என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மலை அடிவார பகுதிகளில் புதிதாக 4 சோதனை சாடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • ஒரு சோதனை சாவடியில் 4 போலீசார் வீதம் 16 பேலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 65பேர் உயிரிழந்த நிலையில், கள்ளச் சாராயம் காய்ச்சுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கல்வராயன் மலையில் இருந்து நகர்ப்புறங்களுக்கு கள்ளச்சாராயம் கடத்துவதை தடுக்க, மலை அடிவார பகுதிகளில் புதிதாக 4 சோதனை சாடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கல்வராயன் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதை தடுக்க, 100க்கு மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 65பேர் உயிரிழந்த நிலையில், கள்ளச் சாராயம் காய்ச்சுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பன்னிப்பாடி செல்லும் சாலை, வெள்ளி மலை செல்லும் சாலை, மூலக்காடு, சிறுவாச்சூர் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சோதனை சாவடியில் 4 போலீசார் வீதம் 16 பேலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் அதனை பார்த்து ரசித்தனர்.
    • அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் வார இறுதி விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் அதனை பார்த்து ரசித்தனர்.

    மேலும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் காத்து இருந்தனர். ஆனால் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக காலை 8 மணிக்கு படகு போக்கு வரத்து தொடங்கப்படவில்லை. பகல் 10.30 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து சுமார் 2½ மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு திரும்பினர். மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துஉள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரித்து விட்டதாக கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • 7 குழுக்களைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் மீது ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்தது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கரூரை அடுத்த வாங்கல் குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கடந்த மாதம் 25-ந் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் உள்பட 3 பேர் சேர்ந்து தனது ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரித்து விட்டதாக கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதையடுத்து இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் எனக் கூறி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் அவரது தம்பி சேகர் ஆகியோர் கரூர் மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இதனிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கரூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து தலைமறைவான முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் மற்றும் அவரது தம்பி உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் (வெள்ளிக் கிழமை) காலை எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் கரூர், மதுரை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்ட சி.பி .சி .ஐ .டி போலீசார் சோதனை நடத்தினர்.

    வழக்கில் தொடர்புடைய யுவராஜ், ரகு, செல்வராஜ், மாரப்பன் வீடுகளில் சோதனை நடைபெற்றது.

    இதனிடையே இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி ஆகியோரின் மனுவை நேற்று இரவு மாவட்ட அமர்வு நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    இதை தொடர்ந்து இன்று கரூரில் உள்ள எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது தம்பி ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.சி.ஐ.டி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    சென்னை, கரூர் உள்பட 8 இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் அபிராமபுரம் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட சுந்தரம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எம்.ஆர்.விஜய பாஸ்கரன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் ரம்யா தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினார்கள்.

    கரூர் - கோவை ரோடு என்.எஸ்.ஆர் நகர் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அருகில் உள்ள நூல் குடோன், ரெயின்போ நகரில் உள்ள சாயப்பட்டறை அலுவலகம், ரெயின்போ அப்பார்ட் மெண்டில் உள்ள அவரது தம்பி சேகர் வீடு ஆகிய இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தினர்.

    இதேபோல் கரூர், கோவை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அலுவலகம், திரு.வி.க சாலையில் உள்ள எம்.ஆர்.வி. டிரஸ்ட் அலுவலகம், ராமானுஜம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றது. ஒரே நாளில் மொத்தம் 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    சோதனையில் நில மோசடி தொடர்பான ஆவணங்கள் உள்ளதா? வேறு ஆவணங்கள் இருக்கிறதா? என்று ஆய்வில் ஈடுபட்டார்கள்.

    7 குழுக்களைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சோதனை நடத்த திட்டமிட்டிருந்த சில இடங்களில் பூட்டு போடப்பட்டு ஆட்கள் இல்லாத காரணத்தால் நீண்ட நேரமாக காத்திருந்தனர்.

