என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தீ விபத்து குறித்து விருதுநகர் ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின் கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
விருதுநகர்:
விருதுநகர் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக். தொழிலதிபரான இவர் அப்பகுதியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூம் வைத்து நடத்தி வருகிறார். இங்கு விற்பனைக்காக ஏராளமான புதிய ஸ்கூட்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் பழுதுநீக்கும் சர்வீஸ் நிலையமும் அமைந்துள்ளதால் அங்கு பலர் தங்களது வாகனங்களை விட்டு சென்றிருந்தனர்.
நேற்று இரவு வழக்கமான நேரத்தில் ஷோரூம் பூட்டப்பட்டது. பணியில் இருந்த ஊழியர்களும் புறப்பட்டு சென்றனர். நள்ளிரவில் அந்த ஷோரூமில் இருந்து அளவுக்கு அதிகமாக புகை வந்துள்ளது. அடுத்து ஒருசில நிமிடங்களில் அங்கு பயங்கர தீ விபத்தும் ஏற்பட்டது. இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஷோரூம் உரிமையாளருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் உடனடியாக வந்த கார்த்திக் ஷோரூம் அருகில் கூட செல்ல முடியாத அளவுக்கு தீ விபத்து ஏற்பட்டு வெப்பம் வெளியேறியது. இதையடுத்து அவர் விருதுநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர் மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 19 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், 9 சர்வீஸ் பணிக்காக வந்த ஸ்கூட்டர்கள் மற்றும் ஏராளமான கம்ப்யூட்டர்கள், பிரிண்டர் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் ரூ.20 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அருகில் உள்ள பாண்டியன் என்பவருக்கு சொந்தமான எலெக்ட்ரிக் கடை உள்ளிட்ட ஒருசில கடைகளிலும் தீ பற்றியது. இதில் எலெக்ட்ரிக் கடையில் இருந்த பொருட்களும் தீயில் எரிந்து சேதமானது.
இந்த தீ விபத்து குறித்து விருதுநகர் ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
- கடந்த நவம்பர் மாதம் மட்டும் ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.9 ஆயிரத்து 460 கோடியே 20 லட்சத்துக்கு நடைபெற்றுள்ளது.
- இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரித்துள்ளது.
திருப்பூர்:
இந்தியாவின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏறுமுகத்தில் உள்ளது. அதிகபட்சமாக ஜூலை மாதம் 13.8 சதவீதமும், ஆகஸ்டு மாதம் 13.4 சதவீதமும், செப்டம்பர் மாதம் 18.4 சதவீதமும், அக்டோபர் மாதம் 36.4 சதவீதமும் ஏற்றம் கண்டுள்ளது. இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூர் பின்னலாடைத்துறையின் பங்கு முக்கிய பங்காற்றி வருகிறது. திருப்பூரின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகமும் அதிகரித்து வருவது உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் மட்டும் ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.9 ஆயிரத்து 460 கோடியே 20 லட்சத்துக்கு நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.8 ஆயிரத்து 506 கோடியே 20 லட்சத்துக்கு நடந்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிடும்போது 11.2 சதவீதம் ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
இதுபோல் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.82 ஆயிரத்து 509 கோடிக்கு நடந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12.9 சதவீதம் அதிகரித்துள்ளதால் பின்னலாடை தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுபோல் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 8 ஆயிரத்து 247 டாலர் மதிப்பில் வர்த்தகம் நடந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 7 ஆயிரத்து 817 டாலர் நடந்துள்ளது. அதன்படி 11.6 சதவீதம் ஏற்றுமதி அதிரித்துள்ளது. அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து அதிக அளவில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுபோல் இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஏ.இ.பி.சி. தென்மண்டல பொறுப்பாளர் சக்திவேல் கூறும்போது, 'ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் பயணித்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் அமைந்துள்ள நாடுகளிலும் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருவது நேர்மறையான எண்ணத்தை உற்பத்தியாளர்களிடம் விதைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.40 ஆயிரம் கோடி என்ற வர்த்தக இலக்கை நிச்சயம் எட்டும்' என்றார்.
- கடந்த ஏப்ரல் மாதம் சிகிச்சைக்காக பரோலில் வந்த அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்றார்.
