என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக முடிந்தது.
- இன்று முதல் முழுமையாக மின்வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.
நெல்லை,ஜூலை.28-
ரெயில்வே நிர்வாகம் சார்பில் பெரும்பாலான இடங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இயக்கும்போது ரெயிலில் பழுது பார்ப்பு, எரிபொருள் செலவு என்பது நிலக்கரி மற்றும் டீசல் என்ஜின் ரெயில்களை விட குறைவாக இருந்ததன் காரணமாக தமிழகத்திலும் பல வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டது.
அந்த வகையில் கடந்த 1904-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையில் நிலக்கரி என்ஜின் மூலம் இயங்கிவந்த செங்கோட்டை-புனலூர் ரெயில் பாதையை மின்மயமாக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு கேரள மாநிலம் எடமன் மற்றும் தமிழகத்தில் பகவதிபுரம் இடையே மின்மயமாக்கும் பணி தொடங்கியது. மலை குகை பகுதிகளிலும், பாலங்களிலும் சுமார் 34 கிலோமீட்டர் தூரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு, புனலூரிலும், செங்கோட்டையிலும் 110 கிலோ வோல்ட் ரெயில்வே துணை மின் நிலையங்கள் தலா ரூ.28 கோடியில் அமைக்கப்பட்டன. தொடர்ந்து சோதனை ஓட்டங்களும் நடத்தி முடிக்கப்பட்டது.
அவை வெற்றிகரமாக முடிந்ததால், இன்று முதல் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் மின்சார ரெயில்களாக இயக்கப்படும் என தென்னக ரெயில்வே சார்பில் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதன்படி வண்டி எண் 16101/16102 சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் இன்று முதல் முழுமையாக மின்சார என்ஜின் மூலமாக இயக்கப்படுகிறது. வண்டி எண்.16791/16792 நெல்லை-பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ், வண்டி எண் 16327/16328 மதுரை-குருவாயூர் இடையேயான எக்ஸ்பிரஸ் மற்றும் நெல்லை-செங்கோட்டை இடையேயான பயணிகள் ரெயில் உள்ளிட்டவை இன்று முதல் முழுமையாக மின்வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.
இந்த மின்வழித்தடத்தில் 25 ஆயிரம் கிலோவோல்ட் மின்சாரம் வரும் என்பதால் பொதுமக்கள் அந்த இடத்தை பாதுகாப்பாக கடக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயர் அழுத்தம் காரணமாக 2 மீட்டர் தூரத்திற்கு மின்சார வேகம் இருக்கும் என்பதால் கவனமாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக உயரம் கொண்ட பொருட்களுடன் வாகனங்களை ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்காக கடக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தென்மேற்கு பருவமழை கொட்டி வருகிறது.
- கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு, மடிக்கேரி, மைசூரு, மாண்டியா மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டுகிறது. இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதில் கர்நாடகம் மற்றும் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் காவிரி ஆற்றின் குறுக்கே மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி அருகே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணை தனது முழுகொள்ளவை எட்டிவிட்டது.

கே.ஆர்.எஸ். அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி உயரம் ஆகும். தற்ேபாது 123.34 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 66 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
அதன்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நேற்று 1 லட்சத்து 31 ஆயிரத்து 234 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து இன்று 1 லட்சத்து 30 ஆயிரத்து 867 கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் சீறிப்பாய்ந்தபடி காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது.
அதே போல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே 84 அடி நீர்மட்டம் உயரம் உள்ள கபினி அணை கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே தனது முழுகொள்ளளவையும் எட்டிவிட்டது. இந்த அணையில் 82.05 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த அணைக்கு 32 ஆயிரத்து 867 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி 35 ஆயிரம் கன அடி நீர் கபிலா ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபிலா ஆற்று தண்ணீர் டி.நரசிப்புரா அருகே திருமாகூடலு பகுதியில் காவிரியில் சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வருகிறது.
