என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கம்பத்தில் மோதி சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து
    X

    மின் கம்பத்தில் மோதி சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து

    • விபத்தினால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருக்கோவிலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த மோட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் மேல்மருவத்தூர் ஆதிபாராசக்தி கோவிலுக்கு மாலை அணிவித்து விரதம் இருந்து வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று தனியார் பஸ் மூலம் சுமார் 60 பேர் மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி கோவிலுக்கு சென்று விட்டு பின்னர் மேல்மலை யனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பினர்.

    இதனையடுத்து நேற்று இரவு திருவண்ணாமலை மணலூர்பேட்டை வழியாக சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இரவு 11 மணி அளவில் அந்த பஸ் மணலூர்பேட்டை-மாடாம்பூண்டி கூட்ரோடு இடையே வரும்பொழுது அருதங்குடி கிராமம் அருகே பஸ் திடீரென சாலை ஓரம் இருந்த மின்கம்பத்தில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதனால் பஸ்சில் இருந்த பக்தர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்த பொது மக்கள் ஓடி வந்து கவிழ்ந்து கிடந்த பஸ்சில் இருந்த பக்தர்களை மீட்டனர். இதில் சுமார் 20 பக்தர்கள் பலத்த காயமடைந்தனர்.

    விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ மற்றும் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் பொதுமக்கள் மற்றும் போலீசாருடன் இணைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து உயிர் தப்பிய பக்தர்களை மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வேன் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியையும் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. செய்தார். இந்த விபத்தினால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.

    இதனையடுத்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பஸ் டிரைவர் கண் அசைந்து தூங்கியதே விபத்துக்கான காரணம் என தெரியவந்தது. மேலும் இந்த விபத்து குறித்து திருப்பால பந்தல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த விபத்து குறித்து இன்று காலை மாவட்ட கலெக்டர் பிரசாந்த், தாசில்தார் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

    Next Story
    ×