநிதியும் சபரீசனும் 30,000 கோடியை வைத்து திணறிக்கொண்டு இருக்கிறார்கள் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒருமுறை சொன்னார். இதற்கு முதல்வர் இதுவரை பதிலே சொல்லவில்லை. இரண்டு வருடத்தில் 30,000 கோடி கொள்ளை என்றால், 53 மாதத்தில் எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள். கொள்ளையடித்த பணத்தை, அடுத்தாண்டு தேர்தலில் கொடுத்து வாக்குகளைப் பெற திட்டமிடுகிறார்கள். ஒருமுறை ஏமாந்துவிட்டீர்கள், அதற்கே நாட்டு மக்கள் படும் துன்பம் ஏராளம். மீண்டும் ஏமாந்து விடாதீர்கள்.
விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அரிசி, பருப்பு, எண்ணெய் எல்லாம் 40 சதவீதம் உயர்ந்துவிட்டது. விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது, விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுத்தோம். எம்ஜிஆர், அம்மா இருவரும் மக்களுக்காக வாழ்ந்தனர், மக்கள் தான் வாரிசு. திட்டங்களை பார்த்துப் பார்த்து செயல்படுத்தினார்கள். அவர்கள் வழியில் அதிமுக அரசு செயல்பட்டது.
ஏழை, விவசாயத் தொழிலாளி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.
மகளிர் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்குச் சென்றுவர ஏதுவாக அம்மா இருசக்கர வாகன திட்டம் மூலமாக சுமார் 3 லட்சம் பேருக்கு 25,000 ரூபாய் மானியம் கொடுத்தோம். இந்த திட்டத்தையும் திமுக அரசு ரத்துசெய்துவிட்டது. உங்கள் ஆதரவினால் அதிமுக அரசு மீண்டும் அமையும்போது இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைக்கு இணங்க, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் பதிவுசெய்தவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு 75,000 ரூபாய் மானியமாக கொடுக்கப்படும்.
அதிமுக அரசு மீண்டும் அமைவதற்கு துணை நிற்க வேண்டும். திமுக அரசு மக்களுக்கு எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் வளமோடு செழிப்போடு அதிகாரத்தோடு வாழ வேண்டும் என்பதுதான் ஸ்டாலின் எண்ணம் அப்படிப்பட்ட எண்ணம் உடையவர்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்படும் தேர்தல் 2026 தேர்தல்.
தர்மபுரி தொகுதியில் அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டினோம், துணை மின் நிலையம் அமைத்தோம், புதிய தாலுகா அமைத்தோம், சிப்காட் 1789 ஏக்கர் ஃபேஸ் 1 திட்டம் கொண்டுவந்தோம். இதை அதிமுக கொண்டுவந்ததால் பணிகளை ஆமை வேகத்தில் செய்கின்றனர். புதிய நீதிமன்றக் கட்டிடம் அமைத்தோம். மாசுகட்டுப்பாடு அலுவலகம் கட்டப்பட்டது. இப்படி பல திட்டம் கொடுத்தோம்.
சேஷம்பட்டி முதல் தர்மபுரி வரை வெளிவட்ட சாலை அமைக்க வேண்டும், தர்மபுரி சாலை விரிவாக்கம், புதிய ஊராட்சி தொடங்க வேண்டும், விவசாய கிணத்தில் நீர்மட்டம் உயர ஒகேனக்கல் உபரி நீரை கொண்டுவர வேண்டும் என்றெல்லாம் பல கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். இவை எல்லாமே அதிமுக ஆட்சியில் ஆய்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்படும். 2026 தேர்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின் என தெரிவித்தார்.
- முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- பத்தாம் நாளான இன்று விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெற்றது.
உடன்குடி:
பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து பல்வேறு வேடங்களை அணிந்த பக்தர்கள் ஒவ்வொரு ஊரிலும் தசரா குழுக்கள் அமைத்து, வாகனங்களில் ஊர் ஊராக சென்று, கலைநிகழ்ச்சி நடத்தியும் காணிக்கை வசூலித்து வந்தனர்.
