என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர்.
    • சுற்றுலா பயணிகள் மீன் அருங்காட்சியகம், முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றிப் பார்த்தனர்.

    பென்னாகரம்:

    பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதால் இன்று ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் குளித்தும் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கலுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும் பரிசலில் சென்று மகிழ்ந்து செல்வார்.

    இதனிடையே ஒகேனக்கலுக்கு நேற்று 3,500 கனஅடி அளவில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்தானது இன்றும் அதே நிலை நீடித்து வருகிறது. நீர்வரத்து குறைந்தபோதிலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.

    இந்த நீர் வரத்தை காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் என்பதாலும், பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து தொடர் விடுமுறை விடப்பட்டதால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் ஒகேனக்கலில் குவிந்தனர்.

    அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர் நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே கொட்டும் இயற்கை அருவிகளை ரசித்தபடி காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசலில் சென்றனர்.

    பின்னர் சுற்றுலா பயணிகள் மீன் அருங்காட்சியகம், முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றிப் பார்த்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்றும் காவிரி ஆற்றை அவர்கள் கண்டு ரசித்தனர்.

    சுற்றுலா பயணிகளின வருகை அதிகரிப்பால், மீன் கடைகள், ஓட்டல்கள், பரிசல் நிலையம், கடைவீதி என ஒகேனக்கல் முழுவதும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

    இதேபோல் ஒகேனக்கல் பஸ் நிலையத்திலும் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் ஒகேனக்கல் சுங்கச்சாவடியில் சுற்றுலா பயணிகளின் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. 

    • தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நேற்று மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று மாலை 17.30 மணி அளவில் அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழந்து, இன்று காலை 8.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24ஆம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை ஒட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும்.

    இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    24-ந்தேதி வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    25-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று மற்றும் நாளை வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • தமிழக தென்னை விவசாயிகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
    • தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களுக்குச் சிறந்த வருமானத்தையும் உறுதி செய்யும்.

    வரும் 2025ம் ஆண்டு பயிர் பருவத்தில் கொப்பரை ஆதார விலையை உயர்த்தி வழங்கிய பிரதமர் மோடிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    வரும் 2025 ஆம் ஆண்டு பயிர் பருவத்தில், அரவைக் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, ஒரு குவிண்டாலுக்கு ரூ.11,582 ஆகவும், பந்து கொப்பரை ஒரு குவிண்டாலுக்கு ரூ.12,100 ஆகவும் உயர்த்தி வழங்கியதற்காக, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பாஜக

    மற்றும் தமிழக தென்னை விவசாயிகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    நாட்டில் 25.7% தென்னை உற்பத்தியாளர்கள் தமிழகத்தில் உள்ள நிலையில், குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்கியிருப்பது, தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களுக்குச் சிறந்த வருமானத்தையும் உறுதி செய்யும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சாதிவாரி கணக்கெடுப்பை பா.ஜ.க. நடத்துமா?
    • இவ்வளவு உயரம் தொட்ட இளையராஜா மீதே சாதி சேற்று பூசுகின்றனர்.

    திருச்சி:

    நாம் தமிழர் கட்சி சார்பில் 'அண்ணனுடன் ஆயிரம் பேர் சந்திப்பு' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரளாவில் இருந்து மருத்துவ கழிவு கொட்டப்பட்டது தொடர்பாக மாநில அரசிடம் பல முறை கூறியுள்ளேன். சோதனைச்சாவடி தாண்டி எப்படி இங்கு வந்தது. தம்ழகத்தில் மருத்துவ கழிவு கொட்டப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது.

    நாடே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வட மாவட்டங்களில் பல இடங்கள் சேதம் அடைந்துள்ளது. இந்த ஆட்சியில் என்ன சாதனை செய்தார்கள். தமிழ்நாட்டில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

    வெளியே செல்ல வேண்டும் என்றால் அச்சமாக உள்ளது. ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. செவிலியர்களின் கோரிக்கை ஏற்கவில்லை. விவசாயிகள், மருத்துவர்கள் பல போராட்டம் நடத்துகிறார்கள்.

