என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நாமக்கல் நரசிம்மர் கோயிலில் குவிந்த மக்கள் தியானத்தில் ஈடுபட்டார்கள்.
- இதனால் கோயில்களின் நிர்வாகிகள் மிகுந்த குழப்பம் அடைந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நரசிம்மர் கோவிலில் இன்று சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால் கூட்டநெரிசல் ஏற்பட்டது.
கோவிலில் குவிந்த பக்தர்கள் கோயில் வளாகம் முழுவதும் அமர்ந்து ஒரே இடத்தில் சுமார் ஒரு மணி நேரம் தியானத்திலும் ஈடுபட்டார்கள். இதனால் கோயில்களின் நிர்வாகிகள் மிகுந்த குழப்பம் அடைந்தனர்.
பின்னர் இது தொடர்பாக பக்தர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது, சமூக வலைத்தளங்களில் ஜோதிடர் ஒருவர் நாமக்கல் நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து சுமார் 1 மணி நேரம் தியானம் செய்தால் சகல விதமான செல்வங்கள் கிடைக்கும் என்று கூறியதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாகி இன்று காலையிலேயே பொதுமக்கள் திடீரென நாமக்கல் நரசிம்மர் கோவிலில் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- இளையராஜாவை கோயிலுக்குள் விடவில்லை என்று வரும் சர்ச்சையை வன்மையாக கண்டிக்கிறேன்
- தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்.
மார்கழி மாத பிறப்பையொட்டி திவ்ய பாசுரம் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இசைஞானி இளையராஜா கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சிக்கு சடகோபர் ராமானுஜ ஜீயர், ஸ்ரீராமன் நாராயண ராமானுஜ ஜீயர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இளையராஜாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆண்டாள் சன்னதி, நந்தவனம், பெரிய பெருமாள் சன்னதிகளில் இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக, ஆண்டாள் கோவிலில் கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் இளையராஜா நுழைந்த போது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அதனால் அர்த்த மண்டப படியின் அருகே நின்றவாறே சாமி தரிசனம் செய்ததாகவும், கோவில் மரியாதையை இளையராஜா ஏற்றதாகவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
அவரது பதிவில், "என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே தனக்கு ஆதரவளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவிக்க, கமலாலயம் வந்த நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "இளையராஜா ஒரு இசை கடவுள். அவர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவரை கோயிலுக்குள் விடவில்லை என்று வரும் சர்ச்சையை வன்மையாக கண்டிக்கிறேன். இப்படிப்பட்ட பிரச்சாரங்களை வைத்து இன்னும் எவ்வளவு நாட்கள் தான் இந்த நாட்டில் ஏமாற்றுவார்கள்.
கருவறைக்குள் எந்த ஜாதியினரும் நுழைய முடியாது. பிராமணர்களாய் இருந்தாலும் கருவறைக்குள் செல்ல முடியாது. அர்ச்சகர்கள் மட்டும்தான் கருவறைக்குள் செல்ல முடியும். தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். அர்ச்சகர்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் கருவறைக்குள் நுழைய முடியும். ஆனால் இளையராஜா கருவறைக்குள் செல்வதற்கு முயற்சி செய்யவே இல்லை. உங்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் இங்கே நில்லுங்கள் என்று சொல்கிறார்கள். அவரும் அங்கே நிற்கிறார். இதுதான் நடந்தது" என்று தெரிவித்தார்.
- நெடுஞ்சாலைகள் பராமரிப்பு, தரம் உயர்த்தல், நீண்டகால திட்டம் தயாரித்தல் ஆகியவை இந்த ஆணையத்தின் பணியாகும்.
- ஆணையத்துக்கு ஒரு தலைவர், 3 முழுநேரம், 3 பகுதிநேர உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, பொது மற்றும் தனியார்துறை பங்களிப்பில் நிறுவப்படும் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்ட மசோதா கடந்த பிப்ரவரியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
நெடுஞ்சாலைகளின் கட்டுமானம், மேம்பாடு, பராமரிப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றுக்காக தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்படுவதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெற தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
நெடுஞ்சாலைகள் பராமரிப்பு, தரம் உயர்த்தல், நீண்டகால திட்டம் தயாரித்தல் ஆகியவை இந்த ஆணையத்தின் பணியாகும்.
ஆணையத்துக்கு ஒரு தலைவர், 3 முழுநேரம், 3 பகுதிநேர உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.
உறுப்பினர்கள் 62 வயது வரை பணியாற்றலாம். நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கும் தரம் உயர்த்துவதற்கும், உடனடி மற்றும் நீண்டகால திட்டங்களை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் தயாரிக்கலாம்.
தனியாருடன் அதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம் என்று சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆண்டாள் கோவிலில் கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் இளையராஜா நுழைந்த போது தடுத்து நிறுத்தப்பட்டார்.
