என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • சுப முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான கூட்டம் அலைமோதியது.

    திருச்செந்தூர், ஜூன். 16-

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர் கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் சுபமுகூர்த்த நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்தனர்.

     அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான திருமணங்கள் இன்று கோவிலில் நடைபெற்றது.

    விடுமுறை மற்றும் சுப முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான கூட்டம் அலைமோதியதால் சுமார் 5 மணிநேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலில் இன்று வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

    பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் பக்தர்கள் வந்த வாகனங்களை போக்குவரத்து போலீசார் திருச்செந்தூர்-நாகர்கோவில் சாலை ஓரத்திலும், கோவில் அருகில் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் இடத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்திருந்தனர்.* * *திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

    • 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 9 இடங்களில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
    • 1991-ம் ஆண்டு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி:- விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாதது மேலிட உத்தரவு. பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்துதான் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்று ப.சிதம்பரம் கூறி இருக்கிறாரே?

    பதில்:- ப.சிதம்பரத்துக்கும் எங்கள் கட்சிக்கும் என்ன சம்பந்தம். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாது என்பது எங்கள் கட்சி எடுத்த முடிவு. அவரது கட்சி முடிவு அல்ல.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலின்போது ஜனநாயக படுகொலை நடைபெற்றது. வாக்காளர்களை சுதந்திரமாக வாக்களிக்க விடாமல், ஆடு, மாடுகளை பட்டியில் அடைப்பதை போல வாக்காளர்களை தினமும் அழைத்து சென்று பட்டியில் அடைத்து அவர்களை கொடுமைப்படுத்திய காட்சியை பார்த்திருப்பீர்கள்.

    தேர்தல் ஆணையம் அதை கண்டு கொள்ளவே இல்லை. அது மாநில அரசுக்கு துணை நிற்கிறது. போலீசார் துணை நிற்கிறார்கள். அரசு அதிகாரிகள் துணை நிற்கிறார்கள். அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பண பலம், படை பலத்தை பயன்படுத்தி, அதிகமான பரிசு பொருட்களை கொடுத்து அந்த தேர்தலில் தில்லுமுல்லு செய்து தேர்தல் நடைபெற்று முடிந்தது.

    தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது என்பதால் தான் அ.தி.மு.க. இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. விக்கிரவாண்டி தொகுதி விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில்தான் வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில் 6 ஆயிரம் ஓட்டுகள்தான் குறைவாக வாங்கினோம்.

    எங்களுக்கு எவ்வளவு ஓட்டுகள் கிடைத்துள்ளது என்பது தெரிந்து விட்டது. இனி ஏன் அங்கு போட்டியிட வேண்டும். போட்டியிட்டால் விடவா போகிறார்கள். ஆட்சி அதிகார பலத்தை பயன்படுத்துவார்கள். பணத்தை வாரி இறைப்பார்கள்.

    பரிசு பொருட்களை அள்ளி கொடுப்பார்கள். பண மழை பொழியும். ஜனநாயக படுகொலை நடைபெறும். சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாது. எனவேதான் அ.தி.மு.க. இந்த தேர்தலை புறக்கணிக்கிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 36 இடங்களில் கொட்டகை அமைத்து வாக்காளர்களை அடைத்து வைத்து கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிக்காக அமைச்சர்கள் பாடுபட்டார்கள்.

    கொட்டகையில் அடைத்து வைத்திருந்தால் அங்கு நானே நேரில் வந்து வாக்கு சேகரிப்பேன் என்று சவால் விட்டேன். உடனே அந்த வாக்காளர்களை பஸ்சில் ஏற்றி ஊர் ஊராக சுற்றுலா அழைத்து சென்றார்கள். அப்படி இருக்கும்போது அங்கு எப்படி சுதந்திரமாக தேர்தல் நடக்கும்.

    கேள்வி:- அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடாவிட்டால் தொண்டர்கள் உற்சாகம் இழந்து விட மாட்டார்களா?

    பதில்:- தொண்டர்கள் எப்படி உற்சாகம் இழப்பார்கள். அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு பெருகி இருப்பதால் அவர்கள் உற்சாகமாகத்தான் இருக்கிறார்கள்.

    கேள்வி:- 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே?

