என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா லட்சுமி உயிரிழந்தார்.
- சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளியில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா லட்சுமி உயிரிழந்தார்.
இதையடுத்து பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், சிறுமி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் குற்றம்சாட்டிய பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளியில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு நிறைவடைந்த நிலையில் சிறுமி லியாவின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிவில் மாணவி லியா லட்சுமியின் நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
கழிவு நீர் தொட்டியில் விழுந்ததன் காரணமாகவே சிறுமி உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுவரை பிரேத பரிசோதனை அறிக்கை காவல் துறைக்கு மருத்துவக் கல்லூரியில் இருந்து வழங்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
- குற்றவாளி மற்றொரு நபருடன் தொலைப்பேசியில் பேசியதாக மாணவி கூறியதாக தகவல்.
- அதற்கு நேர்மாறாக குற்றவாளி தனது மொபைல் போனை ஏரோப்ளேன் Mode-ல் வைத்திருந்ததாக போலீசார் தகவல்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்குள்ளான வழக்கில், குற்றவாளி மற்றொரு நபருடன் தொலைப்பேசியில் பேசியதாக, பாதிக்கப்பட்ட மாணவி கூறிய தகவலுக்கு நேர்மாறாக, குற்றவாளி தனது மொபைல் போனை, ஏரோப்ளேன் முறையில் வைத்திருந்ததாக, சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கிற்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவி, தான் கூறிய தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தொடக்கத்திலிருந்தே இந்த வழக்கைத் திசைதிருப்பும் முயற்சியில், காவல்துறை ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகம் தற்போது உறுதியாகியுள்ளது. குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கில், திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வி வலுப்படுகிறது.
இவ்வாறு அந்த பதவில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
- புயல் மற்றும் கனமழையால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.
- இந்த அறிவிப்பு மூலம் பேரிடர் நிதி மட்டுமல்லாமல் மற்ற நிதிகளையும் சீரமைப்பு பணிகளுக்காக பயன்படுத்த முடியும்.
வங்கக்கடலில் உருவாகிய பெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பெஞ்சல் புயலை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. பேரிடர் நிதி மட்டுமல்லாமல் மற்ற நிதிகளையும் சீரமைப்பு பணிகளுக்காக பயன்படுத்த முடியும்.
புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்களுக்கு 2 ஆயிரம் வழங்கப்பட்டது. புயலால் பாதிப்பு சீரமைப்புக்காக மத்திய அரசிடம் தமிழக அரசு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஞானசேகரன் வீட்டில் SIT அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை.
- நகைகள் மற்றும் சொத்துகள் தொடர்பாக இரண்டு மனைவிகளிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பல்வேறு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளது.
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஞானசேகரனை தவிர்தது மற்றொரு நபரும் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகப்படப்படுகிறது. மாணவியை மிரட்டும்போது போனில் SIR என குறிப்பிட்டுள்ளார். அந்த SIR யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையே இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணைக் குழு அதிகாரிகள் இன்று காலை ஞானசேகரன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். சுமார் 5 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் ஞானசேகரன் பயன்படுத்தி வந்த லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஞானசேகரன் இதுபோன்ற பல சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக கூறுப்படுகிறது. இதனால் லேப்டாப்பை ஆய்வு செய்தால் அவர் எடுத்த வீடியோக்களை அதில் சேமித்து வைத்துள்ளாரா? என்பது தெரிய வரும்.
ஞானசேகரன் மீது கொள்ளை தொடர்பான வழக்குகள் உள்ளது. தொடர்பாக அவருடைய இரண்டு மனைவிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையடித்த பணத்தில் நகைகள், சொத்துகள் வாங்கினாரா? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
- பள்ளியின் முதல்வர், தாளாளர், ஆசிரியை ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- தாளாளர், முதல்வரிடம் நீதிபதி நேரில் விசாரணை நடத்திய நிலையில் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா லட்சுமி உயிரிழந்தார்.
இதையடுத்து பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், சிறுமி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் குற்றம்சாட்டிய பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து, நேற்று மாலை பள்ளியின் முதல்வர், தாளாளர், ஆசிரியை ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில், வகுப்பு ஆசிரியை ஏற்கனவே நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், செயின்ட் மேரீஸ் பள்ளி தாளாளர், முதல்வருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட தாளாளர், முதல்வருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால், தாளாளர், முதல்வரிடம் நீதிபதி நேரில் விசாரணை நடத்திய நிலையில் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செயின்ட் மேரீஸ் பள்ளி முதல்வர், தாளாருக்கு வரும் 10ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
- பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் ஞானசேகரன்.
- ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை வேலை என்பது ஜனநாயகத்தில் தவறுகளை கண்டிப்பது.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி ஒருவர் தனது ஆண் நண்பர்களுடன் இரவில் பேசிக்கொண்டிருந்த போது ஆண் நண்பரை கொடூரமாக தாக்கி விட்டு மாணவி பாலியல் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டார்.
நாடு முழுவதும் அதிர் வலைகளை உருவாக்கிய இந்த விவகாரம் தொடர்பாக ஞானசேகரன் (37) என்ற பிரியாணி கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் மற்றொரு 'சாரும்' சம்பந்தப்பட்டு இருப்பதாக மாணவி கொடுத்துள்ள வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை சார் என்று குறிப்பிட்ட அந்த நபர் யார் என்பது இன்னும் வெளிவரவில்லை.
இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்று பா.ஜ.க. தொடர்ந்து போராடி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை கூறியதாவது:-
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடமாக தமிழகம் மாற வேண்டும் என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பும். ஏற்கனவே பாதிக்கப்பட்டு மனம் உடைந்து போன அந்த மாணவியை அவமானப்படுத்த எப்.ஐ.ஆரை கசியவிட்டு செய்யக்கூடாத அனைத்தையும் தி.மு.க. அரசு செய்து உள்ளது.
ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் ஞானசேகரன். அவர் அந்த மாணவியை வீடியோ படம் எடுத்து மிரட்டி இருக்கிறார். இவ்வளவு கொடூரமான குற்றவாளியை போலீசார் கண்காணிக்காமல் இருந்தது ஏன்?
ஆளும் தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதால் அமைச்சர்களுடன் வைத்திருந்த தொடர்பு, கட்சி செல்வாக்கு ஆகியவற்றால் போலீஸ் கண்டு கொள்ளவில்லை. அவருடைய குற்றப்பின்னணி, அமைச்சர்களுடன் உள்ள தொடர்புகள் பற்றி புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டும் அவரை குற்றவாளி என்று யாரும் பேசுவதில்லை. அதற்கு மாறாக பாதிக்கப்பட்ட மாணவி தான் தவறு செய்தவர் என்ற கதையை கட்டமைக்க தி.மு.க.வினர் முயற்சிக்கிறார்கள்.
குற்றவாளி ஞானசேகரன் தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதால் மனசாட்சியே இல்லாமல் பேசுகிறார்கள். 2014-15-ம் ஆண்டிலும் இவர் மீது இதே போன்ற ஒரு வழக்கு பதிவாகி இருக்கிறது. அப்படி இருந்தும் அவரை பாதுகாக்க முயல்வது வெட்க கேடானது.
கொடூர குற்றவாளியிடம் இருந்து உயிர் பிழைத்த அந்த மாணவிக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட மாணவியின் தனிப்பட்ட விபரங்கள் கசிந்ததால் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.
ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை வேலை என்பது ஜனநாயகத்தில் தவறுகளை கண்டிப்பது,எதிர்ப்பு தெரிவிப்பது என்று நான் எப்போதும் நம்புகிறேன். இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் கருத்துக்கள் தி.மு.க.வால் திரிக்கப்பட்டுஉள்ளது.
2026 தேர்தலில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதவி என்ற இமேஜை பாதுகாப்பதில் தி.மு.க. தீவிரமாக இருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மவுனமாக இருப்பது ஏன்?
ஜனநாயகம், இந்திய அரசியலமைப்பு சட்டம் பற்றி பேசும் ராகுல் காந்தி தமிழகம் வந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை பார்க்காமல் மவுனம் காப்பது ஏன்?
இந்த விவகாரத்தில் நீதிக்காக போராடுபவர்களை அடக்கி ஒடுக்குவதில் தி.மு.க. தீவிரமாக உள்ளது. மதுரையில் நடந்த போராட்டத்தில் குஷ்பு மற்றும் பா.ஜ.க. மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன் மற்றும் மகளிர் அணியினரை கைது செய்து ஆட்டுக் கொட்டகையில் அடைத்து கொடூர ஆட்சியின் குரூர முகத்தை காட்டி இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் விரும்பி சுவைக்கும் ஐஸ்கிரீம்கள் ஆவின் நிர்வாகம் விற்பனை செய்து வருகிறது.
