என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அந்தந்த மாவட்டங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
    • நிர்வாகிகளுக்கு தலைமைக் கழகம் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா வருகிற 28-ந்தேதி மற்றும் ஜூலை 3-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் திருவான்மியூர் ராமசந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடக்கிறது.

    மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. விஜய் ஆலோசனைக்கிணங்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தமிழகத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து எவ்வளவு பேர் வருகிறார்கள் என்ற விவரங்களை தினம் தினம் திரட்டி வருகிறார்.

    இதையொட்டி அந்தந்த மாவட்டங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்து கொள்ள இருக்கின்றனர். அவர்களை அழைத்து வரும் நிர்வாகிகளுக்கு தலைமைக் கழகம் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    2024-ம் ஆண்டிற்கான தளபதி கல்வி விருது வழங்கும் விழாவிற்கு வருகை தரும் அரியலூர், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்ட நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் மேல்மருவத்தூர் வண்டலூர் வழியாக கேளம்பாக்கம் வந்து ஓ.எம்.ஆர்.சாலையில் சோழிங்கநல்லூர் அக்கரை வழியாக நீலாங்கரையை அடுத்து விழா நடைபெறும் ராமசந்திரா கன்வென்சன் ஹாலுக்கு வர வேண்டும்.

    இடம் பற்றி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட நுழைவு கூப்பனில் உள்ள 'பார்கோடை' ஸ்கேன் செய்து மண்டபத்தின் முகவரியை தெரிந்து கொள்ளலாம்.

    நுழைவு கூப்பனில் உள்ள நபர்கள் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். செல்போன், பேப்பர், பேனா, இதர பொருட்கள் எடுத்து வர அனுமதி இல்லை. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்வதற்காக 2 திருமண மண்டபங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

    முகுந்தன் மகால், 159/1ஏ/என்.எச்.45 உத்தரமேரூர் ரோடு, மேலவளம் பேட்டை கருங்குழி (அருகில்) மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டம். (தொடர்புக்கு ராஜேஷ்-8778128655, சபரி-9042773271, அனிதா மகால், ஜி.எஸ்.டி.ரோடு, சோத்துப்பாக்கம் (தொடர்புக்கு செந்தில் 9842098916, துரை-9841805777, ஆகாஷ்-9500272585 ஆகிய இரண்டு மண்டபங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நிர்வாகிகள் காலை 7.15 மணிக்கு விழா அரங்கிற்குள் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் உடனடியாக போலீசார் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • கண்டெய்னர் லாரியின் முன்பக்க கேபினில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    ராணிப்பேட்டை:

    மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் பகுதியில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு செல்வதற்காக விலை உயர்ந்த 8 சொகுசு கார்களை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று இன்று காலை வந்தது.

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அம்மணதாங்கல் பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் டிரைவர் சோனு யாதவ் லாரியை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றுள்ளார்.

    அப்போது கண்டெய்னர் லாரியின் முன்பக்க கேபினில் திடீரென தீ பிடித்து எஞ்சின் முழுவதும் தீ மளமளவென பரவி எரியத் தொடங்கியது.

    இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக போலீசார் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் ராணிப்பேட்டை உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டெய்னர் லாரியின் முன்பக்கம் எரிந்த தீ மேலும் பரவி விடாமல் அணைத்தனர்.

    கண்டெய்னர் லாரியில் முன்பக்கத்தில் எரிந்த தீ உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் பின்பக்கம் இருந்த பல லட்சம் மதிப்பு உள்ள சொகுசு கார்கள் எந்தவித சேதமும் இன்றி தப்பின.

    கண்டெய்னர் லாரியின் முன்பக்க கேபினில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. பெட்ரோல் பங்க் அருகில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் உடனடியாக தீயணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது.

    தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ருக்குமணி தனது வீட்டின் கதவை திறந்து வெளியில் வந்தார்.
    • யானை அவரை தும்பிக்கையால் தாக்கி அவரை அங்கிருந்த சாக்கடைக்குள் தூக்கி வீசியது.

    பேரூர்:

    கோவை மாவட்டம் செம்மேடு, அடிகளார் வீதியைச் சேர்ந்தவர் ருக்குமணி(வயது 70). தோட்ட வேலை பார்க்கிறார்.

    இவரது வீட்டில் அருகே வசிப்பவர் ஈஸ்வரி. நேற்று இரவு 12 மணிக்கு மேல், ஈஸ்வரியின் வீட்டு கதவை யாரோ தட்டுவது போன்ற சத்தம் கேட்டது.

    இதனால் அதிர்ச்சியான ருக்குமணி தனது வீட்டின் கதவை திறந்து வெளியில் வந்தார். அப்போது அங்கு ஈஸ்வரி வீட்டின் கதவை உடைத்து யானை ஒன்று அரிசியை சாப்பிட்டு கொண்டிருந்தது. இருட்டாக இருந்ததால் யானை தெரியவில்லை.

