என் மலர்
மகாராஷ்டிரா
- தேஜஸ்வி பிரதமர் மோடியின் பீகார் பயணத்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.
- பிரதமர்மீது அவதூறு பரப்பியதாக தேஜஸ்வி மீது மகாராஷ்டிராவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மும்பை:
பீகார் மாநிலத்தில் முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
நேற்று முன்தினம் பீகார் சென்ற பிரதமர் மோடி சுகாதாரம், மின்சாரம் உள்பட பல்வேறு துறைகளில் ரூ.13,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதற்கிடையே, பிரதமரின் பீகார் பயணம் குறித்து மாநில முன்னாள் துணை முதல் மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மகனுமான தேஜஸ்வி யாதவ் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். போலி வாக்குறுதிகளைத் தந்து, ஓட்டு திருட்டில் ஈடுபடுவதாக பிரதமர் மீது அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக, மகாராஷ்டிராவின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மிலிந்த் ராம்ஜி நரோடே கட்ச்ரோலி போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில், பிரதமர் மீது அவதூறு கருத்து தெரிவித்த தேஜஸ்வி மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து பேசிய தேஜஸ்வி, வழக்குக்கு பயப்படுபவர்கள் அல்ல நாங்கள். உண்மையை தொடர்ந்து உரக்கச் சொல்வோம் என தெரிவித்தார்.
- சுனில் கவாஸ்கர் 10,000 டெஸ்ட் ரன்களை எடுத்த முதல் வீரர்.
- அதிக டெஸ்ட் சதங்கள் (34) அடித்த வீரர் போன்ற பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.
மும்பை:
வான்கடே மைதானத்தில் மும்பை கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்த்த ஜாம்வான்களை கவுரவிக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், அது ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும் எனவும் மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்திருந்தது. இதற்கு ஷரத்பவார் அருங்காட்சியகம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வான்கடே மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள சரத்பவார் அருங்காட்சியகம் நேற்று திறந்துவைக்கப்பட்டது. இதன்
நுழைவாயிலில் இந்திய பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கரின் ஆளுயர சிலையை சரத்பவார் மற்றும் கவாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கர் 1971 முதல் 1987-ம் ஆண்டு வரை இந்தியா மற்றும் மும்பை அணிகளுக்காக விளையாடியவர்.
10,000 டெஸ்ட் ரன்களை எடுத்த முதல் வீரர், அதிக டெஸ்ட் சதங்கள் (34) அடித்த வீரர் போன்ற பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ளார்.
ஏற்கனவே வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஏசி பெட்டிகளின் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் போது துப்புரவு தொழிலாளர்கள் உடலைக் கண்டுபிடித்தனர்.
- இறந்த சிறுவனின் தாய் புகார் அளித்திருப்பது தெரியவந்தது.
மகாராஷ்டிராவின் மும்பையில் ரெயில் குப்பைத் தொட்டியில் ஐந்து வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று, உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் இருந்து குர்லாவில் உள்ள லோக்மான்ய திலக் ரெயில் முனையத்திற்கு வந்து சேர்ந்த குஷிநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏசி பெட்டிகளின் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் போது துப்புரவு தொழிலாளர்கள் உடலைக் கண்டுபிடித்தனர்.
அவர்கள் தெரிவித்த தகவலின்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.
காவல்துறையினருக்குக் கிடைத்த காணாமல் போனோர் புகார்களை ஆய்வு செய்தபோது, இறந்த சிறுவனின் தாய் புகார் அளித்திருப்பது தெரியவந்தது.
குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த தனது உறவினர் விகாஸ் ஷா வெள்ளிக்கிழமை இரவு தனது மகனைக் கடத்திச் சென்றதாகக் தாய் புகார் அளித்திருக்கிறார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
- 17,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியிடம் விசாரணை நடைபெற்றது.
- மும்பையில் உள்ள வீட்டில் இன்று காலை முதல் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை.
தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் 17,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மும்பையில் உள்ள வீட்டில் இன்று காலை முதல் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அம்பானியும் அவரது குடும்பத்தினர் அனைவரும் உள்ளனர்.
- விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க, வெள்ளி நகைகள் மட்டும் ரூ.67.03 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
- ஜி.எஸ்.பி. பந்தலில் 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது.
மும்பை:
மும்பையில் வருகிற 27-ந் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களை கட்ட உள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். பொது இடங்களில் பந்தல் அமைத்து வழிபடும் பிரமாண்ட விநாயகர் சிலைகள் சிற்ப கூடங்களில் இருந்து கொண்டு வரும் பணி தொடங்கி உள்ளது. இந்தநிலையில் பிரசித்தி பெற்ற கிங்சர்க்கிள் ஜி.எஸ்.பி. பந்தல் விநாயகருக்கு ரூ.474 கோடியே 46 லட்சத்துக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க, வெள்ளி நகைகள் மட்டும் ரூ.67.03 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. பந்தலில் வைக்கப்படும் பொருட்கள் ரூ.2 கோடிக்கும், அங்கு வழிபாடு செய்ய வரும் பக்தர்களுக்கு ரூ.30 கோடிக்கும், பந்தல் பணியாளர்களுக்கு ரூ.375 கோடிக்கும், ரூ.43 லட்சத்துக்கு தீ விபத்து காப்பீடும் செய்யப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.பி. பந்தல் விநாயகர் மும்பையில் உள்ள பணக்கார விநாயகர் சிலைகளில் ஒன்றாகும். இந்த சிலை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது 69 கிலோ தங்கம், 336 கிலோ வெள்ளி ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். ஜி.எஸ்.பி. பந்தலில் 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது.
- நாய்களை தூக்கிச் சென்று சாப்பிடலாம் என சிறுத்தை தாக்கியது.
- ஆனால் தெருநாய் சிறுத்தையை படுகாயமாக்கியது.
டெல்லி தலைநகர் பகுதியில் தெருநாய்கள் அடிக்கடி பொதுமக்களை தாக்கி வந்த நிலையில், வெறிநாய் கடித்து சிலர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டது. இதனால் நாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகத்தில் அடைத்து பராமரிக்க உச்சநீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டது. பின்னர், கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்த இன்று உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் மட்டுமல்ல இந்தியாவின் பெரும்பாலான இடத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது. தனியாக செல்லுபவர்களை கடித்து குதறும் காட்சிகள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் சிறுத்தைகள், புலிகள் வீட்டில் உள்ள நாய்களை அடித்து தூக்கிச் செல்லும் காட்சிகளையும் பார்த்திருக்கிறோம்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சிறுத்தையையே தெருநாய் கடித்து சுமார் 300 மீ. தூரத்திற்கு இழுத்துச் சென்ற பதைபதைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் மாவட்டத்தில் உள்ள நிபாத் தாலுக்காவிற்கு உட்பட்ட கங்குர்டே வஸ்தி அருகே, சில நாய்கள் உலாவிக்கொண்டிருந்தன. அப்போது திடீரென அந்த பகுதியில் புகுந்த சிறுத்தை, நாய்களை துரத்தியது. இதில் ஒரு நாய், சிறுத்தையின் வாய் பகுதியை கவ்விக்கொண்டது. இதனால் சிறுத்தையால் ஒன்னும் செய்ய முடியவில்லை. தன்னை மிஞ்சிய எடை கொண்ட சிறுத்தையை 300 மீ தூரத்திற்கு இழுத்துச் சென்றது. பின்னர் படுகாயம் அடைந்த சிறுத்தை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அதிக எடை மற்றும் மின்னல் வேகத்தில் பாயும் சிறுத்தையையே கடித்து குதறுகிறது என்றால், அப்பாவி மக்கள் தனியாக கிடைத்தால் என்னவாகும்? என வீடியோவை பார்க்கம்போது பதைபதைக்க வைக்ககிறது.
