என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரும்.
- கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று (டிசம்பர் 16) காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது இன்றும், நாளையம் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரும்.
இதன் காரணமாக தமிழகத்தின் வட கடலோர பகுதிகள் மற்றும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி தமிழகத்தின் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு இன்று கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதே போல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பூந்தமல்லி தனி கிளை சிறை வளாகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் தீவிர சோதனை செய்யப்பட்ட பிறகே சிறைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி சிறையில் கஞ்சா, செல்போன், பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உள்பட 38 கைதிகள் புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர்.
பூந்தமல்லி தனி கிளை சிறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைதிகளின் அறையில் சிறைத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 20 கிராம் கஞ்சா, 5 செல்போன்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் பூந்தமல்லி போலீசார் சிறைக்குள் இருக்கும் கைதிகளுக்கு கஞ்சா, செல்போன் கிடைத்தது எப்படி? என விசாரித்து வருகின்றனர். சிறைத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் கஞ்சா மற்றும் செல்போன் சிறைக்குள் சென்றிருக்க வாய்ப்பு இல்லை என்பதால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த துணை ஜெயிலர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் எதிரொலியாக பூந்தமல்லி தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஷ்வத்தாமன் உள்பட 23 பேர் மற்றும் மற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என மொத்தம் 38 கைதிகள் புழல் சிறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர்.
இவர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் இரவோடு இரவாக சிறைத்துறை அதிகாரிகள் பூந்தமல்லி சிறையில் இருந்து புழல் சிறைக்கு அழைத்துச்சென்றனர். இதையொட்டி பூந்தமல்லி தனி கிளை சிறை வளாகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் தீவிர சோதனை செய்யப்பட்ட பிறகே சிறைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
- மணிப்பூர் மற்றும் சம்பல் வன்முறை போன்ற பிரச்சனைகளால் பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.
- இரு அவைகளிலும் குறிப்பிடத்தக்க அலுவல்கள் நடைபெறவில்லை.
சென்னை:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. இதில் அதானி முறைகேடு, மணிப்பூர் மற்றும் சம்பல் வன்முறை போன்ற பிரச்சனைகளால் பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் இரு அவைகளிலும் குறிப்பிடத்தக்க அலுவல்கள் நடைபெறவில்லை. குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்படி இந்த தொடர் கடைசி வாரத்தை எட்டி இருக்கிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டம் தொடர்பான இரண்டு முக்கிய மசோதாக்கள் பாராளுமன்ற மக்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளநிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நாட்டு மக்களும் எதிர்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதனை கண்டு கொள்ளாமல் எதேச்சதிகார போக்குடன் ஆளும் பா.ஜ.க. அரசு நாளை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
பா.ஜ.க.வின் இது போன்று மக்கள் விரோத அராஜக போக்கினை நாட்டு மக்களுடன் இணைந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நிச்சயம் முறியடிப்பார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, அடுத்த இரு தினங்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு- வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
- பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு, மதியம் 2 மணிக்கு முன் மின் விநியோகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. அதன்படி, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆர்.ஏ.புரம்: ஆர்.ஏ.புரம், எம்.ஆர்.சி.நகர் பகுதி. ஃபோர்ஷோர் எஸ்டேட்டின் ஒரு பகுதி, காந்தி நகரின் ஒரு பகுதி, பிஆர்ஓ குவார்ட்டர்ஸ், ஆர்கே மடம், ஆர்கே நகர், ராணி மெய்யம்மை டவர், சத்திய தேவ் அவென்யூ, ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் எச்டி சர்வீஸ், ராஜா தெரு, ராபர்ட்சன் லேன், ராஜா கிராமணி கார்டன், கேவிபி கார்டன், அப்பா கிராமணி தெரு, வேலாயுதராஜா தெரு, டிபி ஸ்கீம் ரோடு, ராஜா முத்தையா புரம், குட்டிகிராமணி தெரு, காமராஜா சாலை, கஸ்தூரி அவென்யூ, கற்பகம் அவென்யூ, வசந்த் அவென்யூ, தெற்கு அவென்யூ, சண்முகபுரம், சாந்தோம் ஹை ரோடு, சத்தியா நகர், அரிஞர் அண்ணாநகர், அன்னை தெரசா நகர், பெருமாள் கோயில் தெரு, தெற்கு கால்வாய் வங்கி சாலை.
பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு, மதியம் 2 மணிக்கு முன் மின் விநியோகம் தொடங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடி உடனான சந்திப்பின்போது மீனவர் பிரச்சனையில் சுமூக தீர்வு காண வேண்டும் என்று இலங்கை அதிபர் கூறினார்.
- தமிழர்களின் விருப்பங்களை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன் என்றார்.
இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகா தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை இலங்கை அதிபர் திசநாயக சந்தித்துப் பேசினார்.