திருவிழாவையொட்டி தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் மாலையில் சமய சொற்பொழிவு, திருமுறை இன்னிசை, பரதநாட்டியம், வில்லிசை, இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடந்தது.
இந்நிலையில், பத்தாம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதனையொட்டி காலை முதல் மதியம் வரையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
பெரும்பாலான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர்.
இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார்.
அப்போது காளி வேடம் அணிந்த பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்தனர். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.
முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன் 3 முறை அம்மனை வலம் வந்து போரிட தயாரானான். அவனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். பின்னர் சிங்க முகமாக உருமாறிய மகிஷாசூரன் மீண்டும் உக்கிரத்துடன் போரிடுவதற்காக அம்மனை 3 முறை சுற்றி வந்தான். அவனையும் அம்மன் சூலாயுதம் கொண்டு அழித்தார். தொடர்ந்து எருமை முகமாக உருமாறிய மகிஷாசூரன் மறுபடியும் பெருங்கோபத்துடன் அம்மனுடன் போர்புரிய வந்தான். அவனையும் சூலாயுதத்தால் அம்மன் சம்ஹாரம் செய்தார்.
அதன்பிறகு சேவலாக உருமாறி போரிட்ட மகிஷாசூரனையும் அன்னை சூலாயுதத்தால் வதம் செய்தார். அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் 'ஓம் காளி, ஜெய் காளி' என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி அம்மனை வழிபட்டனர்.
- புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
- பெங்களூரு புல்ஸ் அணியை புனேரி பல்தான் அணி வீழ்த்தியது.
சென்னை:
12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று இரவு நடந்த ஆட்டத்தில் புனேரி பல்தான், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.
இறுதியில், இரு அணிகளும் 29-29 என புள்ளிகள் எடுத்தன. இதனால் டை பிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் புனேரி பல்தான் அணி 6-4 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புனேரி பல்தான் அணி 9-வது வெற்றியைப் பதிவு செய்தது.
- தன்னுடைய வீட்டுக்கு உழைக்கும் தலைவர்கள் கருணாநிதி, ஸ்டாலின்.
- மக்களுக்காக உழைத்த தலைவர்கள் அ.தி.மு.க. தலைவர்கள் என்றார் இ.பி.எஸ்.
பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி தொகுதியில், 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணத்தை முடித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்ததாக பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடத்தூர்-தர்மபுரி பிரதான சாலையில் திரண்டிருந்த ஏராளமான மக்களிடையே எழுச்சியுரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 53 மாதம் ஆகிவிட்டது. இந்த தொகுதிக்கு ஏதாவது பெரிய திட்டம் கொண்டுவந்தார்களா? சிந்தியுங்கள்.
அ.தி.மு.க. அரசு இருக்கும்போது ஏழை, எளிய மாணவர்கள் படிக்க பொறியியல் கல்லூரி கொண்டுவந்தோம். எல்லோரும் இன்ஜினியராகும் வாய்ப்பு உருவாக்கினோம். பட்டப்படிப்புக்கு கலை அறிவியல் கல்லூரி கொண்டுவந்தோம். கிராமம் முதல் நகரம் வரை அதிகமாக பட்டப்படிப்பு படிக்கும் சூழலை உருவாக்கினோம்.
கே.பி.அன்பழகன் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது அம்மாவிடம் எடுத்துச்சொல்லி 68 கலை அறிவியல் கல்லூரியை 10 ஆண்டுகளில் கொண்டுவந்தோம். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி என அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சிறப்பான சிகிச்சை அளித்தோம். மருத்துவக் கல்லூரி இடங்களை 3,445-ல் இருந்து 6 ஆயிரம் பேருக்கு உருவாக்கினோம்.