    மாணவர்கள், தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் தி.மு.க. நல்லாட்சி கொடுக்கிறோம் என்று சொல்லுகிறார்கள். வெள்ள பாதிப்பு குறித்து இதுவரை தெளிவான பதில் இல்லை.

    தமிழ்நாடு என்ற பெயரை மாற்றிவிட்டு கருணாநிதி நாடு என்று பெயர் வையுங்கள்.

    ஜல்லிகட்டு போட்டிக்கும், கலைஞருக்கும் என்ன சம்பந்தம். எதற்கு அவர் பெயர் வைக்க வேண்டும்? தமிழ்நாட்டில் எந்த நச்சு திட்டமாக இருந்தாலும் அதில் கருணாநிதி கையெழுத்து போட்டு இருப்பார்.

    பெருமைமிகு அடையாளங்களை மூடி விட்டு, அனைத்திற்கும் கலைஞர் பெயரை சூட்ட தி.மு.க. அரசு நினைக்கிறது. தி.மு.க. சாதனைகளை போர் பரணி பாட வேண்டும். சட்டம், ஒழுங்கி பிரச்சனை உள்ள நிலையில் தி.மு.க.வின் போர் பரணியை கேட்க நான் தயாராக இருக்கிறேன்.

    வேல்முருகருடன் இணைந்து பணியாற்ற அழைத்தேன். அப்போது தினகரனுடன் கூட்டணிக்கு போகலாம் என்று என்னை அழைத்தார். ஏனெனில் அவர் எம்.எல்.ஏ. ஆக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அவருக்கு பாதுகாப்பு இருக்காது. கட்சியை வளர்க்க முடியாது என்று கூறினார்.

    அதனால் தினகரனுடன் கூட்டணிக்கு போகலாம் என்று அழைத்தார். நீங்கள் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்றால் தினகரனுடன் கூட்டணி எதற்கு? தி.மு.க.வுடனே கூட்டணி அமைக்கலாமே என்று நான்தான் கூறினேன்.

    நான் இஸ்லாமியரின் ஓட்டை பொறுக்க நடந்து கொள்கிறேன் என்கிறார். என் தலைவன் மீது ஆணையாக சொல்கிறேன். இதுவரை இஸ்லாமியர்கள் எனக்கு ஓட்டு போட்டது இல்லை. இனிமேலும் போடுவார்களா என்று தெரியாது. இஸ்லாமியர்களை பொறுத்தவரை நாங்கள் பா.ஜ.க.வின் பி டீம். நான் ஏன் பி டீம் ஆனேன். ஏ டீமாக தி.மு.க. இருப்பதால் நான் பி டீம் ஆகி விட்டேன்.

    இந்த நாட்டில் தீர்ப்புகள்தான் சொல்லப்படுகிறது. நீதி வழங்கப்படுவதில்லை. இந்த நாட்டில் தீர்ப்பு மன்றங்கள் தான் உள்ளது. நீதிமன்றங்கள் கிடையாது. வர்கீஸ் பானு வழக்கில் கூட அனைத்து குற்றவாளிகளும் விடுதலை ஆகி விட்டனர்.

    இடஒதுக்கீடு என்று சொல்லக்கூடாது, இடப்பகிர்வு, இடப்பங்கீடு என்று தான் கூற வேண்டும். பாஜகவிற்கும் சமூக நீதிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? பா.ஜ.க.விற்கு சமூக நீதி மட்டுமல்ல ஜமுக்காள நீதி கூட கிடையாது.

    சாதிவாரி கணக்கெடுப்பை பா.ஜ.க. நடத்துமா? சமூகநீதி பேசுபவர்கள் பொருளாதார அடிப்படையில் எப்படி இடஒதுக்கீடு கொண்டு வந்தார்கள். இன்றைக்கு ஏழையாக இருக்கிற சீமான் நாளை அதானி, அம்பானி ஆகலாம். இவ்வளவு உயரம் தொட்ட இளையராஜா மீதே சாதி சேற்று பூசுகின்றனர்.

