என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • பா.ம.க. பிரமுகர் சங்கரை வெட்டி கொல்ல முயன்ற சம்பவத்தால் கடலூர் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் எஸ்.என்.சாவடியை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் சங்கர் (வயது 43). வன்னியர் சங்க முன்னாள் நகர தலைவரான சங்கர், பா.ம.க. பிரமுகராக உள்ளார். நேற்று மதியம் சங்கர், தனது மனைவி தனலட்சுமியுடன் வீட்டின் முன்பு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் கொண்டமர்மகும்பல் அங்கு வந்தது.பின்னர் அந்த கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் சங்கரை கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனே அந்த கும்பல் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கண் முன்னே தனது கணவரை மர்மகும்பல் வெட்டியதால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி கதறி அழுதார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த சங்கரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னா் அவா் மேல்சிகிச்சைக்காக புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் எஸ்.என்.சாவடியை சோந்த் மகாலிங்கம் மகன்கள் சங்கா், விஜய், பிரபு ஆகியோருக்கும் அதே பகுதியை சோ்ந்த தங்கபாண்டியன், சதிஷ், வெங்கடேசன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. இதன்காரணமாக சங்காின் தம்பி பிரபுவை (35) சதிஷ் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து கடந்த 28.2.2021 அன்று தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர்.

    இந்த வழக்கில் சங்கர் முக்கிய சாட்சியாக இருப்பதாலும், வழக்கை முன்னின்று நடத்துவதாலும் அவா் மீது விரோதம் கொண்ட சதிஷ், வெங்கடேசன் உள்ளிட்டோா் சங்கரை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளது தெரியவந்தது.

    இந்த நிலையில் சங்கரை வெட்டி கொல்ல முயன்ற கும்பல் யார் என்பதை கண்டுபிடிக்க போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சங்கரை அரிவாளால் வெட்டியவர்கள் மோட்டார் சை்ககிளில் தப்பி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதனை வைத்து தற்போது 4 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே பா.ம.க. பிரமுகர் சங்கரை வெட்டி கொல்ல முயன்ற சம்பவத்தால் கடலூர் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உத்தர பிரதேசத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் மாயாவதி.
    • மாயாவதி வருகையையொட்டி பெரம்பூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வருவதாக நேற்று தெரிவித்தார்.

    அதன்படி, இன்று காலை உத்தர பிரதேசத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தடைந்த மாயாவதி, சாலை மார்க்கமாக பெரம்பூர் நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளார். செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கிறார்.

    மாயாவதி வருகையையொட்டி பெரம்பூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.





    • சர்வ தேச கூட்டுறவு தினத்தைப் பற்றிய விழிப்புணர்வு.
    • உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கடன் மேளா நடத்தப்பட்டது.

    சென்னை:

    கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கூட்டுறவு வங்கிகள் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் பயிர்க் கடன், கறவை மாட்டுக் கடன், நகைக் கடன், சுய உதவி குழுக் கடன், சிறுவணிகக் கடன், மகளிர் தொழிற்முனைவோர் கடன், மகளிர் சம்பளக் கடன், வீட்டு வசதிக் கடன் போன்ற கடன்களை வழங்கி வருகிறது.

    இந்த ஆண்டு சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கூட்டுறவுகள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகின்றன என்ற மைய கருத்தில் மக்களுக்கு சர்வ தேச கூட்டுறவு தினத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கடன் மேளா, ரத்ததான முகாம், மரக்கன்று நடும் முகாம், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேற்று இரவு அரசு பஸ் வேதாரண்யத்துக்கு வந்து கொண்டிருந்தது.
    • டிரைவர் பலி, 22 பேர் படுகாயம்.

    கடலூர்:

    சென்னையில் இருந்து வேதாரண்யம் நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று இரவு அரசு பஸ் வேதாரண்யத்துக்கு வந்து கொண்டிருந்தது. பஸ்சை பச்சையம்காடு பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜா (வயது 44) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை ரெட்டிச்சாவடியை அடுத்த கரிக்கன் நகர் மலட்டாறு பாலம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கட்டையில் அதிவேகத்துடன் மோதியது. இதில்பஸ்சின் முன் பக்கம் முழுவதும் பலத்த சேதம் அடைந்தது. மேலும் ஆக்சில் முறிந்து டயர் கழன்று ஓடியது.

