என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மக்களின் பயன்பாட்டுக்காக விழாக்காலங்களில் சிறப்பு பேருந்து- ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.
- பொங்கல் பண்டிகையையொட்டி, தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள்.
கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் லட்சக்கணக்கான வெளியூர்வாசிகள் சென்னையில் வாழ்ந்து வருகிறார்கள். பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களின்போது, சொந்த ஊர்களுக்கு சென்று அவர்கள் விழாவை சிறப்பித்து வருவது வழக்கம். மக்களின் பயன்பாட்டுக்காக விழாக்காலங்களில் சிறப்பு பேருந்து- ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பொங்கல் பண்டிகையை சொந்த ஊருக்கு சென்று கொண்டாட சென்னைவாசிகள் விரும்பி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று வருகிறார்கள். இதனால் பேருந்து - ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி, தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் என மொத்தம் (10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை) 21,904 பஸ்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் பொங்கல் சிறப்பு பஸ்களில் கடந்த 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்துத்துறை தனது எக்ஸ் வலைதளத்தில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில், பொங்கல் திருநாளினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பஸ்களின் இயக்கம் நேற்று (12.01.2025) நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையான 2,092 பஸ்களில், 2,092 பஸ்களும், 1,858 சிறப்பு பஸ்களும் ஆக 3,950 பஸ்களில் 2,17,250 பயணிகள் பயணம் செய்தனர். கடந்த 10.01.2025 முதல் 12.01.2025 இரவு 12 மணி வரை 11,463 பஸ்களில் 6,40,465 பயணிகள் பயணித்துள்ளனர்" என்று அதில் பதிவிட்டுள்ளது.
- விமான நேரம் மாற்றம் குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்.
- புகை மூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கையாக 30க்கும் மேற்பட்ட விமான நேரம் மாற்றம்.
சென்னை விமான நிலையத்தைச் சுற்றுயுள்ள பகுதிகளில் போகியையொட்டி கழிவுகள் எரிக்கப்படுவதால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால், விமான நிலைய ஓடுபாதையை புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், போகி பண்டிகை புகை மூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கையாக 30க்கும் மேற்பட்ட விமான நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
போகி பண்டிகை புகைமூட்டம் காரணமாக கடந்த 2018ம் ஆண்டு 108 விமானங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட வேண்டிய 30க்கும் மேற்பட்ட புறப்பாடு மற்றும் வருகை விமானங்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி, பெங்களூரில் இருந்து இன்று அதிகாலை சென்னை வர வேண்டிய 3 பயணிகள் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
விமான நேரம் மாற்றங்கள் குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தமிழ்நாடு முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப் பட உள்ளது.
- போகி பண்டிகை அன்று காற்று மாசு ஏற்படுவது தவிர்க்க முடியாததாக மாறிப் போய் இருக்கிறது.
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி போகிப் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
போகி பண்டிகை அன்று பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை உணர்த்தும் வகையில் பழைய பொருட்களைத் தீயிட்டு கொளுத்துவது வழக்கமாக இருந்து வந்தது.
இதனால் போகி பண்டிகை அன்று காற்று மாசு ஏற்படுவது தவிர்க்க முடியாததாக மாறிப் போய் இருக்கிறது.
அந்த வகையில் இன்று தமிழ்நாடு முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப் பட உள்ளது. இதையொட்டி இன்று தமிழ்நாடு முழுவதும் போகி பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. போகி பண்டிகையை முன்னிட்டு மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாக கொண்டாடி வருகின்றனர்.
இதனால் சென்னை மாநகர பகுதிகளும், புறநகர் பகுதிகளும் புகை மண்டலமாக காட்சி அளித்தன. காலை 6 மணியில் இருந்து 8 மணி வரையில் 2 மணி நேரத்துக்கு புகை மூட்டம் நீடித்தது.
இந்நிலையில் பழைய பொருட்களை எரிப்பதன் மூலம் சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு சராசரி அளவில் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், பனிப்பொழிவுடன் புகைமூட்டமும் சேர்ந்து கொண்டதால் முன்னால் யார் செல்கி றார்கள்? என்ன நடக்கிறது? என்பதே தெரியவில்லை. இதனால் சாலைகளில் சென்றவர்கள் முகப்பு விளக்கு களை எரிய விட்டபடியே சென்றனர். பெரிய கனரக வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தில் பின்புற விளக்குகளையும் எரிய விட்டபடியே வாகனங்களை ஓட்டிச் சென்றனர். இதனால், வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.