    திருப்போரூர் கோவிலுக்கு என்று தனிச்சட்டம் உள்ளதா என தெரியவில்லை? முருகன் யாரிடமாவது ஐபோனில் பேச வேண்டும் என்று ஆசைப்பட்டாரா என தெரியவில்லை? உண்டியலில் குண்டு விழுந்தால் அது கோவிலுக்கு சொந்தம் என்று கூறுவீர்களா? உண்டியலில் விழுந்த செல்போனை அவருக்கு திருப்பி அளித்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்த நிலையில் குடியிருப்பு வாசிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்னார்.
    • தண்ணீர் செல்லும் பாதையை மீட்டெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்மென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி குள்ளனுர் கோணனூர், வடமலம்பட்டி மற்றும் அதன் சுற்றிய வட்டார கிராமங்களில் நேற்று இரவு கன மழை பெய்தது.

    கனமழைக்கு குள்ளனூர் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்த நிலையில் குடியிருப்பு வாசிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்னார்.

    மேலும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழைக்கு குடியிருப்பு பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரானது புகுந்து பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் நேற்று இரவு பெய்த கனமழைக்கு குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்த நிலையில் வீட்டிலிருந்த அரிசி துணி மற்றும் பொருட்கள் ஆவணங்கள் சேதமாகியுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    தற்பொழுது குடியிருப்பு வாசிகள் வீட்டில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு உள்ள நிலையில் கிராம மக்களுக்கு கூறுகையில்,


    குள்ளனூர் கிராமம் முதல் போச்சம்பள்ளி வரையில் தண்ணீர் செல்லும் பாதையானது தற்போது ஆக்கிரமிப்பு செய்து மண் கொட்டி சமப்படுத்தப்பட்ட நிலையில் தண்ணீரானது செல்ல பாதை இல்லாமல் குடியிருப்பு பகுதியில் புகுந்து அடிக்கடி பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

    எனவே தண்ணீர் செல்லும் பாதையை மீட்டெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்மென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வீடுகளுக்குள் மழை நீர் புகுந்த பகுதிகளை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான் இன்று காலை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து அவர் ஏரி கால்வாய் பகுதிகளை அகலப்படுத்தவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம் அமைக்கவும், உடனே உணவு வழங்கவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • நிகழ்ச்சி தியாகராஜர் ஆராதனை விழா என அழைக்கப்படுகிறது.
    • பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

    தஞ்சாவூர்:

    கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக திகழ்ந்தவர் தியாகராஜர் சுவாமிகள். இவரை தியாக பிரம்மம் என அழைக்கிறார்கள்.

    இவருடைய சமாதி தஞ்சை மாவட்டம் திருவையாறில் காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் இசை கலைஞர்கள் ஒன்று கூடி பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சி தியாகராஜர் ஆராதனை விழா என அழைக்கப்படுகிறது.

    அதன்படி தியாகராஜ சுவாமிகளின் 178-வது ஆண்டு ஆராதனை விழா அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

    இதை முன்னிட்டு திருவையாறு தியாகராஜர் ஆசிரமத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. முன்னதாக தியாகராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபா அறங்காவலர் சுரேஷ் மூப்பனார் தலைமையில் பந்தக்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் கணேஷ், அறங்காவலர்கள் டெக்கான் மூர்த்தி, சுந்தரம், உறுப்பினர்கள் சுதாகர் மூப்பனார், நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை தொடர்ந்து அறங்காவலர் சுரேஷ் மூப்பனார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- தியாகராஜர் சுவாமிகளின் ஆராதனை விழா அடுத்த மாதம் 14 ஆம் தேதி தொடங்கி 18-ந்தேதி வரை நடக்கிறது. தொடக்க நாளான 14-ந் மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது.