- திருக்கோயிலின் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை.
மார்கழி மாத பிறப்பையொட்டி திவ்ய பாசுரம் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இசைஞானி இளையராஜா கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சிக்கு சடகோபர் ராமானுஜ ஜீயர், ஸ்ரீராமன் நாராயண ராமானுஜ ஜீயர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இளையராஜாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆண்டாள் சன்னதி, நந்தவனம், பெரிய பெருமாள் சன்னதிகளில் இளையராஜா சாமி தரினம் செய்தார்.
முன்னதாக, ஆண்டாள் கோவிலில் கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் இளையராஜா நுழைந்த போது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அதனால் அர்த்த மண்டப படியின் அருகே நின்றவாறே சாமி தரிசனம் செய்ததாகவும், கோவில் மரியாதையை இளையராஜா ஏற்றதாகவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்தில் இருந்து இசையமைப்பாளர் இளையராஜா வெளியேற்றப்பட்ட விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
விருதுநகர் மாவட்டம். ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம் மற்றும் நகர் அருள்மிகு நாச்சியார் (ஆண்ட) திருக்கோயிலுக்கு 15.12.2024 அன்று இசையமைப்பாளர் இளையராஜா வருகை புரிந்ததன்பேரில் 16.12.2024 முதல் ஊடகங்களில் வரும் செய்தி குறித்து மேற்படித் திருக்கோயில் செயல் அலுவலர் பார்வை 2-ன் மூலம் பின்வருமாறு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 46(II)- ன் கீழ் உள்ள திருக்கோயில் ஆகும்.
இத்திருக்கோயிலானது முதல் நிலை செயல் அலுவலர் மற்றும் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட அறங்காவலர் குழு கூட்டுப் பொறுப்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.
பார்வை 2-ல் காணும் குறிப்பில் 15.12.2024 அன்று இத்திருக்கோயிலுக்கு ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா சுவாமி தரிசனத்திற்கு திருக்கோவிலுக்கு வருகை புரிந்தனர் என்றும், இத்திருக்கோயிலில் ஆண்டால் ரெங்கமன்னார். கருடாழ்வார் மூலவர் கருவறையிலும், கருவறையினை அடுத்த அர்த்த மண்டத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் உற்சவரும் எழுந்தருளியுள்ளனர்.
எனவே, இத்திருக்கோயில் மரபு படியும் பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை திருக்கோயிலின் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை என்றும் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
15-12-2024 அன்று இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் உடன் வருகை புரிந்த போது அவருடன் இணைந்து அர்த்த மண்டப வாசல் படி ஏறிய போது உடன் இருந்த ஜீயர் சுவாமிகள் மற்றும் திருக்கோயில் மணியம் அர்த்த மண்டபம் முன்பு இருந்து சாமி தரிசனம் செய்யலாம் என கூறிய உடன் அவரும், ஒப்புக் கொண்டு அர்த்த மண்டபத்தின் முன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்தார் என்றும், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மட்டும் அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தார் என்ற விவரம் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இளம் செஸ் சாம்பியன் ஆக வேண்டும் என்பது எனது கனவு.
- செஸ் ஒரு அழகான விளையாட்டு. அதை அழுத்தம் இல்லாமல் விளையாட வேண்டும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இளம் வயதில் உலக சாம்பியன் ஆன வீரர் என்ற வரலாற்று சாதனையையும் இவர் படைத்தார்.
இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் இன்று தாயகம் திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை தரப்பிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய குகேஷ், "எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. நீண்ட காலம் செஸ் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடியது கடினமாக இருந்தது. டை பிரேக் வரும் என எதிர்பார்த்தேன். நானே எதிர்பார்க்காத நேரத்தில் இந்த வெற்றி கிடைத்துள்ளது.
இளம் செஸ் சாம்பியன் ஆக வேண்டும் என்பது எனது கனவு. வெற்றி பெற்ற தருணம் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. சிறிய வயதில் இருந்தே ஆசைப்பட்டது நிறைவேறிய தருணம் நெகிழ்ச்சியாக இருந்தது. செஸ் ஒரு அழகான விளையாட்டு. அதை அழுத்தம் இல்லாமல் விளையாட வேண்டும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் எல்லா சூழலிலும் தேவையான நிதியுதவி வழங்கி ஊக்குவித்தனர். சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் தொடரை அரசு நடத்தியது எனக்கு பெரும் உதவியாக இருந்தது. இதுபோல தொடர் ஆதரவு கிடைத்தால் பல இளம் செஸ் வீரர்கள் வருவார்கள்" என்று தெரிவித்தார்.