- டிசம்பர் மாதம் 27-ந்தேதி புத்தகக் காட்சி தொடங்கியது.
- 17 நாட்கள் நடைபெற்ற புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவு.
48-வது சென்னை புத்தக கண்காட்சி கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 17 நாட்களாக நடைபெற்ற இந்த புத்தக காட்சி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த புத்தகக் காட்சிக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை தந்ததாகவும், 20 கோடி ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் விற்பனையானதாகவும் பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம் தெரிவித்தள்ளார்.
- இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
- அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார்.
துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும், மகிழ்ச்சியில் அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது ரேசிங் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "24H துபாய் 2025 இல் அஜித் குமார் மற்றும் அவரது குழுவினர் 991 பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர் என்பதைக் கேள்விப்பட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்."
"இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக அஜித் குமார் மற்றும் அவரது குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மதிப்புமிக்க பந்தய நிகழ்வில் நமது திராவிட மாடல் அரசாங்கத்தின் விளையாட்டுத் துறை லோகோவை காட்சிப்படுத்தியதற்காக அஜித் குமார் ரேசிங் அணிக்கு நன்றி கூறுகிறேன்."
"நமது நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் இன்னும் பெருமை சேர்ப்பதில் அஜித் சார் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- மூன்று நிமிடங்களில் திரும்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
- ஆளுநரின் செயல் சிறுபிள்ளைத்தனமானது என்று முதல்வர் கூறியிருந்தார்.
தமிழக சட்டசபையில் ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவது மரபு. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 6ஆம் தேதி துவங்கியது. இந்தக்கூட்டத்தில் தேசிய கீதம் பாடவில்லை என்று குற்றச்சாட்டிவிட்டு ஆளுநர் ஆர்.என். ரவி அவையில் இருந்து வெளியேறினார்.
ஆளுநர் உரையை வாசிக்காமல் மூன்றே நிமிடங்களில் அவையில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆளுநரின் செயலுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதுகுறித்து பேசும் போது, ஆளுநரின் செயல் சிறுபிள்ளைத்தனமானது என்று முதல்வர் கூறியிருந்தார்.
முதலமைச்சரின் கருத்து பதில் அளித்துள்ள ஆளுநர் மாளிகை, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் "அபத்தமானது" மற்றும் "சிறுபிள்ளைத்தனமானது" என்று வற்புறுத்துகிறார்."
"பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர் கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி."
"இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள்," என்று கூறப்பட்டுள்ளது.
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது.
- அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிகவும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவால் அந்த தொகுதியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
கடந்த 10-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வருகிற 17-ந்தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.
தி.மு.க. கூட்டணியில் தனது கைவசம் இருந்த இந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட விரும்பாததால் தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க. சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் தே.மு.தி.க.வில் இருந்தபோது இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்ததை போல் ஈரோடு கிழக்கு தொகுதியிலும் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளது. அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வும் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டது.
எனவே தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது.
- எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
- வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இன்று (ஷஜனவரி 12) இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலுவான மற்றும் பயனுள்ள தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை ஆழ்ந்த கவலை அளிக்கிறது. இன்று இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற எட்டு தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கை கடற்பாடயினரால் நமது மீனவர்கள் அடிக்கடி சிறைபிடிக்கப்படுவதால் மீனவ சமுதாயத்தினரிடையே அச்சமும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்களது பாரப்பரிய வாழ்வாதார வருவாய் ஆதாரங்கள் பாதிக்கப்படுகிறது.
எனவே மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு உரிய தூதாக நடவடிக்கைகள் மூலம் நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியம். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும். அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிப்பதை உறுதி செய்வதற்கு உரிய தூதரக வழிமுறைகள் மூலம் வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.
- எனதருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
- தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
உலகத் தமிழர்கள் எல்லோரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், எனதருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த இனிய பொங்கல் நன்னாளில், மக்கள் தங்க ளது மனமகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, வீட்டினுள்ளும், வெளி வாசலிலும் வண்ணக் கோலங்களினால் அலங்கரித்து, கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக நெற்கதிர், கரும்பு, வாழை, இஞ்சி, மஞ்சள் ஆகிய விளைபொருட்களை வைத்து, புதுப்பானையில் அரிசியிட்டு பால் ஊற்றி, அது பொங்கும்போது 'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாகக் குரலெழுப்பி இறைவனுக்குப் படைத்து வழிபடுவதோடு, தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.