    தொடக்க நிகழ்ச்சியில் சபையின் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி, மாவட்ட கலெக்டர் பிரியங்காபங்கஜம் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி தினமான 18-ந்தேதி ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா நடக்கிறது. தேசிய நிகழ்ச்சியான அன்றைய தினம் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர் குறித்து ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படும். அன்றைய தினம் சங்கீத வித்வான்கள், வித்வாம்சினிகள் உள்ளிட்ட ஏராளமான கலைஞர்கள் பங்கேற்று பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். விழா நடைபெறும் ஐந்து நாட்களிலும் பல்வேறு கலைஞர்கள் கலந்து கொண்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திராவிட மாடல் அரசு கடந்த மூன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்கள் எண்ணற்றவை.
    • கச்சத்தீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    அரசியல் சட்டத்தின் தந்தை என்று போற்றப்படும்-அடித்தட்டு மக்களின் குரலாக அரசியல் நிர்ணய சபையில் எதிரொலித்து-இரவு பகலாக பாடுபட்டு-உலக அரங்கில் இந்திய ஜனநாயகம் ஒளிரும் வகையில்-வரலாற்றுச் சிறப்பு மிக்க அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களை தரம் தாழ்ந்து, அவதூறாகப் பேசி-அவரது தியாகத்தை இழிவு படுத்தியிருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு இந்த செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.


    இச்செய்தி கிடைத்தவுடன் உணர்ச்சிப் பிழம்பாக பீறிட்டுக் கிளம்பி-மாநிலமெங்கும் அனல் பறக்கும் ஆவேசப் போராட்டத்தை நடத்திய திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள்-அப்போராட்டங்களில் தன்னெழுச்சியாக திரண்ட மக்கள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டனக் குரல் எழுப்பிய தி.மு.க மற்றும் தோழமைக் கட்சியின் எம்.பி.க்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த செயற்குழு தனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

    ஜனநாயகத்தின் திருக்கோவிலான நாடாளுமன்றத்தில் நாட்டின் உள்துறை அமைச்சரே இப்படி அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசி அருவருக்கத்தக்க அநாகரீக அரசியலை அரங்கேற்றி இருப்பது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு பா.ஜ.க. ஆட்சியில் ஏற்பட்டுள்ள மீளாத் தலைகுனிவு. எவரும் ஏற்கமுடியாத-எந்தக் காலத்திலும் நடைபெற்றிடாத ஒரு உள்துறை அமைச்சரின் பேச்சை திசை திருப்ப நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பா.ஜ.க. நடத்தும் நாடகங்கள் அதை விட கேலிக்கூத்தானது.



    "நான் முதலமைச்சர் பதவியில் இருக்கும் வரை டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு மாநில அரசு அனுமதி அளிக்காது" என்று துணிச்சலாக சட்டமன்றத்தில் அறிவித்தார் நமது திராவிட மாடல் முதலமைச்சர். "டங்ஸ்டன் கனிமத்தை ஏலம் விடும் உரிமையை எடுத்துக் கொண்ட பா.ஜ.க. அரசும்" "அப்படி பறித்துக் கொள்ள வாக்களித்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்த அ.தி.மு.க.வும்" கைகோத்துக் கொண்டு உருவாக்கிய டங்ஸ்டன் பிரச்சனையை மறைத்து கபட நாடகம் போடும் அ.தி.மு.க.விற்கும், பா.ஜ.க. அரசுக்கும் இச்செயற்குழு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

    "வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவை" தந்தை பெரியார் முன்னின்று போராடிய வைக்கத்தில் கேரள முதல்-மந்திரியுடன் கொண்டாடி-தந்தை பெரியாருக்கு அங்கே "புதுப்பிக்கப்பட்ட நினைவகம், நூலகம், கம்பீரமான சிலை" என முப்பெரும் சாதனைச் சின்னங்களை வைக்கத்தில் நிறுவி-தமிழ்நாட்டின் சமூக நீதிச் சுடரை வைக்கத்திற்குக் கொண்டு சென்று-அங்கே மாபெரும் விழா எடுத்து தந்தை பெரியாரின் புகழ்பாடி-இரு மாநிலங்களுக்கு இடையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை உள்ளிட்ட நதி நீர் மற்றும் குடிநீர் திட்டங்கள் குறித்தும் ஆக்கப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தி திரும்பி இருப்பதற்கும் முதலமைச்சருக்கு செயற்குழு தனது பாராட்டு தலைத் தெரிவித்துக் கொள்கிறது.

