என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இளம் எழுத்தாளர் ஷ்ரவந்த்திடம் மாலைமலர் சார்பில் நேர்காணல் எடுத்தோம்.
- 5 புத்தகங்களை வெளியிட்டுள்ள ஷ்ரவந்த் தனது எழுத்தாளர் பயணம் குறித்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார்.
15 வயதில் எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும், தொகுப்பாளராகவும் பன்முகத் திறனுடன் வளம் வரும் இளம் எழுத்தாளர் ஷ்ரவந்த்திடம் மாலைமலர் சார்பில் நேர்காணல் எடுத்தோம்.
அப்போது, இதுவரை 5 புத்தகங்களை வெளியிட்டுள்ள ஷ்ரவந்த் தனது எழுத்தாளர் பயணம் குறித்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார்.

அவர் பேசியதாவது:-
எனக்கு 7 வயது இருக்கும்போது தான் புத்தகம் படிக்கும் பழக்கம் ஆரம்பித்தது. ஒரு முறை எனது தந்தையின் நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்தபோது சாக்லேட்டிற்கு பதில் இரண்டு புத்தகங்களை வாங்கி வந்தார். அதுவரை புத்தகங்கள் படிக்கும் பழக்கம் எனக்கு இல்லை.
ஒரு நாள் அந்த புத்தகத்தை படிக்கலாம் என்று திடீரென தோன்றியது. ராணுவம் தொடர்பான புத்தகம் அது. எனக்கும் ராணுவம் மீது ஆர்வம் இருந்ததால் அந்த புத்தகத்தை படிக்க படிக்க ஆர்வமாக இருந்தது. அப்படி தான் புத்தகம் படிக்கும் பழக்கம் எனவும் உருவானது.
7 வயது முதல் 10 வயது வரை நிறைய புத்தகங்களை படித்தேன். சுமார் 450க்கும் மேற்பட்ட புத்தகங்களை படித்துள்ளேன். பல வகை புத்தகங்கள், பல ஆசிரியர்களின் புத்தகங்களை வாசித்துள்ளேன்.
10 வயதிற்கு மேல் எழுத ஆரம்பித்தேன். குறிப்பாக, கொரோனா லாக்டவுன் காலங்களில் நிறைய நேரம் இருந்தது. அப்போது, ஏன் எழுத முயற்சிக்க கூடாது என்று டைரியில் கதையாக எழுத ஆரம்பித்தேன். 44 சிறு கதைகளை எழுதினேன்.
அப்போதுதான் என் தந்தை ஏன் இதனை புத்தகமாக வெளியிடக்கூடாது என்று கேட்டார். முதலில் தயங்கினேன். பிறகு சரி அதையும் பார்ப்போம் என்று நான் எழுதிய கதைகளை கொண்டு வேறு ஒரு கதையின் கருவை உருவாக்கினேன். பிறகு, கதைக் கருவை முழுமையாக்கினேன். ஆரம்பத்தில் பதிப்பாளர்கள் என் புத்தகத்தை வெளியிட தயங்கினர். பிறகு, என் மீது நம்பிக்கை வைத்து வெளியிட்டனர்.
இப்படி இதுவரை 5 புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். முதல் புத்தகம் 2021ல் தி அபிஸ்மல் தீப் அண்டு அதர் ஸ்டேரீஸ் என்கிற புத்தகத்தை வெளியிட்டேன்.
பிறகு, தி மேஜிக்கல் பிளிட்ஸ், தி டீவியஸ் பேர்சன், தி ஷேடோ லார்ஜனிஸ்ட் ஆகிய புத்தகங்களை அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியிட்டேன்.

இந்த ஆண்டு எனது 5வது புத்தகமாக தி டிடக்டிவ் டைலமோ என்கிற புத்தகத்தை வெளியிட்டிருப்பதில் மகிழ்ச்சி.
ஒரு பக்கம் படிப்பு, ஒரு பக்கம் எழுத்தாளர் பயணம். எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். ஒவ்வொரு நாளும் எனது வேலைகளை முதலில் பட்டியலிட்டு விடுவேன். பள்ளி முடித்து வீட்டிற்கு வந்த பிறகு, படிப்பதற்கும், எழுதுவதற்கும் நேரம் ஒதுக்கிவிடுவேன். அதன் பிறகு, வீட்டு பாடங்களையும், பாடங்களை படிப்பதையும் முடித்து விடுவேன். இவ்வாறு நேரம் ஒதுக்குவதால்தான் என்னால் அனைத்தையும் முடிக்க முடிகிறது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஆளுநர் உள்ளிட்டோரை சந்தித்திருக்கிறேன். அப்போது அவர்கள் எனக்கு நிறைய யோசனைகளை தந்துள்ளனர். அதனை என் வாழ்வில் பொருத்த முயற்சிக்கிறேன். அது எனக்கு பல இடங்களில் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
எனது நண்பர்கள் இரண்டு பேர் என்னை பார்த்து உத்வேகமடைந்து இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். அதை எனது சாதனையாகவும் நான் கருதுகிறேன்.