    இதையடுத்து யாரோ ஒருவர் கதவை தட்டுகிறார் என நினைத்து ருக்குமணி, ஈஸ்வரியின் வீட்டின் அருகே சென்றார். அப்போது தான் அங்கு யானை நின்றிருந்தது தெரியவந்தது.

    உடனடியாக ஓட முயற்சித்தார். ஆனால் அதற்குள் யானை அவரை தும்பிக்கையால் தாக்கி அவரை அங்கிருந்த சாக்கடைக்குள் தூக்கி வீசியது.

    யானை நிற்பதை அறிந்த ஈஸ்வரி வீட்டுக்குள்ளேயே இருந்து விட்டார். இந்த நிலையில் வெளியில் நின்ற யானை ஆவேசமாக பிளறியபடி அங்கிருந்து நகர்ந்து சென்றது.

    யானை சென்ற பின்னர் வீட்டை விட்டு வெளியில் வந்த ஈஸ்வரி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் யானை தாக்கி படுகாயம் அடைந்த ருக்குமணியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    தலை மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், தற்போது அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • கர்நாடக அரசு தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்து விடுவதில் முரண்படுவது கண்டிக்கத்தக்கது.
    • தமிழகத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாமல் போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடக அரசு தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்து விடுவதில் முரண்படுவது கண்டிக்கத்தக்கது.

    ஜூன் 24 வரை 7.236 டி.ம்.சி. தண்ணீரை திறந்துவிடவும், ஜூலை மாதத்திற்கு 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்து விடவும் காவிரி மேலாண்மை ஆணையத்தால் கர்நாடக அரசுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஜூன் மாதத்திற்கே இன்னும் 5.376 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விடாமல் காலம் தாழ்த்துகிறது கர்நாடக அரசு. இப்படி தமிழகத்திற்கான காவிரி நீரை உரிய காலத்தில் திறந்து விடாததால் தமிழக விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயிகளும், பொது மக்களும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

    காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசின் செயல்பாட்டை தமிழக அரசு எக்கோணத்தில் பார்க்கிறது என்று தெரியவில்லை. தமிழகத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாமல் போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடரக்கூடாது. எனவே ஜூன், ஜூலை மாதத்திற்கு கர்நாடக காவிரியிலிருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிய நீரை காலத்தே தமிழக அரசு கர்நாடக அரசை வலியுறுத்தி பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    14CNI0260602024: தமிழக காங்கிரஸ் சார்பில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளைய பெருமாள் நூற்றாண்டு விழா இன்று மாலையில் காமராஜர் அரங்கில் நடக்கிறது. இதையொட்டி காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் மாநில தலைவர் ரஞ்சன் குமார் இளையபெருமாளின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிட ஏற்பாடு செய்துள

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் சார்பில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளையபெருமாள் நூற்றாண்டு விழா இன்று மாலையில் காமராஜர் அரங்கில் நடக்கிறது.

    இதையொட்டி காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் மாநில தலைவர் ரஞ்சன் குமார் இளையபெருமாளின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிட ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து காங்கிரஸ் பேரியக்கத்தின் நாடறிந்த தலைவராக உயர்ந்த பெரியவர் எல்.இளையபெருமாள் அரசியல் வாழ்க்கை என்பது, காலத்தாலும், களத்தாலும் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றதாகும்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர், சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக 1952 முதல் 1967 வரை 3 முறை தேர்வு செய்யப்பட்ட பெருமைக்குரியவர், சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். நேரு பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்ட அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு ஆணையத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றியவர் என்பதெல்லாம் இளையபெருமாள் அரசியல் அடையாளங்கள்.


    அவர் தலைமையிலான அகில இந்தியத் தீண்டாமை ஆணையத்தின் பரிந்துரையின் பலனாகவே, தீண்டாமைக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்உருவானது என்பதே அவரது அரசியல் லட்சியத்தின் உன்னதத்திற்கும், விழுமியத்திற்கும் வெளிப்படையான வரலாற்றுச் சான்று.

    பெரியவர் இளையபெருமாள், 1980-ல் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமையும்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார். கலைஞருடன் மிகுந்த நெருக்கமும், நட்புறவும் கொண்டிருந்தவர். 1998-ம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் பெயரிலான தமிழ்நாடு அரசின் விருதை முதன்முதலாக பெரியவர் இளையபெருமாள் அவர்களுக்குத்தான் முதலமைச்சர் தலைவர் கலைஞர் வழங்கினார்கள். "சலிப்பேறாத சமூகத் தொண்டர்" என்று கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்டவர்.