    குமரி முனையில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலையினை 1.1.2000 அன்று உலகம் வியக்கும் வகையில் நிறுவித் திறந்து வைத்தார் கலைஞர்.

    திருவள்ளுவர் சிலை ஆழிப்பேரலையையும் எதிர்கொண்டு, கால் நூற்றாண்டு காலமாக கம்பீரத்துடன் நிற்கிறது. அறிவு அற்றம் காக்கும் கருவி என்றுரைத்த அய்யன் வள்ளுவரின் சிலையின் வெள்ளிவிழாச் சிறப்பைப் பெருமிதத்துடன் வெளிப்படுத்தும் வகையில் டிசம்பர் 30, 31 ஆகிய நாட்களில் கன்னியாகுமரியில் எழிலுடனும் ஏற்றத்துடனும் கொண்டாடும் முதலமைச்சருக்குப் பாராட்டுதல்களைத் தெரிவித்து, உலகப் பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவர் சிலையை 'பேரறிவுச் சிலை' யாக போற்றிடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னெடுத்து, சமத்துவத்தை நிலை நாட்டுவோம்.

    தமிழ்நாட்டிற்கு ஒவ்வாத பிற ஆதிக்க கலாசாரங்களை முறியடிக்கும் முறையிலும் தை முதல் நாளன்று தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளைத் தமிழர் பண்பாட்டுத் திருநாளாக, தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் தமிழர் வாழும் நாடுகளெங்கும் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடி, தமிழர் பண்பாட்டிற்குரிய கலை-இசை நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுகள் ஆகியவற்றை நடத்தி, தமிழர்களின் தனித்துவத்தை நிலைநாட்டிட வேண்டும்.

    திராவிட மாடல் அரசு கடந்த மூன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்கள் எண்ணற்றவை.

    பன்முக வளர்ச்சிக்கு அடிகோலும் திட்டங்களை பட்டி தொட்டிகளுக்கு எல்லாம் கழக உடன்பிறப்புகள் எடுத்துச் சென்று-"அமைந்ததோர் திராவிட மாடல் நல்லாட்சி-அணிவகுக்கும் மக்கள் நலத் திட்டங்களே அதற்கு சாட்சி" என்று விளக்கிட வேண்டும்.

    2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. 200 இடங்களில்-ஏன் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற இன்றே புறப்படுவீர். சாதனைகளை போர்ப் பரணி பாடுவீர். கழக ஆட்சி வருங்காலங்களிலும் தொடர்ந்திடும் என்பதை உறுதிசெய்வீர் என்று கழக உடன்பிறப்புகளை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

    "இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவித்து-பறிமுதல் செய்த படகுகளையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும்" என்று முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளை இச்செயற்குழுவும் வழிமொழிந்து-முதலமைச்சரின் ஆலோசனையை உரிய முறையில் மத்திய அரசு இலங்கை அரசிடம் தெரிவித்து-"இந்தியப் பிரதமர்-இலங்கை அதிபர்" ஆகியோரின் பேச்சுவார்த்தையினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு ஏதுவாக-தமிழ்நாடு மீனவர்களை, படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும்-தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை விரைந்து காணவும், கச்சத்தீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • திமுக-வுக்கு மகளிர் ஆதரவு அபரிமிதமாக இருக்கிறது.

    சென்னை

    தி.மு.க. தலைமை செயற் குழு கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

    பரபரப்பான அரசியல் சூழலில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்ட துணைப் பொதுச் செயலாளர்கள், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ. க்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும் மறைந்த பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் வாசித்தார்.