அதுமட்டுமல்ல, 21 பாலிடெக்னிக் கல்லூரி, 4 பொறியியல் கல்லூரி, 7 சட்டக்கல்லூரி உங்கள் மாவட்டத்திலும் ஒரு சட்டக்கல்லூரி கொண்டுவந்தோம், 4 வேளாண்மைக் கல்லூரி, 5 கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையம் என பல கல்லூரிகளைத் திறந்து இந்தியாவிலேயே உயர்கல்வியில் முதன்மை மாநிலம் என்ற இலக்கை 2019-ம் ஆண்டிலேயே அடைந்துவிட்டோம்.
சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும், மாநிலம் மேன்மையடைய கல்வி சிறக்க வேண்டும் என கல்விக்கு அதிக நிதி ஒதுக்கினோம். ஒரு அரசு எப்படி செயல்பட்டது என்பதற்கு அ.தி.மு.க. ஆட்சியே உதாரணம்.
தி.மு.க. ஆட்சியில் ஒரே ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவந்தாரா? மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என ஸ்டாலின் பேசுகிறார். நாங்கள் மத்திய அரசை எதிர்பார்க்கவில்லை, அம்மா இருக்கும்போது 6 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மாநில அரசின் நிதியில் உருவாக்கினார். அப்படியான தில்லு திராணி ஸ்டாலினுக்கு இருக்கிறதா?
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட, அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா முதல்வராக இருந்தபோது தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அந்த ஒப்பந்தங்கள் எல்லாம் நடைமுறைக்கு வந்து தொழிற்சாலைகள் எல்லாம் இயங்கிவருகின்றன.
அம்மா வழியில் வந்த அரசு 2019 ஜனவரியில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி சுமார் 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அதன்மூலம் பல தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு வந்தது, இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது.
ஸ்டாலினும்தான் முதலீடு ஈர்க்கிறேன் என்று வெளிநாடு போனார். 922 ஒப்பந்தங்கள் போடப்பட்டு, பத்தரை லட்சம் முதலீடு ஈர்க்கப்பட்டு, 32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார்கள். 77 சதவீத ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டதாகச் சொன்னார். அப்படி என்றால் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லையே? எல்லாம் பொய். மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பிறகும் இப்போதும் அதையே செய்கிறார்.
ஜெர்மனிக்கு தொழில் முதலீடு ஈர்க்கப்போகவில்லை, முதலீடு செய்யப்போனதுதான் உண்மை. வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் சொல்கிறார். வெள்ளை அறிக்கை விடவேண்டும் என்று கேட்டேன். வெள்ளை பேப்பரை எடுத்து தொழிற்துறை மந்திரி காட்டுகிறார். ஸ்டாலின் அவர்களே… தொழில்துறை மந்திரியும் சரி, நீங்களும் சரி சட்டமன்றத் தேர்தலில் பூஜ்ஜியம்தான் வாங்கப் போறீங்க. எப்படி வெள்ளை பேப்பரை காட்டுறீங்களோ அதேமாதிரி மக்கள் வெள்ளை பேப்பரில் பூஜ்ஜியம் போட்டுக் கொடுப்பார்கள்.
பிரதான எதிர்க்கட்சித் தலைவர் கேட்டால், மக்களுக்காக அதை சொல்ல வேண்டியது உங்கள் கடமை. ஆனால் கிண்டலும் கேலியும் செய்து மக்களை அவமானப்படுத்தும் விதமாக, இளைஞர்களை ஏமாற்றும் விதமாக வெறும் வெள்ளைப் பேப்பரை காட்டுகிறீர்கள். இதற்காகவா உங்களை அமைச்சராக்கினார்கள்? இவர்களுக்கு முடிவுகட்டும் தேர்தல் 2026 தேர்தல்.
இப்போது எங்கு பார்த்தாலும் பள்ளி, கல்லூரிக்கு அருகில் கஞ்சா விற்பனை நடக்கிறது. போதைப் பொருளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று நான் சொன்னபோது கேட்காமல், இப்போது பேசுகிறார். மாணவர்களே, இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று இப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். எல்லோரும் சீரழிந்தபிறகு சொல்லி என்ன பயன்?. மக்களுக்காக உழைத்த தலைவர்கள் அ.தி.மு.க. தலைவர்கள். தன்னுடைய வீட்டுக்கு உழைக்கும் தலைவர்கள் கருணாநிதி, ஸ்டாலின்.
