என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • எழிலரசன் எம்.எல்.ஏ. காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திடீரென ஆய்வு.
    • உடனடியாக படுக்கை வசதி செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு அவசர சிகிச்சை, பொது மருத்துவம், குழந்தைகள் பிரிவு, எலும்பு மருத்துவம், கண் மருத்துவம், சிறுநீரக மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.

    மகப்பேறு நல மருத்துவ பிரிவு 5 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் உள்ளது. இதில் முதல் தளத்தில் கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சை பிரிவு, 2-வது தளத்தில் பெண்கள் அறுவை சிகிச்சை மற்றும் விபத்து பிரிவு, 3-வது தளத்தில் கர்ப்பிணி பெண்கள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை பகுதி 4-வது தளத்தில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பகுதி, 5-வது தளத்தில் பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் பராமரிப்பு பகுதி ஆகியவை உள்ளன.

    இந்த நிலையில் மகப்பேறு மருத்துவ பிரிவில் போதிய அளவில் படுக்கை வசதி இல்லாமல் பிரசவித்த பெண்கள் பச்சிளம் குழந்தைகளோடு தரையில் படுத்து கிடப்பதாக புகார்கள் எழுந்தன.

    இதைத்தொடர்ந்து எழிலரசன் எம்.எல்.ஏ. காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திடீரென சென்று ஆய்வு செய்தார். அப்போது பிரசவ வார்டில் பச்சிளம் குழந்தைகளோடு படுக்கை வசதி இல்லாமல் பல பெண்கள் தரையில் படுத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் கேட்டு உடனடியாக அவர்களுக்கு படுக்கை வசதி செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

    அப்போது எழிலரசன் எம்.எல்.ஏ. கூறும்போது, இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மருத்துவமனையின் தேவைகள் குறித்து கேட்டறிந்து புதிய கட்டிட வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • வழக்கமான ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டக் கூடிய ஓணம் பண்டிகை தற்போது களையிழந்து விட்டது.

    பேரூர்:

    கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் அனைத்து மக்களாலும் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஓணம் பண்டிகையில் மிக முக்கியமாக இடம் பெறுவது பூக்கள் தான். 10 நாட்களும் மகாபலி மன்னனை பூவுலகுக்கு வரவேற்கும் விதமாக மக்கள் தங்கள் வீடுகளின் முன்பு அத்தப்பூ கோலமிடுவது வழக்கம்.

    இதனையொட்டி விழா தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பாகவே கேரளாவில் மலர்கள் விற்பனை சூடுபிடித்து விடும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

    குறிப்பாக கேரளாவின் அருகே உள்ள தமிழக மாவட்டமான கோவையில் இருந்து தான் அதிகளவில் பூக்கள் விற்பனைக்கு செல்கின்றன. ஓணம் பண்டிகைக்காகவே, பிரத்யேகமாக கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளில் அதிகளவில் பூக்கள் பயிரிடப்பட்டு, அறுவை செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    கேரளாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் கோவையில் பூக்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு, ஓணம் விழாவுக்கு அவர்கள் வாங்கி செல்வார்கள். இதனால் விவசாயிகளும், வியாபாரிகளுக்கும், அந்த 10 நாட்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

    இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கமாக ஓணம் பண்டிகை வந்தால் சில நாட்களுக்கு முன்பிருந்தே கேரளா மாநிலம் முழுவதும் விழா களைகட்ட தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு கேரளாவில் ஓணம் பண்டிகை களையிழந்து காணப்படுகிறது.

    இதற்கு முக்கிய காரணம் சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு தான். இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் வீடுகளை இழந்தனர்.

    இப்படி மக்கள் இன்னல்களில் தவிப்பதால் கேரள அரசு இந்த ஆண்டு ஓணம் பண்டிகை அரசால் கொண்டாடப்படாது என அறிவித்து விட்டது. இதனால் அரசு கல்லூரிகள், அரசு சம்பந்தமான அலுவலகங்களில் நடைபெறும் அனைத்து ஓணம் விழாக்களும் ரத்து செய்யப்பட்டு விட்டன.

    தனியார் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளும், தாங்களும் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை கொண்டாடப் போவதில்லை என தெரிவித்து விட்டனர். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிறிய அளவில் ஓணம் பண்டிகையை அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடுகிறார்கள். இதனால் வழக்கமான ஆட்டம்பாட்டத்துடன் களைகட்டக் கூடிய ஓணம் பண்டிகை தற்போது களையிழந்து விட்டது.