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கலைஞரின் செயலாளர் கோ.சண்முக நாதன், கும்மிடிப்பூண்டி வேணு, கு.க.செல்வம், விக்கிரவாண்டி நா.புகழேந்தி, தலைமை கழக அலுவலக துணை மேலாளர் ஜெயக்குமார், கண்டோன்மென்ட் சண்முகம், புதுச்சேரி டி.ராமச்சந்திரன், க.சுந்தரம், ஸ்ரீபெரும்புதூர் கோதண்டம், கோவை செல்வராஜ், இரா.மோகன், சி.வி.மலையன், ஷீபா.வாசு, ஆலப்பாகம் சண்முகம், புலவர் இந்திரகுமாரி, கயல் தினகரன் உள்ளிட்ட மறைந்த நிர்வாகிகளுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதையடுத்து "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்திற்கு எதிர்ப்பு, அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



    இதன்பின் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமூக வலைத்தளங்களில் திமுகவை பலப்படுத்த வேண்டும். முதலமைச்சர் தலைமையில் எந்த தேர்தலிலும் தோற்கவில்லை. திமுக-வுக்கு மகளிர் ஆதரவு அபரிமிதமாக இருக்கிறது. நம் கூட்டணி நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டிருக்கிறது. 2026 சட்மன்ற தேர்தலில் 200 இல்லை 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம். 2026-ல் நாம் பெறும் வெற்றி தமிழ்நாட்டுக்கான வெற்றி மட்டுமல்ல இந்தியாவுக்கான வெற்றி என்று பேசினார்.

    இதையடுத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் ஏழாவது முறை ஆட்சி அமைக்கணும் என்பது தான் நம்முடைய இலக்கு. 200 தொகுதிகளில் நம்முடைய கூட்டணி வெல்லும். 2026-ல் வெற்றி நமது தான் என்றார்.

    • எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்குவதற்காக பா.ஜ.க. செயல்பட்டு வந்தது.
    • ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மாநில உரிமைகளை பறிக்கும் செயல்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் காங்கிரஸ் எம்.பி.சசிகாந்த் செந்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வரலாறு காணாத வகையில் குளிர் கால பாராளுமன்ற கூட்டத் தொடர் நடந்து முடிவடைந்தது. கூட்டத்தொடர் ஆரம்பித்த தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்குவதற்காக பா.ஜ.க. செயல்பட்டு வந்தது.

    அதானி தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசினால் பா.ஜ.க.வுக்கு ஒரு வித பயம் உருவாவதை பார்த்தோம். ஜனநாயகம் அரசியல் வரலாறு உள்ள நாட்டில் அதானி என்ற ஒரு மனிதனுக்காக பா.ஜ.க. இறங்கி போகிறது.

    பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் பா.ஜ.க. அம்பேத்கரை பற்றி பேசுவதற்கான கருத்தை உருவாக்கி வைத்துள்ளது. பா.ஜ.க. இதுவரை அம்பேத்கரை பற்றியும், அரசியலமைப்பு சட்டத்தை பற்றியும் பேசியதை நான் பார்த்ததில்லை. பா.ஜ.க.வின் உண்மையான வெறுப்பு, கோபம் எல்லாமே அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது இருந்து வருகிறது.

    ஒரு தேர்தலையே ஒரே பகுதியாக வைத்து நடத்த முடியாத நிலையில் எப்படி ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த முடியும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மாநில உரிமைகளை பறிக்கும் செயல். அடிப்படை ஜனநாயக தவறு.

