என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த இலக்கியனை மடக்கி பிடித்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதர் சுவாமி கோவில் தெற்கு கோபுர வாசல் அருகே ஆபத்து விநாயகர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் நள்ளிரவு வெளிப்புறம் உள்ள சில்வர் கேட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரவு ரோந்து சென்ற பெட்ரோல் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், தலைமை ஏட்டு ஸ்டாலின் ஆகியோர் கோவில் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதைக் கண்டு அங்கு சென்றனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் ஒரு நபர் தப்பி ஓடினார். அங்கே இருந்த மற்ற இருவரை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் சீர்காழி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த கொளஞ்சி (வயது 42 ), அவரது சகோதரர் முத்து (35) என்பதும் தப்பி ஓடியவர் விளந்திடசமுத்திரம் அஞ்சலை நகர் பகுதியை சேர்ந்த இலக்கியன் (29) என்பதும் தெரியும் வந்தது.

    இவர்களிடம் இருந்து கோவில் உண்டியலில் கொள்ளையடித்து மூட்டை மூட்டையாக கட்டி வைத்திருந்த சுமார் ரூ.2 லட்சம் மற்றும் காசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதனிடையே தப்பி ஓடிய இலக்கியன் சீர்காழி விளந்திட சமுத்திரம் வில்வா நகரில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றபோது சத்தம் கேட்டு வெளியே வந்த வீட்டின் உரிமையாளரை தாக்கி தப்பி ஓடினார். இந்த தாக்குதலில் உரிமையாளர் காயமடைந்தார்.

    இதனை அறிந்த இன்ஸ்பெக்டர் புயல். பாலசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி, தலைமை ஏட்டு அன்பரசன், காவலர்கள் மணிகண்டன், ரஞ்சித்,ரம்யா, தனிப்பிரிவு காவலர் சார்லஸ் ஆகியோர் விளந்திடசமுத்திரம் பகுதிக்கு உடனடியாக சென்று தப்பி ஓடிய இலக்கியனை தேடினர். அப்போது அப்பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த இலக்கியனை மடக்கி பிடித்தனர்.

    தொடர்ந்து கொளஞ்சி, முத்து, இலக்கியன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கோவில் உண்டியல் திருட்டு, வீட்டில் திருட முயற்சி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் உடனடியாக போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

    • அண்ணா பல்கலை. சம்பத்திற்கு நான் என்னுடைய கண்டனத்தை தெரிவித்து இருக்கிறேன்.
    • விசாரணையில் யார் அந்த சார்... என்பது வெளிப்படலாம். அல்லது அப்படி ஒரு நபர் இல்லை என்பதும் தெரிய வரலாம்.

    சென்னையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மணிப்பூர் போன்ற மாநிலங்களில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை. அங்கு நம்முடைய பிரதமர் அங்கு சென்று என்ன என்று கூட கேட்கவில்லை.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு குற்றம் நடந்து இருக்கிறது. ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளார். நம்முடைய காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது.

    காவல்துறை நடவடிக்கை எடுத்த பிறகு, வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    நீதிமன்றத்தில் வழக்கு சரியாக நடத்தப்பட்டு, குற்றவாளிக்கு நியாயமான தண்டனை கிடைப்பதுதான் அந்த பெண்ணுக்கான நியாயம் கிடைத்ததாக இருக்கும். நாம் அதில் தான் கவனம் செலுத்த வேண்டும்.

    அண்ணா பல்கலை. சம்பவத்திற்கு நான் என்னுடைய கண்டனத்தை தெரிவித்து இருக்கிறேன்.

    பொள்ளாச்சி சம்பவம் போல் குற்றவாளிகளை காப்பாற்றக்கூடிய ஒரு நிலை இல்லை.

    குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    நீதிமன்றம் நியாயமாக தீர்ப்பு வழங்க வேண்டும். வழக்கு சரியாக நடத்தப்படுகிறா என்பதை கண்காணிக்க வேண்டும்.

    விசாரணையில் 'யார் அந்த சார்'... என்பது வெளிப்படலாம். அல்லது அப்படி ஒரு நபர் இல்லை என்பதும் தெரிய வரலாம்.

    நிர்பயா வழக்கில் கூட பா.ஜ.க.வில் சில பேர் 'அண்ணா' என்று சொல்லி இருந்தால் விட்டுருப்பார்கள் என்று சொன்னார்கள். நான் அப்படி சொல்லவில்லை.

    நடவடிக்கை எடுத்த பிறகு போராடக்கூடிய ஒரு சூழல் இருக்கும்போது, எதிர்க்கட்சி அதை கையில் எடுத்துக்கொண்டு அரசியலாக்கத்தான் பார்க்கிறார்கள்.

    எப்.ஐ.ஆர். வெளியானதற்கு தமிழக அரசு காரணம் இல்லை.

    அண்ணாமலை சவுக்கால் அடித்துக்கொண்டதற்கு நான் என்ன சொல்ல முடியும்.