    கேரளாவில் ஓணம் பண்டிகை விழா களையிழந்ததால், இந்த விழாவை நம்பி மலர்களை பயிரிட்டிருந்த தமிழக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    குறிப்பாக தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான வடிவேலம்பாளையம், மோளபாளையம், மங்கலபாளையம், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஓணம் பண்டிகையை எதிர்பார்த்து, அதிகளவில் செண்டுமல்லி, வாடாமல்லி, கோழிக்கொண்டை உள்பட பல்வேறு வகையான பூக்களை பயிரிட்டிருந்தனர். பூக்களும் பூத்து அறுவடைக்கு தயாராக இருக்கிறது.

    தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை களையிழந்ததால், அங்கு இருந்து எந்தவித ஆர்டர்களும் கோவைக்கு வரவில்லை. இதனால் விவசாயிகளிடம் இருந்து பூக்களை வாங்க வியாபாரிகளும் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர். அவை செடியிலேயே கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் பூக்களை பறித்து தோட்டத்தின் ஓரத்தில் கொட்டி செல்கிறார்கள்.

    இந்த பகுதிகளில் உள்ள தோட்டங்களையொட்டி சாலையோரங்கள் மற்றும் வயல்வெளி ஓரங்களில் அதிகளவில் பூக்கள் கொட்டி கிடப்பதையும், அவற்றை கால்நடைகள் உண்டு செல்வதையும் பார்க்க முடிகிறது.

    ஓணம் பண்டிகை வந்தால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஏனென்றால் அந்த 10 முதல் 12 நாட்களும் மலர் விற்பனை அமோகமாக இருப்பதால் வியாபாரிகள் போட்டி போட்டு எங்களிடம் இருந்து பூக்களை வாங்கி செல்வார்கள். பூக்களுக்கும் நல்ல விலை இருக்கும். இதனால் விற்பனை சூடுபிடித்து, விலையும் கிடைத்து வருவதால் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.

    ஆனால் இந்த ஆண்டு கேரளாவில் ஓணம் களையிழந்ததால், வழக்கமாக பூக்களை ஆர்டர் செய்பவர்களில் சிலர் மட்டுமே ஆர்டர் கொடுக்கிறார்கள்.

    குறிப்பாக வாடாமல்லி பூக்களுக்கு அதிகளவில் வரவேற்பு இருக்கும். தற்போது 150 ஏக்கர் பரப்பளவில் வாடமல்லி, கோழிக்கொண்டை உள்பட பல்வேறு வகையான மலர்களை பயிரிட்டு, 6 மாதமாக விவசாயிகள் அதனை பாதுகாத்து வந்தனர். ஆனால் தற்போது விற்பனை இல்லாதது அவர்களுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக 25 டன் பூக்கள் இங்கிருந்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் தற்போது 5 டன் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. ஆர்டர்கள் வராததால் வியாபாரிகளாகிய நாங்களும், இதனை நம்பி தொழில் செய்து வந்த பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    விவசாயிகள் கூறும்போது, ஓணம் பண்டிகை வந்தால் செண்டுமல்லி, கோழிகொண்டை, வாடாமல்லி உள்ளிட்ட பூக்கள் கிலோ ரூ.100-க்கு விற்பனையாகும். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டுள்ளதால் செண்டு மல்லி ரூ.20 முதல் ரூ.40க்கும், கோழிகொண்டை ரூ.50க்கும், வாடாமல்லி ரூ.40க்கும் விற்பனையாகி வருகிறது என்றனர்.

    • கிளாம்பாக்கத்தில் பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் ரெயில் சேவை இல்லை.
    • விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் இங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

    வண்டலூர்:

    வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் சுமார் ரூ.400 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய பஸ்நிலையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது. வெளியூர் செல்லும் அனைத்து விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் இங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

    எனினும் கிளாம்பாக்கம் செல்ல மாநகர பஸ் வசதிகள் செய்யப்பட்டு இருந்தாலும் ரெயில் வசதி இல்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தில் இறங்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்க அரசு முடிவு செய்தது.

    அதன்படி மாநில அரசு மற்றும் ரெயில்வே இணைந்து சுமார் ரூ.120 கோடி மதிப்பில் கிளாம்பாக்கத்தில் ரெயில்கள் நின்று செல்லும் வகையில் புதிய ரெயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.