    இந்த திடீர் சோதனை காரணமாக கரூர் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதை தொடர்ந்து கரூர் பஸ் நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தமிழகத்தில் போதைப்பொருள் பரவலாக அதிகரித்து உள்ளது.
    • தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்று கட்சியாக பா.ஜ.க. உள்ளது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் எச்.ராஜா இன்று காலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-

    கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் மாடுகள் உள்ளன. இவைகள் சரியான முறையில் பராமரிப்பு இல்லாததால், கோவிலுக்கு சொந்தமான 3 ஏக்கர் இடத்தில் கோசாலை அமைத்து பசுக்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இதனை தவறும் பட்சத்தில் கோவிலை விட்டு அதிகாரிகள் வெளியேற வேண்டும் என்பதனை வலியுறுத்தி மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

    மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் 2000 கோவில்கள் சிதிலமடைந்து உள்ளதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டு உள்ளது. தேவாலயமோ அல்லது மசூதியோ இது போன்று சிதிலமடைந்து உள்ளது என தெரிவிக்க முடியுமா? ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகள் மக்கள் அளிக்கும் கோவில் பணத்தை சுரண்டுகின்றனர்.

    தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதிப்பு மற்றும் விஷ சாராய சாவு நிறைந்த மாநிலமாக உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் இறப்பு தொடர்பாக உளவுத்துறைக்கு தகவல் தெரியும் என அரசு தெரிவித்துள்ள நிலையில் ஏன் சரியான முறையில் பாதுகாப்பு வழங்கவில்லை?. மேலும் சேலத்தில் திமுக கவுன்சிலரின் கணவர் அ.தி.மு.க. நிர்வாகியை கொலை செய்து உள்ளார்.

    தமிழகத்தில் போதைப்பொருள் பரவலாக அதிகரித்து உள்ளது. இதனை கண்டித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன், முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவாரா? ஆகையால் இவர்களின் நாடகம் மக்களுக்கு தெரிந்து வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் முழுமையாக இவர்களை அப்புறப்படுத்த வேண்டும்.

    கடலூரில் தற்போது பா.ம.க. நிர்வாகி ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்ய முயன்று உள்ளனர். தமிழகத்தில் காவல்துறை கட்டுப்பாட்டில் இல்லை. தமிழக முழுவதும் கூலிப்படை சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். இதனை பார்க்கும் போது முதலமைச்சர் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது. மேலும் அவரது கட்டுப்பாட்டில் அரசு மற்றும் கட்சி இல்லை என்பது தெரிய வருகின்றது.

    தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்று கட்சியாக பா.ஜ.க. உள்ளது. விக்கிரவாண்டி தேர்தலில் தி.மு.க.விற்கு மக்கள் கண்டிப்பாக பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பா,ஜ.க. மாநகர தலைவர் வேலு வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சேலம்:

    8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கோவை கிங்ஸ் தனது தொடக்க ஆட்டத்தில் (சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக) வெற்றி பெற்றது. அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    கோவை அணியில் கேப்டன் ஷாருக்கான், பால சுப்பிரமணியன் சச்சின், சுஜய், முகிலேஷ், ராம் அரவிந்த், முகமது, தாமரை கண்ணன், எம்.சித்தார்த், ஜதவேஷ் சுப்பிரமணியன் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    திருப்பூர் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் விஜய் சங்கர், டி.நடராஜன், சாய் கிஷோர், அஜித்ராம், ராதாகிருஷ்ணன், மதிவாணன், ஆர்.ரோகித், அனிருத் சீதாராம், துஷார் ரஹேஜா, கணேஷ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 17 ஆண்டுகளாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்.
    • உண்மையான குற்றவாளிகளை காவல்துறை கைது செய்ய வேண்டும்.

    சென்னை:

    பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். இதன்பின்னர் பேசிய அவர்,

    * ஆம்ஸ்ட்ராங் படுகொலை கோழைத்தனமானது, கடும் கண்டனத்திற்குரியது.

    * ஆம்ஸ்ட்ராங் படுகொலையை காங்கிரஸ், பாஜக தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

    * 17 ஆண்டுகளாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்.

    * ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுபவர்களை நேசிக்க கூடியவர் ஆம்ஸ்ட்ராங்.

    * அம்பேத்கரின் கொள்கைகள், அரசியலமைப்பை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் ஆம்ஸ்ட்ராங்

    * உண்மையான குற்றவாளிகளை காவல்துறை கைது செய்ய வேண்டும்.

    * இதுபோன்ற படுகொலைகள் தொடர்ந்து நடைபெறுவது அதிர்ச்சி அளிக்கிறது.

    * இதுபோன்ற சம்பவங்களுக்கு பின்னணியில் இருப்பவர்கள் குறித்து ஆராய வேண்டும்.