    ஆடுகள் அடைக்கும் இடத்தில் ஆடுகளை விட்டு விட்டு ஏன் மனுஷங்களை அடைக்கப்போகிறார்கள் என்று கூறினார்.

    • தலைமை ஆசிரியை கலைச்செல்வி மீது புகார் எழுந்துள்ளது.
    • அதியமான் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேலு வத்தல்மலை அரசு மேல் நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

    தருமபுரி:

    தருமபுரி நகரில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில் பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தருமபுரி நகரில் உள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் தெரேசால், பணி ஓய்வு பெற்றதை அடுத்து கடந்த ஓராண்டுக்கு முன்பு கலைச்செல்வி, என்பவர் பாலக்கோடு மகளிர் அரசு பள்ளியில் இருந்து அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று கொண்டார்.

    இந்த நிலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த இப்பள்ளி தகைச்சாள் பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு தற்காலிகமாக ஆசிரியர்களை நியமித்ததில் முறைகேடு நடந்ததாக தலைமை ஆசிரியை கலைச்செல்வி மீது புகார் எழுந்துள்ளது.

    மேலும் அவர் மீது 50-க்கும் மேற்பட்ட பல்வேறு முறைகேடு புகார்களை தருமபுரிக்கு வந்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் பெற்றோர்கள் புகார் மனு அளித்தனர். இதை அடுத்து கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியர் மீது கூறப்பட்ட புகார் உண்மைதானா என விசாரணை நடத்தினர். இதில் முறைகேடு நடந்தது தெரியவந்தது.

    இதை அடுத்து நேற்று முன்தினம் தலைமை ஆசிரியை கலைச்செல்வி காமலாபுரம் அரசு மேல்நிலை பள்ளிக்கு இட மாற்றம் செய்யப்பட்டார். அங்கிருந்த தலைமை ஆசிரியர் சுதா, அவ்வையார் அரசு பள்ளிக்கு தலைமை ஆசிரியராக இடமாற்றம் செய்யப்பட்டு நேற்று முன்தினம் பொறுபேற்றார்.

    இதே போல் தருமபுரி நகர் அதியமான் ஆண்கள் பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டாக தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் தங்கவேலு. இவர் பொறுப்பேற்ற பின்னர் பொதுத் தேர்வில் தேர்ச்சி குறைவு, போட்டி தேர்வுகளில் மாணவர்கள் ஒருவர் கூட வெற்றி பெறாதது, உயர்கல்வி அதிகாரிகளுடன் இணக்கமாக செயல்படாதது என பல்வேறு குற்றச்சாட்டுகள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரால் கூறப்பட்டது.

    நேற்று முன்தினம் அதியமான் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேலு வத்தல்மலை அரசு மேல் நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். வத்தல்மலையில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் காமராஜ் தருமபுரி டவுன் அதியமான் அரசு மேல்நிலை பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார்.

    ஒரே நாளில் இரு மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டது கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    6-ந்தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    7-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    8 மற்றும் 9-ந்தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    10-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    நாளை குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • காயமடைந்தவர்களுக்கு, உயரிய சிகிச்சை அளிக்க, மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.
    • விதிமுறைகளை மீறியும், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமலும் ஆலை செயல்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், ஆறு பேர் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு, உயரிய சிகிச்சை அளிக்க, மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.

    விதிமுறைகளை மீறியும், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமலும் ஆலை செயல்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே, அனைத்து பட்டாசு ஆலைகளிலும், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்று சோதனை நடத்துமாறு, திமுக அரசை வலியுறுத்தியிருந்தோம். ஆனால், இது தொடர்பாக, திமுக அரசு எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை.

    இனியும் தாமதிக்காமல், அனைத்து பட்டாசு ஆலைகளிலும், தொழிலாளர்களுக்கு உரியப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்று சோதனை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க, திமுக அரசை வலியுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளார். 

    • எல்.கே.ஜி படிக்கும் குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்வது தனியார் பள்ளியின் கடமையாகும்.
    • குழந்தையின் இறப்பிற்கு தனியார் பள்ளி முழு பொறுப்பேற்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி படித்து வந்த மூன்றரை வயது சிறுமி லியா லட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ள செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். எல்.கே.ஜி படிக்கும் குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்வது தனியார் பள்ளியின் கடமையாகும். குழந்தையின் இறப்பிற்கு தனியார் பள்ளி முழு பொறுப்பேற்க வேண்டும்.

    மாவட்ட நிர்வாகம் விரும்பத்தகாத சம்பவம் ஏற்படுத்திய பள்ளியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தையின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன். குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காசியின் தந்தை தங்கபாண்டியனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    • இடைத்தரகர் நாராயணன் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் காசி மற்றும் அவரது தந்தை தங்கபாண்டியன் ஆகிய இருவர் மீது கந்துவட்டி புகார் அளிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அவரது தந்தை தங்கபாண்டியனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  தீர்ப்பளித்துள்ளனர்.

