வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 6 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதம்

விக்கிரவாண்டி, அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 2 ஆயிரத்து 906 டன் வேளாண் விளைபொருட்கள் சேதம் அடைந்துள்ளது. கணக்கீட்டின்போது பாதிப்படைந்த எந்த விவசாயியும் விடுபடக்கூடாது.
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 6 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதம்
Published on

சென்னை:

தமிழகத்தில் 'ஃபெஞ்சல்' புயல் மற்றும் வடகிழக்கு பருவ மழையினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த ஆய்வு கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது.

அனைத்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்கள், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர்கள் காணொலி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றனர். வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வா முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் ஏற்பட்ட 'ஃபெஞ்சல்' புயல் காரணமாக 2 லட்சத்து 86 ஆயிரத்து 69 ஹெக்டேர் பரப்பில் வேளாண் பயிர்களும், 73 ஆயிரத்து 263 ஹெக்டேர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளன, இதனைத் தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக 2 லட்சத்து 25 ஆயிரத்து 655 ஹெக்டேர் பரப்பில் வேளாண் பயிர்களும், 45 ஆயிரத்து 634 ஹெக்டர் பரப்பில் தோட்டக்கலைப்பயிர்களும் சேதமடைந்துள்ளன. ஆக மொத்தம் இதுநாள் வரை 6 லட்சத்து 30 ஆயிரத்து 621 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி மற்றும் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 2 ஆயிரத்து 906 டன் வேளாண் விளைபொருட்கள் சேதம் அடைந்துள்ளது. மேலும் பயிர் சேதப்பரப்பு கணக்கீட்டுப் பணியை முடித்து, மாநில பேரிடர் நிவாரணத் தொகையை விவசாயிகளுக்கு விரைவாக பெற்றுத்தரும் வகையில் அதிகாரிகள் உரிய கருத்துக்களை அரசிற்கு விரைவில் அனுப்பப்பட வேண்டும்.

இந்த கணக்கீட்டின்போது பாதிப்படைந்த எந்த விவசாயியும் விடுபடக்கூடாது. விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டை ஈடுகட்டும் விதமாக, பயிர் காப்பீட்டின் கீழ் விரைவாக இழப்பீடு வழங்குவது குறித்து விவாதிப்பதற்காக புள்ளியியல் துறை மற்றும் பயிர் காப்பீடு நிறுவனங்களுடன் கூட்டம் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வேளாண்மைத்துறை இயக்குனர் முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன், வடிநீர்ப்பகுதி மேம்பாட்டு முகமையின் மேலாண்மை இயக்குனர் ஜெயகாந்தன், தலைமைப் பொறியாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com