என் மலர்
நீங்கள் தேடியது "எஸ்டிபிஐ"
- பா.ஜ.க.வை எதிர்க்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கத்தான் செய்கிறது.
- பா.ஜ.க.வை தனிமைப்படுத்த வேண்டும், விலக்கிவிட வேண்டும்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் அ.தி.மு.க.வுடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:
* பா.ஜ.க. கட்சியுடன் கூட்டணி வைத்த எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது.
* பா.ஜ.க.வை எதிர்க்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கத்தான் செய்கிறது. பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளை எஸ்.டி.பி.ஐ. கட்சி அங்கீகரிக்காது.
* தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்பதே பா.ஜ.க.வின் முழக்கமாக இருந்தது ஆனால் திராவிட கட்சி மேலே சவாரி செய்ய வந்திருக்கிறார்கள் இப்போது முழக்கம் எங்கே போனது?
* அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைக்க எவ்வளவு பெரிய நிர்ப்பந்தம் கொடுத்து நேரம் கொடுத்து எத்தனை வாய்ப்புகள் கொடுத்தார்கள் என்று அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரியும்.
* பா.ஜ.க.வுக்கு இது கைவந்த கலை, தனக்கு கட்டுப்பட்டுத்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார்கள்.
* நீதி, நேர்மை, நியாயம் அனைத்தையும் துறந்து சாணக்கிய தத்துவ அடிப்படையில் எந்த எல்லைக்குப் போவார்கள், அந்த அடிப்படையில் அ.தி.மு.க.வை கபளீகரம் செய்திருக்கிறார்கள்.
* பா.ஜ.க.வை பொறுத்தவரையில் தனக்குச் சாதகமாக வேண்டுமென்றால் யார் காலிலும் விழுவார்கள் தனக்குத் தேவையில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள் அதுதான் அவர்களின் நிலைப்பாடு.
* எங்கெல்லாம் பா.ஜ.க. அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து இருக்கிறதோ அங்கு இருக்கக்கூடிய மாநிலக் கட்சிகளுடன் அழிந்துபோனதாகத் தான் வரலாறு இருக்கிறது.
* அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது. அந்த வழியில் தமிழ்நாடு ஒரு அரசியல் கட்சியை இழக்கப்போகிறது என்பது உண்மை
* இந்த முடிவை அ.தி.மு.க. மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
* பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து கதவுகளையும் சாத்திவிட்டதால் வாசலில் படுத்துக் கிடந்தார்கள், எந்த வாசலாவது திறக்காதா, எந்த ஜன்னல் ஆவது திறக்காதா என பா.ஜ.க. தவம் கிடந்தார்கள்.
* இப்போது நிர்ப்பந்தம் நெருக்கடியில் கூட்டணியை நோக்கி மிதந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது
* அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விடுவித்து, கட்சியையும் தொண்டர்களைப் பாதுகாக்க வேண்டும்.
* பா.ஜ.க.வை தனிமைப்படுத்த வேண்டும், விலக்கிவிட வேண்டும்.
* தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பா.ஜ.க.வை வெறுக்கிறார்கள். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியில் வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.
* நாங்கள் நிச்சயமாக ஒரு கூட்டணிக் கட்சியில் இருப்போம், எந்த கட்சி என்பது குறித்து 9 மாதத்திற்குள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகத்தில் இன்று ஒரே நேரத்தில் 24 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை:
கடந்த 2019-ம் ஆண்டு கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை பிரிவு(என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருகிறது. இதில் 5 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகத்தில் இன்று ஒரே நேரத்தில் 24 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் ஹக் காலனியில் அமைந்துள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டி இன்று அதிகாலை சென்னை தேசிய புலனாய்வு முகமை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் தலைமையில் ஒரு பெண் உள்பட 4 அதிகாரிகள் கொண்ட குழுவினர் நெல்லை முபாரக் வீட்டிற்கு வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் அங்கிருந்த முபாரக்கிடம் சோதனைக்கு ஒத்துழைக்குமாறு தெரிவித்தனர். அவரும் சம்மதம் தெரிவித்த நிலையில், அங்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நடக்கும் பகுதியில் நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் வீட்டில் சோதனை நடைபெறும் நிலையில் அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அவரது வீட்டின் முன்பு குவிந்து வருகின்றனர்.
- தமிழ்நாடு எஸ்.டி.பி.ஐ. தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நுழைந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
- வெளிப்படையாக அரசியல் செய்பவர்களை அச்சுறுத்துவது என்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது.
தாம்பரம்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என்.ஐ.ஏ. சோதனை நடத்தும் அளவுக்கு தமிழகம் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய மாநிலம் அல்ல. சோதனை என்ற பெயரில் தமிழ்நாடு எஸ்.டி.பி.ஐ. தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நுழைந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
எஸ்.டி.பி.ஐ.க்கு எதிரான நடவடிக்கை என்பதை விட தமிழ்நாட்டில் அரசியல் களம் பதட்டம் அடைய வேண்டும் என்பது பாரதிய ஜனதாவின் நோக்கமாக உள்ளது. தமிழகத்தை குறி வைத்து காய்களை நகர்த்துகிறார்கள்.
அமலாக்கத்துறையை ஏவுகிறார்கள். தற்போது என்.ஐ.ஏ. என்கிறதை புலனாய்வு துறையை அரசியல் தலைவர்கள் இல்லங்களில் நுழைய வைத்து பதட்டத்தை ஏற்படுத்துகின்றனர். இது கண்டனத்துக்குரியது.
குற்றவாளிகளை தேடுவது சட்டப்படியான நடவடிக்கைதான். ஆனால் வெளிப்படையாக அரசியல் செய்பவர்களை அச்சுறுத்துவது என்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. 'இந்தியாவின்' பிரதிநிதி விரைவில் மணிப்பூர் செல்ல இருக்கிறோம்.