பிரதமர் மோடி உடனான சந்திப்பின்போது மீனவர் பிரச்சனையில் சுமூக தீர்வு காண வேண்டும் என்று இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழர்களின் விருப்பங்களை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் பதிவை மறுபதிவு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றையும் வௌியிட்டுள்ளார். மேலும்,
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
இலங்கை அதிபர் அனுரதிசநாயக அவர்கள், தமிழக மீனவர்களின் கவலைகளை மனிதாபிமானமாகவும், அமைதியான முறையிலும் தீர்க்கும் வகையில், நமது பிரதமர் நரேந்திர மோடியுடனான கலந்துரையாடல்களில் ஈடுபடுவது ஊக்கமளிக்கிறது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்தும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பி அனுப்புவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
இத்தகைய சைகை, இந்த விவாதங்களில் நம்பிக்கையை ஊட்டுவதுடன், நமது இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவுகள் மற்றும் இணக்கமான எதிர்காலத்தை வளர்ப்பதற்கான ஆக்கபூர்வமான படியைக் குறிக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவது பற்றி விரைவில் அறிவிப்பதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
- பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு பின் கௌரவத்தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்து வந்த ஆதவ் அர்ஜுனா அக்கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக நேற்று அறிவித்தார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவது பற்றி விரைவில் அறிவிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், திருவள்ளூரில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கௌரவத்தலைவர் ஜி.கே.மணி, "விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா பாமகவில் இணைய விரும்பினால் பரிசீலிப்போம்" என்று தெரிவித்தார்.
முன்னாக தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள போதிலும், தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வந்ததற்காக விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா ஆறு மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- இளைஞர்கள், மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக சமூக வலைத்தளங்களில் பலரும் புகார்.
- சம்பந்தப்பட்ட டாட்டூ சென்டருக்கு சீல் வைத்து, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
திருச்சியில், டாட்டூ சென்டரில் நாக்கிற்கு ஆபரேஷன் போன்ற இயற்கைக்கு புறம்பான செயல்கள் செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உரிய அனுமதியின்றி வாடிக்கையாளர்களுக்கு நாக்கின் நுனிப்பகுதியை இரண்டாக வெட்டிவிடும் (Tongue Splitting) செயலை டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன் செய்து வந்தார்.
இளைஞர்கள், மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக சமூக வலைத்தளங்களில் பலரும் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
இந்நிலையில், டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன், அவரது கடையில் பணியாற்றிவந்த ஜெயராமன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சம்பந்தப்பட்ட டாட்டூ சென்டருக்கு சீல் வைத்தும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- நாமக்கல் நரசிம்மர் கோயிலில் குவிந்த மக்கள் தியானத்தில் ஈடுபட்டார்கள்.
- இதனால் கோயில்களின் நிர்வாகிகள் மிகுந்த குழப்பம் அடைந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நரசிம்மர் கோவிலில் இன்று சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால் கூட்டநெரிசல் ஏற்பட்டது.
கோவிலில் குவிந்த பக்தர்கள் கோயில் வளாகம் முழுவதும் அமர்ந்து ஒரே இடத்தில் சுமார் ஒரு மணி நேரம் தியானத்திலும் ஈடுபட்டார்கள். இதனால் கோயில்களின் நிர்வாகிகள் மிகுந்த குழப்பம் அடைந்தனர்.
பின்னர் இது தொடர்பாக பக்தர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது, சமூக வலைத்தளங்களில் ஜோதிடர் ஒருவர் நாமக்கல் நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து சுமார் 1 மணி நேரம் தியானம் செய்தால் சகல விதமான செல்வங்கள் கிடைக்கும் என்று கூறியதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாகி இன்று காலையிலேயே பொதுமக்கள் திடீரென நாமக்கல் நரசிம்மர் கோவிலில் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- இளையராஜாவை கோயிலுக்குள் விடவில்லை என்று வரும் சர்ச்சையை வன்மையாக கண்டிக்கிறேன்
- தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்.
மார்கழி மாத பிறப்பையொட்டி திவ்ய பாசுரம் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இசைஞானி இளையராஜா கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சிக்கு சடகோபர் ராமானுஜ ஜீயர், ஸ்ரீராமன் நாராயண ராமானுஜ ஜீயர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இளையராஜாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆண்டாள் சன்னதி, நந்தவனம், பெரிய பெருமாள் சன்னதிகளில் இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக, ஆண்டாள் கோவிலில் கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் இளையராஜா நுழைந்த போது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அதனால் அர்த்த மண்டப படியின் அருகே நின்றவாறே சாமி தரிசனம் செய்ததாகவும், கோவில் மரியாதையை இளையராஜா ஏற்றதாகவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
அவரது பதிவில், "என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே தனக்கு ஆதரவளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவிக்க, கமலாலயம் வந்த நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "இளையராஜா ஒரு இசை கடவுள். அவர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவரை கோயிலுக்குள் விடவில்லை என்று வரும் சர்ச்சையை வன்மையாக கண்டிக்கிறேன். இப்படிப்பட்ட பிரச்சாரங்களை வைத்து இன்னும் எவ்வளவு நாட்கள் தான் இந்த நாட்டில் ஏமாற்றுவார்கள்.
