என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே உள்ள வித்தியாசம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
    • பணக்காரர்களுக்கு ஆதரவான பொருளாதார திட்டங்களை நம்புவார்கள்.

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஐ.ஐ.டி. மெட்ராஸ் மாணவர்களிடையே நேற்று (ஜனவரி 4) உரையாற்றினார். அப்போது, மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். அந்த வகையில், மாணவர் ஒருவர் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே உள்ள வித்தியாசம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, பா.ஜ.க.-வினர் பணக்காரர்களுக்கு ஆதரவான பொருளாதார திட்டங்களை நம்புவார்கள் என்று தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அவர், "பொருளாதார அடிப்படையில் 'டிரிபிள்-டவுன்' (வெகுஜன பொருளாதாரத்தை விட பணக்கார அல்லது மிகப்பெரிய கார்ப்பரேஷன்களுக்கு ஆதரவான நிலைப்பாடு) என்பதை அவர்கள் நம்புகிறார்கள். சமூகப் பார்வையில், நாங்கள் சமுதாயம் எவ்வளவு இணக்கமானதாக இருக்கிறதோ, அவ்வளவு குறைவான மக்கள் போராடுவார்கள், அது நாட்டிற்கும் நல்லது என்று நாங்கள் உணர்கிறோம்."

    "சர்வதேச உறவுகள் அடிப்படையில், மற்ற நாடுகளுடன் நாம் தொடர்பு கொள்ளும் விதத்தில் சில வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அவை ஒத்ததாகவே இருக்கும்," என்று தெரிவித்தார்.

    • முதல்வரை எப்போதும் சீண்டி பார்க்க வேண்டும் என்ற நெருக்கடி கே.பாலகிருஷ்ணனுக்கு இருக்கலாம்.
    • பல்லாண்டு அனுபவம் கொண்ட தோழர் உணராமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

    விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 24-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஒரு ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்று சொன்னால் காவல்துறை வழக்கு போடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் கேட்க விரும்புகிறேன்.

    தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது. போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா? எனவே, இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.

    இதுகுறித்து நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தி.மு.க. அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், நேற்றுவரை ஆட்சியை பாராட்டியவர் பாலகிருஷ்ணன். அவருக்கு என்ன நெருடல் என புரியவில்லை. அவர் எந்த கண்ணோட்டத்தில் பேசுகிறார் என்பதும் தெரியவில்லை. குற்றம்சாட்ட வேண்டுமென்ற நோக்கில் குறைசொன்னால் அதற்கெல்லாம் பதில் தர முடியாது.

    பாலகிருஷ்ணனின் கோரிக்கைகள் என்னவென்று அறிந்து நிவர்த்தி செய்வோம். திமுக ஆட்சியில் எவ்வளவோ போராட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களின்போது மக்கள் பாதிக்கக்கூடாது என்பதே அரசின் நோக்கம். அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடந்தது கடந்த ஆட்சிக்காலம். போராட்டம் நடத்துபவர்களை ரிமாண்ட் செய்யும் சூழ்நிலை கூட ஏற்படுவதில்லை என்று கூறினார்.

    இந்த நிலையில், கே.பாலகிருஷ்ணன் பேச்சு தோழமைக்கான இலக்கணம் அல்ல என்று தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மேலும் கூறியருப்பதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்துக்கு தீனி போடத் தொடங்கியிருக்கிறார் கே.பாலகிருஷ்ணன். போராட்டங்களை நடத்திவிட்டு அனுமதி அளிக்கவில்லை என கூறுவது அரசியல் அறமல்ல. பாலகிருஷ்ணனின் பேச்சு கூட்டணி அறமல்ல, மனசாட்சிக்கு அறமும் இல்ல.

    அவசர நிலை என்றால் என்ன என்றே தெரியாத நிலையிலா இருக்கிறார் பாலகிருஷ்ணன். பின்விளைவுகளை பற்றி கவலைபடாமல் பேசுவது தோழமைக்கான இலக்கணம் அல்ல. குழப்பம் ஏற்படுத்துபவர்களுக்கு வக்கீலாக மாற வேண்டியது ஏன்? பாலகிருஷ்ணன் 6 நாட்களுக்கு முன் அவர் எழுதிய அறிக்கையை படிக்க வேண்டும்.

    முதல்வரை எப்போதும் தொடர்பு கொள்ளும் நிலையில் இருக்கிறார் கே.பாலகிருஷ்ணன். எதற்காக வீதியில் நின்று கொண்டு இப்படி கேட்க வேண்டும். முதல்வரை எப்போதும் சீண்டி பார்க்க வேண்டும் என்ற நெருக்கடி கே.பாலகிருஷ்ணனுக்கு இருக்கலாம்.