இன்று காலை 2 அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 65 ஆயிரத்து 867 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் கரைபுரண்டபடி தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நீரானது தமிழக-கர்நாடகா எல்லையான பிலிகுண்டு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று இரவு 1 லட்சத்து 41 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
தொடர்ந்து ஒகேனக்கல்லில் இன்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 55 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள பெருக்கு காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், உள்ளிட்ட அருவிகள் தெரியாத வகையில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

மேலும் காவிரி ஆற்றங்கரையோரமுள்ள பகுதிகளான முதலை பண்ணை, சத்திரம், நாகர்கோவில், ஊட்டமலை, தளவகாடு ஆகிய பகுதிகளில் கரைகளை தொட்டு சென்று தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது. இந்த பகுதிகளில் தண்ணீர் வீடுகளில் சூழ்ந்து காணப்படுவதால், அங்குள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாற்று இடம் செல்ல முடியாதவர்களை ஒகேனக்கல்லில் உள்ள தனியார் மண்டபங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் இயக்கவும் அருவிகளில் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும் தடை நீடித்து வருகிறது. மேலும் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், காவிரி கரையோரப் பகுதிகளில், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் ரோந்து பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலுமாக அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. எனவே, சுற்றுலா பயணிகளை போலீசார் சோதனை சாவடியிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் இரவு அணைக்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று மதியம் 1 லட்சத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணை நேற்று 71-வது முறையாக 100 அடியை எட்டியது.

நேற்று இரவு 1 லட்சத்து 23 ஆயிரத்து 184 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1 லட்சத்து 34 ஆயிரத்து 115 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 107.69 அடியாக உயர்ந்தது. நேற்று காலை முதல் இன்று காலை வரை ஒரே நாளில் நீர்மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் அணையில் தண்ணீர் கடல் போல காட்சி அளிக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழாவை (ஆடி 18) மக்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்கு இதுவரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் வருகிற 3-ந் தேதி ஆடிப்பெருக்கு விழா நடைபெற உள்ளது.
இதையொட்டி மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் ஆகஸ்டு 3-ந் தேதி வரை ஒரு வார காலத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி இன்று மேட்டூர் அணையில் இருந்து ஆடிப்பெருக்குக்காக வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 1.65 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும், ஒகேனக்கல்லில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் கிருஷ்ணகிரி (பிலிகுண்டு), தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்ட கலெக்டர்களிடம் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் காவிரி கரையோர பகுதிகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அதன்படி அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வருவாய்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் காரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.
- நாளை மின்தடைபடும் இடங்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடைபடும் என்று அறிவித்துள்ளது.
நாளை மின்தடைபடும் இடங்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்சார வாரியம் பராமரிப்பு காரணமாக கீழ்க்குறிப்பிட்டுள்ள இந்த இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடைபடும் என்று அறிவித்துள்ளது.
அம்பத்தூர்: பொன்னியம்மன் நகர், வானகரம் ரோடு, ஒரகடம், சி.டி.எச்.ரோடு, செங்குன்றம் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
பல்லாவரம்: கலைவாணர் நகர், கண்ணபிரான் தெரு, கோவலன் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, திருவேங்கட தம்முடையான், யூனியன் கார்பைடு காலனி, நடேசன் சாலை, சர்ச் தெரு, பல்லாவரம் கிழக்கு பகுதி.
சோழிங்கநல்லூர்: பள்ளிக்கரனை, பெரும்பாக்கம், ஜல்லடி யான்பேட்டை பகுதி, ஏரிக்கரை தெரு, ஆஞ்சநேயர் நகர், மேட வாக்கம், சித்தாலப்பாக்கம், மாம்பாக்கம் மெயின் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
அடையார்: வி.ஓ.சி. நகர் 1-வது முதல் 3-வது தெரு வரை, இந்திரா நகர், பனையூர், குடுமியாண்டி தோப்பு பள்ளி தெரு, காயிதேமில்லத் தெரு, செம்மொழி தெரு, பனையூர் குப்பம் ஏரியா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
ஐ.டி.சி: ஈஸ்வரன் கோவில், காரப்பாக்கம், கே.சி.ஜி.கல்லூரி ரோடு, காலியம்மன் கோவில் 1-வது தெரு முதல் 7-வது தெரு வரை, குப்புசாமி தெரு, கங்கையம்மன் கோவில் தெரு.
