என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அரசு மருத்துவக் கல்விக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழ்நாடு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
    • ஓராண்டில் புதிய இடங்களை உருவாக்குவதில் தமிழ்நாடு ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

    அதிக எண்ணிக்கையில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருந்தது என்றும், ஆனால் தற்போது தமிழ்நாடு இந்த வரிசையில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை இடங்கள்: மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்நாடு - ஒரு கல்லூரி கூட தொடங்காத திராவிட மாடல் அரசு!

    இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களைக் கொண்டுள்ள மாநிலங்கள் பட்டியலில் கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு இப்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எந்தவொரு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படாததும், புதிய மாணவர் சேர்க்கை இடங்கள் ஏற்படுத்தப்படாததும் தான் இந்த நிலைக்கு காரணம் ஆகும். அரசு மருத்துவக் கல்விக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழ்நாடு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

    2023-24ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் 11,650 ஆக இருந்தன. அதன்பின் ஓராண்டில் 400 புதிய இடங்கள் மட்டும் தான் உருவாக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் தனியார் கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டவை. இந்த எண்ணிக்கை மிக மிக குறைவு ஆகும். இதேகாலத்தில் மிகவும் பின் தங்கிய மாநிலம் என்று கூறப்படும் உத்தரப்பிரதேசம் 2522 புதிய இடங்களை உருவாக்கி , தமிழ்நாட்டை பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. மராட்டியம் 1000 புதிய இடங்களையும், இராஜஸ்தான் 900 புதிய இடங்களையும், தெலுங்கானா 550 இடங்களையும் உருவாக்கியுள்ளன. கடந்த ஓராண்டில் புதிய இடங்களை உருவாக்குவதில் தமிழ்நாடு ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

    கடந்த ஆண்டில் கர்நாடகம் 800 புதிய இடங்களை உருவாக்கிய நிலையில் தமிழ்நாட்டில் 1000 புதிய இடங்கள் உருவாக்கப்பட்டிருந்தால், மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை இடங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருக்க முடியும். தமிழ்நாட்டில் 2021-ஆம் ஆண்டில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளிலும் தலா 50 இடங்களை கூடுதலாக ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இரு ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதை செய்திருந்தாலே தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்திருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்புகளையெல்லாம் இழந்து விட்டு நிற்கிறது தமிழ்நாடு அரசு.

    அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைக் கூட திறக்கவில்லை; ஒரே ஒரு மருத்துவ இடத்தைக் கூட கூடுதலாக உருவாக்கவில்லை .தமிழக அரசு நினைத்திருந்தால் அதன் சொந்த நிதியில் கடந்த 3 ஆண்டுகளில் தலா இரு கல்லூரிகள் வீதம் உருவாக்கி அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை அமைத்திருக்க முடியும். ஆனால், மத்திய அரசு நிதியில் மருத்துவக் கல்லூரிகளை அமைக்கப் போகிறோம், அதற்காக மனு கொடுத்திருக்கிறோம் என்று வெற்று வசனம் பேசியே 3 ஆண்டுகளை தமிழக அரசு வீணடித்து விட்டது.

    அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க முடியாது, கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை உருவாக்க முடியாது என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், நடப்பாண்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளையும், மாணவர் சேர்க்கை இடங்களையும் அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யத் தவறியதன் மூலம் திராவிட மாடல் அரசு மக்களுக்கு பெருந்துரோகம் செய்து விட்டது. இதற்காக திமுக அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சர்ச்சை கருத்தால் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி ஜாமினில் விடுதலை ஆனார்.
    • பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மையக்குழு கூட்டம் நடைபெற்றது.

    சென்னை:

    தெலுங்கு பேசுபவர்கள் தொடர்பான சர்ச்சை கருத்தால் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி ஜாமினில் விடுதலை ஆனார். இதனை தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை நடிகை கஸ்தூரி இன்று சந்தித்து பேசியுள்ளார்.

    சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை - கஸ்தூரி சந்திப்பு நடைபெற்றது.

    முன்னதாக, பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மையக்குழு கூட்டம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

    • உயர்மட்ட மேம்பால பணிகள் 2025 அக்டோபருக்குள் முடிவடையும்.
    • யாரும் அழுத்தம் கொடுப்பதை அவர் ஏற்றுக்கொண்டு செயல்பட மாட்டார்.

