என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பெட்ரோல் வெடிகுண்டுகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல்
- கைது செய்யப்பட்டவர் மீது 5 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவை:
கோவை செல்வபுரம் பகுதியில் நேற்றிரவு செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்கா ரர்களாக பணியாற்றி வரும் செல்வகுமார் மற்றும் பிரசாந்த் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நள்ளிரவு 12.30 மணியளவில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். போலீசார் நிற்பதை பார்த்ததும், வாலிபர் அங்கிருந்து வாகனத்தை திருப்பி செல்ல முயன்றார்.
இதை பார்த்ததும் போலீஸ்காரர்கள் 2 பேரும் ஓடி சென்று, அந்த வாலிபரை மடக்கிபிடித்தனர். பின்னர் இந்த நேரத்தில் எங்கு செல்கிறீர்கள். எங்களை பார்த்ததும் ஏன் வாகனத்தை திருப்பினீர்கள் என கேட்டு விசாரித்தனர். அவர் பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார்.
இதையடுத்து போலீஸ்காரர்கள், அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர்.
அப்போது அதில், 2 பெட்ரோல் வெடிகுண்டுகள் இருந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியான போலீசார், அந்த வாலிபரிடம் இது தொடர்பாக விசாரித்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாகவே பதில் அளித்தார்.
இதையடுத்து போலீசார், அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் சுந்தராபுரம் அடுத்த மைல்கல் பகுதியை சேர்ந்த நாசர் என்பது தெரியவந்தது.
இவர் தெலுங்கு பாளையம் பிரிவு ரோட்டில், அலுவலகம் நடத்தி வரும் பா.ஜ.க பிரமுகரான மணிகண்டன் என்பவரிடம் கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மணிகண்டனிடம், நாசர் கடனாக ரூ.5 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். ஆனால் மணிகண்டன் பணம் கொடுக்க மறுத்து விட்டார் என கூறப்படுகிறது.
இதனால் மணிகண்டன் மீது ஆத்திரம் அடைந்த அவர், அவரை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.
நேற்றிரவு, கரும்புக்கடை ஆசாத் நகரில் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து நாசர் மது அருந்தியதும், போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அவர், மணிகண்டனை பழிவாங்க அவரது அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டு, பெட்ரோல் வெடிகுண்டுகளுடன் வந்தபோது போலீஸ் சோதனையில் சிக்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து பெட்ரோல் வெடிகுண்டுகள், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
கைதான நாசர் மீது, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு, கரும்புக்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த வழக்கு, விஸ்வரூபம் படம் வெளியான போது குனியமுத்தூரில் உள்ள ஒரு தியேட்டரில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய வழக்கு உள்பட 5 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- #யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு இன்று வரை, இதுவரை பதில் இல்லை!
- இந்த விடியா திமுக ஆட்சியாளர்களா பெண்களைப் பாதுகாக்கப் போகிறார்கள்? கண்டிப்பாக வாய்ப்பே இல்லை!
சென்னை:
எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.
சிறுமி முதல் மூதாட்டி வரை, பாலியல் வன்கொடுமையால் பெண்கள் பாதிக்கப்படுவதும், அரசுப்பள்ளி முதல் ஓடும் ரெயில் வரை பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்பதும் வேதனைக்குரியது.
#யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு இன்று வரை, இதுவரை பதில் இல்லை!
#யார்_அந்த_SIRகள் என்று கேட்டால், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதை விட, குற்றவாளிகளின் பாட்டன் வம்சத்தில் இருப்பவர்கள் யாராவது தொலைதூரத்தில் அஇஅதிமுக-வுடன் தொடர்பில் இருக்கிறார்களா? என்று புலனாய்வு மேற்கொள்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் அரசு.
இந்த விடியா திமுக ஆட்சியாளர்களா பெண்களைப் பாதுகாக்கப் போகிறார்கள்? கண்டிப்பாக வாய்ப்பே இல்லை!
எனவே தான், #SaveOurDaughters என்று பெண்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட முன்னெடுப்புகளை தொடர்ந்து அதிமுக மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் அமைய வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு வீழ்ந்து, அஇஅதிமுக-வின் நல்லாட்சி அமைவது தான்!