- இயக்குநர் நெல்சன் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.
- இரண்டாம் பாகத்திற்கான கதையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்து இருப்பவர் நெல்சன். இவர் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் மற்றும் ஜெயிலர் போன்ற படங்கள் வசூலை வாரிக் குவித்தன.
இந்த நிலையில், இயக்குநர் நெல்சன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவனை நேரில் சந்தித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தொல் திருமாவளவன் கலந்து கொண்டுள்ளார்.
நிகழ்ச்சியின் ஓய்வு நேரத்தில் திருமாவளவன் வருகை குறித்து அறிந்து கொண்ட இயக்குநர் நெல்சன் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்துள்ளார்.
இயக்குநர் நெல்சன் மற்றும் திருமாவளவன் சந்திப்பு குறித்த தகவலை விடுதை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இத்துடன் இருவர் சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கி வெளியான ஜெயிலர் படம் வசூலில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், இயக்குநர் நெல்சன் தற்போது ஜெயிலர் இரண்டாம் பாகத்திற்கான கதையை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாலத்துக்காக சுமார் 2 கிலோமீட்டர் தூரம் கடலில் 333 தூண்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மீது இரும்பு கர்டர்கள் அமைத்து தண்டவாளங்களும் அமைக்கப்பட்டுவிட்டன.
- புதிய தூக்குப்பாலம், மெதுமெதுவாக நகர்த்தப்பட்டு, பாம்பன் கடலின் நடுப்பகுதிக்கு கொண்டு வந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே புதிய ரெயில் பாலம் ரூ.545 கோடியில் கட்டப்பட்டு, அதன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி வருகின்றன இந்த பாலத்துக்காக சுமார் 2 கிலோமீட்டர் தூரம் கடலில் 333 தூண்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மீது இரும்பு கர்டர்கள் அமைத்து தண்டவாளங்களும் அமைக்கப்பட்டுவிட்டன. பாலத்தின் மையப்பகுதி வழியாக கப்பல்கள் கடக்க வசதியாக செங்குத்தாக திறந்து மூடும் வகையிலான தூக்குப்பாலம் அமைகிறது.
இதற்காக 77 மீட்டர் நீளமும் சுமார் 650 டன் எடையும் கொண்ட தூக்குப்பாலம், ரெயில்வே பாலத்தின் நுழைவுப்பகுதியில் வடிவமைக்கப்பட்டு நகரும் கிரேன்கள் மூலம் தூண்கள் வழியாகவே நகர்த்தி கொண்டு வரப்பட்டது. இந்தப்பணி சுமார் 2 மாதங்களாக நடந்தன. நேற்று முன்தினம் நள்ளிரவில் தூக்குப்பாலம் அமையும் மையப்பகுதியில் உள்ள 2 தூண்கள் மீது கொண்டு வந்து வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
இதை கொண்டாடும் வகையில் ரெயில்வே கட்டுமான நிறுவனம் சார்பில் நடுக்கடலில் வாணவேடிக்கை நடைபெற்றது. அதிகாரிகள், என்ஜினீயர்கள் உள்பட அனைத்து பணியாளர்களும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
புதிய தூக்குப்பாலம், மெதுமெதுவாக நகர்த்தப்பட்டு, பாம்பன் கடலின் நடுப்பகுதிக்கு கொண்டு வந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இனி அதனை திறந்து மூட தேவையான கேபிள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவை பொருத்தும் பணி தொடர்ந்து நடைபெறும். இந்தப் பணியை அடுத்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் பின்னர் தூக்குபாலத்தை திறந்து மூடும் சோதனை நடைபெறும்.
இந்த சோதனையானது, ரெயில்வே பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, தூக்குப்பாலம் வழியாக ரெயில் பாலம் முழுவதும் ரெயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெறும். இந்த சோதனை ஓட்டம் முடிந்த பின்னர் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இவர் அவருக்கு கூறினார்.
