search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coral Festival"

    • பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது
    • பார்க்கிங் வசதி குறித்து சோதனை செய்தார்

    வேலூர்:

    தி.மு.க பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதில், தமிழக முதல் -அமைச்சரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின் பங்கேற்கிறார்.இதை யொட்டி, பள்ளி கொண்டா கந்தனேரி பகுதியில் பிரம்மாண்டமான பந்தல் மற்றும் விழா மேடை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

    இப்பணிகளை கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் ஆய்வு செய்தார்.

    அப்போது, 6 வழிச்சாலையில் இருந்து விழா மேடைக்கு முதல் - அமைச்சர் செல்லும் பாதை குறித்து ஆலோசிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சருக்கு, மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு எம்.எல்.ஏ வுமான நந்தகுமார் விரிவாக எடுத்துரைத்தார்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    இந்த முப்பெரும் விழாவில் தி.மு.க வின் பவள விழா இருப்பதும், அந்த விழா வேலுாரில் நடப்பதும்சிறப்பு. இதில், கன்னியாகுமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை பரந்து கிடக்கும் கட்சியினர் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.

    இந்த ஆய்வின்போது, எம்.பி. க்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், எம்.எல்.ஏ கார்த்திகேயன், அணைக்கட்டு ஒன்றியக்குழு தலைவர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், பள்ளிகொண்டா டவுன் பஞ்சாயத்து தலைவர் சுபபிரியா, ஒன்றிய தி.மு.க செயலாளர்கள் வெங்கடேசன், சீதாராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    விழா நடக்கும் மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆய்வு செய்தார்.

    அப்போது, 6 வழிச்சாலையின் இருபுறங்க ளிலும், விழாவுக்கு வருகை தரும் கட்சியினரின் வாக னங்களுக்கு ஏற்படுத்தப்படும் பார்க்கிங் வசதி குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    இதேபோன்று, மேல் மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதியதாக கட்டப்பட்ட வீடுகளையும், முதல்வர் திறந்து வைக்க உள்ளார். அப்பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் போலீசார் இருந்தனர்.

    • அமைச்சர் துரைமுருகன் பேச்சு
    • கட்சி ஆரம்பித்து 75 ஆண்டு காலம் ஆகிறது

    வேலூர்:

    வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு அவைத் தலைவர் முகமது சகி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ., கதிர் ஆனந்த் எம்.பி., மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அமுலு விஜயன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இந்தக் கட்சி ஆரம்பித்து 75 ஆண்டு காலம் ஆகிறது. தி.மு.க. திராவிட இயக்கம் ஆரம்பித்து 100 ஆண்டுக்கு மேல் கடந்து விட்டது. இந்தியாவில் காங்கிரஸ் கட்சி மட்டும் தான் நூறாண்டு கண்ட கட்சி.

    கம்யூனிஸ்ட் கூட கிடையாது. அண்ணா பொதுச்செயலாளர், நாவலர் பொதுச் செயலாளர் பேராசிரியர் பொதுச் செயலாளர் அடுத்து உங்கள் ஆதரவால் நான் எங்கேயோ ஒரு குக்கிராமத்தில் பிறந்து பொதுச்செயலாளர் ஆகி இருக்கிறேன்.

    வேறு எவனாவது இருந்தால் எம்ஜிஆரிடம் முதல்ல போய் சேர்ந்திருப்பார். எம்.ஜி.ஆர். என்னை அழைத்த போது என் கட்சி தி.மு.க. என் தலைவர் கலைஞர் என்று கூறினேன்.

    என் தம்பி எவ்வளவு மன வலிமை படைத்தவன் என்பது எனக்கு தெரியும் என சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். அரசியலில் சில நேரங்களில் ஏமாற்றம் வரும் சில நேரங்களில் அவமானம் வரும் சில நேரங்களில் வெறுப்பு வரும் அது பறந்து போய்விடும்.

    எனக்கு ஏற்பட்ட அவமானங்கள் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றங்கள் எல்லாம் நினைத்து பார்த்தால் நான் கூட மிக சவுகரியத்தோடு அவரோடு இருந்திருப்பேன்.

    நான் உங்களை கேட்டுக் கொள்வது ஒரு பெரும் விழாவை (தி.மு.க. பவள விழா) வரலாற்று சிறப்புமிக்க விழாவாக வரலாற்றில் பதிக்கும் அளவு நடத்திக் காட்ட வேண்டும்.