உழவர் பெருமக்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில், விவசாயப் பெருமக்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளதோடு, நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு, விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்ததை இந்த நேரத்தில் பெருமையோடு நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன்.
அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், மக்கள் அனைவரும் குன்றா நலமும், குறையா வளமும், மங்கா புகழும், மாசிலா செல்வமும் பெற்று நிறை வாழ்வு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
பா.ஜ.க.வை சேர்ந்த சரத்குமார் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இந்த இனிய அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், நமது தேசமும், நாட்டின் மக்களும் என்றென்றும் செழுமையாக, பசுமையாக, வளமாக, ஆரோக்கியமாக இருக்கவும், உலகிற்கு உணவளிக்கும் விவசாயிகளின் உள்ளமும், இல்லமும் மகிழ்வுற்று வாழ்வு சிறக்கவும், அவர்களின் நல்வாழ்வுக்காகவும் பிரார்த்திப்போம்.
வட இந்தியாவில் சங்கராந்தி திருநாளாகவும், பிற மாநிலங்களில் பிஹூ, உத்தராயன், போகி என கொண்டாடப்படும் நாடு தழுவிய அறுவடை திருநாளை கொண்டாடி மகிழ்வோருக்கும், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் என் சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- எரி உலையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து குப்பைகளும் ஒன்றாக எரிக்கப்படும்.
- சென்னை மாநகரில் குப்பையை எரித்து அதிலிருந்து மின்சாரம் எடுப்பது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமற்றது ஆகும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை அமைக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சி, அதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கி இருக்கிறது. அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கும், அப்பகுதியில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கும் பெரும் தீங்கை ஏற்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.
பெருங்குடியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு மிக அருகில் 150 ஏக்கர் பரப்பளவில் குப்பை எரி உலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சூழலியல் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.
எரி உலையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து குப்பைகளும் ஒன்றாக எரிக்கப்படும். அப்போது டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், கரியமில வாயு, டையாக்சைடு மற்றும் பியூரன் உள்ளிட்டவை வெளியாகும்.
இந்த நச்சு ரசாயனங்களால் புற்றுநோய், இருதய நோய்கள், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பதிப்புகள் ஏற்படும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா என பல கேடுகளுக்கு குப்பை எரிப்பு வழிவகுக்கும். மேலை நாடுகளில் மக்கள் குப்பை எரி உலைகளை கடுமையாக எதிர்க்கின்றனர்.
சென்னை மாநகரிலும் குப்பையை எரித்து அதிலிருந்து மின்சாரம் எடுப்பது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமற்றது ஆகும். சென்னையில் கிடைக்கும் குப்பைகளைக் கொண்டு குப்பை எரிஉலை அமைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. பெருங்குடியில் குப்பை எரி உலை அமைக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை பா.ம.க. நடத்தும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் நம்முடைய தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.
- நூறு ஆசிரியர்கள் மற்றும் தமிழ்க் கலைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து, இவர்களை அயலக தமிழர்கள் வாழும் பகுதிகளுக்குத் தேவைக்கேற்ப அனுப்ப, ஒரு திட்டம் உருவாக்கப்படும்.
சென்னை:
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெறும் அயலகத் தமிழர் தினம் 2025 நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அயலகத் தமிழர்களுக்கான விருதுகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் முதலமைச்சரானதில் இருந்து, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா-என்று உலகத்தின் எந்த பகுதிக்கு சென்றாலும், தாய்மண்ணில் இருக்கும் உணர்வை அயலகத்தில் வாழும் தமிழர்கள் எனக்கு ஏற்படுத்தினார்கள்.
நாடு, நில எல்லைகள், கடல் என்று புறப்பொருட்கள் நம்மைப் பிரித்தாலும் தமிழ்மொழி தமிழினம் என்ற உணர்வில் நாமெல்லாம் உள்ளத்தால் ஒன்றாக இருக்கிறோம். தமிழ்தான் நம்மை இணைக்கும் தொப்புள் கொடி. அந்த உணர்வோடு உறவோடு தாய் மண்ணாம் தமிழ் நாட்டுக்கு வந்திருக்கும் உங்கள் எல்லோரையும், உங்களில் ஒருவனாக வருக... வருக... என்று வரவேற்கிறேன்.