அண்மையில் கரூரில் நடந்த சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது, ஒரு நபர் கமிஷன் போட்டிருப்பதால் ஆழமாகப் போகாமல் மேலோட்டமாகப் பேசுறேன். துணை முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் போனார். செப்டம்பர் 27 துயர சம்பவத்தில் 41 பேர் இறந்ததாக தகவல் தெரிவித்தனர், உடனே தனி விமானத்தில் திருச்சி வந்தார். அங்கிருந்து நேரடியாக மருத்துவமனைக்கு சென்று பார்த்து அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் சுற்றுலா போய்விட்டார்.
என்னங்க அநியாயம் இது? 41 பேர் இறந்துள்ளனர். இப்போது மக்கள் துயரத்தில் பங்கெடுப்பவரே உண்மையான துணை முதல்வர். இப்படிப்பட்டவர்கள் ஆட்சி செய்தால் இப்படித்தான் இருக்கும். யார் எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்றுதான் அவர் நினைக்கிறார். உண்மையிலேயே அக்கறை இருந்தால் இங்கிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் அளவுக்கு திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் அழகு. அதெல்லாம் கருணாநிதி குடும்பத்தினருக்கு வராது. மக்களைப் பற்றி கவலைப்படாத கட்சி அரசு என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது.
ஒரு பொதுக்கூட்டம் என்றால் மக்கள் எப்படி வருவார்கள், எப்படி பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட வேண்டும். முழு கவனம் எடுத்து செயல்பட்டிருந்தால் இந்த உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம். ஏற்கனவே அவர்கள் 4 கூட்டம் நடத்தினார்கள், அவற்றிலும் பாதுகாப்பில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிற போது அவர்களைக் காப்பது நம் கடமையாக இருக்க வேண்டும்.
நடுநிலையோடு சொல்கிறேன். அ.தி.மு.க. பொன்விழா கண்ட கட்சி, எம்.ஜி.ஆர். வருகிறார் என்றால் ஒருநாள் முன்பே மக்கள் காத்துக் கிடப்பார்கள். அப்படி இருக்கும் காலத்தில்கூட எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை, அம்மா பல கூட்டம் போட்டார்கள். லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். அப்போதும் எதுவும் நடக்கவில்லை.
53 ஆண்டு காலம் பல மாநாடு, பல கூட்டம், பல ஆர்ப்பாட்டம் நடத்தினோம். எந்த சம்பவமும் நடைபெறவில்லை. அ.தி.மு.க. மட்டுமல்ல தி.மு.க. உட்பட எல்லா கட்சிகளுக்கும் முழமையாக பாதுகாப்பு கொடுத்தது அ.தி.மு.க. அரசு. எந்தக் கட்சி கூட்டம் நடத்தினாலும் முழு பாதுகாப்பு கொடுத்ததால் இதுபோல எந்த சம்பவமும் நடக்கவில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில், கேட்கப்பட்ட அத்தனை கூட்டங்களுக்கும் அனுமதி கொடுத்தோம், எதையும் நிறுத்தவில்லை. ஏனெனில் எதையும் சந்திக்கும் தெம்பு, திராணி அ.தி.மு.க.வுக்கு இருந்தது. இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இல்லை பொம்மை முதல்வர். தி.மு.க. ஆட்சியில் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கொடுப்பதில்லை, நீதிமன்றம் போய் அனுமதி வாங்கி கூட்டம் நடத்தும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்படியே நீதிமன்றம் அனுமதி கொடுத்தாலும் இந்த அரசு பாதுகாப்பு கொடுக்க மறுக்கிறது அதனால் 41 உயிர்களை இழந்திருக்கிறோம்.