இதனை வலியுறுத்தும் வகையில் எனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில், என் பெயருடன் "SayYesToWomenSafety&AIADMK" என்ற வாசகத்தை இணைத்துள்ளேன்.
இதுவரை நாம் நடத்தி வந்த #SayNoToDrugs_SayNoToDMK என்ற போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிரான போராட்டத்துடன் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான போராட்டமும் தொடரும்! வெற்றி பெறும்! என்று கூறியுள்ளார்.
- வேலூர் மார்க்கமாக செல்லும் ரெயில்களில் முண்டியடித்துக் கொண்டு பக்தர்கள் ஏறினர்.
- கிரிவலத்தையொட்டி சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியையொட்டி நேற்று முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
சாமி தரிசனம் முடிந்து பக்தர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதனால் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
விழுப்புரம், வேலூர் மார்க்கமாக செல்லும் ரெயில்களில் முண்டியடித்துக் கொண்டு பக்தர்கள் ஏறினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குழந்தைகள் பெண்கள் ரெயிலில் ஏற முடியாமல் அவதி அடைந்தனர்.
பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் திருவண்ணாமலை ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. கிரிவலத்தையொட்டி சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. இதிலும் கூட்டம் அலைமோதியது.
ஆட்டோக்களால் திருவண்ணாமலை நகரம் போக்குவரத்து நெரிசலால் திணறியது. பக்தர்கள் நடந்து செல்ல கூட வழியில்லாத அளவுக்கு அனைத்து சாலைகளையும் ஆட்டோ ஆக்கிரமித்து இருந்ததால் கிரிவல பக்தர்களும், நகர பொதுமக்களும் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர்.
வெளியூர்களில் இருந்து வரும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நகருக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால் நேற்று திருவண்ணாமலை நகரம் வரை அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்டன.
திருவண்ணாமலை நகருக்கு வரும் பக்தர்களின் கார்கள் அதற்காக அமைக்கப்பட்டுள்ள கார் நிறுத்தும் மையங்களில் நிறுத்தி, மாடவீதிகளில் ஆட்டோக்களை அனுமதிக்காமல் இருந்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும் என்பது அனைத்து தரப்பினரின் கருத்தாக உள்ளது.
- அடுத்த 10 நாட்களில் 38 அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டிருப்பது தேவையற்றது.
- இவ்வளவு குறுகிய இடைவெளியில் ஓர் அதிகாரியின் செயல்பாட்டை எவ்வாறு மதிப்பிட முடியும்?
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் பல்வேறு முக்கியத் துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட 38 இ.ஆ.ப. அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது அரசு அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியையும், முணுமுணுப்பையும் ஏற்படுத்தியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. கடந்த ஜனவரி 31-ஆம் தேதி 31 அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், அடுத்த 10 நாட்களில் 38 அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டிருப்பது தேவையற்றது.
அரசு நிர்வாக வசதிக்காக அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கான அனைத்து அதிகாரங்களும், உரிமைகளும் அரசுக்கு உண்டு. ஆனால், அவ்வாறு செய்யப்படும் மாற்றங்கள் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். மாறாக நிர்வாகத்தின் செயல்பாட்டை முடக்குவதாக இருக்கக் கூடாது. இப்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த எந்த வகையிலும் உதவாது.
எடுத்துக்காட்டாக, கடந்த ஜூலை மாதத்தில் தான் சுற்றுச்சூழல் துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு மருத்துவத்துறை செயலாளராகவும், அதற்கு சில மாதங்களுக்கு முன்பு வரை மருத்துவத்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார் சுற்றுச்சூழல் துறை செயலாளராகவும் மாற்றப்பட்டனர். அடுத்த 6 மாதங்களில் இருவரும் தங்களின் பழைய துறைகளுக்கே மாற்றப்பட்டுள்ளனர். அப்படியானால், என்ன காரணத்திற்காக அவர்கள் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டனர்? இப்போது என்ன காரணத்திற்காக அவர்கள் மீண்டும் பழைய துறைகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்? என்ற வினா மக்கள் மனங்களில் எழுகிறது. அவற்றுக்கு விடையளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தின் மின்வாரியத் தலைவராக நியமிக்கப்பட்ட நந்தகுமார், உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட கோபால், கடந்த ஜூலை மாதத்தில் பொதுப்பணித்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட மங்கத்ராம் சர்மா, தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட குமார் ஜெயந்த், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட இராதாகிருஷ்ணன் ஆகியோர் கடந்த 3 முதல் 6 மாதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வளவு குறுகிய இடைவெளியில் ஓர் அதிகாரியின் செயல்பாட்டை எவ்வாறு மதிப்பிட முடியும்?
பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்தவர்கள் கடந்த சில மாதங்களில் 4 முறை மாற்றப்பட்டுள்ளனர். உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த கோபால் கடந்த சில மாதங்களில் 4 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவை அனைத்துக்கும் என்ன அடிப்படை? வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டிருந்த இராஜேஷ் லகானி அடுத்த சில வாரங்களில் மத்திய அரசுப் பணிக்கு சென்று விட்டார். மேலும் பல இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளும் மத்தியப் பணிக்கு செல்ல விண்ணப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் தமிழ்நாட்டில் பணியாற்ற விரும்பவில்லை என்று தெரிகிறது. இவை நல்ல அறிகுறிகள் அல்ல.
ஒரு துறையில் செயலாளராக நியமிக்கப்படுபவர் அத்துறை குறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வதற்கு குறைந்தது இரு மாதங்கள் தேவை. அதன் பிறகு தான் அவர்கள் முழு வீச்சில் செயல்படத் தொடங்குவார்கள். அதற்குள்ளாகவே அவர்களை பணியிட மாற்றம் செய்து புதிய பணியில் அமர்த்தும் போது அரசு நிர்வாகத்தின் செயல்திறன் பாதிக்கப்படும். இத்தகைய அணுகுமுறையை தமிழக அரசு கைவிட வேண்டும்.
காவல்துறை தலைமை இயக்குனர் பணியில் அமர்த்தப்படுபவர்கள் அந்தப் பதவியில் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் அந்தப் பதவியில் நியமிக்கப்படுவோருக்கு 2 ஆண்டுகள் உறுதி செய்யப்பட்ட பணிக்காலம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அரசுத் துறை செயலாளர் பதவிகளும் காவல்துறை தலைமை இயக்குனர் பணிக்கு இணையான முக்கியத்துவம் கொண்டவை தான் என்பதால் அவற்றுக்கும் 2 ஆண்டு உறுதி செய்யப்பட்ட பணிக்காலம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
- தனிக்கொள்கை வகுக்கும் முடிவில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.
- வேலைவாய்ப்புகளில் முன்னேறுவதற்கும் அவர்களுக்கென்று தனிக் கொள்கை தேவை.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பசுமை தாயகம் சவுமியா அன்புமணி எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
திருநங்கையர்கள், திரு நம்பியர் மற்றும் இடை பாலினத்தவரின் சமூக அங்கீகாரத்திற்கும், வளர்ச்சிக்கும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னேறுவதற்கும் அவர்களுக்கென்று தனிக் கொள்கை தேவை. இதை உணர்ந்து திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடை பாலினத்தவருக்கு தனிக்கொள்கை வகுக்கும் முடிவில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.
தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை வரும் 17-ந் தேதி இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும் போது உறுதிபட தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.
- பெரியாரை இகழ்ந்து அரசியல் செய்ய நினைத்த அற்ப பதர்களை ஓடவிட்ட தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி!
- ஈரோடு கிழக்கில் அதிமுக வாக்குகள் அனைத்தும் திமுகவிற்கு வந்துள்ளது.
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல், மக்கள் நலனுக்காக அனுதினமும் உழைத்து வரும் மாண்புமிகு முதலமைச்சரின் உழைப்பிற்கும், திராவிட மாடல் அரசுக்கும், பெரியாரை இகழ்ந்து அரசியல் செய்ய நினைத்த அற்ப பதர்களை ஓடவிட்ட தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி!