இந்த தருணத்தில் எனது பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.
எனது இறுதி காலம் வரை நான் புத்தகங்களை வாசிக்கவும், எழுதுவதையும் நிறுத்த மாட்டேன். அது என்னுடைய பேஷன். எதிர்காலத்தில் ஐஐடியில் சேர விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளை செய்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிராவயல் மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில் 117 காயமடைந்தனர்.
- காயமடைந்த 27 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் களமிறக்கப்பட்ட மாடும் மாட்டின் உரிமையாளரும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சுவிரட்டில் கலந்து கொண்ட மாடு தென்கரை கண்மாய் அருகில் சென்ற போது உரிமையாளர் அதனை பிடிக்க முயன்றுள்ளார்.
மாடு கண்மாயில் விழுந்த நிலையில் அதனை காப்பாற்ற முயன்ற உரிமையாளர் ராஜா தாமரை கோடியில் கால் சிக்கி பலி
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கண்மாயில் மிதந்த மாடு, அதன் உரிமையாளர் ராஜாவின் உடலை மீட்டனர்.
சிராவயல் மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில் காயமடைந்த 117 நபர்களில் 27 பேர் மேல் சிகிச்சைக்கா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- முன்னதாக திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் தி.மு.க. கழகத்தின் கொடியையும் ஏற்றி வைத்தார்.
- சிறுவர், சிறுமிகள் அமைச்சர் முன்பு சிலம்பம் சுற்றியும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர்.
சென்னை:
சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள சானிக் குளம் திருவள்ளுவர் மன்றம் அருகில் துறைமுகம் மேற்கு பகுதி 54-வது வட்டம் சார்பில் 400 மங்கையர்கள் ஒன்றுகூடி தைத்திருநாள் மற்றும் சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர் பாபு கலந்து கொண்டு சிறப்பித்தார்.
முன்னதாக திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் தி.மு.க. கழகத்தின் கொடியையும் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து உரி அடித்தும் சிலம்பம் சுற்றியும் அப்பகுதி மக்களுடன் சமத்துவ பொங்கலை கொண்டாடினார். மேலும் அப்பகுதி சிறுவர், சிறுமிகள் அமைச்சர் முன்பு சிலம்பம் சுற்றியும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர்.
சிலம்பம் சுழற்றிய சிறுவர் சிறுமிகளுக்கு ரொக்கமாக பரிசுத்தொகையையும் வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபுவிடம் ஐ.ஐ.டி. மாணவி பாலியல் குற்ற சம்பவம் தொடர்பான கேள்விக்கு, நடைபெறுகின்ற குற்றச் சம்பவங்களை தடுப்பது ஒரு புறம், நடந்து முடிந்த பிறகு அதன் மீது நடவடிக்கை எடுப்பது மறுபுறம்.
இந்த ஆட்சியில் இன்னார் இனியவர் என்று பாகுபாடு கிடையாது. தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்ற சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது.
ஐ.ஐ.டி. சம்பவம் தொடர்பாக உரிய குற்றவாளி கைது செய்து கடுமையானப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்றார்.
ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு, 'யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே' என்பார்கள். அதுபோல 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வெற்றிக்கு உண்டான அறிகுறியாக வெற்றிக்குரிய வெளிச்சமாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இருக்கும்.
பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றிக்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெண் அரசு அதிகாரியை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்.
- இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026-ம் ஆண்டு முடிவு கட்டுவார்கள்
மதுரை:
மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி கோலகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்களும் துணை முதலமைச்சரின் மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களும் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
இந்நிலையில் துணை முதலச்சரின் மகனின் நண்பர்களுக்காக மாவட்ட ஆட்சியரை அவமானப்படுத்துவதா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்களை, மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
துணை முதலமைச்சர் மகனின் நண்பர்களுக்காக, பெண் மாவட்ட ஆட்சியரை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 - 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம்.
முதலமைச்சர் குடும்பத்துக்குச் சேவகம் செய்வதற்காகவே இருக்கும் அமைச்சர்கள் மேடையில் இருக்கையில், பெண் அரசு அதிகாரியை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்?
