

சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதர் சுவாமி கோவில் தெற்கு கோபுர வாசல் அருகே ஆபத்து விநாயகர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் நள்ளிரவு வெளிப்புறம் உள்ள சில்வர் கேட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரவு ரோந்து சென்ற பெட்ரோல் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், தலைமை ஏட்டு ஸ்டாலின் ஆகியோர் கோவில் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதைக் கண்டு அங்கு சென்றனர்.
அப்போது போலீசாரை பார்த்ததும் ஒரு நபர் தப்பி ஓடினார். அங்கே இருந்த மற்ற இருவரை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் சீர்காழி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த கொளஞ்சி (வயது 42 ), அவரது சகோதரர் முத்து (35) என்பதும் தப்பி ஓடியவர் விளந்திடசமுத்திரம் அஞ்சலை நகர் பகுதியை சேர்ந்த இலக்கியன் (29) என்பதும் தெரியும் வந்தது.
இவர்களிடம் இருந்து கோவில் உண்டியலில் கொள்ளையடித்து மூட்டை மூட்டையாக கட்டி வைத்திருந்த சுமார் ரூ.2 லட்சம் மற்றும் காசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனிடையே தப்பி ஓடிய இலக்கியன் சீர்காழி விளந்திட சமுத்திரம் வில்வா நகரில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றபோது சத்தம் கேட்டு வெளியே வந்த வீட்டின் உரிமையாளரை தாக்கி தப்பி ஓடினார். இந்த தாக்குதலில் உரிமையாளர் காயமடைந்தார்.
இதனை அறிந்த இன்ஸ்பெக்டர் புயல். பாலசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி, தலைமை ஏட்டு அன்பரசன், காவலர்கள் மணிகண்டன், ரஞ்சித்,ரம்யா, தனிப்பிரிவு காவலர் சார்லஸ் ஆகியோர் விளந்திடசமுத்திரம் பகுதிக்கு உடனடியாக சென்று தப்பி ஓடிய இலக்கியனை தேடினர். அப்போது அப்பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த இலக்கியனை மடக்கி பிடித்தனர்.
தொடர்ந்து கொளஞ்சி, முத்து, இலக்கியன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கோவில் உண்டியல் திருட்டு, வீட்டில் திருட முயற்சி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் உடனடியாக போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.