    கிளாம்பாக்கம் பஸ்நிலையத்திற்கு நேர் எதிராக உள்ள இடத்தில் இந்த ரெயில் நிலையம் அமைய உள்ளது.

    மேலும் ரெயில் நிலையத்தில் இருந்து நேரடியாக கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்திற்கு செல்லும் வகையில் உயர்மட்ட நடை மேம்பாலமும் ரூ.79 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளன.

    இந்த நிலையில் கிளாம்பாக்கம் புதிய ரெயில்நிலையம் அமைப்பதற்கு இடத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் இருந்ததாமல் பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

    இந்தநிலையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து நேற்று முதல் புதிய ரெயில் நிலையத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. புதிய ரெயில் நிலையம் அமைய உள்ள இடத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் வர உள்ளன. இதில் 2 நடைமேடைகள் மின்சார ரெயில்களுக்கும், ஒருநடைமேடை எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கும் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

    இதற்கான பணிகள் அனைத்தும் முடிந்து கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


    இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, `நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையால் ரெயில் நிலைய கட்டுமான பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டடது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு அது சரி செய்யப்பட்டது.

    தற்போது ரெயில் நிலையத்திற்கு சுற்றுச்சுவர் கட்டுதல், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, நடைமேடைக்கு மண் நிரப்பும் பணிகள் தொடங்கி உள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பணியை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார்.

    கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும்போது பயணிகளின் போக்குவரத்து வசதி மேலும் எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • திடீர் நிபந்தனை காரணமாக போட்டியில் பங்கேற்க முடியாமல் சிறார்கள் தவித்தனர்.
    • பெற்றோரும் பயிற்சியாளர்களும் நிபந்தனைகளும் தளர்த்துமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    திருச்சி:

    திருச்சியில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இதில், சிலம்ப போட்டியில் பங்கேற்க 40 கிலோ எடை கட்டாயம் என திடீர் நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த திடீர் நிபந்தனை காரணமாக போட்டியில் பங்கேற்க முடியாமல் சிறார்கள் தவித்தனர்.

    திடீர் நிபந்தனையால் விளையாட முடியாத சிறார்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகளுடன் சிறார்களின் பயிற்சியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பெற்றோரும் பயிற்சியாளர்களும் நிபந்தனைகளும் தளர்த்துமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் பெற்றோரும் பயிற்சியாளர்களும் நிபந்தனைகளை தளர்த்தகோரி போராடிய நிலையில், நிபந்தனைகள் தளர்த்தப்பட்டது. இதையடுத்து சிறார்கள் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது.

    • அரங்கில் தி.மு.க. சாதனைகள் குறித்து கண்காட்சிக்கும் ஏற்பாடு.
    • மு.க.ஸ்டாலின் விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    சென்னை:

    பெரியார்-அண்ணா பிறந்தநாள், தி.மு.க. தோற்றுவிக்கப்பட்ட நாள் என ஆண்டுதோறும் தி.மு.க. முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு தி.மு.க. முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக தி.மு.க.வின் 75-வது ஆண்டு பவள விழா என்பதால் முப்பெரும் விழா கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

    இதையொட்டி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பவள விழா ஆண்டை குறிக்கும் விதத்தில் 75 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட உள்ளன. 1 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    விழா அரங்கில் தி.மு.க. சாதனைகள் குறித்து கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் முப்பெரும் விழாவில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    விழாவில் பெரியார் விருது-பாப்பம்மாள், அண்ணா விருது-மிசா ராம நாதன், கலைஞர் விருது-ஜெகத்ரட்சகன், பாவேந்தர் விருது-கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது-வி.பி.ராஜன், மு.க.ஸ்டாலின் விருது-தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகி யோருக்கு வழங்கப்படுகிறது.

    இவை மட்டுமின்றி ஒன்றிய, நகர, பேரூர், பகுதி ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் தலா ஒருவருக்கு நற்சான்று பணமுடிப்பு ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது.

    பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி கருணாநிதி, அந்தியூர் செல்வராஜ் உள்பட பலர் பேசுகின்றனர். மாவட்டச் செயலாளர் மா.சுமணியன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

    விழா ஏற்பாடுகளை நந்தனம் மைதானத்துக்கு சென்று அமைச்சர் எ.வ. வேலு பார்வையிட்டுளார்.

    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதிகளிலும் மலையோரப் பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
    • திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டி வரும் நிலையில் மழையும் பெய்து வருவதால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இன்றும் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலையில் சாரல் மழை கொட்டியது.