இந்தியாவிலேயே கடலுக்கு நடுவே அமைந்துள்ள செங்குத்து வடிவிலான திறந்து மூடும் முதலாவது தூக்குப்பாலம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
பாம்பன் பாலத்தின் மையப்பகுதியில் தூக்குப்பாலம் நிலை நிறுத்தப்பட்டு இருப்பதை நேற்று ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமானோர் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
- நிலவை பற்றிய ஆராய்ச்சியில் அங்கு நீர் இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டோம்.
கோவை:
கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் கீழ் வானவில் மன்றம் சார்பாக 'ஸ்டெம்' கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார். இந்த பள்ளியில் தான் அவர் பள்ளிப்படிப்பை படித்தார். பின்னர் மயில்சாமி அண்ணாதுரை 'தினத்தந்தி'க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
''நிலவை பற்றிய ஆராய்ச்சியில் அங்கு நீர் இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டோம். நிலவில் மெதுவாக துருவ பகுதியில் இறங்கமுடியும் என சொல்லிவிட்டோம். தற்போது உலக நாடுகள் எல்லாம் நிலவில் சிறு குடியிருப்புகளை உருவாக்க முடியுமா? என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது. இதைத்தொடர்ந்து நிலவிலேயே சர்வதேச விண்வெளி மையம் அமைக்க முடியுமா? என்ற ஆராய்ச்சி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருப்பூர் தமிழன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை எடுத்தது.
- அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றின் கடைசி கட்ட போட்டிகள் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை எடுத்தது. திருப்பூர் சார்பில் மான் பாப்னா 50 ரன்களை எடுத்தார். 170 ரன்களை துரத்திய திருச்சி அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது.
அந்த அணியின் வசீம் அகமது, ராஜ்குமார் முறையே 10 மற்றும் 8 ரன் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த ஷியாம் சுந்தர் 1 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் திருச்சி அணி 16.5 ஓவர்களில் 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் திருப்பூர் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திருப்பூர் சார்பில் நடராஜன் மற்றும் அஜித் ராம் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூம் திருப்பூர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
- சித்தலம்பாக்கத்தை சேர்ந்த தயானந்த் கிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்கு பதில்.
- மத்திய அரசிடம் ஒப்புதல் கோரப்படும் என தமிழக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் கூறியிருந்தார்.
சென்னை விமான நிலையம்- கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் திட்டம் 22 மாதங்களாக முடங்கி உள்ளது.
இதுதொடர்பாக, சித்தலம்பாக்கத்தை சேர்ந்த தயானந்த் கிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அளிக்கப்பட்டது.
அதில், தமிழக அரசின் நிதித்துறை இன்னும் ஒப்புதல் தரவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமான நிலையம்- கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில் வழித்தடத்தை நீட்டிக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.4,625 கோடியில் செயல்படுத்த மத்திய அரசிடம் ஒப்புதல் கோரப்படும் என தமிழக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் கூறியிருந்தார்.
2022ம் ஆண்டு செப்டம்பரில் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம், விமான நிலையம்- கிளாம்பாக்கம் வரை திட்ட அறிக்கை தயாரித்து தமிழக அரசிடம் தந்தது.
தமிழக அரசின் உயர் அதிகார குழு, முக்கிய துறைகள் ஒப்புதல் அளித்தும், நிதித்துறையிடம் இருந்து இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
- இன்று 55 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டன.
- நாளைக்கான புறநகர் ரெயில் சேவை குறித்த அறிக்கையை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.
சென்னை:
தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் மின்சார ரெயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் முன்னதாக வெளியிட்ட அறிவிப்பின்படி ரத்து செய்யப்பட்டன. இதன்படி இன்று 55 மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டன.
இந்நிலையில், நாளை சென்னை புறநகர் ரெயில் சேவைக்கான விரிவான அறிக்கையை தெற்கு ரெயில்வே இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 7.45 முதல் இரவு 7.45 வரை புறநகர் ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
தாம்பரம் ரெயில்வே யார்டு பணிகளுக்காக காலை 10 மணி முதல் பகல் 1 மணி மற்றும் இரவு 10.30க்கு மேலான ரெயில்கள் ரத்து என முன்பே கூறப்பட்டிருந்தது. அந்த நேரங்களில் மட்டும் பல்லாவரம்-எழும்பூர், கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாதம் 10 லட்சம் வருமானம் விவசாயிக்கு சாத்தியமா? என்ற தலைப்பில் பேச உள்ளார்.