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷூக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நாளை பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், தமிழக கிராண்ட் மாஸ்டர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
- 2024-ம் ஆண்டு 350 மீனவர்கள், 49 மீன்பிடி படகுகள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ளது.
- இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும்.
நாகர்கோவில்:
தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் தாக்கப்படுவது மற்றும் கைது செய்வதை இந்தியா வந்துள்ள இலங்கை அதிபருடன் பேசி தீர்வு காணவேண்டும், இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோர வேண்டும்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க விஜய்வசந்த் எம்.பி. ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு தொடர்ந்து தாக்கி வருகிறது. மேலும் அவர்களை சிறை பிடித்து அவர்களது உடைமைகளையும் கைப்பற்றி வருகிறது.
2024-ம் ஆண்டு மட்டும் 350 மீனவர்கள் மற்றும் 49 மீன்பிடி படகுகள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மிக அதிகம். இலங்கை அரசின் அத்துமீறல் அதிகரித்து வருவதற்கு இதுவே சான்று.
1974-ம் ஆண்டு இந்திய இலங்கை இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டு இலங்கை அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 2 அரசுகளும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் குழுக்கள் அமைத்து தீர்வு காண முன்வர வேண்டும்.
இலங்கை அரசு உடனடியாக அங்கு கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும். இதனை இலங்கை அதிபருக்கு இந்திய பிரதமர் மற்றும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எடுத்துரைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 'ஆன்லைன்' மூலம் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
- ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது 'சைபர் கிரைம்' போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை:
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். ஆன்மிக சொற்பொழிவாளரான இவர், 'நமது கோவில்கள்' என்ற பெயரில் 'யூடியூப்' சேனல் வைத்துள்ளார். இதில் அவர், மத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பரபரப்பு கருத்துகளை தெரிவித்து வீடியோ வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அவர், 'ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளுக்கு நடந்த அபசாரங்கள்' என்ற தலைப்பில் தனது யூடியூப் சேனலில் கடந்த வாரம் சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.
தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு தகவல்களை பரப்பிய ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 'ஆன்லைன்' மூலம் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த புகார் மனு மீது போலீஸ் கமிஷனர் அருண், சென்னை மத்திய குற்றப்பிரிவு 'சைபர் கிரைம்' போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் பேசிய வீடியோ பதிவை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அவர், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருப்பது உறுதியானது.
இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது 'சைபர் கிரைம்' போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜனை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவரை, சென்னை அழைத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை 14 நாட்கள் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, அடுத்த இரு தினங்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு- வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
18-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை. கள்ளக்குறிச்சி, வேலூர் அரியலூர் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
19-ந்தேதி வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
20-ந்தேதி வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21 மற்றும் 22-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22°-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான- கனமழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 29°-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22°-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- அரசு மருத்துவக் கல்விக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழ்நாடு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
- ஓராண்டில் புதிய இடங்களை உருவாக்குவதில் தமிழ்நாடு ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.
அதிக எண்ணிக்கையில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருந்தது என்றும், ஆனால் தற்போது தமிழ்நாடு இந்த வரிசையில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை இடங்கள்: மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்நாடு - ஒரு கல்லூரி கூட தொடங்காத திராவிட மாடல் அரசு!
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களைக் கொண்டுள்ள மாநிலங்கள் பட்டியலில் கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு இப்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எந்தவொரு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படாததும், புதிய மாணவர் சேர்க்கை இடங்கள் ஏற்படுத்தப்படாததும் தான் இந்த நிலைக்கு காரணம் ஆகும். அரசு மருத்துவக் கல்விக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழ்நாடு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
2023-24ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் 11,650 ஆக இருந்தன. அதன்பின் ஓராண்டில் 400 புதிய இடங்கள் மட்டும் தான் உருவாக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் தனியார் கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டவை. இந்த எண்ணிக்கை மிக மிக குறைவு ஆகும். இதேகாலத்தில் மிகவும் பின் தங்கிய மாநிலம் என்று கூறப்படும் உத்தரப்பிரதேசம் 2522 புதிய இடங்களை உருவாக்கி , தமிழ்நாட்டை பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. மராட்டியம் 1000 புதிய இடங்களையும், இராஜஸ்தான் 900 புதிய இடங்களையும், தெலுங்கானா 550 இடங்களையும் உருவாக்கியுள்ளன. கடந்த ஓராண்டில் புதிய இடங்களை உருவாக்குவதில் தமிழ்நாடு ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டில் கர்நாடகம் 800 புதிய இடங்களை உருவாக்கிய நிலையில் தமிழ்நாட்டில் 1000 புதிய இடங்கள் உருவாக்கப்பட்டிருந்தால், மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை இடங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருக்க முடியும். தமிழ்நாட்டில் 2021-ஆம் ஆண்டில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளிலும் தலா 50 இடங்களை கூடுதலாக ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இரு ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதை செய்திருந்தாலே தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்திருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்புகளையெல்லாம் இழந்து விட்டு நிற்கிறது தமிழ்நாடு அரசு.