துணை முதலமைச்சர் உதயநிதிக்கு, 2011 தேர்தல் முடிவுகளும், அதற்குப் பின் வந்த பத்து ஆண்டுகளும் நினைவிருக்கட்டும். இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026-ம் ஆண்டு முடிவு கட்டுவார்கள்.
என்று அண்ணாமலை கூறினார்.
- திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திக்குளம் கிராமத்தில் இந்த போட்டி நடத்தப்பட்டது.
- வெற்றி பெற்ற தம்பதிகளுக்கு கொப்பரை அண்டா பரிசாக வழங்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருநெல்வேலியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தம்பதிகளுக்காக வித்தியாசமான விளையாட்டு போட்டி ஒன்று நடைபெற்றுள்ளது.
ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திக்குளம் கிராமத்தில் தம்பதிகள் தங்களது வாயில் பந்துகளை வைத்து கீழே விழாமல் பத்திரமாக கொண்டு போய் சேர்க்கும் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் அதிக பந்துகளை சேர்த்து வெற்றி பெற்ற தம்பதிகளுக்கு கொப்பரை அண்டா பரிசாக வழங்கப்பட்டது.
- போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- வேன் மோதி முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வண்டலூர்:
சிங்கபெருமாள் கோவில் அடுத்த அஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது78). நேற்று மாலை அவர் திருத்தேரி பகத்சிங் நகர் பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டு நடந்து வந்தார்.
மகேந்திரா சிட்டி ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில் சாலையை கடக்க முயன்றபோது விழுப்புரம் மாவட்டம், கோணாதி குப்பம் பகுதியில் இருந்து சென்னை நோக்கி வந்த வேன் திடீரென கோவிந்தசாமி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
பொத்தேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குறித்து வழக்கு பதிவு செய்து வேனை ஓட்டி வந்த வியாசர்பாடியை சேர்ந்த டிரைவர் காளிதாசகை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தூய்மையான காற்றின் தரத்தை அனுபவிக்கும் நகரங்களை எடுத்துக்காட்டுகிறது.
- இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கான சமீபத்திய காற்று தரக் குறியீட்டு தரவை வெளியிட்டுள்ளது.
நெல்லை:
இந்தியாவில் காற்றின் தரம் ஒரு முக்கியமான சுற்றுச்சூழல் சவாலாக இருக்கிறது. எனினும் பல்வேறு நகரங்களில் குறிப்பிடத்தக்க மாறுபாடுகளுடன், இந்தியா முழுவதும் உள்ள நகரங்களை மதிப்பிடுவது அவற்றுக்கிடையே உள்ள வேறுபாட்டை எடுத்துக்காட்டுகிறது. இந்நிலையில் 2025-ல் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கான சமீபத்திய காற்று தரக் குறியீட்டு தரவை வெளியிட்டுள்ளது.
இந்த அட்டவணை தற்போது சிறந்த மற்றும் தூய்மையான காற்றின் தரத்தை அனுபவிக்கும் நகரங்களை எடுத்துக்காட்டுகிறது. அதில் இந்திய நகரங்களில் மிகச்சிறந்த காற்றின் தரம் இருக்கும் நகரமாக நெல்லை திகழ்கிறது.
தமிழ்நாட்டின் நெல்லை முதல் இடத்திலும், அருணாச்சல பிரதேசத்தின் நாகர் லகுன் 2-வது இடத்தையும், கர்நாடகாவின் மடிக்கேரி பகுதி 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. தஞ்சாவூர் 5-வது இடத்தை பிடித்துள்ளது. காற்றின் தரம் சிறப்பாக இருக்கும் மாநிலங்களில் கர்நாடகாவின் கப்பல், உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி மற்றும் கேரளாவின் கண்ணூர் நகரமும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காற்றின் தரம் மிக மிக மோசமாக இருக்கும் நகரத்தில் முதல் இடத்தை இந்திய தலைநகரான புது டெல்லி பிடித்துள்ளது. மோசமான காற்று தரம் உள்ளதாக 2-வது இடத்தை உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத்தும், 3-வது இடத்தினை மேகாலயாவின் பிரின் ஹேட் நகரமும் பிடித்துள்ளன. சண்டிகர், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், ஹிமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகியவை காற்றின் தரம் மோசமாக உள்ள முதல் 10 மாநில பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மோதலில் ஈடுபட்ட அந்த வாலிபர் மாயமாகி இருப்பதால் சந்தேகம் வலுத்து உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:
காஞ்சிபுரம் அடுத்த உத்திரமேரூர் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பரத்(வயது 17), சத்ரியன்(17), விஷ்வா(17). இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவர்.