    இளையபெருமாள் அவர்களைச் சிறப்பிக்கும் வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் ஒன்று அமைக்கப்படும் என்று கடந்த 18.4.2023 அன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளேன்.

    பெரியவர் இளையபெருமாள் நூற்றாண்டைக் கொண்டாடுவதுடன், "இளையபெருமாள் வாழ்க்கைச் சரித்திரம்" என்ற அவரது வாழ்க்கை வரலாற்று நூலையும் வெளியிடுவது பெரிதும் பாராட்டுதலுக்குரிய நிகழ்வாகும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க. உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.
    • சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட அனுமதி கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அ.தி.மு.க. மனு அளித்துள்ளது.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இச்சம்பவத்தை கண்டித்து போராட்டங்களை நடத்தி வந்த அ.தி.மு.க. நேற்று கவர்னரை சந்தித்து மனு அளித்தது. மேலும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளச்சாராயம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டதை அடுத்து நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க. உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட அனுமதி கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அ.தி.மு.க. மனு அளித்துள்ளது.

    சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    • பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும்.
    • கள்ளச்சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் தேசிய மகளிர் ஆணையக்குழு உறுப்பினர் குஷ்பு நேரில் விசாரணை மேற்கொண்டார். அப்போது அங்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்தார்.

    இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு கூறியதாவது:-

    * பெண்கள் சாராயம் குடிக்கும் அளவிற்கு கள்ளக்குறிச்சி போலீஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது?

    * கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகமாக உள்ளனர்.

    * பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    * பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும்.

    * கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

    * கள்ளச்சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு குஷ்பு கூறினார்.

    • நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.
    • வரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்வது நல்லது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நெருக்கடி நிலை முடிந்தவுடன் ராஜீவ்காந்தியும், சஞ்ஜய் காந்தியும் ஆட்சியாளர்களுக்கு பயந்து வெளிநாடுகளுக்கு தப்பியோட முயன்றார்கள் என்று ஒரு அப்பட்டமான அவதூறு செய்தியை அண்ணாமலை கூறியிருக்கிறார். அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி தான் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார்.

    நெருக்கடி நிலை முடிந்ததும் பிரதமர் இந்திரா காந்தி நடத்திய தேர்தலில் அவரே வெற்றி வாய்ப்பை இழந்ததின் மூலம் ஜனநாயகத்தை உலகத்திற்கு நிரூபித்தார். நேரு பாரம்பரியத்தில் வந்த இந்திரா காந்தியின் பெருமையை விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு பெறாத ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க. அறிந்திருக்க வாய்ப்பில்லை. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே, வரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்வது நல்லது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தாய், மகள் இரண்டு பேரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • தெரு நாய்கள் தொல்லை மற்றும் அட்டகாசம் அதிகளவில் இருந்து வருகிறது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆவலப்பள்ளி சாலையில் உள்ள பாரத் நகரை சேர்ந்தவர் நாகராஜ், இவர் கம்பி கட்டும் தொழிலாளி ஆவார். இவரது மனைவி ஜோதி (35). இவர்களுக்கு 4 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இதில் மூத்த மகளான தன்யா ஸ்ரீ என்ற சிறுமி, நேற்று வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று குழந்தை தன்யா ஸ்ரீயை துரத்தி துரத்தி கடித்தது. இதனை பார்த்து . அதிர்ச்சியடைந்த அவளது தாய் ஜோதி, நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்ற போராடினார். அப்போது, அவரையும் அந்த நாய் கடித்து விட்டது.

    தெரு நாய் கடித்ததில் தாய், மகள் என 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் தெரு நாயை விரட்டி விட்டு, படுகாயம் அடைந்த தாய், மகள் இரண்டு பேரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஓசூர் மாநகர பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை மற்றும் அட்டகாசம் அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். தெருவில் விளையாடும் குழந்தைகள், தெருவில் நடந்து செல்வோர் என பொதுமக்களை நாள்தோறும் அச்சுறுத்தி வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீசார் பெண் வீட்டாருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்தனர்.
    • சினிமா காட்சிகளைப் போல நடந்ததை பார்த்து கல்லூரி மாணவி அதிர்ச்சியடைந்தார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஓம்சக்தி கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்த் (வயது 22). இவர் உடுமலைப்பேட்டையில் தனியார் நிதிநிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தார்.