    2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. இதே போல் சட்டமன்ற தேர்தலிலும் எல்லா இடத்திலும் தி.மு.க. வரும் என்று சொன்னார்கள். ஆனால் அ.தி.மு.க. 75 இடங்களில் வெற்றி பெற்றது. 2019 பாராளுமன்ற தேர்தலின்போது சட்டமன்ற தொகுதிகளை பொருத்தவரை 2 தொகுதிகளில் தி.மு.க.வை விட அதிக ஓட்டுகள் எங்களுக்கு கிடைத்தது.

    இப்போது நடந்த பாராளுமன்ற தேர்தலில் 10 சட்டசபை தொகுதிகளில் தி.மு.க.வை விட அதிக ஓட்டுகள் பெற்றுள்ளோம். அதில் அமைச்சர் தொகுதியில் 2 இடங்களில் அதிக ஓட்டுகளை பெற்றுள்ளோம்.

    அப்படியென்றால் இனி வரும் சட்டமன்ற தேர்தல் எப்படி இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். எனவே பாராளுமன்ற தேர்தல் வேறு, சட்டசபை தேர்தல் வேறு. மக்கள் பிரித்து பார்த்துதான் ஓட்டு போடுகிறார்கள்.

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 9 இடங்களில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தர்மபுரி, கன்னியாகுமரி ஆகிய 2 தொகுதிகளில் தி.மு.க.வுக்கு டெபாசிட் பறிபோனது. அங்கெல்லாம் மீண்டும் அவர்கள் ஜெயிக்கவில்லையா?

    1991-ம் ஆண்டு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். எனவே மாறி மாறிதான் வெற்றி வரும். எல்லா தேர்தல்களிலும் எல்லா கட்சிகளும் வெற்றி பெற்றதாக சரித்திரம் கிடையாது. வெற்றி தோல்வி மாறி மாறிதான் வரும்.

    2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெல்லும். அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிலர் பேட்ஜ் அணியாமல் பணி செய்வது குறித்து புகார் பெறப்பட்டுள்ளது.
    • சீருடை பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும்.

    சென்னை:

    டிரைவர்-கண்டக்டர் கள் பணியின்போது சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இது சம்பந்தமாக அனைத்து கிளை மேலாளர்கள்-மண்டல மேலாளர்களுக்கு மாநகர போக்கு வரத்து கழக மேலாண் இயக்குனர் அனுப்பி உள்ள சுற்றறிக்கை வருமாறு:-

    மாநகரப் போக்குவரத்து கழகத்தை சார்ந்த அனைத்து பணிமனைகளிலும் பணி புரியும் டிரைவர்கள் கண்டக்டர்கள் கட்டாயம் சீருடை பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும். சிலர் பேட்ஜ் அணியாமல் பணி செய்வது குறித்து புகார் பெறப்பட்டுள்ளது.

    எனவே டிரைவர்-கண்டக்டர்கள் சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிகிறார்களா என்பதை கிளை மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்கள் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
    • மீன்பிடி துறைமுகம் நேற்று முதல் களை கட்டத்தொடங்கிவிட்டது.

    ராமேசுவரம்:

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ் கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், தடைக் காலம் நேற்று முன்தினம் இரவுடன் நிறைவடைந்த நிலையில் ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 570-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

    இன்று காலையில் கரை திரும்பிய மீனவர்களுக்கு சிறிய படகுகளுக்கு 250 கிலோ முதல் 300 கிலோ வரையிலும், பெரிய படகு களுக்கு 300 கிலோ முதல் 450 கிலோ வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இறால் மீன், நண்டு, கணவாய் உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்கள் கிடைத்திருந்தன.

    61 நாட்கள் தடை காலம் நிறைவடைந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு ரூ.8 கோடி வரையிலான இறால் மீன், நண்டு, கனவாய் போன்றவை கிடைத்துள்ள தால் மகிழ்ச்சியடைந்தனர்.

    கன்னியாகுமரி

    மேலும் முதல் நாளான நேற்று ஒரே நாளில் 293 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இதில் 4 படகுகள் பழுது காரணமாக பாதி வழியில் கரைக்கு திரும்பிவிட்டன. கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மற்ற விசைப்படகுகள் இரவு 9 மணி முதல் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பினார்கள்.