ஐகோர்ட்டு பதிவாளர் சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கை பெரும் அதிர்ச்சியை தருகிறது. திருவள்ளுவர், காந்தி படங்கள், சிலைகள் மட்டும்தான் நீதிமன்ற வளாகங்களில் இருக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்கள்.
இது திட்டமிட்டு புரட்சியாளர் அம்பேத்காரின் படங்களையும், சிலைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையாக இருக்கிறது.
இந்த சுற்றிக்கையை அல்லது ஆணையை உடனடியாக உயர்நீதிமன்றம் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினர்.
- பா.ஜனதா ஆட்சியில் நாட்டின் ஜனநாயகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
- ஒடுக்கப்பட்ட சிறுபான்மை, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மிகவும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
நெல்லை:
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று மேலப்பாளையத்தில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மணிப்பூரில் கிறிஸ்தவ பழங்குடியின மக்களுக்கு எதிராக 3 மாதங்களாக கலவரம் நீடித்து வரும் நிலையில், சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள அரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் கலவரத்தால் மிகப்பெரும் பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
பா.ஜனதா ஆட்சியில் நாட்டின் ஜனநாயகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட சிறுபான்மை, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மிகவும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
மணிப்பூர், அரியானா கலவரங்கள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு நடவடிக்கைகளை தடுக்கத் தவறிய பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும்.
பாராளுமன்றத்தில் காட்டு வளங்களை தனியாருக்குத் தாரை வார்க்கும் வகையில் வனப்பாதுகாப்பு திருத்த சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் வகையில் பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதல் பெறாமலே காடுகளில் திட்டங்களை நிறைவேற்றும் வகையில் இச்சட்ட மசோதாவின் சரத்துகள் அமைந்துள்ளதால் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
நெய்வேலியில் என்.எல்.சியின் 2-வது சுரங்க விரிவாக்கத் திட்டத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தி கனரக வாகனங்களை கொண்டு பயிர்களை சேதப்படுத்தி அத்துமீறும் என்.எல்.சி. நிர்வாகத்தின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யும் நடவடிக்கையில், பாரபட்சம் பாராமல் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு விடுதலை செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
- எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் "அமரன்." தீபாவளி பண்டிகையன்று வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலையும் வாரி குவிக்கிறது.
இந்தப் படத்திற்கு ரசிகர்கள், பொது மக்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில், அமரன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி கோயம்புத்தூரில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமரன் திரைப்படம் சிறுபான்மையினரை தவறாக சித்தரித்து இருப்பதாக கூறி எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. திரையரங்கம் முன்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.
போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், போலீசார் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அமரன் படத்தை தடை செய்யக்கோரி போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- குமரி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- தக்கலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம் நடத்த இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தக்கலை:
நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து தற்போது அந்த இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசின் தடை உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற உள்ளதாக உளவு பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.
குமரி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் தக்கலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம் நடத்த இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் தலைமையில், திருவிதாங்கோடு சாலையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
இதற்கிடையில் போராட்டத்திற்காக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஒவ்வொருவராக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அமைப்பின் மாநில நிர்வாகி செரீப் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- பு.புளியம்பட்டியில் பா.ஜனதா பிரமுகர் சிவசேகர் காருக்கு தீ வைத்தது தொடர்பாக தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து இரவு ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மூலப்பாளையத்தில் பா.ஜ.க. பிரமுகர் தட்சிணாமூர்த்தி (51) என்பவர் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார்.
அப்போது நள்ளிரவில் இவரது கடைக்கு வந்த மர்மநபர்கள் சிலர் டீசல், பெட்ரோல் நிரப்பிய பாக்கெட்டுகளை ஜன்னல் வழியாக கடைக்குள் வீசினர். மேலும் ஒரு குச்சியில் தீ வைத்தும் வீசினர்.
இதில் ஜன்னல் மற்றும் கடைக்குள் இருந்த டேபிள் லேசாக எரிந்து அணைந்தது. காலையில் கடைக்கு வந்து பார்த்தபோது டீசல், பெட்ரோல் பாக்கெட்டுகள் கிடப்பதும், மேஜை, ஜன்னல் சிறிய அளவில் எரிந்து கிடப்பதையும் கண்டு தட்சிணாமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் தாலுகா போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி, டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுபற்றி தெரியவந்ததும் ஏராளமான பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கடை முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்தனர். அப்போது சம்பவத்தன்று இரவு பர்னிச்சர் கடைக்கு 4 பேர் கொண்ட கும்பல் வந்து பெட்ரோல், டீசல் ஊற்றி தீ வைத்தது தெரிய வந்தது.
இதையடுத்து கேமிராவில் பதிவானவர்களை போலீசார் தேடி வந்தனர். அப்போது அவர்கள் கருங்கல்பாளையம் ஜெகன் வீதியை சேர்ந்த முகமதுரபீக் என்பவரது மகன் சதாம்உசேன் (25), பி.பி.அக்ரஹாரம் கைக்கோளர் வீதியை சேர்ந்த முகமது இலியாஸ் என்பவரது மகன் கலில்ரகுமான் (27), இந்திரா நகரை சேர்ந்த அமனுல்லா என்பவரது மகன் ஜாபர்சாதிக் (27), அவரது தம்பி ஆசிக்அலி (23) என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் அனைவரும் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் மீது சொத்தை சேதப்படுத்துதல், கூட்டு சதி செய்தல், தீயை வைத்து சொத்தை சேதப்படுத்துதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவையில் சிறையில் அடைத்தனர்.
மேலும் பு.புளியம்பட்டியில் பா.ஜனதா பிரமுகர் சிவசேகர் காருக்கு தீ வைத்தது தொடர்பாக தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து இரவு ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.