- ஆவின் ஐஸ்கிரீம் வகைகளை தங்களது நிகழ்ச்சிகளில் பயன்படுத்த அருகில் உள்ள ஆவின் பாலகத்தை அணுகி பயன் பெறலாம்.
தமிழ்நாட்டில் அனைத்து பொதுமக்களுக்கும் ஏற்ற வகையில் தரமான முறையில் ஆவின் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பால் விற்பனையில் முன்னோடி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.
ஆவின் நிறுவனம் பல்வேறு வகையான பால் உப பொருட்கள் தரமான முறையில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
மேலும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் விரும்பி சுவைக்கும் ஐஸ்கிரீம்களை ஆவின் நிர்வாகம் விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* ஆவின் ஐஸ்கிரீம் வகைகள் எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* ஆவின் ஐஸ்கிரீம் வகைகளை தங்களது நிகழ்ச்சிகளில் பயன்படுத்த அருகில் உள்ள ஆவின் பாலகத்தை அணுகி பயன் பெறலாம்.
* தங்கள் இல்ல நிகழ்ச்சிகளில் ஆவின் ஐஸ்கிரீமை பயன்படுத்த 9944353459 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
- வாலிபர் ஒருவர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அத்துமீறியுள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில் சென்னையில் மேலும் ஒரு மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
தாராபுரத்தை சேர்ந்த 27 வயதான மாணவி கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் முதுகலை மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.
கடந்த 1-ந்தேதி அன்று நள்ளிரவு 1 மணி அளவில் மாணவி தனது தோழிகளுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக மருத்துவமனை வளாகத்தில் நின்றிருந்தார். மகப்பேறு வார்டு வளாகத்தின் உள்ளே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அத்துமீறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டுள்ளார். பின்னர் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுபற்றி மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபரின் பெயர் முகமது ஆதாம் என்பது தெரிய வந்தது. கடலூர் மாவட்டம் சேத்துப்பட்டை சேர்ந்த அவர் மது போதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.
என்ஜினீயரிங் மாணவியை தொடர்ந்து மருத்துவ மாணவியிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெற்றோர்கள் மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்பத்தி உள்ளது.
- கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக சென்னை துறைமுகம் இந்த மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது.
- சாதனைகளுக்கு உறுதுணையாக இருந்த பங்களிப்பாளர்களின் முயற்சிகளை துறைமுக பொறுப்புக் கழகத்தின் தலைவர் பாராட்டினார்.
சென்னை:
சென்னை துறைமுகம் கடந்த 2024-ம் ஆண்டு 5.326 மில்லியன் மெட்ரிக் டன் மாதாந்திர சரக்கு போக்குவரத்தை கையாண்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக சென்னை துறைமுகம் இந்த மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைகளுக்கு உறுதுணையாக இருந்த பல்வேறு பங்களிப்பாளர்களின் முயற்சிகளை சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் தலைவர் சுனில் பாலிவால் பாராட்டினார்.
- தீண்டாமைக்கு எதிராக காங்கிரஸ் நாடுதழுவிய அளவில் போராடியது.
- உண்மையான வைக்கம் போராட்ட வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் உரிமை காங்கிரசுக்கு சொந்தமானது.
சென்னை:
பெரியார் தலைமையில் கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா கடந்த மாதம் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க,.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன், விடுதலை சிறுத்தைகள் கழக தலைவர் திருமாவளவன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
நேற்று முன்தினம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தியாகி பார்த்தசாரதி செட்டியார் நினைவுநாள் நிகழச்சியில் கலந்து கொண்ட அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் செல்லக்குமார் பேசும் போது, வைக்கம் போராட்ட வெற்றி என்பது காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி. ஆனால் இன்று எல்லோரும் உரிமை கொண்டாடுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
தீண்டாமைக்கு எதிராக காங்கிரஸ் நாடுதழுவிய அளவில் போராடியது. அப்போது வைக்கத்தில் நடத்தப்பட்ட போராட்ட வெற்றியின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு சமீபத்தில் கொண்டாடியது.