    * சாமானிய தலித் முதல் தலைவர்கள் வரை பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திருவள்ளூர்மாவட்ட பொதுப்பணி துறை நிர்வாகம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிட்டது.
    • ஆக்கிரமிப்பாளர்களை காலிசெய்ய கோரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    ஆவடி:

    ஆவடி அருகே உள்ள நடுக்குத்தகையில் சுமார் 51.ஏக்கர் நிலபரப்பில் பெரியஏரி உள்ளது. இதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக ஏரி நிலத்தை ஆக்கிரமித்து ஏராளமானோர் கடைகள், வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.

    இதையடுத்து திருவள்ளூர்மாவட்ட பொதுப்பணி துறை நிர்வாகம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிட்டது. அதிகாரிகள் விசாரணையில் 391, வீடுகள் சுமார் 15 ஏக்கர் ஏரி நிலத்தை ஆக்கிரமித்து இருப்பது தெரியவந்தது.

    ஆக்கிரமிப்பாளர்களை காலிசெய்ய கோரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    இதற்கிடையே தற்போது மேலும் புதிதாக ஏரியை ஆக்கிரமித்து சிலர் வீடுகள் கட்டி இருப்பதாக பொதுப்பணி துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரின் உதவியுடன் நடுக்குத்தகை பெரிய ஏரியில் ஆக்கிரமித்து கட்டிய 10-க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்களை இடித்து அகற்றினர். மேலும் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மாணவ- மாணவிகள் பார்த்து ஒவ்வொரு நெல் ரகங்களின் பெயர்களையும் தெரிந்து கொண்டனர்.
    • நம்மாழ்வார் மீட்டெடுத்த 7 நெல் ரகங்களை நடவு செய்துள்ளோம்.

    தஞ்சாவூா்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடி முதன்மையானதாக விளங்கி வருகிறது.

    தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சமீபகாலமாக வயல்களில் நெல் நடவு பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வடமாநில தொழிலாளர்கள் வயல்களில் நடவு பணியில் ஈடுபடும் நிலை உள்ளது. இந்த நிலையில் வேளாண் குடும்பத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் பாரம்பரிய நெல் ரகங்களை அறிந்து கொள்ளவும், நடவு பணிகளில் ஆர்வம் ஏற்படவும் நடவு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி, தஞ்சை அருகே உள்ள கருப்பட்டிப்பட்டி கிராமத்தில் மாணவ- மாணவிகளுக்கு பாரம்பரிய முறையில் நெல் நடவு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு நடவு பணியில் ஈடுபட்ட பெண்கள் நாற்று நடுவது எப்படி? என்று கற்றுக்கொடுத்தனர்.

    இதையடுத்து 'அம்மா முத்துமாரி, அழகு முத்து மாரி, ஆனந்தமாய் கொண்டாடுவோம் அழகு முத்துமாரி' என நாட்டுப்புற பாடல்களை பாடியபடி மாணவ- மாணவிகள் உற்சாகமாக நாற்று நட்டனர். தொடர்ந்து, ராஜமுடி, சொர்ன சீரிகை உள்பட 56 நெல் ரகங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இவற்றை மாணவ- மாணவிகள் பார்த்து ஒவ்வொரு நெல் ரகங்களின் பெயர்களையும் தெரிந்து கொண்டனர்.

    இதுகுறித்து மாணவிகள் கூறும் போது:- நாட்டுப்புறப் பாடல் பாடியபடி நாற்று நட்டது மகிழ்ச்சியாக உள்ளது. நம்மாழ்வார் மீட்டெடுத்த 7 நெல் ரகங்களை நடவு செய்துள்ளோம் .

    இளைய தலைமுறை விவசாயத்தை பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். நஞ்சில்லாத உணவை மக்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாகும் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தலித் மக்களுக்கு நிறைய பொருளாதார உதவிகளை ஆம்ஸ்ட்ராங் செய்துள்ளார்.
    • ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும்.

    சென்னை:

    பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்பதை காட்டுகிறது. கொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்று பேசினார்.

    மேலும் அவர் பேசியதாவது:-

    * தலித் மக்களுக்கு நிறைய பொருளாதார உதவிகளை ஆம்ஸ்ட்ராங் செய்துள்ளார்.

    * தலித் மக்களின் வாழ்க்கை மேம்பட, பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க, தமிழக அரசுக்கு பகுஜன் சமாஜ் அழுத்தம் கொடுக்கும்.

    * ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ வசம் மாநில அரசு ஒப்படைக்க வேண்டும்.

    * ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தால் எங்கள் கட்சி மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைகிறது.

    * தொண்டர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்பட கூடாது. அமைதியான முறையில் கருத்துக்களை கூறுங்கள். தொண்டர்கள் வருத்தத்தோடு இருந்தாலும், அமைதியை கடைபிடிக்க வேண்டும்.

    * ஆம்ஸ்ட்ராங் கொலையால் பாதிக்கப்பட்டுள்ள அவரது குடும்பத்திற்கு பகுஜன் சமாஜ் துணை நிற்கிறது.

    * ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றார்.

    இதன்பின்னர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்து மாயாவதி புறப்பட்டு சென்றார். ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


    • திருமண வரவேற்பு விழா இன்று மாலை நடைபெறுகிறது.
    • உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்துகின்றனர்.

    புதுக்கோட்டை:

    தமிழக சட்டத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான எஸ்.ரகுபதியின் பேரன் டாக்டர் எஸ்.நாச்சியப்பன் ரகுபதி-டாக்டர் பி.அழகம்மை திருமணம் புதுக்கோட்டையை அடுத்த புதுப்பட்டியில் உள்ள மணமகள் இல்லத்தில் இன்று காலை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி அளவில் புதுக்கோட்டை ஜெ.ஜெ. அறிவியல் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

    மணமக்களை தமிழக முதல்-அமைச்சரும். தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்துகின்றனர்.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4.30 மணிக்கு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்.

    அங்கிருந்து மாலை 5 மணிக்கு தனி விமானத்தில் மாலை 5.50 க்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து 6 மணிக்கு காரில் புறப்பட்டு 6.45 மணிக்கு புதுக்கோட்டை செல்கிறார்.

    புதுக்கோட்டை ஜெ.ஜெ. கல்லூரியில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். பின்பு அங்கிருந்து இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு 8 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். பின்பு 8.15 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எல்லை ஆகிய இடங்களில் தி.மு.க. வினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.

    • போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • சிறுவனின் இறப்பு அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வென்றவெள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (17). இவர் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருடைய தந்தை லட்சுமணன் உடல் நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில், அவரது தாயாரின் வளர்ப்பில் இருந்து வந்தார் இவர் குடும்ப பாரத்தை குறைக்கவும், பள்ளிப்படிப்பிற்கும் விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு செல்வது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அதே கிராமத்தை சேர்ந்த மைனா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கூலி வேலைக்காக தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது விவசாய நிலத்தில் இருந்த மின்கம்பி தாக்கியதில் அங்கேயே துடிதுடித்து பரிதாபமாக உயிழந்தார்.

    நெடுநேரமாகியும் வீட்டிற்கு வராததால், அவரது தாயார் தேடி சென்று அங்கு பார்த்த போது விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி ஆனந்தன் உயிரிழந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் உடலை கைபற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆனந்தனுக்கு ஒரு அண்ணன் மற்றும் ஒரு தம்பி இருந்த போதும், குடும்ப சுமையை குறைக்க கூலி வேலைக்கு சென்று அவரது தாயாருக்கு பெரும் உதவியாக இருந்த சிறுவனின் இறப்பு அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் ஆனந்தும் அஞ்சலி செலுத்தினார்.
    • கொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

    சென்னை:

    பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி இன்று உத்தரபிரதேசத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தார். அதன்பிறகு சாலை மார்க்கமாக கார்மூலம் பெரம்பூர் வந்தடைந்தார்.

    மாயாவதி வருகையையொட்டி பெரம்பூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


    பள்ளி மைதானத்திற்கு வந்த மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன்பின், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் ஆனந்தும் அஞ்சலி செலுத்தினார்.

    இதன்பிறகு, பேசிய மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் கொள்கை பிடிப்போடு செயல்பட்டு வந்தார். கட்சி அரசியலில் ஈடுபட முடிவு செய்த அவர், தேர்வு செய்த கட்சி பகுஜன் சமாஜ் கட்சியே. ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்பதை காட்டுகிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையை, தமிழக அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தலித்துகளின் வாழ்க்கை ஆபத்தான நிலையில் உள்ளதை இந்த சம்பவம் காட்டுகிறது. கொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்று கூறினார்.


    ×