இவர்களில் பரத், ஒரகடத்தில் உள்ள ஐ.டி.ஐ.யிலும், சத்ரியன் வாலாஜா பாத்தில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பும் படித்து வந்தனர். விஷ்வா பிளஸ்-2 முடித்து உள்ளார். கடந்த 12-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பரத் உள்பட 3 பேரும் பின்னர் வீடுதிரும்பவில்லை. அவர்களை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
மேலும் இது தொடர்பாக சாலவாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் உத்திரமேரூர் அடுத்த காட்டாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட விழுத வாடி கிராமத்தில் உள்ள ஏரியில் பரத், சத்ரியன், விஷ்வா ஆகியோர் பிணமாக மிதந்தனர்.
தகவல் அறிந்ததும் உத்திரமேரூர் போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷ், இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் மாரி செல்வம் விசாரணை நடத்தினர். மாணவர்கள் 3 பேரும் எப்படி இறந்தனர் என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது.
அவர்களின் முகம் தீவைத்து எரிக்கப்பட்டு கருகி இருந்தது. மேலும் மாணவர்களின் முழங்கால், காலின் கீழ் பகுதியில் அரிவாளால் வெட்டப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. மேலும் இறந்து போன மாணவர்கள் அனைவரும் அவர்கள் அணிந்து இருந்த ஆடையுடன் இருந்தனர்.
அவர்கள் ஏரியில் குளிக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. எனவே மர்ம நபர்கள் மாணவர்கள் 3 பேரையும் கடத்தி எரித்து கொலை செய்து விட்டு உடல்களை ஏரியில் வீசி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. உடல்கள் உப்பிய நிலையில் காணப்படுவதால் அவர்கள் மாயமான 12-ந்தேதியே கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதேபோல் திருட்டு குற்ற வழக்கில் தொடர்புடைய சிறுமையிலூர் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் மர்மமாக இறந்து போன பரத் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் பிரச்சனை ஏற்பட்டு வாக்குவாதம் நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த தகராறில் கொலை நடந்து உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். மோதலில் ஈடுபட்ட அந்த வாலிபர் மாயமாகி இருப்பதால் சந்தேகம் வலுத்து உள்ளது.
மர்மமாக இறந்து போன 3 மாணவர்களுக்கு வேறு யாருடனும் மோதல் உள்ளதா? கடைசியாக செல்போன்களில் யாருடன் பேசினார்கள்? என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சுமார் 70 சதவீத மக்கள் ரேசனில் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி விட்டனர்.
- சிலர் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்று விட்டதால் ரேசனில் பொருள் வாங்காமல் உள்ளனர்.
சென்னை:
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தது. இலவச வேட்டி-சேலைகளும் ரேசனில் வழங்கப்படுகிறது.
கடந்த 9-ந் தேதி முதல் இவை வழங்கப்பட்டு வந்தது. சுமார் 70 சதவீத மக்கள் ரேசனில் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி விட்டனர். சிலர் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்று விட்டதால் ரேசனில் பொருள் வாங்காமல் உள்ளனர்.
இது குறித்து கூட்டுறவுத்துறை உயர் அதிகாரி கூறுகையில், "விடுமுறை முடிந்து வந்தாலும் ரேசனில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளோம். எனவே பொங்கல் பரிசு தொகுப்பை வாங்காத பொதுமக்கள் ரேசன் கடைக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.
- கொலை வெறி கும்பல் அங்கிருந்து எந்த வித பதட்டமும் இல்லாமல் தப்பி சென்று விட்டனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:
புது வண்ணாரப்பேட்டை, நாகூரான் தோட்டத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 33). இவர் வாடகை வீட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தை பெங்களூரில் தனியாக வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் அருகே வினோத்குமார் அமர்ந்து இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் திடீரென வினோத்தை சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தப்பி செல்ல முயன்றார். ஆனாலும் சுற்றி வளைத்த கும்பல் வினோத்குமாரை சரமாரியாக வெட்டினர்.
இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். எனினும் கொலை வெறி அடங்காத கும்பல் வினோத்குமாரின் முகத்தை வெட்டி சிதைத்தனர். இதில் சம்பவ இடத்திலேயே வினோத்குமார் பலியானார். அவரது முகமே தெரியாக அளவுக்கு சிதைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் கொலை வெறி கும்பல் அங்கிருந்து எந்த வித பதட்டமும் இல்லாமல் தப்பி சென்று விட்டனர்.