    அடையாமடை பகுதியில் நேற்று இரவு 2 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 25.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கொட்டாரம், மயிலாடி, பூதப்பாண்டி, தக்கலை, குளச்சல், இரணியல், கோழிப்போர்விளை, குழித்துறை, சுருளோடு, முள்ளங்கினாவிளை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதிகளிலும் மலையோரப் பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளின் நீர்மட்டம் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி விட்ட நிலையில் அணைகளுக்கு வரக்கூடிய நீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். அணைகளுக்கு கூடுதல் தண்ணீர் வரும் பட்சத்தில் அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றவும் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டி வரும் நிலையில் மழையும் பெய்து வருவதால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    • குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கலெக்டர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
    • மதுரை முழுவதும் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் பகுதியில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் கட்ராபாளையத்தில் உள்ள விசாகா தனியார் விடுதியில் கலெக்டர் சங்கீதா ஆய்வு செய்தார்.

    குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கலெக்டர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    * விடுதியில் 2 பெண்கள் பலியானது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    * விபத்து தொடர்பாக விசாகா தங்கும் விடுதி உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    * கட்டடம் குறித்து வழக்கு இருப்பதாக கூறப்படுவதால் அது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்.

    * மதுரை மாவட்டங்களில் முறையான அனுமதியின்றி இயங்கும் விடுதிகளை கண்டறிந்து சீல் வைக்கப்படும்.

    * மதுரை முழுவதும் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    * மதுரையில் பதிவு செய்யாத அனைத்து விடுதிகளையும் ஆய்வின் மூலம் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    • பொருட்கள் கடலில் மூழ்கி நாசமானதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
    • 1500 க்கு மேற்பட்ட படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், செருதூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த தர்மன் (வயது 55) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (40), தேவராஜ் (32), செருதூர் மெயின் ரோட்டை சேர்ந்த கார்த்திகேயன் (46), தெற்கு தெருவை சேர்ந்த சதீஷ் (36) ஆகிய 4 மீனவர்களும் கடந்த 9-ந்தேதி காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    தொடர்ந்து, அவர்கள் நேற்று முன்தினம் மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 5 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு ஒரு கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், அவர்களது கப்பலை கொண்டு தமிழக மீனவர்களின் பைபர் படகில் மோதியதுடன், மீனவர்களை தாக்கி விட்டு சென்றுவிட்டனர்.

    இதனால் பைபர் படகு நிலைகுலைந்து கடலில் தலைகுப்புற கவிழ்ந்தது. படகில் இருந்த மீனவர்கள் கடலில் மூழ்கி தத்தளித்தனர். பின்னர் மற்ற மீனவர்களின் படகின் மூலம் கரைக்கு வந்தனர். அவர்களது படகும் மீட்கப்பட்டது. இதில் சுமார் ரூ.6½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் கடலில் மூழ்கி நாசமானதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    இந்நிலையில் மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே செருதூர் மீனவ கிராமத்தில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று 2-வது நாளாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அதனால் 15 ஆயிரம் குடும்பங்கள் வருமானம் இல்லாமல் தவிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் 1500 க்கு மேற்பட்ட படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. இலங்கை கடற்படை தாக்குதல் தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி செருதூர் மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • முத்ரா திட்டத்தில் நாட்டில் 49.5 கோடி பேர் பலன் அடைந்துள்ளனர்.
    • ஆலோசனை கூட்டத்தில் தொழில் முனைவோர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.

    கோவை:

    கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஜிஎஸ்டி குறைப்பு தொடர்பாக பல்வேறு அமைப்பினரும் கருத்து தெரிவித்தனர்.

    இதையடுத்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 70 இடங்களில் சிட்பி வங்கிகளை நாங்கள் திறக்க உள்ளோம். 5 ஆண்டுகளுக்கு 1 கோடி இளைஞர்கள் தொழில் திறன் பயிற்சி பெற தொழில் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. முத்ரா திட்டத்தில் வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் கடனை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். முத்ரா திட்டத்தில் நாட்டில் 49.5 கோடி பேர் பலன் அடைந்துள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 5.6 கோடி பேர் பயன் அடைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் மித்ரா பூங்கா விருதுநகரில் தொடங்கப்பட்டிருக்கிறது. 2028-க்குள் இந்த பூங்கா மூலம் 1 லட்சம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழில் முனைவோர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், "இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும். அதே போல, Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்ல.. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி.. வாடிக்கையாளர் சொல்றாரு.. க்ரீமை கொண்டு வா.. நானே வச்சிக்கிறேன்னு சொல்றாரு... கடை நடத்த முடியல மேடம்... ஒரே மாதிரி வையுங்கள். ஒரு குடும்பத்துக்கு பில் போடணும்னா கம்யூட்டரே திணறுது மேடம்..'' என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார். 