கருவறைக்குள் எந்த ஜாதியினரும் நுழைய முடியாது. பிராமணர்களாய் இருந்தாலும் கருவறைக்குள் செல்ல முடியாது. அர்ச்சகர்கள் மட்டும்தான் கருவறைக்குள் செல்ல முடியும். தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். அர்ச்சகர்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் கருவறைக்குள் நுழைய முடியும். ஆனால் இளையராஜா கருவறைக்குள் செல்வதற்கு முயற்சி செய்யவே இல்லை. உங்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் இங்கே நில்லுங்கள் என்று சொல்கிறார்கள். அவரும் அங்கே நிற்கிறார். இதுதான் நடந்தது" என்று தெரிவித்தார்.
- நெடுஞ்சாலைகள் பராமரிப்பு, தரம் உயர்த்தல், நீண்டகால திட்டம் தயாரித்தல் ஆகியவை இந்த ஆணையத்தின் பணியாகும்.
- ஆணையத்துக்கு ஒரு தலைவர், 3 முழுநேரம், 3 பகுதிநேர உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, பொது மற்றும் தனியார்துறை பங்களிப்பில் நிறுவப்படும் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்ட மசோதா கடந்த பிப்ரவரியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
நெடுஞ்சாலைகளின் கட்டுமானம், மேம்பாடு, பராமரிப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றுக்காக தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்படுவதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெற தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
நெடுஞ்சாலைகள் பராமரிப்பு, தரம் உயர்த்தல், நீண்டகால திட்டம் தயாரித்தல் ஆகியவை இந்த ஆணையத்தின் பணியாகும்.
ஆணையத்துக்கு ஒரு தலைவர், 3 முழுநேரம், 3 பகுதிநேர உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.
உறுப்பினர்கள் 62 வயது வரை பணியாற்றலாம். நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கும் தரம் உயர்த்துவதற்கும், உடனடி மற்றும் நீண்டகால திட்டங்களை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் தயாரிக்கலாம்.
தனியாருடன் அதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம் என்று சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆண்டாள் கோவிலில் கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் இளையராஜா நுழைந்த போது தடுத்து நிறுத்தப்பட்டார்.
- திருக்கோயிலின் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை.
மார்கழி மாத பிறப்பையொட்டி திவ்ய பாசுரம் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இசைஞானி இளையராஜா கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சிக்கு சடகோபர் ராமானுஜ ஜீயர், ஸ்ரீராமன் நாராயண ராமானுஜ ஜீயர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இளையராஜாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆண்டாள் சன்னதி, நந்தவனம், பெரிய பெருமாள் சன்னதிகளில் இளையராஜா சாமி தரினம் செய்தார்.
முன்னதாக, ஆண்டாள் கோவிலில் கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் இளையராஜா நுழைந்த போது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அதனால் அர்த்த மண்டப படியின் அருகே நின்றவாறே சாமி தரிசனம் செய்ததாகவும், கோவில் மரியாதையை இளையராஜா ஏற்றதாகவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்தில் இருந்து இசையமைப்பாளர் இளையராஜா வெளியேற்றப்பட்ட விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
விருதுநகர் மாவட்டம். ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம் மற்றும் நகர் அருள்மிகு நாச்சியார் (ஆண்ட) திருக்கோயிலுக்கு 15.12.2024 அன்று இசையமைப்பாளர் இளையராஜா வருகை புரிந்ததன்பேரில் 16.12.2024 முதல் ஊடகங்களில் வரும் செய்தி குறித்து மேற்படித் திருக்கோயில் செயல் அலுவலர் பார்வை 2-ன் மூலம் பின்வருமாறு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 46(II)- ன் கீழ் உள்ள திருக்கோயில் ஆகும்.
இத்திருக்கோயிலானது முதல் நிலை செயல் அலுவலர் மற்றும் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட அறங்காவலர் குழு கூட்டுப் பொறுப்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.
பார்வை 2-ல் காணும் குறிப்பில் 15.12.2024 அன்று இத்திருக்கோயிலுக்கு ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா சுவாமி தரிசனத்திற்கு திருக்கோவிலுக்கு வருகை புரிந்தனர் என்றும், இத்திருக்கோயிலில் ஆண்டால் ரெங்கமன்னார். கருடாழ்வார் மூலவர் கருவறையிலும், கருவறையினை அடுத்த அர்த்த மண்டத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் உற்சவரும் எழுந்தருளியுள்ளனர்.
எனவே, இத்திருக்கோயில் மரபு படியும் பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை திருக்கோயிலின் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை என்றும் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
15-12-2024 அன்று இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் உடன் வருகை புரிந்த போது அவருடன் இணைந்து அர்த்த மண்டப வாசல் படி ஏறிய போது உடன் இருந்த ஜீயர் சுவாமிகள் மற்றும் திருக்கோயில் மணியம் அர்த்த மண்டபம் முன்பு இருந்து சாமி தரிசனம் செய்யலாம் என கூறிய உடன் அவரும், ஒப்புக் கொண்டு அர்த்த மண்டபத்தின் முன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்தார் என்றும், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மட்டும் அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தார் என்ற விவரம் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