இங்கு கூடியிருக்கும் பலரின் முன்னோர்கள் நூறு, இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு காரணங்களுக்காக தாய் மண்ணில் இருந்து சென்று இருப்பார்கள். இந்தப் பூமிப்பந்தின் வெவ்வேறு நாடுகளுக்கும் சென்று தங்களின் ஓய்வறியாத உழைப்பு, தியாகம், வியர்வை, கண்ணீர் சிந்தி அந்த நாடுகளை வளர்த்தார்கள். அவர்களால்தான், பாலைகள் சோலைகள் ஆனது! கட்டாந்தரைகள் தார்ச்சாலைகள் ஆனது! அலை கடல்களில் துறைமுகங்கள் உருவானது! தேயிலைத் தோட்டங்கள்-ரப்பர் தோட்டங்கள்-கரும்புப் பயிர்கள் செழித்து வளர்ந்தன; அந்த நாடுகளும் வளம் பெற்றது.
நான் இதைச் சொல்லும் போது, நீங்கள் கடந்து வந்த பாதை, பட்ட துன்பங்கள் அடைந்த உயரங்கள் என்று உங்களின் நினைவுகள் நிச்சயம் உங்கள் குடும்ப வரலாற்றை எண்ணிப் பார்க்கும். அப்படிப்பட்ட தமிழ்த்தியாகிகளின் வாரிசு களான உங்களை உறவாக அரவணைத்துக் கொள்ள தமிழ்நாடு இருக்கிறது.
தமிழ்நாடும் உங்களை மறக்கவில்லை! இதுதான் தமிழினத்தின் பாசம்! அதனால்தான், அயலக மண் ணில் குடியேறினாலும், உங்கள் முன்னோர்களும்-நீங்களும் தமிழை வளர்க்கிறீர்கள்!
இப்படி அயலக மண்ணிலும் தமிழுக்காகப் பாடுபட்ட சான்றோர்களின் வழித் தோன்றல்கள் மற்றும் அண்மைக்காலங்களில் வெளிநாடுகளுக்கு சென்று இந்தியா வளமாக வாழ அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் தமிழ்ச் சொந்தங்களுக்கு நன்றி சொல்லவும், அங்கீகாரம் வழங்கவும்தான் நம்முடைய திராவிட மாடல் அரசு அயலகத் தமிழர் நாளைக் கொண்டாடுகிறோம்.
எந்த தூரமும் நம்மை தமிழில் இருந்து தூரப்படுத்தி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதனால்தான் அயலகங்களில் தமிழ் வளர்க்கும் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அதில் சிலவற்றைக் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், தமிழ்ப் பரப்புரைக் கழகம், தமிழ்ப் பண்பாட்டைக் காக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள், தமிழுக்காகப் பாடுபடும் தமிழ்ச்சங்கங்களுக்கு விருதுகள் மற்றும் அங்கீகாரம், இலவச சட்ட மையங்கள், அயலக தமிழர்களின் குழந்தைகள் நமது தாய்மொழியை கற்க, தமிழ் இணையக் கல்விக் கழகம் வழியாக, தமிழ்ச் சங்கங்களோடு இணைந்து தமிழ் கற்றுக் கொடுக்கிறோம்.
இதில் தன்னார்வலர்களாகச் செயல்படும் ஆசிரியர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் தமிழ்நாடு அரசின் சான்றிதழ் வழங்குகிறோம். புலம்பெயர் தமிழர்களின் இலக்கியத்துக்கு விருது, தங்களின் நாட்டில், சமூக நலனுக்கும், தாயக வளர்ச்சிக்கும் பங்களிக்கும் தமிழர்களுக்கு விருதுகள், போர் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் தாயகத்துக்கு அழைத்துவரும் சிறப்பு விமானங்களுக்கு உதவி, அயலகங்களில் இருந்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு உதவி செய்கிறோம். இது மூலமாக, வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்!
இப்போது, இந்த மேடையில், ஆறு முக்கிய துறைகளில் முத்திரை பதித்த சாதனைத் தமிழர்களுக்கு நான் விருதுகளை வழங்கியிருக்கிறேன். அதற்கு மணிமகுடமாக, அயலகத் தமிழர்களில் பன்முகத்தன்மையோடு விளங்கும் ஒரு தமிழரைத் தேர்ந்தெடுத்து, "தமிழ்மாமணி" விருதும் பட்டயமும் வழங்கியிருக்கிறோம். அயல்நாட்டுத் தமிழர்கள் மற்றும் தமிழ்ச்சங்கங்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உறவுப்பாலமாக செயலாற்றும் அயலகத் தமிழ் இளைஞர் ஒருவருக்கு, "சிறந்த பண்பாட்டுத் தூதுவர்" என்ற விருதையும் இந்த ஆண்டு முதல் வழங்கியுள்ளோம்! இந்த விருதுகளை எல்லாம், இந்தாண்டு பெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் இங்கே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்!