உண்மையான வைக்கம் போராட்ட வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் உரிமை காங்கிரசுக்கு சொந்தமானது.
வைக்கம் போராட்டத்தில் கேரளாவில் காங்கிரஸ் தோழர்கள் தலைமையேற்று நடத்தினார்கள். அவர்கள் அனைவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டதால் காந்தியடிகள் காங்கிரசின் பிரதிநிதியாக பெரியாரை கேரளாவுக்கு அனுப்பி வைத்தார். அப்படித்தான் பெரியார் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார்,
இப்போது நான் கர்நாடகா, ஒடிசா மாநில பொறுப்பாளராக இருக்கிறேன். அங்கு சோனியா, ராகுல் உத்தரவின் பேரில் அவர்களது பிரதிநிதியாக ஒரு பேராட்டத்துக்கு சென்றால் அந்த வெற்றி எனக்கு கிடைக்கும் வெற்றி அல்ல காங்கிரசுக்கு கிடைக்கும் வெற்றி.
அதே போலத்தான் அன்று பெரியாரின் போராட்ட வெற்றி என்பது காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி.
ஆனால் இப்போது காங்கிரஸ் பெற்று தந்த வெற்றிகளையெல்லாம் காங்கிரசை புறந்தள்ளிவிட்டு மற்றவர்கள் அனுபவிக்கிறார்கள்.
தமிழகத்தில் 56 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. இன்றைய அரசியல் ஓட்டுக்கு நோட்டு என்ற நிலையில் உள்ளது. ஆனால் அந்த ஓட்டு போடும் உரிமையை அனைவருக்கும் பெற்றுத்தந்த கட்சி காங்கிரஸ் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கவர்னர் உரையை வாசிப்பதற்கு ஏற்ப சட்டசபை மையப் பகுதியில் இருக்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
- கூட்டத்தொடர் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்ற விவரம் திங்கட்கிழமை தெரியவரும்.
சென்னை:
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கூட உள்ளது.
இந்த கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதற்காக சபாநாயகர் அப்பாவு நேற்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து முறைப்படி அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து சட்டசபை கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சட்டசபை வளாகத்தை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகள் சுத்தப்படுத்தப்படுகின்றன.
மேலும் கவர்னர் உரையை வாசிப்பதற்கு ஏற்ப சட்டசபை மையப் பகுதியில் இருக்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் நாளை மதியத்துக்குள் நிறைவுபெறும் என்று தெரிகிறது.
இதற்கிடையே திங்கட்கிழமை கவர்னர் உரையாற்றுவதற்கான குறிப்புகள் இறுதி வடிவம் பெற்று உள்ளன. அவற்றை அச்சிடும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கவர்னர் உரையில் சில அறிவிப்புகள், சாதனை விவரங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்ற விவரம் திங்கட்கிழமை தெரியவரும். அநேகமாக 4 நாட்களுக்கு சட்டசபை கூட்டத்தொடர் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 2 பெண் குழந்தைகள் கடும் குளிரில் அழுது கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே கருணை இல்லம் என்ற ஆதரவற்றோர் விடுதி செயல்பட்டு வருகிறது.
நேற்று நள்ளிரவில் விடுதியின் அருகில் 2 பெண் குழந்தைகளை விட்டு சென்றுவிட்டனர். குழந்தைகளின் அழுகை குரல் கேட்டது. இதனால் விடுதி காப்பாளர்கள் அங்கே சென்று பார்த்தனர். அப்போது 2 பெண் குழந்தைகள் கடும் குளிரில் அழுது கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கருணை இல்ல நிர்வாகம் அந்தப் பெண் குழந்தைகளை மீட்டனர். அப்போது அடையாளம் தெரியாத நபர் தொலைவில் ஓடுவதை கண்டு, கருணை இல்ல நிர்வாகிகள் உடனடியாக அங்கு சென்று பார்த்தனர். அந்த நபர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகளிடம் விசாரணை நடத்தினர். பூர்த்தி வந்தனா (வயது 2), பிருந்தா (1) என்று தங்களது பெயர்களை கூறினர்.
போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் குழந்தைகளை கருணை இல்லத்தில் விட்டுச்சென்ற கல் நெஞ்சம் படைத்தவர்களை தேடி வருகின்றனர்.