    விழுப்புரம் மாநாட்டில் பாலகிருஷ்ணன் வெளிச்ச விதைகளை விதைக்கவில்லை. பல்லாண்டு அனுபவம் கொண்ட தோழர் உணராமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 2019-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் பிறப்பு விகிதம் அதிர்ச்சியூட்டும் வகையில் சரிவடைந்து கொண்டே செல்கிறது.
    • 2019-ம் ஆண்டுடன், 2024-ம் ஆண்டினை ஒப்பிட்டால் 1 லட்சத்து 3 ஆயிரத்து 880 குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 7 கோடியே 21 லட்சம் பேர் இருந்தனர். தேசிய அளவில் மக்கள் தொகையில் தமிழகம் 7-வது இடத்தில் உள்ளது. நாட்டின் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 0.92 சதவீதமாக உள்ளது என ஐ.நா. சபை மற்றும் உலக வங்கி, இந்திய சுகாதாரத்துறை ஆகியவை கணித்து உள்ளது.

    ஆனால் தேசிய சராசரியை விட நாட்டிலேயே அதிக அளவாக பீகாரில் 1.98 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 1.70-ம், மேகாலயாவில் 1.5-ம், மத்திய பிரதேசத்தில் 1.49 சதவீதமும் மக்கள் தொகை வளர்ச்சி உள்ளது.

    பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் மகாராஷ்டிராவில் 0.71 சதவீதமும், மேற்கு வங்காளத்தில் 0.78 சதவீதமும் மக்கள் தொகை வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரம் தென்மாநிலங்களான கேரளாவில் 0.22-ம், ஆந்திராவில் 0.61 சதவீதமும், கர்நாடகாவில் 0.68 சதவீதமும், தெலுங்கானாவில் 0.74 சதவீதமாகவும் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் 0.30 சதவீதம் மட்டுமே மக்கள் தொகை வளர்ச்சி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தேசிய சராசரியை விட இது மிக குறைந்த அளவாக இருக்கிறது. இருப்பினும் இந்த சதவீதம் இன்னும் குறைவாகவே இருக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் பிறப்பு விகிதம் அதிர்ச்சியூட்டும் வகையில் சரிவடைந்து கொண்டே செல்கிறது. கடந்த 2019-ம் ஆண்டில் தமிழகத்தில் 9 லட்சத்து 45 ஆயிரத்து 701 குழந்தைகள் பிறந்துள்ளனர். 2020-ம் ஆண்டு 9 லட்சத்து 39 ஆயிரத்து 783-ம், 2021-ம் ஆண்டில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 864-ம், 2022-ம் ஆண்டில் 9 லட்சத்து 36 ஆயிரத்து 367-ம், 2023-ம் ஆண்டு 9 லட்சத்து 2 ஆயிரத்து 306-ம் உள்ளது.

    ஆனால் இதுவரை இல்லாத அளவாக 2024-ம் ஆண்டில் 8 லட்சத்து 41 ஆயிரத்து 821 குழந்தைகள் மட்டுமே பிறந்து உள்ளனர். இது, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிக குறைந்த அளவாகும். அதோடு, குழந்தைகள் பிறப்பில் தமிழகம் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்து இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

    அதன்படி 2019-ம் ஆண்டுடன், 2024-ம் ஆண்டினை ஒப்பிட்டால் 1 லட்சத்து 3 ஆயிரத்து 880 குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளது. இது 11 சதவீத சரிவு ஆகும். அதேவேளையில் 2024-ம் ஆண்டினை 2023-ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 60 ஆயிரத்து 485 குழந்தை பிறப்புகள் குறைந்துள்ளது. இது 6.71 சதவீத சரிவு ஆகும்.

    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும் போது, தமிழகத்தில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது உண்மை தான்.

    2024-ம் ஆண்டில் 8 லட்சத்து 41 ஆயிரத்து 821 குழந்தைகள் பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ஆஸ்பத்திரிகளில் பிறப்பை பதிவு செய்ய 10 நாட்கள் வரை எடுத்து கொள்வார்கள். எனவே தற்போதைய கணக்கின் அடிப்படையில் இன்னும் சில குழந்தைகள் அதில் பதிவாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதிகபட்சமாக இன்னும் சுமார் 12 ஆயிரம் குழந்தைகள் வரை இதில் சேரலாம். எனவே இறுதி பட்டியலில் சில மாற்றங்கள் இருந்தாலும், முந்தைய ஆண்டுகளை ஒப்பிட்டால் 2024-ம் குழந்தைகள் பிறப்பு குறைவு தான் என்றார்.

    • பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை போக்குரவத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
    • அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை.

    தாம்பரம் - கடற்கரை இடையே இன்று காலை 7 முதல் மாலை 4 வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இந்த வழித்தடத்தில் கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர் போக்குரவத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை மாநகர் போக்குரவத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (05.01.2025) தாம்பரம் ரெயில் நிலையத்தில் புதிய நடை மேம்பால பணிகள் நடைபெறுவதால் காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்படும் ரெயில்கள் பல்லாவரம் வரையிலும், அதேபோல் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரெயில்கள் காலை 11.00 மணி முதல் மாலை 4.00 வரை செங்கல்பட்டிலிருந்து கூடுவாஞ்சேரி வரையிலும் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    எனவே, இவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்து கழகம் 05.01.2025 அன்று ஏற்கனவே இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 10 பேருந்துகளையும், பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 10 பேருந்துகளையும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு கூடுதலாக 20 பேருந்துகள் என மொத்தம் 40 பேருந்துகளை இயக்க உள்ளது.

    மேலும் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • கடந்த இரண்டு நாட்களாக சோதனை நடைபெற்றது.
    • கல்லூரி சார்ந்த ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டதாக தகவல்.

    தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவுபெற்றது. ஜனவரி 3 ஆம் தேதி சோதனை துவங்கிய நிலையில், 44 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது.

    எட்டு கார்களில் வந்த 15-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை முடித்துக் கொண்டு துணை ராணுவ படையினருடன் நள்ளிரவு 2.40 மணிக்கு புறப்பட்டு சென்றனர். சோதனையை தொடர்ந்து கல்லூரி தொடர்பான ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை சார்ந்த ஆவணங்கள் மற்றும் கணினி ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • மகாகவி பாரதியார் விருது, தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 2025ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர் மு.படிக்கராமுக்கு வழங்கப்படுகிறது.

    2025ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது- 2024ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், மகாகவி பாரதியார் விருது, தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 2025ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர் மு.படிக்கராமுக்கு வழங்கப்படுகிறது

    2024ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது விடுதலை ராஜேந்திரனுக்கு வழங்கப்படுகிறது.

    2024ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது- தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த எல்.கணேசனுக்கு வழங்கப்படுகிறது.

    2024ம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது ரவிக்குமார் எம்.பிக்கு வழங்கப்படுகிறது.

    2024ம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் விருது முத்து வாவாசிக்கு வழங்கப்படுகிறது.

    மகாகவி பாரதியார் விருது- கவிஞர் கபிலனுக்கு வழங்கப்படுகிறது.

    பாவேந்தர் பாரதிதாசன் விருது பேரொளி பொன். செல்வகணபதிக்கு வழங்கப்படுகிறது.

    தமிழ்தென்றல் திரு.வி.க விருது- மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்துக்கு வழங்கப்படுகிறது.

    முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது- வே.மு.பொதியவெற்பனுக்கு வழங்கப்படுகிறது.

    வரும் திருவள்ளுவர் தினத்தன்று (ஜனவரி 15) ரூ.5 லட்சம் ரொக்கம், ஒரு சவரன் தங்கப்பதக்கத்துடன் இவ்விருதுகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்.

    • புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • புத்தக கண்காட்சி ஜனவரி 12-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 48வது புத்தக கண்காட்சி நடைபெற்று பெற்று வருகிறது.

    புத்தக வாசிப்பாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    அரங்கிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் அவர் திறந்து வைத்தார்.

    தொடக்க நாள் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    புத்தக கண்காட்சிக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.

    இந்த புத்தக கண்காட்சி ஜனவரி 12-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இந்நிலையில், சென்னை புத்தகக் கண்காட்சியில் சிறைவாசிகளுக்கு புத்தக தானம் செய்யும் அரங்கில் பல்வேறு புத்தகங்களை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தானம் செய்தார்.

    • கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் சென்னை மாநகர் போக்குரவத்துக் கழகம் அறிவிப்பு.
    • முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை.

    தாம்பரம் - கடற்கரை இடையே நாளை காலை 7 முதல் மாலை 4 வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால், கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் சென்னை மாநகர் போக்குரவத்துக் கழகம் தெரிவித்துள்ள்து.

