என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பா.ஜ.க.வின் உண்மையான வெறுப்பு: அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பு சட்டத்தின் மீது இருந்து வருகிறது- சசிகாந்த் செந்தில்
    X

    பா.ஜ.க.வின் உண்மையான வெறுப்பு: அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பு சட்டத்தின் மீது இருந்து வருகிறது- சசிகாந்த் செந்தில்

    • எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்குவதற்காக பா.ஜ.க. செயல்பட்டு வந்தது.
    • ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மாநில உரிமைகளை பறிக்கும் செயல்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் காங்கிரஸ் எம்.பி.சசிகாந்த் செந்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வரலாறு காணாத வகையில் குளிர் கால பாராளுமன்ற கூட்டத் தொடர் நடந்து முடிவடைந்தது. கூட்டத்தொடர் ஆரம்பித்த தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்குவதற்காக பா.ஜ.க. செயல்பட்டு வந்தது.

    அதானி தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசினால் பா.ஜ.க.வுக்கு ஒரு வித பயம் உருவாவதை பார்த்தோம். ஜனநாயகம் அரசியல் வரலாறு உள்ள நாட்டில் அதானி என்ற ஒரு மனிதனுக்காக பா.ஜ.க. இறங்கி போகிறது.

    பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் பா.ஜ.க. அம்பேத்கரை பற்றி பேசுவதற்கான கருத்தை உருவாக்கி வைத்துள்ளது. பா.ஜ.க. இதுவரை அம்பேத்கரை பற்றியும், அரசியலமைப்பு சட்டத்தை பற்றியும் பேசியதை நான் பார்த்ததில்லை. பா.ஜ.க.வின் உண்மையான வெறுப்பு, கோபம் எல்லாமே அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது இருந்து வருகிறது.

    ஒரு தேர்தலையே ஒரே பகுதியாக வைத்து நடத்த முடியாத நிலையில் எப்படி ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த முடியும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மாநில உரிமைகளை பறிக்கும் செயல். அடிப்படை ஜனநாயக தவறு.

    சென்னைக்கு அடுத்த படியாக முக்கிய ரெயில் நிலையமாக திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையங்கள் உள்ளது. இந்த ரெயில் நிலையங்களில் வருங்காலத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக ரெயில்வே துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

    திருவள்ளூரில் புதிய ரெயில் முனையம் அமைக்கவும் கோரிக்கை விடுத்து உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது திருவள்ளூர் தொகுதி பாராளுமன்ற பொறுப்பாளர் ஏ.ஜி.சிதம்பரம், மாநில நிர்வாகிகள் எம்.சம்பத், ஏகாட்டூர் ஆனந்தன், ஜெ.கே.வெங்கடேசன், ஆர்.சசிகுமார், ஆ.திவாகர், சதீஷ், உடன் இருந்தனர்.

    Next Story
    ×