    மதுரை:

    மதுரையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் துறை சார்பில் கட்டப்பட்டு வரும் உயர் மட்ட மேம்பால பணிகள், கலைஞர் நூற்றாண்டு செயல்பாடுகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை 13 லட்சத்து 59 ஆயிரத்து 996 பேர் பயன்படுத்தி உள்ளனர். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 3 தளங்கள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,

    மதுரை கோரிப்பா ளையத்தில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் 2025 டிசம்பர் மாதத்திற்குள்ளாக முடிவடையும். தற்போது 25 சதவிகித பாலப்பணிகள் முடிவடைந்துள்ளது.

    மதுரை அப்போலோ உயர்மட்ட மேம்பால பணிகள் 2025 அக்டோபருக்குள் முடிவடையும். இப்பாலப் பணிகள் 32 சதவீதம் முடிவடைந்துள்ளது.

    ஆற்றுக்குள் கட்டப்படும் மேம்பாலத்திற்கும், சாலையில் கட்டப்படும் மேம்பாலத்திற்கும் வித்தியாசங்கள் உண்டு, தண்ணீர் திறந்து விடுவதை கணக்கில் கொண்டு ஆற்றுக்குள் மேம்பாலங்கள் கட்டப்படுகிறது.

    2001-ம் ஆண்டு முதல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் பழகி வருகிறேன். எதிர்முகாமில் இருந்த காலத்தில் திருமாவளவன் என்னுடன் சகோதரத்துடன் பழகக் கூடியவர். விஜய் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுக்கவில்லை.

    எனக்கும், தி.மு.க.வுக்கும், திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. திருமாவளவன் அறிவார்ந்தவர். யாரும் அழுத்தம் கொடுப்பதை அவர் ஏற்றுக்கொண்டு செயல்பட மாட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணய சட்டம்.
    • ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயற்சி.

    திருப்பூர்:

    தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கங்களின் சார்பில் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் மாநிலத்தலைவர் சண்முகம் தலைமையில் பெண்கள் உட்பட 100 விவசாயிகள் இன்று காலை குமரன் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது விவசாயிகள், பா.ஜ.க., அரசு விவசாயிகளுக்கு எதிராக அடக்கு முறையை கையாள்கிறது. விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணய சட்டம் கொண்டு வர வேண்டும். வேளாண்மைக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

    விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். எம்.எஸ்.பி. கேட்டு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜெக்ஜித் சிங் டல்லே வாலை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் கோஷங்களை எழுப்பினர்.

    தொடர்ந்து அங்கிருந்து ரெயில் நிலையம் நோக்கி சென்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    • நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை.
    • காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த மாதம் கடைசி வாரத்தில் உருவான காற்றழுத்த தாழ்வான வலுப்பெறுவதிலும், புயலாக மாறுவதிலும் போக்கு காட்டியது. கடைசியில் ஃபெஞ்சல் புயலாக உருவெடுத்து புதுச்சேரி, விழுப்புரம், மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் பெய்த மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்றே காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை.

    இந்த நிலையில், தெற்கு வங்காள விரிகுடாவின் மையப்பகுதியில் இன்று காலை 8.30 மணி அளவில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

    அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரையை அடையும். காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் சூறாவளி சுழற்சி கடல்மட்டத்தில் இருந்து 3.1 கி.மீ. வரை நீண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • கைத்தறி நெசவாளர்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை 200 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படுகிறது.
    • மின்கட்டணத்தை உயர்த்தி வழங்கும்போது தமிழ்நாட்டில்தான் மிகமிகமிகக் குறைவாக ரூ.113 வசூலிக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணம் இந்திய அளவில் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில்தான் மிகமிகக் குறைவாக உள்ளது. மின்சாரக் கட்டணங்கள் மற்றும் வரி குறித்த சராசரி குறித்து 2023 மார்ச் நிலையில் புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டு அரவிந்த் வாரியம் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த விவரங்கள் அடிப்படையில் இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்கட்டணங்களை ஒப்பிட்டுப்பார்த்தால் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் வீட்டு உபயோக மின்கட்டணம் வேறு எந்த ஒரு மாநிலத்தையும்விட மிகமிகக் குறைவாக உள்ளது என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில்தான் விவசாயிகளுக்கு முதன்முதலில் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் 2 இட்சம் விவச பம்புசெட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிட ஆணையிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

    அதேபோல, விசைத்தறி நெசவாளர்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை ஆயிரம் யூனிட் வரை இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறது.

    கைத்தறி நெசவாளர்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை 200 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படுகிறது. என்றாலும், வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணம் மற்ற மாநிலங்கள் போல் உயர்த்தப்படவில்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாகும். வீடுகளில் 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்திற்கு சராசரியாக கணக்கிடும்போது கட்டணம் ரூ.113ஆகும்.