    சென்னைக்கு அடுத்த படியாக முக்கிய ரெயில் நிலையமாக திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையங்கள் உள்ளது. இந்த ரெயில் நிலையங்களில் வருங்காலத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக ரெயில்வே துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

    திருவள்ளூரில் புதிய ரெயில் முனையம் அமைக்கவும் கோரிக்கை விடுத்து உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது திருவள்ளூர் தொகுதி பாராளுமன்ற பொறுப்பாளர் ஏ.ஜி.சிதம்பரம், மாநில நிர்வாகிகள் எம்.சம்பத், ஏகாட்டூர் ஆனந்தன், ஜெ.கே.வெங்கடேசன், ஆர்.சசிகுமார், ஆ.திவாகர், சதீஷ், உடன் இருந்தனர்.

    • ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே வழி சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடைபெறுவது தான்.
    • தீர்ப்பளிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை சைதாப்பேட்டை சின்னமலையைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மியில் பெரும் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலைத் தாங்க முடியாமல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆகாஷை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆகாஷ் பல மாதங்களாகவே ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி இருந்தார். அவருக்கு வேலை கிடைக்காத நிலையில், ஆன்லைன் ரம்மி ஆடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். தொடக்கத்தில் அதன் மூலம் பணம் கிடைத்த நிலையில், மேலும் மேலும் பணம் ஈட்ட வேண்டும் என்ற ஆசையில் ஆன்லைன் ரம்மி விளையாடி தம்மிடம் இருந்த பணத்தையும், கடன் வாங்கிய பணத்தையும் தொலைத்துள்ளார். கடைசியாக தமது தாயாரின் மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த ரூ.30 ஆயிரம் பணத்தையும் எடுத்து ஆன்லைன் ரம்மி ஆடி இழந்துள்ளார். ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு ஆகாஷ் தான் மோசமான எடுத்துக்காட்டு ஆவார்.

    பா.ம.க. நடத்திய தொடர் போராட்டங்களின் காரணமாக ஆன்லைன் சூதாட்டம் இரு முறை தடை செய்யப்பட்டது. ஆனாலும், அந்தத் தடையை நீதிமன்றத்தில் நியாயப்படுத்த தமிழக அரசு தவறி விட்டதன் காரணமாகவே ஆன்லைன் சூதாட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்திருக்கிறது. தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பிறகு கடந்த ஓராண்டில் மொத்தம் 16 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆகாஷ் ஆன்லைன் ரம்மிக்கு பலியான 17-ஆம் நபர் ஆவார்.

    ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே வழி சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடைபெறுவது தான். ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அதை ஐந்தே நாட்களில் விசாரணைக்கு கொண்டு வர முடிந்த தமிழக அரசால் தமிழ்நாட்டு மக்களை பலி கொண்டு வரும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை கோரும் மனுவை மட்டும் ஓராண்டுக்கும் மேலாக விசாரணைக்கு கொண்டு வர முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்து பல குடும்பங்கள் வீதிக்கு வருவதைத் தடுப்பதும், தற்கொலை செய்து கொள்வதைத் தடுப்பதும் தான் அரசின் பணியாக இருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய தமிழக அரசு தவறுவதைப் பார்க்கும் போது, ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதைப் போலத் தான் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் நடப்பது மக்களைக் காக்கும் அரசா, ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? என்பதே தெரியவில்லை.

    தமிழக அரசின் அலட்சியம் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 17 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது? தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 200 தொகுதியில் வெற்றி பெறும் என்று கூறுகிறார்கள். ஆனால் மக்கள் வாக்களிக்க தயாராக இல்லை.
    • கேள்வி நேரத்தில் கூட கேள்வி கேட்பதற்கு உரிமை மறுக்கப்படுகிறது.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் வளர்ச்சிக்காக, சட்டங்களை இயற்றி மக்களுக்கான திட்டங்களை கொடுத்து செயல்படுத்த வேண்டிய சட்டசபை கடந்த நான்காண்டு திராவிட முன்னேற்றக்கழக அரசு, மக்கள் பிரச்சனைகளை விவாதிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சிகளுக்கு போதிய நேரம் ஒதுக்கப்படுகிறதா? என்றால் மிகப்பெரிய அளவில் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    வருகிற 2025 ஆம் ஆண்டு முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையோடு ஜனவரி 6-ந்தேதி தொடங்க இருப்பதாக பேரவை தலைவர் அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே எடப்பாடியார் பேசும்போது, நேரலை துண்டிக்கப்பட்டு ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டு இருந்தார்.