நான் ஜூலை 7-ம் தேதி எழுச்சி பயணம் தொடங்கினேன் பாப்பிரெட்டிப்பட்டி 165-வது தொகுதி. நான்கைந்து தொகுதிகளில்தான் காவல்துறை பாதுகாப்பு கொடுத்தது, மீதி இடங்களில் எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் பாதுகாப்பில்தான் நடத்தினோம். இப்போதுதான் காவல்துறை வந்திருக்கிறது. இப்படி ஒரு சம்பவம் நடந்து முடிந்து 41 உயிர்கள் பறிபோன பிறகுதான் பாதுகாப்பு கொடுத்துள்ளனர். மக்களை பாதுகாக்க வேண்டியது தான் முதல்வரின் கடமை. அவரிடம் தான் காவல்துறை உள்ளது. தேர்தல் நேரத்தில் கருத்துகளைச் சொல்லி மோதிக்கொள்ளலாம். ஆனால், ஆட்சி அமைந்தபிறகு மக்களை கண்ணை இமை காப்பதுபோல காக்க வேண்டும். அப்படி அ.தி.மு.க. ஆட்சியில் பார்க்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் மாற்றாந்தாய் மக்கள் போல பார்ப்பது சரியல்ல, இனியாவது அரசு உணர்ந்து ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்றில்லாமல் நடுநிலையோடு பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்காக குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் தேக்கப்பட்டது. அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒருபக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொருபக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 14 ஆயிரம் ஏரிகள் உள்ளன், அவற்றில் 6 ஆயிரம் கண்மாய்கள் 1240 கோடி செலவில் தூர் வாரினோம். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் பொதுப்பணித் துறையில் எஞ்சிய 8 ஆயிரம் ஏரிகள் தூர் வாரப்படும். விவசாயிகள் எந்நேரமும் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் கொடுத்தோம். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ஒரே அ.தி.மு.க. ஆட்சியில் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது. புயல், வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பேரிடரின்போது பயிர்க்காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் இணைக்கப்பட்டு அதன்மூலம் அவர்களுக்கு இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம்.
விவசாய தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள், ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் கொடுத்தோம். உழவர் பாதுகாப்பு திட்டம் கொடுத்தோம். முதியோர் உதவி திட்டம் மூலம் லட்சக்கணக்கான முதியோருக்கு மாத உதவித்தொகை 1000 ரூபாய் கொடுத்தோம். ஒரே சட்டமன்ற விதி 110ன் கீழ் 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பைக் கொடுத்து, 90 சதவீதம் பேருக்குக் கொடுத்தோம்.
கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா எண்ணத்தில் உதித்தது அற்புதமான லேப்டாப் வழங்கும் திட்டம். அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் 7300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. அதையும் திராவிட மாடல் அரசு நிறுத்திவிட்டது. தி.மு.க. அரசால் நிறுத்தப்பட்ட இத்திட்டம் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அமல்படுத்தப்படும்.
பொருளாதாரச் சூழலால் ஏழைப் பெண்களின் திருமணம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் 25 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் கொடுத்தோம். இன்று 87 ஆயிரம் ரூபாய் ஒரு பவுன். அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகளில் 12 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இதனை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும்.
ஏழை, விவசாயத் தொழிலாளி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும்.
இந்தப் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை ஈச்சம்பாடி அணையில் இருந்து நீரேற்றம் திட்டத்தின் மூலமாக இங்கிருக்கும் 66 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டம் கேட்டு என்னிடத்தில் கே.பி.அன்பழகன் அமைச்சராக இருந்தபோது கோரிக்கை வைத்தார். அதை ஏற்று அதை ஆய்வுசெய்வதற்கு 10 லட்சம் ஒதுக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது, மீண்டும் அ.தி.மு.க. அரசு அமைந்ததும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
நாட்டில் பணம், நகை திருடுவார்கள். ஆனால், தி.மு.க. ஆட்சியில் கிட்னி திருடுகிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட கேவலமான நிலை கிடையாது. தி.மு.க. எம்.எல்.ஏ மருத்துவமனையில் வறுமையில் வாடும் ஏழைகளை தேடிப்பிடித்து அவர்களுடைய கிட்னியை முறைகேடாக எடுத்து பல லட்சத்துக்கு விற்பனை செய்வதாக புகார் தெரிவிக்கப்பட்டது. தி.மு.க. அரசாங்கமே குழு அமைத்து ஆய்வு செய்து உண்மை என்பதை கண்டறிந்து, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அனுமதியை மட்டும் ரத்துசெய்தனர். இதில், யாரையும் கைது செய்யவில்லை.