    • மார்க்கெட்டில் பாதி அளவு கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கடைகள் திறக்கப்படவில்லை.

    நெல்லை:

    தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் (வயது 76), உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் சென்னையில் மரணம் அடைந்தார்.

    அவரது உடல் இன்று அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பிச்சி விளையில் உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

    இதனையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர், அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. நெல்லை மாநகர பகுதியில் பாளை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஐக்கிய சங்கத்தினர் கடைகளை அடைத்திருந்தனர்.

    இதில் தலைவர் சால மோன், பொதுச்செயலாளர் பெரிய பெருமாள், பொருளாளர் இசக்கி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள், உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் உள்பட ஏராளமான கடைக்காரர்கள் வெள்ளையன் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். அதேநேரத்தில் மார்க்கெட்டில் பாதி அளவு கடைகள் திறக்கப்பட்டிருந்தன.


    டவுனில் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் வாகையடி முனையில் வெள்ளையன் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் திரளான வியாபாரிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும் டவுன் வாகையடி முனையில் தொடங்கி டவுன், சேரன் மகாதேவி ரோடு, டவுன் வியாபாரிகள் நலச்சங்க அலுவலகம் வரை வியாபாரிகள் மவுன ஊர்வலம் சென்றனர். முன்னதாக அவர்கள், வெள்ளையன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    தூத்துக்குடி மாநகர பகுதியில் 90 சதவீதம் கடைகள் இன்று அடைக்கப்பட்டிருந்தன. மாநகரில் தாளமுத்துநகர், புதுக்கோட்டை, முத்தையாபுரம், முள்ளக்காடு, திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதி சாலைகள் வெறிச்சோடியது. மாவட்டத்தில் ஆறுமுகநேரி, பழைய காயல், ஏரல், சாயர்புரம், நாசரேத், திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களிலும் நூற்றுக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கடைகள் இன்று திறக்கப்படவில்லை.

    • ஒரு குழியை மேலும் தோண்டியபோது வட்ட வடிவில் பானையின் முகப்பு வெளிப்பட்டது.
    • பானையின் உயரம் சுமார் 2¼ அடியும், அகலம் 1½ அடி இருக்கும் என தெரியவருகிறது.

    திருப்புவனம்:

    மதுரையை அடுத்த கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் தலைமையில் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு, பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய கண்ணாடி பாசி, மணிகள், கருப்பு சிவப்பு மண்பானை ஓடுகள், அகலமான செங்கல்கள், செம்பு பொருட்கள், சுடுமண் கழிவுநீர் குழாய்கள் என பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

    இதில் ஒரு குழியை மேலும் தோண்டியபோது வட்ட வடிவில் பானையின் முகப்பு வெளிப்பட்டது. எனவே தொடர்ந்து அந்த குழியை மேலும் ஆழமாக தோண்டியபோது 5 அடி ஆழத்தில் சிவப்பு நிற சுடுமண் அழகிய பானை முழு வடிவில் வெளிவந்துள்ளது.

    பானையில் நிறைந்திருக்கும் மண்ணை முழுமையாக அகற்றி அதில் என்னென்ன பொருட்கள் உள்ளன? என்பதை அறிய தொல்லியல் அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர். பானையின் உயரம் சுமார் 2¼ அடியும், அகலம் 1½ அடி இருக்கும் என தெரியவருகிறது. அகழாய்வில் இன்னும் ஏராளமான பொருட்கள் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • திருமாவளவன் மது ஒழிக்க கிளம்பிவிட்டார் என சிலருக்கு அதிர்ச்சி.
    • மாநாடு நடத்த உடனடி காரணம் கள்ளக்குறிச்சி சாராய மரணம்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அடுத்த மாதம் 2-ந் தேதி நடைபெற உள்ள மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு தொடர்பாக விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    திருமாவளவன் மது ஒழிக்க கிளம்பிவிட்டார் என சிலருக்கு அதிர்ச்சி. 2014-ல் மக்கள் நல கூட்டணியில் பயணித்த போது மதுவிலக்கு கொள்கையை வலியுறுத்தினோம்.