    மேலும் பஸ்சில் இருந்த டிரைவர் ராஜா தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். அப்போது பஸ் மோதிய வேகத்தில் டிரைவர் மீது கவிழ்ந்தது. இதனால் ராஜா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    மேலும் கண்டக்டர் திருக்குவளையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் பஸ்சில் பயணம் செய்த சென்னை ராமாபுரம் சொர்ணம் (வயது 48), கதிரேசன் (25), காரைக்கால் அஜிலியா மரியான் (65), 4 வயது பாத்திமா, 11 மாத குழந்தை ரேஷ்மா உட்பட 22 பயணிகள் காயமடைந்தனர்.

    சம்பவம் பற்றி அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் விரைந்து சென்று காயமடைந்த பயணிகளை மீட்டு புதுச்சேரி ஜிப்மர், அரசு மருத்துவமனை, கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சாலையில் கவிழ்ந்த பஸ்சை ஜே.சி.பி. மூலம் அப்புறப்படுத்தினர். உயிரிழந்த ராஜா உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 16.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் இந்த மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை திகழ்கிறது. அணையில் இருந்து பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்பட்டு வருகிறது. அதன்படி இங்கிருந்து வேலூர், சென்னை வரை குடிநீர் வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 100 கன அடிக்கும் கீழ் சரிந்தது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் 30 அடிக்கும் கீழ் குறைந்து டெல்டா பாசனத்திற்கு குறிப்பட்ட காலத்தில் தண்ணீர் திறக்க முடியாமல் போனது.

    தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

    கிருஷ்ணராஜசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். இன்று அணைக்கு வினாடிக்கு 11,027 ஆயிரத்து கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் நீர்மட்டம் 102 அடியை எட்டியை உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 562 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அதுபோல் கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று அணையின் நீர்மட்டம் 81.12 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 5,039 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த அணையில் இருந்து 3,250 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நீர்வரத்து 3000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஒகேனக்கல்லில் விடுமுறை நாளான இன்று ஞாயிற்றுக்கிழமையையொட்டி குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு அணைக்கு வருகிறது. நேற்று வினாடிக்கு 1,465 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 8 மணி அளவில் 2,832 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 39.76 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 40.05 அடியாக உயர்ந்தது. இனிவரும் காலங்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் மளமளவென அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    • மேகமலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்தது.
    • வனத்துறையினர் அருவியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழு கிராமத்தில் மேகமலை அருவி அமைந்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மேகமலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்தது.

    அதன் காரணமாக கடந்த வாரம் மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து வனப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்தனர்.

    இதனால் அருவிக்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் மேகமலை வனப்பகுதியில் தற்போது மழை அளவு குறைந்துள்ளது. அதனால் அருவியில் நீர்வரத்து சீரானது.

    இதையடுத்து நேற்று முதல் அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டது. இன்று விடுமுறை தினத்தை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அருவியில் குவிந்தனர்.

    சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்ததால் மயிலாடும்பாறை போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். அதேபோல மேகமலை வனத்துறையினரும் அருவியில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வைகை அணையின் நீர்மட்டம் 52.07 அடியாக உள்ளது. அணைக்கு 846 கன அடி நீர் வருகிறது.
    • மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 819 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

    152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் 142 அடி வரை தேக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் வழக்கம்போல் ஜூன் 1-ந்தேதி முதல் போக நெல்சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது.

    மேலும் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறப்பை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இந்த நிலையில் தற்போது மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் 122.70 அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 1200 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 52.07 அடியாக உள்ளது. அணைக்கு 846 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 819 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 120.70 அடியாக உள்ளது.

    பெரியாறு 1.4, தேக்கடி 0.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • திரைப்பட தொடக்க விழா பூஜை இன்று காலை நடந்தது.
    • நகைச்சுவை மற்றுமின்றி கதை நாயகனாகவும் நடித்து வருகிறார்.