கொடுமையிலும் கொடுமை வறுமை. அந்த வறுமையைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் அரசு தொடர வேண்டுமா? நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் ஒரு பெண்ணுக்கு ஆசை காட்டி கிட்னிக்குப் பதிலாக கல்லீரல் எடுத்துவிட்டனர். இப்படிப்பட்ட கொடுமையான அரசு தி.மு.க. அரசு. நான் அடிக்கடி சொல்வது போல் பொம்மை முதல்வர் நாட்டை ஆள்வதால் மக்களுக்குத் துன்பமே கிடைக்கிறது.
இந்த அரசால் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்துள்ளது? விலைவாசி உயர்ந்துபோச்சு, சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. தினந்தோறும் கொலை நிலவரம் வருகிறது.
அ.தி.மு.க. உங்களுடைய அரசு. இது விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. நானும் விவசாயி. எனக்கு வேறு எந்த தொழிலும் இல்லை, அதனால்தான் தி.மு.க. அரசால் என்மீது எந்த வழக்கும் போட முடியவில்லை. என்னென்னமோ தோண்டிப் பார்த்தார், ஒன்றும் நடக்கவில்லை. விவசாயத்தில் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியாது, மண்ணைத்தான் அள்ளிச்செல்ல முடியும்.
உங்களோடு பேசும் வாய்ப்பை இறைவன் கொடுத்த வரமாகக் கருதுறேன்.
இது மண்வெட்டி பிடித்த கை. சிறு வயதில் இருந்தே என்னுடைய அப்பா விவசாயத்தில் என்னை ஈடுபடுத்தினார். விவசாயம் தெரிந்தால்தான் தொழிலாளிக்கு சொல்லிக்கொடுக்க முடியும். நெற்பயிர் எப்படி நடவேண்டும், மஞ்சள், வாழை தென்னை, பாக்கு எல்லாமே என் தோட்டத்தில் இருக்கிறது. நீங்கள் எல்லாம் தண்ணீர் வேண்டும் என்று கேட்கிறீர்கள், அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு நீங்கள் என்ன கேட்டாலும் கிடைக்கும்.
கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். ஏழை மக்கள் நோய்வாய்ப்பட்டால் அங்கு சென்று சிகிச்சை எடுக்கலாம். அதில் ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணியில் அமர்த்தி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். தி.மு.க. அரசு ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து கிளினிக்கை மூடிவிட்டது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும். இப்படி ஏதாவது திட்டம் தி.மு.க. கொண்டுவந்திருக்கிறதா?
இந்தத் தொகுதியில் பத்தல் மலைக்கு தார்ச்சாலை, ஆரம்ப சுகாதர நிலையம் அமைத்தோம், அடுக்குமாடி குடியிருப்பு கட்டினோம், கால்நடை மருத்துவமனை திறந்தோம். அ.தி.மு.க. ஆட்சியில் கடத்தூர் புதிய ஒன்றியம் அமைத்து புதிய கட்டிடம் கட்டினோம். இவற்றுக்கெல்லாம் தி.மு.க. ஆட்சியில் ரிப்பன் வெட்டி திறந்தனர். வேப்பாடு ஆற்றின் குறுக்கே தடுப்பணை கேட்டுள்ளீர்கள், கட்டிக் கொடுக்கப்படும், இத்தொகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்படும், வட்டாட்சியர் அலுவலகம் பரிசீலிக்கப்படும். 2026 தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
இங்கே கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வீட்டுக்குப் போகும்போது வாகனத்தில் பத்திரமாகப் போய்ச் சேர வேண்டும். மக்களே, உயிர் முக்கியம். இரவு நேரம் வாகன ஓட்டிகள் பத்திரமாக வீடு போய் சேரவேண்டும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பை பை ஸ்டாலின் என தெரிவித்தார்.
- விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்
- தர்மபுரி நகராட்சி அலுவலகம் அருகில் இபிஎஸ் மக்களிடையே உரையாற்றினார்.
கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இன்று தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலில் தர்மபுரி நகராட்சி அலுவலகம் அருகில் கூடியிருந்த பெருந்திரளான மக்களிடையே எழுச்சியுரை நிகழ்த்தினார்.
"செப்டம்பர் 27ம் தேதி கரூரில் தவெக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். அவர்களுக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்" என்றதும் அனைவரும் அமைதி காத்து மவுன அஞ்சலி செலுத்தினர்.
- காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால் இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
- இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலையில் இளம்பெண்ணை 2 காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப்பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான காவலர்கள் இருவரும் சஸ்பெண்ட் ஆன நிலையில் தற்போது நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- பல்வேறு கட்சியினர், பொதுமக்கள், காந்தியவாதிகள் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- தமிழக மேலிடப் பார்வையாளர் அரவிந்த் மேனன் மற்றும் நிர்வாகிகள் காந்தி சிலைக்கு காவி துண்டை அணிவித்தனர்.
மதுரை:
மகாத்மா காந்தியின் 157-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை காந்தி நினைவு அருங்காட்சியத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர், பொதுமக்கள், காந்தியவாதிகள் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பா.ஜ.க. சார்பில் மரியாதை செலுத்த வந்த கட்சியின் தமிழக மேலிடப் பார்வையாளர் அரவிந்த் மேனன் மற்றும் நிர்வாகிகள் காந்தி சிலைக்கு காவி துண்டை அணிவித்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இது குறித்து காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ் கூறியதாவது:-
மகாத்மா திருவுருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை, கதர் ஆடை அணிவித்து மரியாதை செய்கின்றனர். காங்கிரஸ் கட்சியினர் கதர் ஆடையும், பா.ஜ.க.வினர் காவித் துண்டும் அணிவித்தனர். அதனை உடனடியாக அப்புறப்படுத்தி விட்டோம் என்றார்.
- முதல்வர் மற்றும் அதிகாரிகள் கரூர் விவகாரம் குறித்து தெளிவான விளக்கங்களை அளித்திருக்கிறார்கள்.
- யாரை பற்றியும் குறை கூறாமல் தெளிவான அறிக்கையை முதல்வர் வெளியிட்டிருக்கிறார்.
திருச்சி:
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும் போது,
தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது, முறையான நிதியை தமிழகத்திற்கு வழங்கவில்லை என தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் இந்த கரூர் விவகாரத்தில் 8 பாஜக எம்.பி.க்கள் உடனடியாக தமிழகத்திற்கு வருகிறார்கள். தமிழகத்திற்கான எந்த பிரச்சனைகளுக்கும் பா.ஜ.க. குரல் கொடுக்கவில்லை,
முதல்வர் மற்றும் அதிகாரிகள் கரூர் விவகாரம் குறித்து தெளிவான விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். யாரை பற்றியும் குறை கூறாமல் தெளிவான அறிக்கையை முதல்வர் வெளியிட்டிருக்கிறார்.
வேண்டுமென்றே பிரச்சனை உண்டு செய்வதற்காக பா.ஜ.க. இது போன்ற உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி அரசியல் செய்கிறது. இதை மக்கள் ஏற்க மாட்டார்கள். அவர்களுக்கு உண்மை என்ன என்பது தெரியும்.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவசர, அவசரமாக கருத்துக்களை தெரிவித்தார்.