- பாஷாவின் உடல் அவரது உடல் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.
கோவை:
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி நடந்த குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவை தெற்கு உக்கடம் ரோஸ்கார்டனை சேர்ந்த அல்-உம்மா இயக்க தலைவரான எஸ்.ஏ.பாஷா உள்பட பலரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் எஸ்.ஏ.பாஷாவுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளாக கோவை மத்திய ஜெயிலில் இருந்த எஸ்.ஏ.பாஷாவுக்கு, வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் சிகிச்சைக்காக பரோலில் வந்த அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்றார். நேற்றுமுன்தினம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இன்று மாலை கோவை ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட் பகுதியில் உள்ள திப்புசுல்தான் ஹைதர் அலி பள்ளிவாசல் கபர்ஸ்தானில் எஸ்.ஏ.பாஷாவின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக அவரது உடல் அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.
இதனையொட்டி கோவை மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மட்டுமின்றி, வெளியூரை சேர்ந்த போலீசாரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எஸ்.ஏ.பாஷாவின் வீடு, அந்த பகுதி, ஊர்வலம் செல்லும் பகுதி, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பஸ் நிலையம், ரெயில் நிலையம், கடைவீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் ஏறுவதும், குறைவதுமாக இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் தங்கம் ரூ.7,140-க்கும் ஒரு சவரன் ரூ.57,120-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கும் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,150-க்கும் விற்பனையாகிறது.

இரண்டாவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
16-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,120
15-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,120
14-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,120
13-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,840
12-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
16-12-2024- ஒரு கிராம் ரூ. 100
15-12-2024- ஒரு கிராம் ரூ. 100
14-12-2024- ஒரு கிராம் ரூ. 100
13-12-2024- ஒரு கிராம் ரூ. 101
12-12-2024- ஒரு கிராம் ரூ. 104
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று (டிசம்பர் 16) காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது இன்றும், நாளையம் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரும்.
இதன் காரணமாக தமிழகத்தின் வட கடலோர பகுதிகள் மற்றும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி தமிழகத்தின் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு இன்று கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- தற்போது அணையில் 91.14 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 118.53 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 7148 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 7368 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தற்போது அணையில் 91.14 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- பால் விற்பனையில் தமிழகத்தின் முன்னோடி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது.
- தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான பாலின் விற்பனை அளவை குறைக்கவில்லை.
சென்னை:
அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பால் விற்பனையில் தமிழகத்தின் முன்னோடி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த 2019-20-ம் ஆண்டில் சுமார் 23 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் விற்பனை தற்போது 2024-25-ல் சுமார் 7 லட்சம் லிட்டர் அதிகரித்து 30 லட்சம் லிட்டர் என்ற அளவில் விற்பனையாகிறது..
மேலும் பொதுமக்கள் உடல் நலத்திற்கு ஏற்றவாறு வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு அனைவரும் விரும்பும் வகையில், புதிய வகையான கிரீன் மேஜிக் பிளஸ் பால் சோதனை அடிப்படையில் சில ஒன்றியங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பொதுமக்கள் விருப்பத்திற்கு இணங்க அனைத்து தனியார் நிறுவனத்தின் விற்பனை விலையைக்காட்டிலும் குறைவான விலையில் ஆவின் நிறுவனம் பால் விற்பனை செய்து வருகிறது. புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட பால் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படும். மேலும், தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான பாலின் விற்பனை அளவை குறைக்கவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சில தேர்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளினால் சில தேர்வர்களால் இந்த தேர்வினை முழுமையாக முடிக்க இயலவில்லை.
- மறுதேர்வுக்கான நுழைவுச்சீட்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மட்டும் பின்னர், தனியே தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்படும்
சென்னை:
தமிழ்நாட்டில் அரசு பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வுகள் நடத்தி நிரப்பப்படும். அதன்படி கடந்த 14-ந்தேதி இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கறிஞர் பதவிக்கான தேர்வு நடந்தது. 15 மாவட்ட மையங்களில் 4,186 பேர் இத்தேர்வை எழுதினர்.