    கள்ளக்குறிச்சியில் 69 பேர் உயிரிழந்தனர். தி.மு.க.வை மிரட்ட மாநாட்டு நடத்துவதாக சிலர் கூறுகிறார்கள். அப்போதுதான் தி.மு.க.விடம் அதிக சீட்டு பேரம் பேச முடியும் என பேசுகிறார்கள். சிலர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என பேசுகிறார்கள்.

    மாநாடு நடத்த உடனடி காரணம் கள்ளக்குறிச்சி சாராய மரணம். மாநாடு நடத்த வேண்டும் என எனக்கு சொல்லிக்கொடுத்தது மக்கள். தேர்தல் நேரத்தில் மட்டுமே அது குறித்து சிந்திப்பேன். எனக்கு இப்போது தேர்தல் கணக்கு இல்லை.

    தேர்தல் நேரத்தில் மட்டும் தான் கூட்டணி, சீட்டு குறித்து சிந்திப்பேன். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் அரசியல் கட்சி. மற்ற நேரங்களில் இது அம்பேத்கர் கட்சி, பெரியார் கட்சி.

    மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடுள்ள காந்தி பிறந்தநாளில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. காங்கிரஸ் செய்ய வேண்டிய வேலையை விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்கிறது.

    பெண்களை மாநாட்டுக்கு அதிகம் அழைத்து வர வேண்டும். லட்சக்கணக்கான பெண்கள் கலந்துக்கொள்ள வேண்டும். மது ஒழிப்பு பெண்களின் குரலாக இருக்க வேண்டும். இது கட்சியின் மாநாடு அல்ல அனைவருக்குமான பொது கோரிக்கை யாரும் பங்கேற்கலாம் என கூறினேன்.

    மதுவை ஒழிப்போம் என்பதில் தி.மு.க., அ.தி.மு.க., இடசாரிகள், வி.சி.க.வுக்கு முழுமையான உடன்பாடு உள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய பிரச்சினை.

    காவிரி விவகாரத்தில் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என பேசுகிறோம். அது போல் மது ஒழிப்பை எல்லோரும் ஒரே குரலில் பேச வேண்டும். மது குடிக்கும் இடத்தில் எப்படி சாதி இல்லையோ, அப்படியே மது ஒழிக்கவும் சாதி வேண்டாம்.

    பா.ம.க., பா.ஜ.கவுடன் அணி சேர முடியாது. பா.ஜ.க.கட்சியில் பல நண்பர்கள் உள்ளனர். பா.ம.க. மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இல்லை.

    வெளிப்படையாக தி.மு.க.வுக்கும் வேண்டுகோள் வைக்கிறேன். மதுவிலக்கு தொடர்பாக தேசிய கொள்கையை வரையறை செய்ய வேண்டிய சூழல் உள்ளது. மதுவிலக்கு தொடர்பாக அரசியலமைப்பு சில வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.

    47-வது உறுப்பில் மதுவிலக்கு கொள்கையை படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. அதன் அடிப்படையில் கோரிக்கை வைக்கிறோம்.

    ஒரு தேசிய கொள்கையை வரையறுக்கு மத்திய அரசைதி.மு.க. வலியுறுத்த வேண்டும். இந்த கொள்கையை விடுதலை சிறுத்வதைகள் வலியுறுத்துகிறது. எல்லா ஆட்சி காலத்திலும் மதுவிலக்கு கொள்கை பேசப்பட்டது.

    தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான பெண்கள் விதவைகளாக உள்ளனர் .அதற்கு காரணம் மது. இதுவரை அரசியல் விழிப்புணர்வு மாநாட்டை நடத்தினோம். ஆனால் இந்த மாநாடு ஒட்டுமொத்த தேசத்தை உலுக்கும் மாநாடு.

    தி.மு.க.கூட்டணியில் இருப்பதால் முதல்வரிடம் மனு கொடுக்கலாமே என கேட்கிறார்கள். ஆனால் இது மக்களே ஒன்று சேர்ந்து கேட்கவேண்டிய கோரிக்கை .

    அக்டோபர் 2-ந் தேதி நடைபெறும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்கள், சகோதரிகள் நீல நிறபுடவையும் சிகப்பு நிற ஜாக்கெட்டு சீருடையுடன் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×