- ஏராளமான முன்னோடி நெல் விவசாயிகள், வேளாண் வல்லுநர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நெல் விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லை என விவசாயிகள் நினைக்கும் வேளையில், இன்று ஐடி ஊழியர்களுக்கு இணையான வருவாய் விவசாயத்திலும் சாத்தியம் என்பதை பல முன்னோடி விவசாயிகள் நிரூபித்து வருகின்றனர்.
மேலும் விவசாய பொருட்களை முறையாக மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துவதன் மூலம் நெல் விவசாயத்தில் பன் மடங்கு வருவாய் ஈட்ட முடிகிறது. இதை உணர்த்தும் விதமாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் 'பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவு திருவிழாவை' வேலூரில் வரும் ஜூலை 28 ஆம் தேதி நடத்துகிறது. இதில் ஏராளமான முன்னோடி நெல் விவசாயிகள், வேளாண் வல்லுநர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஒரு விவசாயியாக தன் வாழ்வை தொடங்கி இன்று விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டியதன் மூலம் தொழிலதிபராக மாறியிருக்கும் "தான்யாஸ்" நிறுவனத்தின் நிறுவனர் திரு. தினேஷ் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
ஒரு விவசாயியாக தொடங்கிய இவரது பயணம் எப்படி வெற்றிகரமான தொழில் முனைவோராக மாறியது என்பதை நம்மோடு பகிர்ந்து கொண்டார் "நான் நெல் விவசாயியாக இருந்தால், என்னால் வெறும் நெல்லை மாத்திரமே விற்க முடியும். வெறும் நெல்லாக மாத்திரமே விற்கும் போது ஒரு விலை கிடைத்தது. அந்த நெல்லை மதிப்புக் கூட்டி நான் அரிசியாக விற்ற போது எனக்கு வேறொரு விலை கிடைத்தது. அது நெல்லில் கிடைத்ததை காட்டிலும் அதிகமாக இருந்தது. எனில் இதை மேலும் எப்படி மதிப்பு கூட்டலாம் என்ற தேடல் எனக்கு வந்தது.
அப்போது தான் நாங்கள் கறுப்பு கவுனி நெல்லை, அரிசியாக விற்றோம். அடுத்து கறுப்பு கவுனி அரிசியிலிருந்து சத்து மாவு செய்து விற்க தொடங்கினோம். அதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. வெறும் 10 ஆயிரம் முதலீட்டில் எங்கள் நிறுவனத்தை தொடங்கினோம் இன்று மாதம் 10 லட்சத்திற்கு மொத்த விற்பனை நடக்கிறது. சிறிய அடுப்பு, கேஸ் சிலிண்டர், அரிசியை வறுக்க தேவையான உபகரணம் இவை தான் எங்கள் அடிப்படை மூலதனம். ஒரே ஒரு நபருடன் தொடங்கிய நிறுவனத்தில் இன்று 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இதுவே எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி.
மேலும் விவசாயம் சார்ந்த பொருட்களை மட்டுமே மூலப்பொருளாக வைத்திருக்கிறோம். இதில் வேறெந்த இரசாயனம் கலப்படமோ அல்லது நிறமூட்டிகளோ சேர்க்கப்படுவதில்லை. இன்று எங்கள் நிறுவனத்தில் புட்டு மாவு, சத்து மாவு, சிறுதானிய மாவு, இயற்கை அழுகு சாதன பொருட்கள் என பாரம்பரிய பொருட்களின் மூலம் 50க்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறோம்." என உற்சாகமாக கூறினார்.