    வேலூர் தி.மு.க. வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பதிவு செய்ய நம்முடைய மாவட்ட கழகச் செயலாளர் நந்தகுமார் அந்த பெருமையை பெற வேண்டும் இன்னும் சொல்லப்போனால் நான் செய்ய வேண்டும் என்று கூட விரும்புவதில்லை .

    நான் எப்படி செய்ய வேண்டும் என்று சொன்னால் போதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தால்தான் விழாவாக தெரியும்.

    இல்லாவிட்டால் பொதுக்கூட்டமாக தெரியும் எனவே நம்முடைய மாவட்டத்துக்கு அவர் வைத்திருக்கிற பெயர் புகழ் எல்லாம் கொஞ்சம் மாற்று குறைய ஆரம்பித்து விடாமல் வைத்துக் கொள்ளுங்கள் .

    மோடி என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை.அவர் ஆட்சியை நடத்த போகிறாரா? அல்லது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடத்தப் போகிறாரா? என்பது மட்டும் தான் இப்பொழுது கேள்விக்குறி.

    விரைவில் தேர்தல் வர உள்ளது. சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் சேர்ந்து தேர்தல் வருவதாக நினைத்தே பணியாற்ற வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அணைக்கட்டு பாபு உட்பட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்

    • ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியின் பவள விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • புதிய கலையரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் பழமையான தருமபுரம் ஆதீன மடம் உள்ளது. இதன் அருகிலேயே ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரி அமைந்துள்ளது.

    இக்கல்லூரியின் 75-ம் ஆண்டு பவள விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே கல்லூரியில் கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை 24-ஆம் தேதி திறந்து வைத்து சிறப்புரயாற்ற உள்ளார்.

    மேலும் ஒலி ,ஒளி தொலைக்காட்சி, வானொலி பதிவகத்தை தொடங்கி வைத்து மற்றும் பவள விழா மலர், திருக்குறள் ஆதீன உரை விளக்க நூல் ஆகியவற்றை வெளியிடுகிறார்.

    இந்தக் கல்லூரியில் வெள்ளி விழா ஆண்டில் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி பங்கேற்றார். தற்போது பவள விழா ஆண்டில் முதலமைச்சர் கலந்து கொள்வது சிறப்புக்குரியதாகும்.

    இந்த நிலையில் கலையரங்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளிடம் விழா ஏற்பாடுகள் குறித்து சிறிது நேரம் கலந்துரையாடினார்.

    இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார், நிவேதா முருகன் மற்றும் பன்னீர்செல்வம், நகர மன்ற தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தருமபுரம் ஆதீனம் முப்பெரும் விழாவாக நடைபெறும்.

    இந்த நிகழ்வுகளில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

    • இந்திய‌ யூனியன் முஸ்லிம் லீக்கின் 75- வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு வருகிற மார்ச் மாதம் சென்னையில் மாநாடு நடந்தது.
    • தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது.

    வல்லம்:

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 75- வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு வருகிற மார்ச் மாதம் சென்னையில் மாநாடு நடைபெற உள்ளது.

    இந்நிலையில் தஞ்சை மாஸ் மஹாலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் முன்னாள் எம்.பியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில முதன்மை தலைவர் அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

    தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஜெய்னுலாபுதீன் ,மாநகர செயலாளர் ஜெ.சரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட துணை தலைவர் ரபீக் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பியும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும், மாநில முதன்மை தலைவர் அப்துர்ரஹ்மான் பேசியதாவது:-

    தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. பள்ளிவாசல்களில் மேம்பாட்டிற்காக 10 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி உள்ளார்.

    அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    சமூக நல்லிணக்கத்தை பேணி காத்து வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 75 -வதுஆண்டு பவள விழாவை முன்னிட்டு வருகிற மார்ச் மாதம்சென்னையில் மாநாடு நடைபெற உள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் இருந்து அனைத்து சமுதாய மக்களை ஒன்றிணைத்து மாநாட்டில் பங்கெடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாநில செயலாளர் ஷாஜகான், தொழிலதிபர் மஹாராஜா சில்க்ஸ் முகம்மது ரபீக், தஞ்சை டவுன் காஜி , பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், இமாம்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் பஷிர் அகமது, நிர்வாகிகள் ஜானகி ராமன், ரமேஷ், வல்லம் நகர செயலாளர் முகம்மது இஸ்மாயில் மற்றும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பகுதி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தஞ்சை மாநகர செயலாளரும், தஞ்சை மாநகராட்சி 47 -வது வார்டு கவுன்சிலருமான ஜெ.சரீப் நன்றி கூறினார்.

    ×