குரங்கு கையில் சிக்கிய பூமாலையாய் தன் கைக்கு கிடைத்த கட்சியை சீரழித்து சின்னாபின்னமாக்கி தோல்வி மேல் தோல்வி கண்டு தோல்விசாமி அவர்கள் இல்லாத பொய்களை வீசுவதே அன்றாட அலுவலாக வைத்திருக்கிறார். அதனால்தான் மக்களை சந்திக்க முடியாமலும் திமுகழகத்தை எதிர்க்க துணிவில்லாமல் தேர்தலை சந்திக்காமல் ஓடி ஒளிந்துக் கொண்டார்.
வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாமல் வாக்களிக்காத மக்களின் நலனுக்காகவும் இந்த அரசு பாடுபடும் என அறிவித்து செயல்பட்டார் முதலமைச்சர். அதன் காரணமாக ஈரோடு கிழக்கில் அதிமுக வாக்குகள் அனைத்தும் திமுகவிற்கு வந்துள்ளது.
தமிழ்நாடு முழுக்க திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது; "Pro Incumbency" தான் எங்கும் எதிரொலிக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் அலைதான் தமிழ்நாடு முழுக்க அடித்துக்கொண்டிருகிறது. இது 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும்! என்று தெரிவித்துள்ளார்.
- அ.தி.மு.க. உடனான கூட்டணியில் தே.மு.தி.க தொடர்கிறது.
- விஜயுடன் கூட்டணி குறித்து 20 வருடம் கட்சியாக உள்ள தே.மு.தி.க.விடம் கேட்கக்கூடாது.
சென்னை:
தே.மு.தி.க. கொடி அறிமுகப்படுத்தப்பட்ட 25-ம் ஆண்டு வெள்ளிவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி, கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-
த.வெ.க. உடன் கூட்டணி அமைப்போமா என்பதை விஜயிடம் தான் கேட்க வேண்டும். விஜயுடன் கூட்டணி குறித்து 20 வருடம் கட்சியாக உள்ள தே.மு.தி.க.விடம் கேட்கக்கூடாது.
அ.தி.மு.க.வின் உட்கட்சி பிரச்சனை தொடர்பாக கருத்துக்களை கூற நான் விரும்பவில்லை. ஜெயக்குமார் ஒரு கருத்து கூறுகிறார், செங்கோட்டையன் ஒரு கருத்து கூறுகிறார். எது உண்மையென அ.தி.மு.க.விடம் கேட்க வேண்டும்.
2026 சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. இருக்கும் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று கேப்டன் கனவை வென்றெடுப்போம் என்றார்.
இதனிடையே, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த தே.மு.தி.க. விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டது. அப்போது தேர்தலில் வென்றால் விஜய பிரபாகரன் மக்களவை எம்.பி.யாகவும், தே.மு.திக. துணை பொதுச்செயலாளர் சுதீஷ் மாநிலங்களவை எம்.பி.யாகவும் ஆவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் தேர்தலில் விஜய பிரபாகரன் தோல்வி அடைந்ததால் ராஜ்யசபா எம்.பியாக. இருவரில் யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தே.மு.தி.க.வின் ராஜ்யசபா வேட்பாளர் யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்படும் என்று பிரேமலதா கூறினார். மேலும் அவர் கூறியதாவது:- அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தபோதே தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் என கையெழுத்தானது. தேர்வு செய்யும் நாளில் தே.மு.தி.க. சார்பாக யார் ராஜ்யசபா செல்வர் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். அ.தி.மு.க. உடனான கூட்டணியில் தே.மு.தி.க தொடர்கிறது என்றார்.
- டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பச்சை பட்டாணி இறக்குமதி செய்ய சுங்கத்துறை அதிகாரிகள் உதவியதாக குற்றம்சாட்டினார்.
- துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள பச்சை பட்டாணி 4 கண்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகம் வழியாக ரூ.2 கோடி மதிப்புள்ள பச்சை பட்டாணியை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா துறைமுகம் வழியாக மட்டுமே பச்சை பட்டாணியை இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் மசூர் பருப்பு என கூறி முறைகேடாக பச்சை பட்டாணியை இறக்குமதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பச்சை பட்டாணி இறக்குமதி செய்ய சுங்கத்துறை அதிகாரிகள் உதவியதாக குற்றம்சாட்டினார்.