தகவல் அறிந்ததும் மீன்பிடி துறைமுக போலீசார் விரைந்து வந்து வினோத் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கஞ்சா விற்பனையை போலீசுக்கு காட்டி கொடுத்ததால் வினோத்குமார் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த ரித்திக் ரோஷன் (19), முத்து (19), கோகுல் (20), சுனில் (20), அபினேஷ் (19), எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த யுவராஜ் (20), நரேஷ் குமார் (20), தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (21) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
கடந்த 2 நாட்கள் முன்பு நரேஷ் குமார், ரித்திக் ரோஷன், கோகுல் ஆகியோர் அதே பகுதியில் கஞ்சா விற்று உள்ளனர். இது பற்றி வினோத் குமார் போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நரேஷ் குமார், வினோத்குமாரிடம் ஏன் எங்களை போலீசிடம் காட்டிக் கொடுக்கிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டு உள்ளார். அப்போது வினோத் குமார் இங்கு எல்லாம் அமர்ந்து மது அருந்தக்கூடாது என்றும் கூறி கண்டித்து உள்ளார்.
இதனால் கோபம் அடைந்த நரேஷ் குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து வினோத் குமாரை கொடூரமாக வெட்டி கொலை செய்தது தெரிந்தது. கைதான ரித்திக் ரோஷன், கோகுல், யுவராஜ், நரேஷ் குமார் ஆகிய 4 பேர் மீது கஞ்சா உள்பட அடிதடி வழக்குகள் உள்ளன. புதுவண்ணார்ப்பேட்டையில் பொங்கல் விடுமுறை நாளில் தொடர்ந்து 2 கொலைகள் அடுத்தடுத்து நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
- காலை 8 மணிக்கு பதில் 2 மணி நேரம் முன்னதாக இன்று காலை 6 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
- காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கன்னியாகுமரி:
சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப்பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி முதல் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசனும் தொடங்கி உள்ளது. இதனால் தினமும் கன்னியாகுமரிக்கு ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்களும் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர். இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகை, உழவர் திருநாள், மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் காணும் பொங்கல் போன்ற தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.
இதனால் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமானோர் திரண்டனர். ஆனால் மழைமேகம் திரண்டு இருந்ததன் காரணமாக சூரியன் உதயமான காட்சி தெளிவாகத் தெரியவில்லை. தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.
கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட அதிகாலை 5 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத் துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி காலை 8 மணிக்கு பதில் 2 மணி நேரம் முன்னதாக இன்று காலை 6 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் சுமார் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்து கண்ணாடி பாலம் வழியாக திருவள்ளுவர் சிலைக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, கலங்கரை விளக்கம், விவேகானந்தபுரத்தில் உள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் போன்றவற்றிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் தொடர் விடுமுறையயொட்டி இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- யாருக்கும் எந்தவித காயம் இல்லாமல் விழாவை நடத்த வேண்டும்.
- மாடு விடும் விழாவை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
கே.வி.குப்பம்:
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த கீழ்முட்டுகூர் கிராமத்தில் காணும் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா (மாடு விடும் விழா) இன்று நடந்தது.
இதனையொட்டி விழா நடக்கும் வீதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது. சாலை நடுவே மண் கொட்டப்பட்டது.
விழா நடக்கும் வீதியில் ஒலிபெருக்கி, வாழை மரங்கள், மாவிலை தோரணம் மற்றும் வண்ண காகிதங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. காலை 7 மணி அளவில் காளைகளுக்கு முதலில் வீதி காண்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது. வீதியில் அவிழ்த்து விடுவதற்காக காளைகள் வாடிவாசல் அருகே கொண்டு வரப்பட்டது.
அந்த நேரத்தில் காளைகள் மீது கை போடுவதற்காக ஓடு பாதையில் ஏராளமானோர் வரிசையாக திரண்டு நின்றனர். மாடுகள் ஓடினாலும் அவர்களை முட்டி தூக்கி வீசிவிட்டு தான் செல்லும் நிலையில் அவர்கள் ஆரவாரத்துடன் காத்திருந்தனர். இதனை கண்ட போலீசார் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டால் ஓடுபாதையில் இருப்பவர்களுக்கு படுகாயம் ஏற்படும். அவர்களை வெளியேற சொல்லுங்கள் என விழா குழுவினரிடம் தெரிவித்தனர்.
அப்போதும் ஓடு பாதையில் இருந்தவர்கள் வெளியேறவில்லை .இதனால் மாடு விடும் விழாவை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் விழா குழுவினர் மற்றும் போலீசார் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவம் பற்றிய தகவல் அறிந்த கலெக்டர் சுப்புலெட்சுமி, போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் விழா குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். யாருக்கும் எந்தவித காயம் இல்லாமல் விழாவை நடத்த வேண்டும். அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் விழா குழுவினர் தான் பொறுப்பு என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஓடு பாதையில் நின்றவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து சுமார் 40 நிமிடம் தாமதமாக மாடு விடும் விழா தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.