    இதுகுறித்து சென்னை மாநகர் போக்குரவத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    05.01.2025 அன்று தாம்பரம் ரயில் நிலையத்தில் New Foot Over Bridge பணிகள் நடைபெற இருப்பதால் காலை 07.00 மணி முதல் மாலை 16.00 மணி வரை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் ரெயில்கள் பல்லாவரம் வரையும், அதேபோல் செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரெயில்கள் காலை 11.00 மணி முதல் மாலை 16.00 வரை செங்கல்பட்டிலிருந்து கூடுவாஞ்சேரி வரையும் ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 05.01.2025 அன்று தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 10 பேருந்துகளையும், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 10 பேருந்துகளையும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு கூடுதலாக 20 பேருந்துகள் என மொத்தம் 40 பேருந்துகளை மா.போ.கழகம் இயக்க உள்ளது.

    மேற்குறிப்பிட்ட நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பல்கலைக்கழங்களுக்குள்ளும் பாதுகாப்பில்லை.
    • சிபிஐ விசாரணை வந்தால் மட்டுமே இங்குள்ள பாராபட்சமான நிகழ்வுகள் வெளிக்கொண்டு வரப்படும்.

    தமிழிசை, குஷ்பு, ராதிகா, விஜயதாரணி உள்ளிட்ட தமிழக பாஜக மகளிர் அணி தலைவர்கள் இன்று ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

    * எந்த ஊரைச் சார்ந்தவர் இந்த சார்? எந்த இயக்கத்தை சார்ந்தவர் இந்த சார்?. எந்த பகுதியைச் சார்ந்தவர் இந்த சார்?. இது எங்களுக்கு தெரிய வேண்டும்.

    * எங்களுடைய அனைவருடைய கருத்துக்களையும் ஆளுநர் ஆர்.என். ரவி பொறுமையாக கேட்டறிந்தார்.

    * பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

    * இந்த ஒரு வழக்கு அல்ல. ஆளும் திமுக-வினரால் பெண்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக சொல்லியிருக்கிறோம்.

    * 30.8.2024-ல் 4-வது படிக்கும் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கிறார்.

    * 14.8.2024-ல் 4 பேர் சேரந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    * 6.8.2023-ல் வளசரவாக்கத்தில் நடந்த இதுபோன்ற சம்பவத்திலும் திமுக-வினர் தொடர்பு கொண்டிருக்கிறார் என்பதை தெரிவித்திருக்கிறோம்.

    * தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பல்கலைக்கழங்களுக்குள் பாதுகாப்பில்லை.

    * உயர்க்கல்வி அமைச்சர் சொல்கிற மாதிரி ஏதோ ஒரு நிகழ்வு நடந்திருச்சி என்று எங்களால் போக முடியாது. எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    * நிர்பயா நிதியை எவ்வாறு செலவு செய்துள்ளீர்கள். பலவற்றை ஏன் மறைக்க பார்க்கிறீர்கள்?

    * உயர்க்கல்வி அமைச்சர் கருத்துக்கும், போலீஸ் கமிஷனர் கருத்துக்கும் இடையில் மாறுப்பட்ட கருத்து இருந்தது.

    * ஏன் இன்னொரு சாரை மறைக்க பார்க்கிறீர்கள்?.

    * முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஏன் குரலை எழுப்பவில்லை?

    * எங்கோ ஒரு மாநிலத்தில் நடந்தால் முதல்வர் பேசுவார். தன்னுடைய மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஏன் வாயை திறக்கவில்லை.

    * விசாரணை முடிந்தால் யார் அந்த சார் என்பது தெரிந்துவிடும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

    * விசாரணை சரியாக நடைபெறாததால்தான் நாங்கள் பயப்படுகிறோம். குற்றவாளிக்கு நீங்கள் உறுதுணையாக இருக்கிறீர்கள். திராவிட மாடல் அரசு குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருக்கிறது.

    * போராடும் பெண் தலைவர்கள் கைதாகிறார்கள். கைதாக வேண்டிய குற்றவாளிகள் நடமாடுகிறார்கள். இதுதான் திராவிட மாடல் அரசு. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்கக் கூடாது.

    * சிபிஐ விசாரணை வந்தால் மட்டுமே இங்குள்ள பாரபட்சமான நிகழ்வுகள் வெளிக்கொண்டு வரப்படும்.