இதையடுத்து பச்சை பட்டாணி இறக்குமதி செய்த விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்புடைய இடங்களில் வருவாய் புலனாய்வுத்துறை நடத்திய சோதனையில் ரூ.60 லட்சம் பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள பச்சை பட்டாணி 4 கண்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் (DGFT) தற்போதைய கொள்கையின்படி, கொல்கத்தா துறைமுகம் வழியாக மட்டுமே பச்சைப் பட்டாணியை இறக்குமதி செய்ய முடியும், குறைந்தபட்ச இறக்குமதி விலை கிலோவுக்கு ரூ.200 (MIP) ஆகும். மஞ்சள் பயறு வகைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், அதிகாரிகள் அதை மசூர் பருப்பாக தவறாக அறிவித்ததாக சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
- விஜய் யாரை சந்தித்தாலும் எங்களுக்கு கவலையில்லை.
- அ.தி.மு.க.வில் நடைபெறுவது உட்கட்சி பிரச்சினை நாங்கள் தலையிட முடியாது.
பழனி:
தைப்பூசத்தை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வேண்டும். போலீசார் தங்கள் கடமையை முறையாக செய்ய வேண்டும் என்பதற்காக செருப்பு அணிய மாட்டோம் என ஒரு வேள்வி தொடங்கினோம். அதன் 48 நாட்கள் இன்று நிறைவடைந்ததால் பழனியில் வந்து சாமி தரிசனம் செய்தேன்.
அடுத்த மண்டலத்துக்கு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட உள்ளேன். தைப்பூச நாளில் மக்கள் மிகுந்த எழுச்சியோடு அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.
ஆனால் கோவில்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை. பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு அறநிலையத்துறை பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர மறுத்து வருகிறது.
பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற பிரதமர் அங்கிருந்து தைப்பூச திருவிழாவுக்கு வாழ்த்து தெரிவித்ததன் மூலம் அவரது மதிப்பு உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறேன். கடந்த ஆண்டு அமைச்சர் காந்தியை சுட்டிக் காட்டினேன். இதேபோல் அமைச்சர் பெரியகருப்பன் கொடுத்த அறிக்கைக்கு நாங்கள் பதில் அளித்துக் கொண்டு வருகிறோம்.
சமக்ரா சிக்ஷா திட்டத்தில் தமிழகத்துக்கான நிதியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விட்டனர் என்றும், மத்திய அரசு வஞ்சித்து வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது பச்சைப்பொய்.
தமிழகத்தில் கல்விக்கடன், விவசாயக்கடன் ரத்து, தியாகிகள் செவிலியர்களுக்கு நிரந்தர வேலை என எதுவும் செய்யாமல் மக்களுக்கு முதலமைச்சர்தான் அல்வா கொடுத்து வருகிறார்.
அல்வா கடையை ஆரம்பிக்க வேண்டும் என்றுதான் முதல்-அமைச்சர் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா சாப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே மக்களுக்கு தி.மு.க. அரசு அல்வா கொடுத்து வருகிறது.
விஜய் அரசியல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட யாரை சந்தித்தாலும் எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் மக்களை சந்தித்து வருகிறோம். ஏ.சி. அறையில் அரசியல் வல்லுனர்களுடன் கருத்துகளை கேட்டுக் கொண்டு செயல்பட்டால் வெற்றிபெற முடியாது. என் மண் என் மக்கள் என்பதைப் போன்ற யாத்திரையை நடத்தி மக்களை சந்திக்க வேண்டும்.
அ.தி.மு.க.வில் நடைபெறுவது உட்கட்சி பிரச்சினை என்பதால் அதில் நாங்கள் தலையிட முடியாது. அரசியலில் 18 வயதுக்கு குறைவாக உள்ளவர்களை சட்டப்படி பயன்படுத்தக்கூடாது. ஆனால் த.வெ.க.வில் சிறார் அணி அமைத்துள்ளதால் அதில் யாரை நியமிப்பார்கள் என தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்தனர்.