அயல்நாடுகளில் மட்டுமல்ல; வெளி மாநிலங்களில் தமிழர்கள் தவித்தாலும், இந்த அரசு விரைந்து செயலாற்றி, தேவையான உதவிகளை செய்து வருகிறது.
வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் நம்முடைய தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.
என்னுடைய ஸ்டைல் சொல் அல்ல செயல்'! அப்படித்தான், கடந்த மூன்றரை ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு சாதனைகளை நம்முடைய திராவிட மாடல் அரசில் செய்திருக்கிறோம்.
இந்த இனிய நிகழ்ச்சியில், உங்களுக்கான புதிய திட்டத்தின் அறிவிப்பையும் வெளியிட விரும்புகிறேன்.
பல்வேறு நாடுகளில் இருந்து நம் தமிழ் மொழி, நாட்டுபுறக் கலைகள், தமிழ் பண்ணிசைகளை அயலகத்தில் வசிக்கும் தமிழ் மக்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நேரடியாக பயிற்றுவிக்கவேண்டும் என்று கோரிக்கைகள் வந்த வண்ணம் இருக்கிறது. உங்களின் கோரிக்கைகளை தீர்ப்பது என் கடமை!
நூறு ஆசிரியர்கள் மற்றும் தமிழ்க் கலைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து, இவர்களை அயலக தமிழர்கள் வாழும் பகுதிகளுக்குத் தேவைக்கேற்ப அனுப்ப, ஒரு திட்டம் உருவாக்கப்படும்.
இந்த பயிற்றுநர்கள், அந்த பகுதியிலிருக்கும் தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து, தமிழ் மொழியையும், தமிழ்க் கலைகளையும் 2 ஆண்டுகளுக்கு நேரடிப் பயிற்சி வகுப்புகள் மூலமாக நடத்துவார்கள். இதற்கு ஆகும் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும். இதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிக்கிறேன்.
உங்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள் எல்லாம், பூமிப்பந்தில் எங்கு இருந்தாலும் உங்கள் அடையாளத்தை விட்டுவிடாதீர்கள்! உங்கள் வேர்களை மறக்காதீர்கள்! மொழியை மறக்காதீர்கள்! இந்த மண்ணையும் மக்களையும் மறக்காதீர்கள்! உங்கள் உறவுகளை மறக்காதீர்கள்! தாய்த்தமிழ் உறவுகளாக உங்களை நெஞ்சில் சுமந்துகொண்டு, நாங்கள் இங்கு இருக்கிறோம் என்பதற்கான அடையாளம்தான் இந்த விழா!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- பெரியாரை ஏற்றுக்கொண்டுள்ளவர்கள் தான் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள்.
- ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே குடும்ப அட்டை போன்ற திட்டங்களை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. திணிக்கிறது.
பெரியார் குறித்த சீமானின் அவதூறு பேச்சுக்கு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
* சீமான் பேச்சு இந்துத்துவா சக்திகளின் வளர்ச்சிக்கு உதவுமே தவிர தமிழ் தேசிய வளர்ச்சிக்கு உதவாது.
* ஆரியம், இந்துத்துவா, இந்தி, இந்திய தேசியத்தை எதிர்ப்பதுதான் பெரியாரை ஏற்றுக்கொண்டவர்கள் நோக்கம்.
* தமிழீழத்தையும் பிரபாகரனையும் தமிழ்மொழியையும் இந்துத்துவாவினர் ஏற்றுக்கொள்கிறார்களா?
* பெரியாரியவாதிகள் ஏற்றுக்கொண்டுள்ள அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம் என்பதை இந்துத்துவாவாதிகள் எதிர்க்கிறார்கள்.
* பெரியாரை ஏற்றுக்கொண்டுள்ளவர்கள் தான் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள்.
* ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே குடும்ப அட்டை போன்ற திட்டங்களை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. திணிக்கிறது.
* நாம் தமிழர் கட்சி தொடங்கியதும் அரவணைத்தவர்கள் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிஸ்டுகள் தான்.
* திராவிடம், பெரியாரை ஒழிக்கும் திட்டத்தை கைவிட்டு காலத்திற்கேற்ப சீமான் செயல்பட வேண்டும்.
* பகைவர் சூழ்ச்சிக்கு பலியாகாமல் நட்பு முரணோடு சீமான் கைகோர்த்து தமிழ் தேசியம் வெல்ல கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.






