search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "STBI"

    • பா.ஜனதா ஆட்சியில் நாட்டின் ஜனநாயகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • ஒடுக்கப்பட்ட சிறுபான்மை, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மிகவும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

    நெல்லை:

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று மேலப்பாளையத்தில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    மணிப்பூரில் கிறிஸ்தவ பழங்குடியின மக்களுக்கு எதிராக 3 மாதங்களாக கலவரம் நீடித்து வரும் நிலையில், சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள அரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் கலவரத்தால் மிகப்பெரும் பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

    பா.ஜனதா ஆட்சியில் நாட்டின் ஜனநாயகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட சிறுபான்மை, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மிகவும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

    மணிப்பூர், அரியானா கலவரங்கள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு நடவடிக்கைகளை தடுக்கத் தவறிய பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும்.

    பாராளுமன்றத்தில் காட்டு வளங்களை தனியாருக்குத் தாரை வார்க்கும் வகையில் வனப்பாதுகாப்பு திருத்த சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் வகையில் பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதல் பெறாமலே காடுகளில் திட்டங்களை நிறைவேற்றும் வகையில் இச்சட்ட மசோதாவின் சரத்துகள் அமைந்துள்ளதால் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

    நெய்வேலியில் என்.எல்.சியின் 2-வது சுரங்க விரிவாக்கத் திட்டத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தி கனரக வாகனங்களை கொண்டு பயிர்களை சேதப்படுத்தி அத்துமீறும் என்.எல்.சி. நிர்வாகத்தின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யும் நடவடிக்கையில், பாரபட்சம் பாராமல் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு விடுதலை செய்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • தமிழ்நாடு எஸ்.டி.பி.ஐ. தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நுழைந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
    • வெளிப்படையாக அரசியல் செய்பவர்களை அச்சுறுத்துவது என்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது.

    தாம்பரம்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    என்.ஐ.ஏ. சோதனை நடத்தும் அளவுக்கு தமிழகம் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய மாநிலம் அல்ல. சோதனை என்ற பெயரில் தமிழ்நாடு எஸ்.டி.பி.ஐ. தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நுழைந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    எஸ்.டி.பி.ஐ.க்கு எதிரான நடவடிக்கை என்பதை விட தமிழ்நாட்டில் அரசியல் களம் பதட்டம் அடைய வேண்டும் என்பது பாரதிய ஜனதாவின் நோக்கமாக உள்ளது. தமிழகத்தை குறி வைத்து காய்களை நகர்த்துகிறார்கள்.

    அமலாக்கத்துறையை ஏவுகிறார்கள். தற்போது என்.ஐ.ஏ. என்கிறதை புலனாய்வு துறையை அரசியல் தலைவர்கள் இல்லங்களில் நுழைய வைத்து பதட்டத்தை ஏற்படுத்துகின்றனர். இது கண்டனத்துக்குரியது.

    குற்றவாளிகளை தேடுவது சட்டப்படியான நடவடிக்கைதான். ஆனால் வெளிப்படையாக அரசியல் செய்பவர்களை அச்சுறுத்துவது என்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. 'இந்தியாவின்' பிரதிநிதி விரைவில் மணிப்பூர் செல்ல இருக்கிறோம்.

    ஐகோர்ட்டு பதிவாளர் சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கை பெரும் அதிர்ச்சியை தருகிறது. திருவள்ளுவர், காந்தி படங்கள், சிலைகள் மட்டும்தான் நீதிமன்ற வளாகங்களில் இருக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்கள்.

    இது திட்டமிட்டு புரட்சியாளர் அம்பேத்காரின் படங்களையும், சிலைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையாக இருக்கிறது.

    இந்த சுற்றிக்கையை அல்லது ஆணையை உடனடியாக உயர்நீதிமன்றம் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினர்.

    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகத்தில் இன்று ஒரே நேரத்தில் 24 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை:

    கடந்த 2019-ம் ஆண்டு கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை பிரிவு(என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருகிறது. இதில் 5 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகத்தில் இன்று ஒரே நேரத்தில் 24 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் ஹக் காலனியில் அமைந்துள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டி இன்று அதிகாலை சென்னை தேசிய புலனாய்வு முகமை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் தலைமையில் ஒரு பெண் உள்பட 4 அதிகாரிகள் கொண்ட குழுவினர் நெல்லை முபாரக் வீட்டிற்கு வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் அங்கிருந்த முபாரக்கிடம் சோதனைக்கு ஒத்துழைக்குமாறு தெரிவித்தனர். அவரும் சம்மதம் தெரிவித்த நிலையில், அங்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நடக்கும் பகுதியில் நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் வீட்டில் சோதனை நடைபெறும் நிலையில் அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அவரது வீட்டின் முன்பு குவிந்து வருகின்றனர்.

    பேரணியில் பங்கேற்றவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அங்கு போடப்பட்டிருந்த மேடையில் ஏறி கட்சி தலைவர்கள் பேசினார்கள்.
    சென்னை:

    மாநில சுயாட்சி எதிர்ப்பு, சிறுபான்மை விரோத போக்கு, 7 தமிழர் விடுதலை உள்ளிட்ட 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க மறுத்தது ஆகியவற்றுக்காக தமிழக கவர்னரை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதன்படி கிண்டி ஐந்து பர்லாங் ரோடு சந்திப்பில் இன்று எஸ்.டி.பி.ஐ. கட்சியினர ஆயிரக்கணக்கில் திரண்டனர். பின்னர் அவர்கள் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர். இந்த பேரணிக்கு எஸ்..பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கடச்யின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில நிர்வாகிகள் அப்துல் அமீது, உமர்பாரூக், அகமது நவ்வி, ரத்தினம், ஏ.கே.கரீம், அமீர்அம்சா, ராஜா முகமது, பசீர் சுல்தான், கமால்பாஷா, முகமது ரசீத், மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பேரணியில் பங்கேற்றவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அங்கு போடப்பட்டிருந்த மேடையில் ஏறி கட்சி தலைவர்கள் பேசினார்கள்.
    ×