    இந்த சராசரி கட்டணத்தோடு ஒப்பிடும்போது மும்பை 100 யூனிட்டுக்கு ரூ.643 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மும்பையில் ஒரு விசித்திரம் என்னவென்றால். அதானி ஒப்பந்தத்தின் மூலம் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.643, டாடா நிர்வாகத்தின் மூலம் அளிக்கப்படும் மின்சார கட்டணம் ரூ.524. மும்பை பிரிகான் எலக்ட்ரிசிடி மூலம் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.488.

    ராஜஸ்தான் மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.833

    மகாராஷ்டிரா மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.668

    உத்தர பிரதேசத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.693

    பீகாரில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.694

    மேற்கு வங்க மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.654

    கர்நாடக மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.631

    மத்திய பிரதேசத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.643

    ஒரிசா மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.426

    சத்தீஸ்கர் மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.431

    இப்படி, இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்கட்டணத்தை உயர்த்தி வழங்கும்போது தமிழ்நாட்டில்தான் மிகமிகமிகக் குறைவாக ரூ.113 வசூலிக்கப்படுகிறது.

    இதனை திராவிட முன்னேற்ற கழகமோ, தமிழ்நாடு அரசோ குறிப்பிட்டு சொல்லவில்லை. இந்திய மாநிலங்களில் நிலவும் மின்சார கட்டணங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்து அரவிந்த்வாரியர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதன் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகர், ஏழை, எளியோரின் நல வாழ்வில் செலுத்திவரும் அக்கறையும் கரிசனமும் வெள்ளிடை மலையாக விளங்குகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • கட்சியின் நடைமுறைக்கு இணங்கி செயல்படுவது முக்கியம்.
    • அமைப்புக்கு இணங்கி செயல்பட வேண்டியது அவசியமானது.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆதவ் அர்ஜுனா நல்ல நோக்கத்தில் தான் கட்சியில் வந்து இணைந்தார். பல அரசியல் கட்சிகளில் தொடர்பு இருந்தாலும் தி.மு.க.வில் இணைந்து செயல்பட்டு இருக்க முடியும்.

    ஆனாலும் கூட தலித் மக்களின் உணர்வுகளுக்காக உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறி கட்சியின் மாநாட்டில் இணைத்துக் கொண்டார்.

    அவர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் நியாயமான கோபங்கள், மக்கள் நலன் கருதி நான் வெளியிடும் கருத்துகள், பாதிப்புக்குரிய இடைவெளி ஏற்படுவதாக இருக்கிறது. அதற்கு நான் இடம் கொடுக்க விரும்பவில்லை. எனவே விலகுகிறேன் என கூறியிருக்கிறார்.

    இடை நீக்கம் செய்யப்பட்ட பிறகு பொது வெளியில் கருத்து சொல்வது வழக்கம் இல்லை. தலைமை அல்லது அதற்குரிய ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் அவர் விளக்கம் அளிக்கலாம்.

    அந்த விளக்கம் ஏற்கப்பட்டு நடவடிக்கை தேவையில்லை என தலைமையோ ஒழுங்கு நடவடிக்கையோ கருதினால் மீண்டும் கட்சியில் இணைந்து செயல்பட வாய்ப்பு வழங்கப்படும்.

    இடை நீக்கம் செய்யப்பட்ட அன்றே வெளியிட்ட அறிக்கை இடை நீக்கம் குறித்து சொன்ன கருத்து கட்சிக்கு எதிராக தலைமைக்கு எதிராக தான் இருந்தது.

    விளக்கம் அவருடைய பார்வையில் சரியாக இருந்தாலும் கூட ஒரு கட்சியின் நடைமுறைக்கு ஏற்புடைதாக இல்லை. ஒரு கட்சிக்கு வருபவர் அந்த கட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

    நமக்கு எல்லாம் தெரியும் என்றாலும் கூட பேசுவது சரி தான் என்றாலும் கூட மக்களுக்காக தான் செயல்படுகிறோம் என்றாலும் கூட கட்சி ஒரு கட்டுபாட்டை விதிக்கிறது. அந்த கட்டுபாட்டிற்குள் இருந்து இயங்க வேண்டும். அதற்கு இணங்குவது தான் முக்கியமானது.

    ஒரு கட்சிக்கு வந்து விட்டால் எவ்வளவு பெரிய ஆற்றல் படைத்தவர்களாக இருந்தாலும் கட்சிக்கு கட்டுபடுவது முக்கியமானது. கட்சியின் நடைமுறைக்கு இணங்கி செயல்படுவது முக்கியம். கோரிக்கைகள் நியாயமானதாக இருக்கலாம். குரல் நியாயமானதாக இருக்கலாம்.