- இன்றைக்கு ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர் என்பதற்கு அடையாளமாக தற்போது கள நிலவரம் உள்ளது.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-
கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பின் உண்மை நிலையை மக்களிடத்தில் விளக்க வேண்டிய தார்மீக பொறுப்பில் இருந்து அரசு விலகிச் செல்கிறது என்கின்ற சந்தேகம், கவலையும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் வகையில் அரசின் கருத்துக்கள், அதிகாரிகளின் கருத்துக்கள் அமைந்துள்ளதை நாம் கவனமாக பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது.
கரூர் துயர சம்பவத்திற்கு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உள்ளோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆணையத்தின் அறிக்கையை அடிப்படையாக வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறினார்.
அதன்பிறகு மின்வாரிய உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர், கூடுதல் டிஜிபி ஆகியோர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்து அரசு நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்தார்கள்.
இதற்கெல்லாம் மேலாக வருவாய் துறை செயலாளர், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர், டி.ஜி.பி. அரசின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.
அதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு வீடியோ வெளியிட்டு இது தொடர்பாக கருத்துக்கள் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கும் தொனியில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதோடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவசர, அவசரமாக கருத்துக்களை தெரிவித்தார்.
இதனை பார்க்கும் போது விசாரணை ஆணையத்தை அரசுக்கு வேண்டிய திசையிலே, அவர்கள் கருத்துக்கள் அடிப்படையில் வழி நடத்துகிறார்களோ என்ற நிலை தான் இன்றைக்கு வெட்ட வெளிச்சமாக அமைந்து வருகிறது.
பொதுவாக விசாரணை ஆணையம் அமைந்த பிறகு அது தொடர்பான வாதங்கள், வீடியோக்கள் அரசு அதிகாரிகள் வெளியிடுவது ஆணையத்தின் விசாரணையை கேள்விக்குறியாக்கும் வகையில், அமையும். விசாரணை நடக்கும் போது அது தொடர்பான அறிக்கை தொடர்ந்து வெளியாகி வருவது விசாரணை நடுநிலையோடு, நம்பகத் தன்மையோடு நடைபெறுமா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
திறமைமிக்க சேவையால் மக்களின் நம்பிக்கைத் தன்மையை பெற்றுள்ள அரசு உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகளை, திமுக அரசு தவறாக வழி நடத்துகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
இன்றைக்கு ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர் என்பதற்கு அடையாளமாக தற்போது கள நிலவரம் உள்ளது. ஆகவே அம்மா பேரவையின் சார்பில் நடைபெறும் 34 வது திண்ணைப் பிரசாரத்தில் மக்களிடத்தில் எடுத்து கூற வேண்டும். மீண்டும் 2026-ல் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆகியோரின் ஆட்சி எடப்பாடியாரின் தலைமையில் மலரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
- போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று சோதனை நடத்தினர்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அதில், அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் சிறிது நேரத்தில் அது வெடிக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபற்றி டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து ராயப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.
இதற்கிடையே வடபழனி ஏ.வி. மெய்யப்பன் சாலையில் அமைந்துள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவிலும் வெடிகுண்டு வைத்துள்ளதாக நிர்வாக அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இது பற்றி ஸ்டுடியோ மேலாளர் விஸ்வநாதன் கே.கே. நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று சோதனை நடத்தினர். இதிலும் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
கடந்த சில நாட்களாகவே சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட 10 தூதரகங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. பல்வேறு அரசு, மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் தினமும் வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு கொண்டே இருக்கும் நிலையில் மிரட்டல் விடுப்பவர்களை கண்டுபிடிப்பதற்காக சென்னை மாநகரப் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
- சென்னையை பொறுத்தவரை ஓரளவு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று வலுப்பெற்றது. இது தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி வருகிறது. இன்று இரவு ஒடிசாவில் உள்ள கோபால்பூரில் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அதிகாரி கூறியதாவது:-
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திர கடலோரப் பகுதியில் நிலவுகிறது. இது இன்று இரவு கோபால்பூரில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக வட தமிழகத்தில் 3 நாட்கள் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (3-ந்தேதி) செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
4-ந்தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை ஓரளவு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.