    நகைச்சுவை நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர். இவரது படங்கள் இல்லாத வெள்ளிக்கிழமையே இல்லை எனக் கூறலாம். அத்தனை படங்களிலும் பிசியாக நடித்து வருபவர், யோகி பாபு. நகைச்சுவை மற்றுமின்றி கதை நாயகனாகவும் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் யோகிபாபு நடிக்கும் 'கான்ஸ்டபிள் நந்தன்' திரைப்பட தொடக்க விழா பூஜை இன்று காலை நடந்தது. இதில் நடிகர்கள் யோகி பாபு, ரவி மரியா ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சிகிச்சை பலனின்றி அர்ச்சுனன் பரிதாபமாக இறந்தார்.
    • விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள முருகன் புதூரை சேர்ந்தவர் அர்ச்சுனன் (55). இவரது மகன் டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று அர்ச்சுனன் தனது மகனை கல்லூரி செல்வதற்காக பஜனைகோவில் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.

    பஸ்சில் அவரது மகன் ஏறியதும், அர்ச்சுனன் வீடு செல்வதற்காக கோபி-ஈரோடு சாலையை கடந்த போது, அந்த வழியாக வந்த நஞ்சகவுண்டன் பாளையத்தை சேர்ந்த சேகர் என்பவர் ஓட்டிச்சென்ற பைக் அர்ச்சுனன் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த சேகர் மற்றும் அர்ச்சனனை மீட்டு சிகிச்சைக்காக கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி அர்ச்சுனன் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சேகர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் அர்ச்சுனன் சாலையை கடப்பதும், அப்போது பைக் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட பதை பதைக்க வைக்கும் காட்சி அங்கு பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமராவில் பதிவான நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    • 10-ம் நாள் அய்யங்குளக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரமோற்சவ விழா கொடியேற்றம் இன்று நடந்தது.

    அதிகாலை நடை திறக்கப்பட்டு தங்க கொடிமரத்தின் முன் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள், மேளதாளம் முழங்க கொடியேற்றப்பட்டது. தங்க கொடிமரத்தின் முன் சிறப்பு அலங்காரத்தில், எழுந்தருளிய உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


    ஆனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று முதல் 10 நாட்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சாமி மாடவீதி உலா நடைபெறும். 10-ம் நாள் அய்யங்குளக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், இணை ஆணையர் சி.ஜோதி, மேலாளர் செந்தில் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு, நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    • கடந்த 2-ந்தேதி அதிகாலை துணை தாசில்தார் பழனியப்பன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார்.
    • அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் அருகே கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்துக்கு தடையின்மைச் சான்று வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற துணை தாசில்தார் பழனியப்பன், கீழக்கரை விஏஓ நல்லுசாமி ஆகியோர் கடந்த 1-ந்தேதி இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, பழனியப்பன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால், அவரை பெரம்பலூர் தாசில்தார் சரவணன் பொறுப்பில் ஒப்படைத்து, அவருக்கு உரிய சிகிச்சை அளித்து 2-ந்தேதி விசாரணைக்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

    பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது கடந்த 2-ந்தேதி அதிகாலை துணை தாசில்தார் பழனியப்பன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தப்பி ஓடிய துணை தாசில்தார் பழனியப்பனை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார்.

    • அமைச்சர் பொன்முடி, கொள்கை பரப்புச்செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்பி. ஆகியோர் தலைமையில் மாலை 4 மணிக்கு திருவாமாத்தூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
    • திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கிறார்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்கிறது.

    இத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், இத்தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார். இதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விக்கிரவாண்டி வருகிறார்.

    அமைச்சர் பொன்முடி, கொள்கை பரப்புச்செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்பி. ஆகியோர் தலைமையில் மாலை 4 மணிக்கு திருவாமாத்தூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    தொடர்ந்து, மாலை 5 மணிக்கு காணையிலும், 6 மணிக்கு பனமலைப்பேட்டையிலும், இரவு 7 மணிக்கு அன்னியூரிலும் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கிறார்.

    அதனை தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு தும்பூரிலும், 9 மணிக்கு நேமூரிலும், மாலை 5 மணிக்கு விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதியிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க.வினர் செய்து வருகின்றனர்.

    ×