என் மலர்
உள்ளூர் செய்திகள்
- திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்.
- விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் அடுத்த நில நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வரும் நிலையில் 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசான இடி, மின்னலுடன் மிதமான முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வலிமையாக, உறுதியாக உள்ளது.
- அடுத்த தேர்தலிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும். அதில் சந்தேகம் வேண்டாம்.
காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதுவயலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வலிமையாக, உறுதியாக உள்ளது. அதனை யாரும் உடைக்க முடியாது. கலைக்க முடியாது.
அடுத்த தேர்தலிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும். அதில் சந்தேகம் வேண்டாம்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும்.
அரசியல் சாசனத்தை திருத்தாமல் அதைப்போன்று ஒரு சட்டம் நிறைவேற்ற முடியாது. இதனை திருத்த ஒவ்வொரு அவையிலும் அதாவது மக்களவை, மாநிலங்களவையிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும்.
பா.ஜ.க.விற்கு மக்களவையிலும் பெரும்பான்மை இல்லை. மாநிலங்களவையிலும் பெரும்பான்மை இல்லை. அரசியல் சாசனத்தை திருத்தும் சட்ட மசோதவை கொண்டுவந்தால் அதை நிச்சயம் நாங்கள் தோற்கடிப்போம். ஒரேநாடு ஒரே தேர்தல் நடைபெறாது.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
- அர்ச்சனா பட்நாயக் தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி.
- சத்ய பிரதா சாகு சில நாட்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ச்சனா பட்நாயக் தற்போது தமிழ்நாடு அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்க துறையின் செயலாளராக உள்ளார். தற்போது தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ள சத்ய பிரதா சாகு, கால்நடை பராமரிப்புத் துறை முதன்மைச் செயலாளராக சில நாட்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் அடுத்த தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
- கோவை செல்வராஜ் அவர்கள் திடீரென்று மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு போதிர்ச்சிக்குள்ளானேன்.
- மகனின் திருமணம் நடந்தேறி வந்து கொண்டிருந்தபோதே. அவருக்குத் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளருமான கோவை செல்வராஜ் அவர்கள் திடீரென்று மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு போதிர்ச்சிக்குள்ளானேன்.
அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு. கழகத்தின் கொள்கைகளை,
கருத்துகளை விவாதங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் ஆணித்தரமாக எடுத்து வைத்தவர்.
சமீபத்தில் நான் கோவை சென்றிருந்தபோது, அங்கு அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்ற அவர், நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் என்னைச் சந்தித்து, "நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அமைந்திருந்தது" என்று நெஞ்சாரப் பாராட்டிவிட்டு, "மகனின் திருமணத்தை வைத்திருக்கிறேன். திருமணம் முடிந்து மணமக்களுடன் வந்து தங்களிடம் சென்னையில் வாழ்த்து பெறுகிறேன்" என்றார்.
ஆனால் இன்று மகனின் திருமணம் நடந்தேறி வந்து கொண்டிருந்தபோதே. அவருக்குத் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்ற செய்தி, என்னை ஆழ்ந்த வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.
கோவை செல்வராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- நாளை மற்றும் நாளை மறுநாள் தாலுகா வாரியாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
- டாஸ்மாக் கடைகளை கணினி மூலம் ஒருங்கிணைக்க தனி 'சாப்ட்வேர்' உருவாக்கி டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது.
டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குடிப்பிரியர்களிடம் இருந்து தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
அதனால், கூடுதல் கட்டணத்தை தடுக்கும் வகையில் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, டாஸ்மாக்கில் வாங்கும் மதுவுக்கு பில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, காஞ்சிபுரத்தில் மாவட்ட மேலாளர் தலைமையில் நாளை மற்றும் நாளை மறுநாள் தாலுகா வாரியாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் 2 வாரங்களில், வாங்கும் மது பாட்டில்களுக்கு பில் கொடுப்பது நடைமுறைக்கு வருகிறது.
மேலும், டாஸ்மாக் கடைகளை கணினி மூலம் ஒருங்கிணைக்க தனி 'சாப்ட்வேர்' உருவாக்கி டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. இதன்மூலம், கடையில் எவ்வளவு மது இருப்பு மற்றும் விற்பனை குறித்த விவரங்களை கணினி மூலம் அறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இதை நடத்துகிறது.
- 48 வது புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறும்.
தமிழகம் முழுவதும் உள்ள வெளியீட்டாளர்கள் தனித்தனி ஸ்டால்களில் தங்கள் பதிப்பக புத்தகங்களை காட்சிப்படுத்துவர். கண்காட்சியோடு சேர்த்து சொற்பொழிவு, பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
1977 ஆம் ஆண்டு முதல் புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக 48 வது புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் புத்தக கண்காட்சியானது முன்கூட்டியே வரும் டிசம்பர் 27 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தவெக மாநாட்டில், சுமார் 8 லட்சம் மக்கள் பங்கேற்றனர்.