    நிதி அமைச்சர் கூட ரூ.26 ஆயிரம் கோடியை தமிழகத்திற்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். வளர்ச்சி திட்டம் எதுவும் செய்யவில்லை என்பது கடந்த நான்கு ஆண்டுகால தி.மு.க. ஆட்சியின் உண்மை நிலையாகும்.

    மழைநீர், வெள்ளை நீருக்கு நிவாரணம் இல்லை, வறட்சிக்கு நிவாரணம் இல்லை, பயிருக்கு நிவாரணம் இல்லை, உயிரிழப்புக்கு நிவாரணம் இல்லை என்று எதையும் செய்யாத நிலையில் தான் தி.மு.க. அரசு உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 200 தொகுதியில் வெற்றி பெறும் என்று கூறுகிறார்கள். ஆனால் மக்கள் வாக்களிக்க தயாராக இல்லை. இந்த உண்மையை முதலமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும்.

    மக்கள் பிரச்சனையை பேசுகின்ற சட்டமன்றத்தில், மக்களுக்கு தேவையான சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றுவது தான் சட்டமன்றம். ஆனால் அங்கே என்ன நடைபெறுகிறது? எதிர்க்கட்சியினுடைய உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகிறது. கேள்வி நேரத்தில் கூட கேள்வி கேட்பதற்கு உரிமை மறுக்கப்படுகிறது.

    மக்களின் குறைகளை சட்டமன்றத்திலே எடுத்து வைத்தால் தானே, அது அமைச்சர்களுடைய கவனத்திற்கு சென்று அதற்கு தீர்வு கிடைக்கும். வருகின்ற ஜனவரி 6-ந்தேதி இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. அந்த கூட்டத்தொடரில் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடியே ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்துவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேளச்சேரி:

    பம்மல், செல்வ விநாயகர் கோவில் தெரு, சங்கர் நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர் விஷ்ணு பாண்டியன். இவரது மகன் கோகுல் (வயது 24). கந்தன் சாவடியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார்.

    அதே நிறுவனத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த விஷ்ணு (24) என்பவரும் என்ஜினீயராக பணியாற்றினார். இவர் மேற்கு மாம்பலம் கிருஷ்ணன் குட்டி தெருவில் தங்கி இருந்தார்.

    நேற்று இரவு நண்பர்களான கோகுலும், விஷ்ணுவும் ஒரே மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கரணை, ராஜலட்சுமி நகர், 6-வது தெருவில் வசித்து வரும் மற்றொரு நண்பரின் வீட்டுக்கு சென்றனர். அங்கு ஏற்கனவே மேலும் சில நண்பர்கள் வந்து இருந்தனர். அங்கு மது விருந்து நடந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மேலும் மதுபாட்டில் வாங்குவதற்காக பள்ளிக்கரணை 200 அடி சாலையில் உள்ள மதுபாருக்கு உயர்ரக கே.டி.எம். மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    மதுபாட்டில் வாங்கி கொண்டு திரும்பி செல்லும் போது வேளச்சேரி பிரதான சாலையில் ஆதிபுரீருஸ்வரர் சிவன் கோவில் எதிரே வந்து கொண்டு இருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவே இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது.

    இதில் நண்பர்கள் கோகுலும், விஷ்ணுவும் மோட்டார் சைக்கிளோடு பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர்.

    இந்த விபத்தில் கோகுலின் தலை அதிவேகமாக தடுப்பு சுவரில் மோதியதில் தலை துண்டாகி பலியானார். இதேபோல் தூக்கி வீசப்பட்ட விஷ்ணுவும் நெஞ்சில் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.

    இதனை கண்டு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான 2 என்ஜினீயர்களும் மதுபோதையில் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×