இந்த நிலையில், அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
சில தேர்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளினால் சில தேர்வர்களால் இந்த தேர்வினை முழுமையாக முடிக்க இயலவில்லை. இதனைத் தொடர்ந்து தேர்வர்களிடமிருந்து மறுதேர்வு நடத்திட வேண்டி தேர்வாணையத்தில் கோரிக்கை பெறப்பட்டது. தேர்வர்களின் கோரிக்கையினை தேர்வாணையம் முறையாகப் பரிசீலனை செய்து, அதனை ஏற்று மேற்கண்ட பதவிக்காக நடைபெற்ற கணினிவழித் தேர்வினை தேர்வாணையம் ரத்து செய்கிறது.
மேலும், ஏற்கனவே இத்தேர்விற்காகத் தேர்வாணையத்தால் அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு, மறுதேர்வு 22.02.2025 அன்று ஒளிக்குறி உணரி (OMR) முறையில் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மறுதேர்வுக்கான நுழைவுச்சீட்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மட்டும் பின்னர், தனியே தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருவேதி மற்றும் மோகனரங்கம் ஆகியோரது நுண்ணுயிர் பரிசோதனை முடிவு வந்துள்ளது.
- தமிழக சுகாதார துறையும் காலரா ஏற்படுத்தும் கிருமிகள் அந்த தண்ணீரில் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
பல்லாவரம்:
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி 13-வது வார்டுக்கு உட்பட்ட பல்லாவரம் காமராஜ் நகர் மற்றும் 6-வது வார்டுக்கு உட்பட்ட கண்டோன்மென்ட் பகுதியில் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் வினியோகம் செய்த குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததாகவும், அந்த தண்ணீரை குடித்ததால்தான் திருவேதி மற்றும் மோகனரங்கம் ஆகிய 2 பேர் பலியானதாகவும் கூறப்பட்டது.
மேலும் வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஆனால் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த 2 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அவர்களது சாவுக்கான காரணம் தெரியவரும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் திருவேதி மற்றும் மோகனரங்கம் ஆகியோரது நுண்ணுயிர் பரிசோதனை முடிவு வந்துள்ளது. அதில் உயிரிழந்த 2 பேருக்கும் கிருமி பாதிப்பு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளதாக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர்.
தடய அறிவியல் துறைக்கு அனுப்பப்பட்ட ரசாயன பகுப்பாய்வு முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. அந்த முடிவுகள் வந்த பிறகு இவர்களது சாவுக்கான காரணம் தெரிய வரும் எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குடிநீர் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் ஈ கோலி பாக்டீரியாக்கள் அதில் இல்லை என தெரிவித்துள்ளனர். அதேபோல தமிழக சுகாதார துறையும் காலரா ஏற்படுத்தும் கிருமிகள் அந்த தண்ணீரில் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் தாம்பரம் மாநகராட்சி சார்பில் கண்ணபிரான் கோவில் தெருவில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு தற்போது குடிநீர் பகிர்மான குழாய்கள் முழுவதும் குளோரின் மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளது. மீண்டும் கடந்த 12-ந் தேதி குடிநீர் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த முடிவுகள் வந்த பிறகு குடிநீர் பகிர்மான குழாய்கள் மூலம் மீண்டும் குடிநீர் வினியோகம் நடைபெறும் எனவும், அதுவரை லாரிகள் மூலம் அந்த பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நடைபெறும் எனவும் மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர் தெரிவித்தார்.
இந்தநிலையில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தனியார் ஆய்வுகள் முடிவுகளை வெளியிட்டு, பல்லாவரத்தில் வினியோகம் செய்த குடிநீரில் ஈகோலி பாக்டீரியாக்கள் அதிகளவு இருந்ததாக தெரிவித்து குற்றம்சாட்டி இருந்தார்.
இதுபற்றி தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "குடிநீரில் எந்த பாதிப்பும் இல்லை. அந்த பகுதியில் ரசாயன குடோன்கள் அதிக அளவு இருப்பதால் அதில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக" தெரிவித்தனர்.
- விக்கிரவாண்டி, அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 2 ஆயிரத்து 906 டன் வேளாண் விளைபொருட்கள் சேதம் அடைந்துள்ளது.