- தவெக அலுவலகத்தில் அடுத்த வாரம் கவுரவிப்பு நிகழ்ச்சி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27ம் தேதி விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வருகை தந்தனர். மாநாட்டிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளாவில் இருந்தும் மக்கள் திரண்டனர்.
அன்று மாலை 3 மணியளவில் தொடங்கிய மாநாட்டில், சுமார் 8 லட்சம் மக்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், விக்கிரவாண்டியில் நடந்த தவெக மாநாடு நடத்த நிலம் வழங்கியவர்களுக்கு விஜய் விருந்து வழங்க உள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அடுத்த வாரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
பார்க்கிங் மற்றும் மாநாட்டு திடலுக்காக 230 ஏக்கர் நிலம் வரை விவசாயிகள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வழங்கியிருந்தனர்.
இதில், சுமார் 25 பேரை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு அழைத்து விஜய் கவுரவிக்கிறார்
நிகழ்ச்சியில், நிலம் வழங்கியவர்களுக்கு விஜய் தனது கைகளால் உணவு பரிமாற உள்ளார்.
- சோதனை அடிப்படையில் மேட்டூர் அணையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தூர்வார முடிவு.
- சுற்றுச்சூழல், வனத்துறை அனுமதியை பெற ஆலோசர்களை நியமனம் செய்ய டெண்டர்.
1934ம் ஆண்டில் கட்டப்பட்ட மேட்டூர் அணை ஏறத்தாழ 90 ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் உள்ளது.
இந்நிலையில், 90 ஆண்டுகளில் முதல் முறையாக மேட்டூர் அணை தூர்வாரப்பட உள்ளதாக தமிழக நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி, சோதனை அடிப்படையில் மேட்டூர் அணையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தூர்வார தமிழ்நாடு நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக, சுற்றுச்சூழல், வனத்துறை அனுமதியை பெற ஆலோசர்களை நியமனம் செய்ய நீர்வளத்துறை டெண்டர் கோரியுள்ளது.
மத்திய அரசின் நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவை மையம், தமிழக நீர்வளத்துறை இணைந்து சாத்தியக் கூறு அறிக்கையை தயார் செய்துள்ளது.
சாத்தியக்கூறு அறிக்கையின்படி, மேட்டூர் அணையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் 1.40 லட்சம் யூனிட் வண்டல் மண் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது.
- அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையாகவும் மற்றும் அங்குள்ள பீரோக்களை திறந்து பார்த்தும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
- சுமார் 4 மணி நேரமாக நடந்த சோதனையின் போது அலுவலகத்தில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.
இங்கு மயிலம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பத்திரப்பதிவு செய்ய வருவார்கள். இந்த அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் அங்குள்ள அதிகாரிகள், பத்திரப்பதிவுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக பணம் வாங்குவதாக புகார் எழுந்தது. இது குறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு அழகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சக்கரபாணி மற்றும் போலீசார், மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கு சார்பதிவாளர் மற்றும் அலுவலக ஊழியர்கள், இவர்களை தவிர இடைத்தரகர்களும் மற்றும் பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் சிலரும் இருந்தனர். உடனே அவர்கள் யாரும் அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லாதவாறு கதவுகளை உள்புறமாக தாழிட்டுக்கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையை தொடங்கினர்.
அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையாகவும் மற்றும் அங்குள்ள பீரோக்களை திறந்து பார்த்தும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி காலையில் இருந்து மாலை வரை யார், யார் பத்திரப்பதிவு செய்ய வந்துள்ளனர். எத்தனை பேர் வந்தனர், அவர்களில் எவ்வளவு பேருக்கு பத்திரப்பதிவு நடந்துள்ளது என்பது குறித்த விவரங்களை சேகரித்து அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
சுமார் 4 மணி நேரமாக நடந்த இந்த சோதனையின் போது அலுவலகத்தில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்துக்கு அதிகாரிகள் உரிய கணக்கு காண்பிக்காததால் கணக்கில் வராத அந்த பணத்தை போலீசார் கைப்பற்றினர். அவற்றுடன் சோதனையை முடித்துக்கொண்டு வெளியே வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றனர்.
கணக்கில் வராத ரூ.1.30 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சார் பதிவாளர் வெங்கடேஸ்வரி, அலுவலக ஊழியர்கள் கணேசன், வீர. அப்துல்லா, பால சுப்பிரமணியன், டிரைவர் சரவணன், புரோக்கர் செல்வம் உள்ளிட்ட 6 பேர்மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
- எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் "அமரன்." தீபாவளி பண்டிகையன்று வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலையும் வாரி குவிக்கிறது.
இந்தப் படத்திற்கு ரசிகர்கள், பொது மக்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில், அமரன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி கோயம்புத்தூரில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமரன் திரைப்படம் சிறுபான்மையினரை தவறாக சித்தரித்து இருப்பதாக கூறி எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. திரையரங்கம் முன்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.
போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், போலீசார் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அமரன் படத்தை தடை செய்யக்கோரி போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- குடும்ப சொத்து பிரச்சனை தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக கோர்ட்டில் நடந்து வருகிறது.
- பிடிபட்ட 4 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழி:
நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் கீழூரை சேர்ந்தவர் பொன்னையா. இவரது மகன் இசக்கிமுத்து (வயது 32). தற்போது திருப்பதிசாரம் அரசு விதைப்பண்ணை அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இசக்கிமுத்து மரக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இசக்கி முத்துவின் தந்தைக்கும், அவரது சகோதரர்களுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வருகிறது.
இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கை தக்கலையை சேர்ந்த வக்கீல் கிறிஸ்டோபர் சோபி என்பவர் பொன்னையாவுக்கு ஆதரவாக நடத்தி வருகிறார். இந்த வக்கீலை இசக்கிமுத்து ஏற்பாடு செய்திருந்தார். வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் வழக்கு முடிவுக்கு வரவில்லை. இதனால் வக்கீல் கிறிஸ்டோபர் சோபிக்கும், இசக்கி முத்துவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. வழக்கை விரைந்து முடிக்குமாறு கிறிஸ்டோபர் சோபிடம் இசக்கிமுத்து கூறி வந்தார். இந்த நிலையில் கிறிஸ்டோபர் சோபி திருப்பதிசாரம் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு வைத்து இசக்கிமுத்து அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.
பின்னர் உடலை பீமநகரி சந்தியான் குளக்கரையில் தீ வைத்து எரித்தார். பின்னர் இசக்கிமுத்து ஆரல்வாய்மொழி போலீசில் சரணடைந்தார். போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் குளத்தங்கரைக்கு சென்று பார்த்தபோது கிறிஸ்டோபர் சோபி எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
பிணத்தை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்ந்து இசக்கி முத்துவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கொலை செய்யப்பட்ட இசக்கிமுத்து போலீசாரிடம் கூறியதாவது:-
எனது தந்தையின் குடும்ப சொத்து பிரச்சினை தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு செலவுக்கு கிறிஸ்டோபர் சோபி லட்சக்கணக்கில் பணம் வாங்கினார். இந்த சொத்து பத்திரத்தையும் வக்கீல் தான் வைத்திருந்தார். கிறிஸ்டோபர் சோபி தங்களுக்கு எதிராக செயல்பட்டதால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் சொத்து பத்திரத்தை திருப்பி தரும்படி கேட்டேன். ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். இதனால் எங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. எனது மனைவியையும் தகாத வார்த்தைகளால் பேசி வந்தார். இந்த நிலையில் வக்கீல் கிறிஸ்டோபர் சோபி என்னைதொடர்பு கொண்டு தனக்கு வாழைக்கன்று வேண்டும் என்று கேட்டார்.
இதையடுத்து அவரை எங்களது ஊருக்கு வரவழைத்து அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினேன். அவரும் மோட்டார் சைக்கிளில் எங்கள் ஊருக்கு வந்தார். அங்கு வைத்து அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தேன். பின்னர் எனது நண்பர்கள் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் அவரை சந்தியான் குளக்கரையில் வீசியதுடன் தீ வைத்து எரித்ததாக கூறினார்.
தனிப்படை போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த கொலை வழக்கில் அவரது நண்பர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று இரவு தனிப்படை போலீசார் இசக்கிமுத்து நண்பர்கள் 4 பேரை பிடித்துள்ளனர். பிடிபட்ட 4 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
விசாரணையில் வக்கீலை கொலை செய்து விட்டு 2 மோட்டார் சைக்கிள்களில் அவரது உடலை குளத்தின் கரையில் வீசி சென்றவுடன் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் கூறினார்கள். தொடர்ந்து 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீசார் அவர்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயலில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
- பிரேத பரிசோதனை அறிக்கையில் மதுவில் விஷம் கலந்து குடித்தது தெரியவந்தது.
- போலீசார் ராணுவத்தில் பணியாற்றிய மருதுபாண்டியை ஓராண்டுக்கு பின் கைது செய்தனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 27). அதே பகுதியை சேர்ந்தவர் மருதுபாண்டி (27). இருவரும் நண்பர்கள்.
ராணுவத்தில் வேலை பார்த்து வந்த மருதுபாண்டி ஊருக்கு வரும்போது ராஜபாண்டியுடன் வெளியே செல்வது வழக்கம். மேலும் 2 பேரும் சேர்ந்து அடிக்கடி மதுகுடித்து வந்தனர். கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ந்தேதி புலியூர் பகுதியில் ராஜபாண்டி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் மதுவில் விஷம் கலந்து குடித்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவரது நண்பர் மருது பாண்டியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக ராஜபாண்டிக்கு மதுவில் விஷம் கலந்து மருதுபாண்டி கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ராணுவத்தில் பணியாற்றிய மருதுபாண்டியை ஓராண்டுக்கு பின் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.