    அந்த குரல் கட்சியின் வழியாக ஒலிக்க வேண்டும். கட்சியின் நலன்களுக்கு இணங்கி செயல்பட வேண்டும். அதை அவரிடம் பலமுறை சுட்டிக் காட்டி இருக்கிறோம். கட்சியில் இருந்து விலகும் முடிவை அவருக்கு சரி என்ற வகையில் எடுத்துள்ளார்.

    கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பதோ கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதோ நம்முடைய நோக்கம் இல்லை. நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டு இயங்க வேண்டும் என்பதற்காக தான் இடைநீக்கம் நடவடிக்கை ஆகும்.

    ஆதவ் அர்ஜுனா பொது வாழ்வில் ஈடுபட வேண்டும் என நினைக்கிறார். தலித், பழங்குடி மக்களுக்காக போராட வேண்டும் என்பதை வரவேற்கிறோம். ஆனால் அவசரம் கூடாது. அமைப்புக்கு இணங்கி செயல்பட வேண்டியது அவசியமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
    • தினந்தோறும் எங்கள் போராட்டம் தொடரும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஃபெஞ்சல் புயல் மழை மற்றும் வெள்ள பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் 2 ரூபாய் நிவாரணத் தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில் அண்ணா கிராமம் ஒன்றியத்திற்குட்பட்ட 12 ஊராட்சிக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு 12 ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசியல் கட்சியினர் பொதுமக்கள் நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது தாசில்தார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அண்ணா கிராமம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெங்கட்ராமன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கடலூர் கலெக்டரை நேரில் சந்தித்து நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.

    இந்த நிலையில் நிவாரணத் தொகை வழங்கவில்லை என்றால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அறிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் வேல்முருகன் எம்.எல்.ஏ. எனது தொகுதிக்குட்ட்பட்ட பண்ருட்டி அண்ணாகிராமம் ஒன்றிய பகுதியில் நிவாரணத் தொகை வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுப்பி இருந்தார்.

    இதனை தொடர்ந்து இன்று காலை 12 ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அந்தந்த பகுதிகளில் இருந்து ஊர்வலமாக ஏராளமானோர் பாலூர் பகுதியில் திரண்டனர்.

    பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர்-பாலூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.

    அப்போது கலெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கினால் மட்டுமே நாங்கள் போராட்டத்தை கலைப்போம் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில், தாசில்தார் ஆனந்த் மற்றும் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது எங்களுக்கு நிவாரணத்தை வழங்கினால்மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம். மேலும் தினந்தோறும் எங்கள் போராட்டம் தொடரும் என ஆக்ரோஷமாக தெரிவித்தனர். மேலும் பாலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மறியல் போராட்டத்தில் தொடர்ந்து பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் கடலூர் பாலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஹோங்பூ தொழில் குழுமத்தின் தலைவர் டி.ஒய்.சங்க்கிடம் கொள்கை அளவில் நிலம் ஒதுக்கீட்டு ஆணை அப்போது வழங்கப்பட்டது.
    • தொழிற்சாலை ரூ.1,500 கோடி முதலீட்டில் அமைவதையொட்டி 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

    ராணிப்பேட்டை:

    பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் நாட்டிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்கி வருகிறது.

    தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை முன்னெடுத்து செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அயராத முயற்சியின் காரணமாக தமிழகம் மேலும் மேன்மை பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

    இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தைவானைச் சேர்ந்த ஹோங்பூ தொழில் குழுமம் தமிழக அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையுடன் கடந்த ஆண்டு காலணி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து ஹோங்பூ தொழில் குழுமத்தின் தலைவர் டி.ஒய்.சங்க்கிடம் கொள்கை அளவில் நிலம் ஒதுக்கீட்டு ஆணை அப்போது வழங்கப்பட்டது.

    அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் 125 ஏக்கர் நிலம் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும், 5 ஏக்கர் நிலம் உள் நாட்டு பயன்பாட்டுக்காகவும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆரம்ப கட்ட பணிகள் அங்கு நடைபெற தொடங்கி உள்ளது.

    இந்த நிலையில் பனப்பாக்கத்தில் காலணிகள் உற்பத்தி தொழிற்சாலை தொடங்குவதற்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், தொழில்துறை செயலாளர் அருண்ராய் மற்றும் தைவான் நாட்டைச் சேர்ந்த ஹோங்பு நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த தொழிற்சாலை ரூ.1,500 கோடி முதலீட்டில் அமைவதையொட்டி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

    • தடுப்பு கம்பிகள் சேதமடைந்ததால் சரி செய்யும் பணிகள் தீவிரம்.
    • தற்போது தென்காசி மாவட்டம் முழுவதும் மழைப்பொழிவு குறைந்துள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் நீர்நிலைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு கரை புரண்டு ஓடியது.

    குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல்வேறு இடங்களில் பலத்த சேதங்க ளும் ஏற்பட்டது. மெயின் அருவி வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட ஆண் யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் தற்போது தென்காசி மாவட்டம் முழுவதும் மழைப்பொழிவு குறைந்து வெயில் அடிக்க தொடங்கி உள்ளது.

    மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக விழ தொடங்கி உள்ளது. மெயின் அருவி பகுதியில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மணல் கற்கள், மரக்கிளைகள் நடைபாதை முழுவதும் ஆங்காங்கே சிதறி கிடந்ததால் அதனை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் அருவி பகுதிகளை சுற்றி சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் சேதமடைந்ததால் அதனையும் சரி செய்யும் பணிகள் முழுமையாக நடைபெற்ற உடன் அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அருவிகளில் தண்ணீர் சீற்றம் குறைந்து மிதமாக விழத் தொடங்கி இருந்தாலும் தொடர்ந்து இன்று 5-வது நாளாக குளிப்பதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, ஐயப்ப பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். 

    • குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும்.
    • தமிழகம் முழுவதும் சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் ரெயில் மறியல் போராட்டம்.

    தஞ்சாவூர்:

    குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும். விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதாரவிலை கேட்டு சாகும் வரை பஞ்சாப் கண்ணூரி பார்டரில் உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிருக்கு போராடிவரும் சம்யுக்த கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) தலைவர் ஜெக்ஜித் சிங் டல்லேவாலோடு உடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் சம்யுக்த கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது ) சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    அதன்படி தஞ்சை ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்துவதற்காக தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் மாநிலத் தலைவர் திருப்பதி வாண்டையார், மண்டல தலைவர் துரை. பாஸ்கரன், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவர் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர் உள்பட ஏராளமான விவசாயிகள் திரண்டனர். பின்னர் ஊர்வலமாக புறப்பட்டு முதல் நடைமேடைக்கு வந்தனர்.

    அப்போது திருச்சியில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த ரெயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் மத்திய அரசு எதிராகவும் கோஷமிட்டனர்.

    இதையடுத்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர். பாண்டியன் உள்பட 55 விவசாயிகளை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அதன்பிறகு ரெயில் காரைக்கால் நோக்கி புறப்பட்டது. இந்த சம்பவத்தால் தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • ஜெராக்ஸ் எந்திரம் வைத்து கலர் தாளில் கள்ள நோட்டு அச்சடித்துள்ளார்.
    • ஆசைதம்பியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    வி.கே.புரம்:

    நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மருதம்நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவரது மகன் முகமது சமீர் (வயது 28).

    இவர் அப்பகுதியில் உள்ள மெயின்ரோட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று கடையம் அருகே உள்ள ஆழ்வான் துலுக்கப்பட்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த களஞ்சியம் என்ப வரது மகன் ஆசைத்தம்பி (55) வந்துள்ளார்.

    தொடர்ந்து அவர் 100 ரூபாய் நோட்டு ஒன்றை கொடுத்து ¼ கிலோ கத்தரிக்காய் வேண்டும் என்று கேட்டுள்ளார். அந்த நோட்டை வாங்கிய முகமது சமீர், நோட்டில் சந்தேகம் ஏற்படவே அருகே காய்கறி வாங்கி கொண்டிருந்த சுடலையாண்டி என்பவரிடம் காட்டியுள்ளார். அப்போது ஆசைத்தம்பி கொடுத்தது கள்ளநோட்டு என தெரியவந்தது.

    உடனே ஆசைத்தம்பி அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். அவரை முகமது சமீரும், சுடலையாண்டியும் சேர்ந்து சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து விக்கிரமசிங்கபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.

    அவரிடம் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் விசாரணை நடத்தியதில் அவர் தனது வீட்டில் ஜெராக்ஸ் எந்திரம் வைத்து கலர் தாளில் கள்ள நோட்டு அச்சடித்து அந்த நோட்டை கடைகளில் பொருட்கள் வாங்கி கொண்டு புழக்கத்தில் விட்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரது வீட்டுக்கு சென்று சோதனை செய்ததில் ஒரு ஜெராக்ஸ் எந்திரம், 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 25 எண்ணம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக முகமது சமீர் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து ஆசைதம்பியை கைது செய்து சிறையில் அடைத்தார்.

    ×