மதிப்பு கூட்டலில் மகத்தான வருமானம் தரும் பாரம்பரிய அரிசி ரகங்கள் மற்றும் இந்த அரிசி ரகங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதில் இருக்கும் சாத்தியங்கள், நெல் விவசாயத்தில் புதிய ஸ்டார்ட் அப்-களுக்கு இருக்கும் தொழில் வாய்ப்புகள் என மதிப்புகூட்டல் தொடர்பான விவசாயிகளுக்கு இருக்கும் பல கேள்விகளுக்கு தன்னுடைய அனுபவத்தின் மூலம் இவர் வழிகாட்டி வருகிறார்.
அந்த வகையில் வேலூர் மாவட்டம் ஶ்ரீபுரம் பொற்கோவிலில் அமைந்துள்ள ஶ்ரீ நாராயணி மஹாலில் நடைபெற உள்ள பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவு திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் இவர் "மாதம் 10 லட்சம் வருமானம் விவசாயிக்கு சாத்தியமா?" என்ற தலைப்பில் பேச உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் 8300093777, 9442590077 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
- உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
- சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சக்திநாயக்கன் பாளையம் பால் சொசைட்டி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் செந்தில்குமார் தனது வீட்டில் விளையாடி கொண்டிருந்த பக்கத்து வீட்டை சேர்ந்த பாபு என்பவரது 10 வயது கஷ்மிதா என்ற பெண் குழந்தையை கத்தியால் வெட்டியுள்ளார்.
குழந்தையின் சத்தம் கேட்டு செந்தில் குமாரின் தாய் சம்பூர்ணம் ஓடி வந்து சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்த தங்கராசு, முத்துவேலு ஆகியோர் செந்தில் குமாரை பிடிக்க ஓடி வந்தனர். அவர்கள் இருவரையும் செந்தில் குமார் கத்தியால் தாக்கினார்
இதில் சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் விவேகானந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
படுகாயம் அடைந்த தங்கராசு, முத்துவேல் இருவரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் செந்தில் குமார் பல ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் உடல் நிலை தேரிவந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பைக் சம்பந்தமாக குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் அறையிலேயே யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 4 பெண் குழந்தைகளில் ஷோபாவில் அமர்ந்திருந்த கஷ்மிதாவை லேப்டாப் வைத்திருந்த மேஜைக்கு அடியில் இருந்த கத்தியை எடுத்து கழுத்தி வெட்டியுள்ளார் என்று விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உதயநிதியே திமுகவில் திணிக்கப்பட்டவர் தான்.
- திமுகவில் வாரிசுகள் மட்டும் தான் அரசியலுக்கு வர முடியும்.
உதயநிதி துணை முதல்வர் ஆவது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ கூறியதாவது:-
உதயநிதியே திமுகவில் திணிக்கப்பட்டவர் தான். மு.க ஸ்டாலின் எதிர்கட்சியாக இருக்கும்போது எனது குடும்பத்தில் யாரும் அதாவது மகனோ, மருமகனோ வேறுயாரும் திமுகவிற்கு எந்த பதவியிலும் வரமாட்டார்கள் என்று கூறினார். நான் மட்டும் தான் அரசியலில் இருப்பேன் என்றும் கூறினார்.
இப்போது உதயநிதிக்கு முதலில் இளைஞர் அணி, பின்னர் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், இனி துணை முதலமைச்சர் என்று பதவிகள் வழங்கப்படுகிறது.
அ.தி.மு.க. மட்டும் தான் ஜனநாயக இயக்கம். அடுத்து தொண்டர்களும் மேலே தலைவர்களாகளாம், பொது செயளாளராகளாம், முதலமைச்சராகளாம்.
திமுகவில் வாரிசுகள் மட்டும் தான் அரசியலுக்கு வர முடியும்.
பொதுவாக திமுக கட்சியில்லை அது ஒரு கம்பெனி. தி.மு.க. என்பது கருணாநிதி குடும்பத்தின் பிரைவேட் கம்பெனி.
முதலில் கருணாநிதி. அதன் பிறகு மு.க.ஸ்டாலின். பின்னர் உதயநிதி. இன்று மூத்த தலைவர் துரைமுருகன் இன்பநிதி வந்தாலும் கூட நாங்கள் தோலில் துக்கிட்டுப் போவோம் என்று சொல்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.