- கணக்கீட்டின்போது பாதிப்படைந்த எந்த விவசாயியும் விடுபடக்கூடாது.
சென்னை:
தமிழகத்தில் 'ஃபெஞ்சல்' புயல் மற்றும் வடகிழக்கு பருவ மழையினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த ஆய்வு கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது.
அனைத்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்கள், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர்கள் காணொலி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றனர். வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வா முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் ஏற்பட்ட 'ஃபெஞ்சல்' புயல் காரணமாக 2 லட்சத்து 86 ஆயிரத்து 69 ஹெக்டேர் பரப்பில் வேளாண் பயிர்களும், 73 ஆயிரத்து 263 ஹெக்டேர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளன, இதனைத் தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக 2 லட்சத்து 25 ஆயிரத்து 655 ஹெக்டேர் பரப்பில் வேளாண் பயிர்களும், 45 ஆயிரத்து 634 ஹெக்டர் பரப்பில் தோட்டக்கலைப்பயிர்களும் சேதமடைந்துள்ளன. ஆக மொத்தம் இதுநாள் வரை 6 லட்சத்து 30 ஆயிரத்து 621 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி மற்றும் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 2 ஆயிரத்து 906 டன் வேளாண் விளைபொருட்கள் சேதம் அடைந்துள்ளது. மேலும் பயிர் சேதப்பரப்பு கணக்கீட்டுப் பணியை முடித்து, மாநில பேரிடர் நிவாரணத் தொகையை விவசாயிகளுக்கு விரைவாக பெற்றுத்தரும் வகையில் அதிகாரிகள் உரிய கருத்துக்களை அரசிற்கு விரைவில் அனுப்பப்பட வேண்டும்.
இந்த கணக்கீட்டின்போது பாதிப்படைந்த எந்த விவசாயியும் விடுபடக்கூடாது. விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டை ஈடுகட்டும் விதமாக, பயிர் காப்பீட்டின் கீழ் விரைவாக இழப்பீடு வழங்குவது குறித்து விவாதிப்பதற்காக புள்ளியியல் துறை மற்றும் பயிர் காப்பீடு நிறுவனங்களுடன் கூட்டம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வேளாண்மைத்துறை இயக்குனர் முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன், வடிநீர்ப்பகுதி மேம்பாட்டு முகமையின் மேலாண்மை இயக்குனர் ஜெயகாந்தன், தலைமைப் பொறியாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரும்.
- கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று (டிசம்பர் 16) காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது இன்றும், நாளையம் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரும்.
இதன் காரணமாக தமிழகத்தின் வட கடலோர பகுதிகள் மற்றும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி தமிழகத்தின் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு இன்று கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதே போல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பூந்தமல்லி தனி கிளை சிறை வளாகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் தீவிர சோதனை செய்யப்பட்ட பிறகே சிறைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி சிறையில் கஞ்சா, செல்போன், பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உள்பட 38 கைதிகள் புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர்.
பூந்தமல்லி தனி கிளை சிறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைதிகளின் அறையில் சிறைத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 20 கிராம் கஞ்சா, 5 செல்போன்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் பூந்தமல்லி போலீசார் சிறைக்குள் இருக்கும் கைதிகளுக்கு கஞ்சா, செல்போன் கிடைத்தது எப்படி? என விசாரித்து வருகின்றனர். சிறைத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் கஞ்சா மற்றும் செல்போன் சிறைக்குள் சென்றிருக்க வாய்ப்பு இல்லை என்பதால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த துணை ஜெயிலர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் எதிரொலியாக பூந்தமல்லி தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஷ்வத்தாமன் உள்பட 23 பேர் மற்றும் மற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என மொத்தம் 38 கைதிகள் புழல் சிறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர்.
இவர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் இரவோடு இரவாக சிறைத்துறை அதிகாரிகள் பூந்தமல்லி சிறையில் இருந்து புழல் சிறைக்கு அழைத்துச்சென்றனர். இதையொட்டி பூந்தமல்லி தனி கிளை சிறை வளாகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் தீவிர சோதனை செய்யப்பட்ட பிறகே சிறைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.