    கரை திரும்பிய விசை படகுகளில் சீலா, வஞ்சிரம், நெய்மீன், பாறை, விளமீன், கைக்கொழுவை, நெடுவா, முட்டி, கணவாய் சூறை, கிளாத்தி, சுறா, நவரை, அயிலை போன்ற உயர்ரக மீன்கள் கிடைத்தன. மீனவர்கள் பிடித்துக்கொண்டு வந்த உயர்ரக மீன்களை போட்டி போட்டு ஏலம் எடுப்பதற்காக வெளியூர், வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மீன் வியாபாரிகள் வந்து குவிந்திருந்தனர்.

    இதனால் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றதால் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகம் நேற்று முதல் களை கட்ட தொடங்கிவிட்டது. கடலுக்கு சென்ற முதல் நாளே ரூ.3 கோடி மதிப்புள்ள மீன்கள் சிக்கின. இதனால் சின்னமுட்டம் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • முன்னாள் மத்திய மந்திரியான ப.சிதம்பரத்தின் எக்ஸ் வலைதள பதிவு.
    • பா.ம.க. வேட்பாளரின் வெற்றியை எளிதாக்கும் வகையில் மேலிட உத்தரவு.

    மதுரை:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புக ழேந்தி காலமானதைடுத்து அங்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. தலை மையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.

    அதே வேகத்துடன் தி.மு.க. சார்பில் விக்கிர வாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதைய டுத்து பா.ஜ.க. தலைமையி லான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க.வுக்கு அந்த தொகுதி ஒதுக்கி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பை வெளியிட்டார்.

    அதன்படி அங்கு பா.ம.க. மாநில துணைத்தலைவர் சி.அன்புமணி வேட்பாள ராக போட்டியிடுகிறார். அ.தி.மு.க. வேட்பாளர் யார் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிரடியாக அறிவித்தார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் வலைதளத்தில் இன்று காலை பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அ.தி.மு.க.வின் முடிவானது, அங்கு போட்டியிடும் பா.ம.க. வேட்பாளரின் வெற்றியை எளிதாக்கும் வகையில் மேலிடத்தில் (பா.ஜ.க.வில்) இருந்து உத்தரவு வந்துள்ளது என்பதற்கு இதுவே தெளிவான சான்று ஆகும்.

    எனவே விக்கிரவாண்டி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரின் அமோக வெற்றியை உறுதி செய்யவேண்டும் என்று ப.சிதம்பரம் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    அதேபோல் நேற்று கோவையில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க.வுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று கூறிவிட்டு தற்போது அவர்களுக்காக தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கேரளாவில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு குவிந்து வருகிறார்கள்.
    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் போதிய மழை இல்லாவிட்டாலும் அருவிகளில் தண்ணீர் ஓரளவுக்கு விழுந்து வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது.

    இந்நிலையில் வார விடுமுறையான நேற்றும், இன்றும் மற்றும் நாளை (திங்கட்கிழமை) பக்ரீத் பண்டிகை என்பதால் 3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலியாக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு குவிந்து வருகிறார்கள்.

    குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் பல்வேறு அரிய வகை பழங்கள் குற்றாலம் அருவிக்கரைகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. அவற்றை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

    மேலும் குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பூங்காவில் பொழுதை கழித்து மகிழ்ந்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் போதிய மழை இல்லாவிட்டாலும் அருவிகளில் தண்ணீர் ஓரளவுக்கு விழுந்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கேரளாவில் மழை அதிகரிக்கும்பட்சத்தில் தண்ணீர் வரத்தும் அதிகரிக்க கூடும். குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதுவதால் பாதுகாப்பு பணியில் அதிக அளவில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • போச்சம்பள்ளியில் புகழ்பெற்ற வார சந்தை ஞாயிற்றுக் கிழமை கூடுவது வழக்கம்.
    • 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையால் வியாபாரிகள் மகிழ்ச்சி.

    போச்சம்பள்ளி:

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் புகழ்பெற்ற வார சந்தை ஞாயிற்றுக் கிழமை கூடுவது வழக்கம்.

    இந்நிலையில் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் இன்று வழக்கத்தை விட சுமார் 8 ஆயிரம் ஆடுகள் விற்பனைகாக கிருஷ்ணகிரி, தருமபுரி, ஒசூர் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டுவந்தனர்.

    அதிகாலை 5 மணி முதல் சந்தையில் ஆடுகள் விற்பனை தொடங்கிய நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூர், கோலார், மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம், சித்தூர், மற்றும் தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி போன்ற இடங்களில் இருந்து வியாபாரிகள் பொதுமக்கள் என சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் ஆடுகளை வாங்கவும், விற்கவும் குவிந்தனர்.

    வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு ரூ.12 ஆயிரத்திற்கு விலை போகும் நிலையில் பக்ரீத் பண்டிகை விற்பனை என்பதால் சற்று விலை அதிகரித்து 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரையில் விலை போனது.

    இதேபோல் எடைக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் ஒரு ஜோடி ஆடு ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.80 ஆயிரம் வரையில் விற்பனை ஆனாது. இன்று ஒரு நாளில் மட்டும் போச்சம்பள்ளி வார சந்தையில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனாதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    மேலும் பண புழக்கம் அதிகமாக உள்ள நிலையில் போச்சம்பள்ளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அ.தி.மு.க.வின் இந்த முடிவால் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
    • தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க. சார்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அ.தி.மு.க.வோ விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக் கணிப்பதாக அதிரடி அறி விப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி வெளி யிட்டுள்ள அறிக்கையில், "விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற வாய்ப்பு இல்லாததால் தேர்தலை புறக்கணிப்பதாக" தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வின் இந்த முடிவால் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடாமல் அ.தி.மு.க. விலகி உள்ளதால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. களத்தில் இல்லாத நிலையில் தி.மு.க.-பா.ம.க. இடையிலேயே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பு முடிவை தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பாரதீய ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. வைத்துள்ள ரகசிய உடன்பாடு இதன் மூலம் வெளிப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    அ.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பு பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க.வுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு இருப்பதாகவும் இது மறைமுக ஆதரவு என்றும் அவர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.

    விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகளை அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய இரண்டு கட்சிகளும் கணிசமாக பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் போட்டியில் இருந்து அ.தி.மு.க. விலகியுள்ளதால் அது பா.ம.க.வுக்கு கூடுதல் ஓட்டுகள் கிடைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருப் பதாகவே கூறப்படுகிறது.

    இதனால் பா.ம.க.வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விக்கிரவாண்டி தொகுதி போட்டியில் இருந்து விலகியுள்ள போதிலும் தி.மு.க. வை தோற்கடிக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. நிச்சயம் உறுதியாக இருக்கும்.

    அதற்கேற்ற வகையில் அ.தி.மு.க.வினரின் செயல் பாடுகள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    தி.மு.க., பா.ம.க. வேட்பா ளர்களோடு நாம் தமிழர் கட்சியின் அபிநயாவும் தனித்து போட்டியிடுகிறார். தி.மு.க., பா.ம.க. இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் நாம் தமிழர் வேட்பாளர் வழக்கம் போல கணிசமான ஓட்டுகளை வாங்குவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 3 பேர் மட்டுமே களத்தில் நிற்பதால் நாம் தமிழர் கட்சி வேட்பா ளர் பிரிக்கும் ஓட்டுகளும் விக்கிரவாண்டி தொகுதி யில் முக்கியத்துவம் பெறும் என்றே எதிர்பார்க்கப்ப டுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீத ஓட்டுகளை வாங்கி அங்கீகரிக்கப்பட்ட கட்சி யாக மாறி இருக்கும் நாம் தமிழர் கட்சியும் விக்கிர வாண்டி தொகுதியில் உற்சாகமாக களம் இறங்கியுள்ளது.

    விக்கிரவாண்டி தொகுதியில் யாரும் எதிர்பாராத வகையில் அதிக வாக்குகளை நாங்கள் வாங்குவோம் என்று அந்த கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பு, தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதிக ஓட்டு கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெறுவோம் என்று தி.மு.க.வினர் தெரிவித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு விக்கிரவாண்டி தொகுதியிலும் பெரிய வெற்றியை பெறுவதற்கு ஆளும் கட்சியான தி.மு.க. வேகம் காட்டி வருகிறது. அந்த கட்சி நிர்வாகிகளும் சுறுசுறுப்போடு தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.

    பா.ம.க., நாம் தமிழர் கட்சியினரும் தேர்தல் பணியில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது.

    • சதுப்புநிலத்தில் வீடு கட்டியதாக விவசாயிகள் குற்றச்சாட்டு.
    • 2000 சதுரடிக்கு மேல் அனுமதியின்றி வீடு கட்டியுள்ளார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பேத்துப்பாறை ஓரவிஅருவி அருகே நடிகர் பிரகாஷ்ரா ஜூக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இதில் அனுமதியின்றி வீடு கட்டியதாக கடந்த 2023-ம் ஆண்டு கொடைக்கானலில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் எழுப்பப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது. இதில் பிரகாஷ்ராஜ் வீடு கட்டுவதற்கு முறையான அனுமதி பெறவில்லை என தெரிய வந்ததால் ஊராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது.