    பின்னர் அவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்த போது பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து வசந்த் தனது காதலியை வடமதுரையில் உள்ள கோவிலுக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் பெண்வீட்டார் தங்களை பிரித்து விடுவார்கள் என நினைத்து வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    போலீசார் பெண் வீட்டாருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்தனர். இதற்குள் காதல் மனைவியுடன் வசந்த் தனது வீட்டிற்கு சென்றார். அப்போது காரில் வந்த ஒரு கும்பல் அவரை வழிமறித்து கைது செய்தனர். மேலும் தங்கள் காரில் அழைத்துச் செல்ல முயன்றனர். சினிமா காட்சிகளைப் போல நடந்ததை பார்த்து கல்லூரி மாணவி அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து மாணவியிடம் காரில் வந்த கும்பல் விசாரித்த போது தங்களுக்கு இப்போதுதான் திருமணம் நடந்து முடிந்துள்ளதாக கூறினார். இதனை தொடர்ந்து வசந்தை வடமதுரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற அவர்கள் தாங்கள் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் என தெரிவித்தனர். வசந்த் விருதுநகரில் ஒரு மோட்டார் சைக்கிளை திருடியதால் அவரை பிடிக்க மப்டியில் தேடி வந்ததாகவும், வடமதுரையில் இருப்பது தெரியவரவே அவரை கைது செய்து காரில் அழைத்துச் செல்வதாகவும் கூறினர்.

    இதைக்கேட்ட கல்லூரி மாணவி கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்னர் போலீசார் அவருக்கு ஆறுதல் சொல்லி மீண்டும் ஊருக்குச் செல்லுமாறு கூறி அறிவுரை வழங்கினார். திருமணமான ஒருமணிநேரத்தில் காதல் கணவரை மனைவி கண்முன் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கு எடுப்பை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.
    • முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தைக் காங்கிரஸ் பேரியக்கம் வரவேற்கிறது என காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை கூறினார்.

    சென்னை:

    மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார்.

    அப்போது பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் கருத்து. சமுதாயத்தில் அனைவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்துவது தான் முறையாக இருக்கும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கு எடுப்பை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்றார்.

    இதையடுத்து, தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் பேசி ஆதரவு தெரிவித்தனர்.

    இந்தியாவில் வேலைவாய்ப்புக்கும் சமூக நீதிக்கும் முதல் முதலில் குரல் எழும்பியது தமிழ்நாட்டில் இருந்துதான். மத்திய அளவில் சமூக நீதிக்கு எதிரான, உண்மைக்குப் புறம்பான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 2011ல் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை எதற்காக மத்திய அரசு அறிவிக்கவில்லை. இதுவே இவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள் என்பதற்கு அடையாளம். முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தைக் காங்கிரஸ் பேரியக்கம் வரவேற்கிறது என காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை கூறினார்.

    "வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 10.5 % இட ஒதுக்கீடு செல்லாது என்ற நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. மத்திய அரசுக்கு அனுப்பப்படும் தமிழ்நாடு அரசின் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவதற்கான தரவுகளைத் தமிழ்நாடு அரசே திரட்டவேண்டும் என எம்.எல்.ஏ. வேல்முருகன் வேண்டுகோள் விடுத்தார்.

    இதையடுத்து அவை உறுப்பினர்கள் தீர்மானத்தின் விவாதத்தில் பங்கேற்று பேசி ஆதரவு தெரிவித்தனர்.

    இதன்பிறகு, நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    • நிவாரணம் வழங்கப்பட்டது கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு அல்ல.
    • மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் சிறிது அதிகரித்திருக்கலாம்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரம் ஊராட்சி வைகல் கிராமத்தில் உள்ள வைகல்நாதர் சாமி கோவிலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தனது பிறந்த நாளை முன்னிட்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தபோது கூறியதாவது:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 61 பேர் உயிரிழந்ததும் ஒரு வகையில் விபத்து தான். நிவாரணம் வழங்கப்பட்டது கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு அல்ல. அவரால் வருமான இழப்புக்கு ஆளாகி தவிக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு தான். எனவே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது சரியா தவறா என்று விமர்சிப்பது தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்ப்பதை போன்றது. எனவே நான் அது குறித்து விமர்சிக்க விரும்பவில்லை.

    தமிழ்நாடு அரசு படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் நேரில் வந்து பார்த்தால் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அர்த்தம் இல்லை. அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் அங்கு பார்வையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளன.

    இதனை எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தான் செய்யும். இடைத்தேர்தலில் போட்டியிடாமல் எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும் போது தேர்தல் நியாயமாக நடக்காது என்று காரணம் கூறுவது இந்திய, தமிழக அரசியலில் வாடிக்கையான ஒன்றுதான். மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் சிறிது அதிகரித்திருக்கலாம். ஓ.பி.எஸ், தினகரன், ஏசி சண்முகம் போன்ற கூட்டணியில் நின்ற கட்சித் தலைவர்கள், பா.ம.க. உடன் வைத்துக்கொண்ட கூட்டணி ஆகியவற்றின் காரணமாக வாக்கு சதவிகிதம் அதிகரிப்பதை வைத்து பா.ஜ.க. வானத்துக்கும், பூமிக்கும் குதிக்க கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×