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைக் கூட திறக்கவில்லை; ஒரே ஒரு மருத்துவ இடத்தைக் கூட கூடுதலாக உருவாக்கவில்லை .தமிழக அரசு நினைத்திருந்தால் அதன் சொந்த நிதியில் கடந்த 3 ஆண்டுகளில் தலா இரு கல்லூரிகள் வீதம் உருவாக்கி அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை அமைத்திருக்க முடியும். ஆனால், மத்திய அரசு நிதியில் மருத்துவக் கல்லூரிகளை அமைக்கப் போகிறோம், அதற்காக மனு கொடுத்திருக்கிறோம் என்று வெற்று வசனம் பேசியே 3 ஆண்டுகளை தமிழக அரசு வீணடித்து விட்டது.
அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க முடியாது, கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை உருவாக்க முடியாது என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், நடப்பாண்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளையும், மாணவர் சேர்க்கை இடங்களையும் அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யத் தவறியதன் மூலம் திராவிட மாடல் அரசு மக்களுக்கு பெருந்துரோகம் செய்து விட்டது. இதற்காக திமுக அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சர்ச்சை கருத்தால் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி ஜாமினில் விடுதலை ஆனார்.
- பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மையக்குழு கூட்டம் நடைபெற்றது.
சென்னை:
தெலுங்கு பேசுபவர்கள் தொடர்பான சர்ச்சை கருத்தால் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி ஜாமினில் விடுதலை ஆனார். இதனை தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை நடிகை கஸ்தூரி இன்று சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை - கஸ்தூரி சந்திப்பு நடைபெற்றது.
முன்னதாக, பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மையக்குழு கூட்டம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
- உயர்மட்ட மேம்பால பணிகள் 2025 அக்டோபருக்குள் முடிவடையும்.
- யாரும் அழுத்தம் கொடுப்பதை அவர் ஏற்றுக்கொண்டு செயல்பட மாட்டார்.
மதுரை:
மதுரையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் துறை சார்பில் கட்டப்பட்டு வரும் உயர் மட்ட மேம்பால பணிகள், கலைஞர் நூற்றாண்டு செயல்பாடுகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை 13 லட்சத்து 59 ஆயிரத்து 996 பேர் பயன்படுத்தி உள்ளனர். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 3 தளங்கள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,
மதுரை கோரிப்பா ளையத்தில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் 2025 டிசம்பர் மாதத்திற்குள்ளாக முடிவடையும். தற்போது 25 சதவிகித பாலப்பணிகள் முடிவடைந்துள்ளது.
மதுரை அப்போலோ உயர்மட்ட மேம்பால பணிகள் 2025 அக்டோபருக்குள் முடிவடையும். இப்பாலப் பணிகள் 32 சதவீதம் முடிவடைந்துள்ளது.
ஆற்றுக்குள் கட்டப்படும் மேம்பாலத்திற்கும், சாலையில் கட்டப்படும் மேம்பாலத்திற்கும் வித்தியாசங்கள் உண்டு, தண்ணீர் திறந்து விடுவதை கணக்கில் கொண்டு ஆற்றுக்குள் மேம்பாலங்கள் கட்டப்படுகிறது.
2001-ம் ஆண்டு முதல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் பழகி வருகிறேன். எதிர்முகாமில் இருந்த காலத்தில் திருமாவளவன் என்னுடன் சகோதரத்துடன் பழகக் கூடியவர். விஜய் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுக்கவில்லை.
எனக்கும், தி.மு.க.வுக்கும், திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. திருமாவளவன் அறிவார்ந்தவர். யாரும் அழுத்தம் கொடுப்பதை அவர் ஏற்றுக்கொண்டு செயல்பட மாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணய சட்டம்.
- ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயற்சி.
திருப்பூர்:
தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கங்களின் சார்பில் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் மாநிலத்தலைவர் சண்முகம் தலைமையில் பெண்கள் உட்பட 100 விவசாயிகள் இன்று காலை குமரன் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயிகள், பா.ஜ.க., அரசு விவசாயிகளுக்கு எதிராக அடக்கு முறையை கையாள்கிறது. விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணய சட்டம் கொண்டு வர வேண்டும். வேளாண்மைக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். எம்.எஸ்.பி. கேட்டு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜெக்ஜித் சிங் டல்லே வாலை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து அங்கிருந்து ரெயில் நிலையம் நோக்கி சென்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.