    இதனிடையே தற்போது பிரகாஷ்ராஜ் வீடு அருகே உள்ள வரங்காட்டு ஓடையை ஆக்கிரமித்து சதுப்புநிலத்தில் வீடு கட்டியதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். பொதுப்பாதையை மறித்து மின் வேலி அமைத்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. 600 சதுரடி அளவிற்கு மட்டுமே வீடு கட்ட வேண்டிய இடத்தில் 2000 சதுரடிக்கு மேல் அனுமதியின்றி வீடு கட்டியுள்ளார். இதன் மூலம் அருகே உள்ள ஓடையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

    இதனால் பேத்துப்பாறை, வயல்வெளி, பாரதி அண்ணா நகர், பொதுப்பாதையை பயன்படுத்தும் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். பகலில் திறக்கப்படும் பாதை இரவில் அடைக்கப்படுகிறது. இதனால் வன விலங்குகளில் இருந்து பயிர்களை பாதுகாக்க இரவில் செல்லும் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    எனவே ஓைடயை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், நடிகர் பிரகாஷ்ராஜ் பேத்துப்பாறை பகுதியில் பொதுப்பாதையை மறித்தும், ஓடையை ஆக்கிரமித்தும் வீடு கட்டி உள்ளதாக புகார் அளிக்கும் பட்சத்தில்அது குறித்து அளவீடு செய்து ஆக்கிரமிப்பு குறித்து விசாரிக்கப்படும். மேலும் ஓடை ஆக்கிரமிப்பு செய்திருந்தால் வருவாய்த்துறை மூலம் நோட்டீஸ் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    • ஆழ்துளை கிணறு மூலம் மட்டும் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
    • காவிரி தாய்க்கு விவசாயிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    திருவையாறு:

    காவிரி டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் தண்ணீர் திறந்து விடபடவில்லை. இதனால் ஆற்று பாசனத்தை நம்பி இருக்கும் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் வேதனையில் உள்ளனர். ஆழ்துளை கிணறு மூலம் மட்டும் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டி தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்யமண்டப படித்துறை அருகே காவிரி தாய்க்கு விவசாயிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    காவிரித்தாய் இயற்கை வழி வேளாண் உழவா் நடுவம், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம், தஞ்சை நெற்களஞ்சிய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நடுவ நிறுவனா் அரு.சீா். தங்கராசு தலைமை வகித்தாா்.

    இதில், காவிரி ஆற்றில் காவிரித்தாய் என்ற எழுத்து வடிவில் மாப்பிள்ளை சம்பா நாற்று நட்டு வைக்கப்பட்டது. மேலும், காவிரித்தாய் படத்துக்கு பூஜைகள், தீபாராதனைகள் செய்து, காவிரியில் தண்ணீா் திறந்துவிட வேண்டி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1000 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தது.
    • தொடர் விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லில் இன்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

    கர்நாடக மாநிலத்திலும், காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளிலும் கோடைமழை பெய்ததால் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லிலும் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்தது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1000 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை அளவு குறைந்ததால் இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லில் நீர்வரத்து சற்று சரிந்து வினாடிக்கு 500 கனஅடியாக குறைந்து வந்தது. நீர்வரத்து குறைவாக இருப்பினும் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.

    தொடர் விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லில் இன்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் பரிசல் நிலையத்தில் இருந்து ஊட்டமலை, ஐந்தருவி, அத்திமரத்துகடுவு ஆகிய பகுதி வரை பரிசலில் சென்று மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முதலைப் பண்ணை, தொங்கும் பாலம் ஆகிய பகுதிகளுக்கு சுற்றி பார்த்தனர். பின்னர் அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்தபோதிலும் பிலிகுண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • திருவண்ணாமலையில் உலக பிரசித்திபெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்திபெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு வெளிமாவட்டங்கள் , வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

    இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமியன்றும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    பவுர்ணமி வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7.46 மணிக்கு தொடங்கி மறுநாள் 22-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7.21 மணிக்கு நிறைவடைகிறது.

    பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×