    மேலும் இந்த வழக்கில் இடைத்தரகர் நாராயணன் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில், நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 1 லட்சத்து அபராதமும் விதித்து மகளிர் சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

    • உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் .
    • இனியாவது பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    விருதுநகர் மாவட்டம் அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் .

    முறையான பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ளாமல், பட்டாசு ஆலை பாதுகாப்பில் தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்படும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    பட்டாசு ஆலை விபத்தால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் அளிப்பதுடன்; இனியாவது பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்யுமாறு மு.க.ஸ்டாலின்

    மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 



    • விபத்தினால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருக்கோவிலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த மோட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் மேல்மருவத்தூர் ஆதிபாராசக்தி கோவிலுக்கு மாலை அணிவித்து விரதம் இருந்து வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று தனியார் பஸ் மூலம் சுமார் 60 பேர் மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி கோவிலுக்கு சென்று விட்டு பின்னர் மேல்மலை யனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பினர்.

    இதனையடுத்து நேற்று இரவு திருவண்ணாமலை மணலூர்பேட்டை வழியாக சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இரவு 11 மணி அளவில் அந்த பஸ் மணலூர்பேட்டை-மாடாம்பூண்டி கூட்ரோடு இடையே வரும்பொழுது அருதங்குடி கிராமம் அருகே பஸ் திடீரென சாலை ஓரம் இருந்த மின்கம்பத்தில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதனால் பஸ்சில் இருந்த பக்தர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்த பொது மக்கள் ஓடி வந்து கவிழ்ந்து கிடந்த பஸ்சில் இருந்த பக்தர்களை மீட்டனர். இதில் சுமார் 20 பக்தர்கள் பலத்த காயமடைந்தனர்.

    விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ மற்றும் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் பொதுமக்கள் மற்றும் போலீசாருடன் இணைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து உயிர் தப்பிய பக்தர்களை மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வேன் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியையும் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. செய்தார். இந்த விபத்தினால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.

    இதனையடுத்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பஸ் டிரைவர் கண் அசைந்து தூங்கியதே விபத்துக்கான காரணம் என தெரியவந்தது. மேலும் இந்த விபத்து குறித்து திருப்பால பந்தல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த விபத்து குறித்து இன்று காலை மாவட்ட கலெக்டர் பிரசாந்த், தாசில்தார் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

    • பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அப்பையநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வந்த சாய்நாத் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

    இந்த வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசிபாலன், மேலாளர் தாஸ், போர்மேன் பிரகாஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கும் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில்,

    வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்ச ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ரூ.1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

    • இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு விசாரித்து வருகிறது.
    • தொலைப்பேசி அழைப்பு வந்தபோது தான் மிரட்டிவிட்டு வந்துவிடுவேன் என ஞானசேரகன் பேசினார்.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

    இதனிடையே, மாணவி அளித்த புகாரில், ஞானசேகரன் பாலியல் வன்கொடுமை செய்ததையும், அப்போது ஞானசேகரன் 'சார்' என்று யாரையோ குறிப்பிட்டு பேசினார் என்று கூறியிருந்தார். இதனால் எதிர்க்கட்சிகள் 'யார் அந்த சார்' என்று கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே 'சார்' என்று யாரும் இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் மாணவி விவகாரத்தில் அரசியல் செய்வதாக கூறிவந்தனர்.

    இந்த நிலையில், ஞானசேகரன் செல்போனில் ஒருவரை தொடர்பு கொண்டு பேசினார் என்று சிறப்பு விசாரணை குழுவிடம் மாணவி திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. தொலைப்பேசி அழைப்பு வந்தபோது தான் மிரட்டிவிட்டு வந்துவிடுவேன் என ஞானசேரகன் பேசியதாகவும் 4 முறைக்கு மேல் ஞானசேகரன வேறு ஒரு சாரிடமும் இருக்க வேண்டும் என்று மிரட்டியதாக மாணவி கூறியுள்ளார்.

    இதனிடையே, ஞானசேகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனை ஆய்வு செய்தபோது ஆபாச வீடியோக்கள் இருந்தது. அந்த வீடியோக்களில் இருந்த பெண்கள் மற்றும் மாணவிகள் என 4 பேரை சிறப்பு விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்களிடம் புகார் பெற சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 

    • போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
    • விசாரணையில் சிறுமிக்கு டீ மாஸ்டர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

    பல்லடம்:

    திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் குமார் (வயது 34). இவர் திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த வேலம்பட்டி பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவினாசிபாளையம் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் சிறுமிக்கு டீ மாஸ்டர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் டீ மாஸ்டர் குமாரை கைது செய்தனர்.

    இதே போல் வடக்கு அவினாசிபாளையம் வேலம்பட்டியைச் சேர்ந்த மகேஷ் குமார் (28) மற்றும் சூலூர் கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகன் குட்டி என்ற சிரஞ்சீவி (19) ஆகியோரும் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் மகேஷ்குமார் மற்றும் குட்டி என்கிற சிரஞ்சீவி ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    ×