    • விசாரணை குறித்து சிறப்பு புலனாய்வு குழுவோ, அதிகாரிகளோ இதுவரை எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.
    • ஊடகங்கள், தனிநபர்கள், சமூக ஊடகவியலாளர்கள் ஊகங்களின் அடிப்படையிலான கருத்துகளை வெளியிட வேண்டாம்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஆதாரமற்ற தகவல்களை வெளியிட வேண்டாம் என காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை உயர்த்திமன்றத்தின் உத்தரவுபடி சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சென்னை அண்ணா நகர் துணை ஆணையாளர் மருத்துவர் புக்யா சினேஹா இகாய தலைமையில் அனைத்து மகளிர் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது. இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு இவ்வழக்குகளில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இதனிடையே சில செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் / முன்னேற்றங்கள் எனக் கூறி சில கருத்துக்களை பொதுவெளியில் ஒளிபரப்பி / பிரசுரித்து வருகின்றன. குறிப்பாக எதிரி ஒரு சாரிடம் பேசியதாக சிறப்புப் புலனாய்வுக் குழுவானது, பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாகவும்", சிறப்புப் புலனாய்வுக் குழுவானது, பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான ஆபாச பதிவுகள் கொண்ட மின்னணு உபகரணங்களை எதிரியிடமிருந்து பறிமுதல் செய்துள்ளதாகவும்", "திருப்பூரை சேர்ந்த ஒரு நபரும் இதில் எதிரியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்" என்பன உள்ளிட்ட ஆதாரமற்ற தகவல்கள் வெளியிடப்படுகின்றன.

    எனினும் இவ்வழக்குகளின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழுவோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ எந்த ஒரு அறிக்கையோ, கருத்தோ எந்த ஒரு தனிநபருக்கோ அல்லது ஊடகத்திற்கோ தெரிவிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.

    இவ்வழக்குகள் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என பொது வெளியில் தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை மற்றும் எவ்வித அடிப்படை ஆதாரமும் இவ்லாதவையாகும். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை பற்றிய இத்தகையை ஆதாரமற்ற மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான தகவல்கள், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், இவ்வழக்குகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையையும் பாதிக்கக்கூடும்.

    இவ்வழக்குகளின் தீவிரதன்மை மற்றும் விசாரணையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஊடகங்கள், தனி நபர்கள், சமூக ஊடகவியாளர்கள் உள்ளிட்டோர் இவ்வழக்கு விசாரணை தொடர்பாக ஊகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியிடுவதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறான தவறான தகவல்கள், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துவதுடன் புலன் விசாரணையின் நம்பகத்தன்மையையும் பாதிக்கக் கூடும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பொங்கல் பரிசை வழங்க ரூ.163.81 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.
    • ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.

    தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2023-2024-ம் ஆண்டிற்கான பொங்கல் போனஸ் மற்றும் பொங்கல் பரிசை வழங்க ரூ.163.81 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதில், 'சி' மற்றும் 'டி' பிரிவை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில், பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    தமிழக அரசின் பொங்கல் போனஸ் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைக்க முதல்வர் உறுதி செய்ய வேண்டும். 2012 ஆம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர்களுக்குக் கடந்த 12 ஆண்டுகளாக பொங்கல் போனஸ் வழங்கப்படாமல் இருப்பதை தேமுதிக கண்டிக்கிறது; இந்த முறையாவது பொங்கல் போனஸ் வழங்கத் தமிழக முதல்வரை தேமுதிக சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னையில் காலை, மாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவி வருகிறது.
    • காற்றின் தரக்குறியீடு இரு மடங்கு மோசடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. இதனால், சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இருப்பினும், பெரும்பாலான இடங்களில் பனிக்காலம் தொடங்கிய நிலையில் வானிலை காணப்படுகிறது.

    இதனால், காலை, மாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவி வருகிறது.

    இந்நிலையில், சென்னையில் இன்றைய காற்றின் தரம் மோசடைந்து இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது

    அதாவது, சென்னையில் கடந்த 10 நாட்களில் காற்றின் தரக்குறியீடு இரு மடங்கு மோசடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் காற்றின் தரக்குறியீடு 39ல் இருந்து 142 ஆக மோசமடைந்து மிதமான பாதிப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை அடுத்த மணலியில் காற்று தரக்குறியீடு 238 ஆக உயர்ந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

    அபிராமிபுரத்தில் 193 புள்ளிகள், அச்சுதன் நகரில் 151 புள்ளிகள், அந்தோணி பிள்ளை நகரில் 201 புள்ளிகள், அரும்பாக்கத்தில் 181 புள்ளிகள், காந்திநகர் எண்ணூரில் 116 புள்ளிகள், ஐஎன்டியுசி நகரில் 177 புள்ளிகள், கொடுங்கையூரில் 221 புள்ளிகள், கொரட்டூரில் 152 புள்ளிகள், குமாரசாமி நகரில் 187 புள்ளிகள், ராயபுரத்தில் 205 புள்ளிகள், பெருங்குடிகள் 187 புள்ளிகள், பொத்தேரியில் 167 புள்ளிகள், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் 164 புள்ளிகள் என்ற அளவில் காற்றின் தரம் மோசமடைந்து இருக்கிறது.

    ×