- அ.தி.மு.க. பொதுக்குழு குறித்த மனுக்களையும் தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கக்கூடாது என உத்தரவிடக்கோரி முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அதுதொடர்பான மனுக்களை விசாரிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தது.
இந்த தடையை நீக்கக் கோரி ஓ.பி.ரவீந்திரநாத், வ.புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன். எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள் முருகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது.
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.ஆர்யமா சுந்தரம், 'அ.தி.மு.க.வின் உள்கட்சி விதிகளில் திருத்தம் செய்தது, அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்தது உள்ளிட்ட உள்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையீடு செய்ய எந்த அதிகாரமும் இல்லை. சிவில் கோர்ட்டுக்கு மட்டுமே அந்த அதிகாரங்கள் உள்ளன.
மேலும் தற்போது தடையை நீக்கக்கோரி மனுக்களை தாக்கல் செய்திருப்பவர்கள் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூட கிடையாது. அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள். கட்சியில் எந்த பிளவும் கிடையாது.
எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் ஏற்கனவே என்ன ஆதரவு இருந்ததோ அதே ஆதரவு அப்படியே உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில் அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையை முடக்கினால் அது கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும். எனவே தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மீண்டும் உறுதி செய்ய வேண்டும்' என வாதிட்டார்.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன் ராஜகோபாலன், 'ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவிக்கும் வகையில் அனைவருக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளின் இறுதி முடிவுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்படும். தற்போது இந்த மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை' என்று வாதிட்டார்.
பிற மனுதாரர்கள் தரப்பில் வக்கீல்கள் ஆஜராகி, தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும்படி வாதிட்டனர்.
இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனுக்கள் மீது இன்று (புதன்கிழமை) உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறினர். அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கும் அறிவுறுத்தினார்கள்.
அதன்படி இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள். அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிப்பதற்கான தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்து இருந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்படுகிறது. அ.தி.மு.க. உள் கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம். தேர்தல் ஆணைய சின்ன ஒதுக்கீடு விதிகளின்படி விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை நடத்த அதிகாரம் இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து திருப்தி அடைந்த பிறகு தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி இருந்தனர்.
- தமிழகம் முழுவதும் இன்று காலை வேளையில் பனிமூட்டம் நிலவியது.
- சுமார் 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று காலை வேளையில் பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். சென்னையில் பனிமூட்டம் காரணமாக ரெயில் மற்றும் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
சென்னையில் நிலவிய பனிமூட்டம் காரணமாக 10 புறப்பாடு விமானங்கள், 4 வருகை விமானங்கள் என 14 விமானங்கள் தாமதமானதால் பயணிகள் அவதியடைந்தனர். இதனிடையே சுமார் 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
- சென்னையில் மட்டும் 33 இடங்களில் மருந்தகங்கள் திறக்கப்படுகிறது.
- இங்கு குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் கிடைக்கும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.08.2024 அன்று சுதந்திர தினவிழா உரையின் போது குறைந்த விலையில் (ஜெனரிக்) மருந்து மாத்திரைகளையும் பிற மருந்துகளையும் பொது மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற் கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்" என்று அறிவித்தார்.
இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக 29.10.2024 அன்று முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகத்தை சேர்ந்தோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து மக்கள் மருந்தகங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதற்காக 2000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கூட்டுறவு துறைக்கு வந்திருந்தது. அதில் தகுதியான மனுக்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தது. இதில் இதுவரை 840 விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்ததாக ஏற்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு கடைகளை ஒதுக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கூட்டுறவுத்துறைக்கு வந்துள்ள மற்ற மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை திறப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதைத்தொடர்ந்து சென்னையில் வரும் 24-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வர் மருந்தகங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
இதில் சென்னையில் மட்டும் கொளத்தூர் ,தி.நகர் ஆழ்வார்பேட்டை உள்பட 33 இடங்களில் மருந்தகங்கள் திறக்கப்படுகிறது. இங்கு குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் கிடைக்கும்.
முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான ஜெனரிக் மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி-பார்ம், டி-பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலம் www.mudhalvarmarunthagam.tn.gov.in இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் .