- கிராஸ் வோட்டிங் விழும் என நீங்கள் (என்டிஏ) அஞ்சுகிறீர்களா?.
- ஆந்திரா, தெலுங்கானா எம்.பி.க்கள் இடையே குழப்பம் நிலவுகிறது.
துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவரும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.
ஆந்திர மாநில எம்.பி.க்கள், அம்மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டிக்கு சாதகமாக வாக்களிப்பார்களா? அல்லது என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளரான தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு கட்சி சி.பி. ராதாகிருஷ்ணனுக்குதான் ஆதரவு எனத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா எம்.பி. சுதர்சன் ரெட்டியை ஆதரிக்கக் கூடும் என தேசிய ஜனநாயக கூட்டணி பயப்படுவதாக சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சஞ்சய் ராவத் கூறியதாவது:-
பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா, காங்கிரஸ் தலைமையிலான UPA வேட்பாளர் பிரதிபா பாட்டீலை 2007ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது ஆதரித்தது. ஏனென்றால், அவர் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர். ஆந்திரா மற்றும் தெலுங்கானா எம்.பி.க்கள் எதிர்க்கட்சி வேட்பாளரான சுதர்சன் ரெட்டியை ஆதரிக்கக்கூடும் என என்டிஏ (தேசிய ஜனநாயக கூட்டணி) பயப்படுகிறது.
கிராஸ் வோட்டிங் விழும் என நீங்கள் (என்டிஏ) அஞ்சுகிறீர்களா?. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான டூப்ளிக்கேட் சிவசேனா மூலம் கிராஸ் வோட்டிங் விழும். பேப்பரில் என்டிஏ கூட்டணி மெஜாரிட்டியாக உள்ளது. எதிர்க்கட்சி வேட்பாளர் ஆந்திராவில் இருந்து வந்துள்ளார். ஆந்திரா, தெலுங்கானா எம்.பி.க்கள் இடையே குழப்பம் நிலவுகிறது. ராகுல் காந்தி நாட்டிலும், பீகாரிலும் மற்றும் பல இடங்களிலும் உருவாக்கிய சூழ்நிலை காரணமாக, கிராஸ் வோட்டிங் விழ வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
- என்.டி.ஏ. வேட்பாளர் எங்களுடைய சித்தாந்தத்துடன் ஒத்துப்போகவில்லை.
- அவர் ஜார்க்கண்ட் கவர்னராக இருந்தபோது, முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
துணை ஜனாதிபதி தேர்தலில் என்.டி.ஏ. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் பட்நாவிஸ் கேட்டுக்கொண்ட நிலையில், தனது கோரிக்கையை ஏற்க முடியாத இயலாமையை (வாக்களிக்க முடியாது) வெளிப்படுத்தியதாக தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சரத் பவார் கூறியதாவது:-
எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். எதிர்க்கட்சிகளுக்கு என்டிஏ-வை விட குறைவான எம்.பி.க்கள் மட்டுமே இருந்தபோதிலும், அதனால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.
எதிர்க்கட்சிகளின் அனைத்து வாக்குகளும் சுதர்சன் ரெட்டிக்கு செல்லும். அதன்மூலம் பலம் தெரியவரும். நாங்கள் எந்தவொரு ஆச்சர்யத்தையும் எதிர்பார்க்கவில்லை.
என்.டி.ஏ. வேட்பாளர் எங்களுடைய சித்தாந்தத்துடன் ஒத்துப்போகவில்லை. அவர் ஜார்க்கண்ட் கவர்னராக இருந்தபோது, முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அவர் கவர்னரை சந்தித்தபோது கைது செய்யப்பட்டார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்கு இது தெளிவான உதாரணம். அத்தகைய வேட்பாளருக்கு ஆதரவை எதிர்பார்ப்பது பொருத்தமானது அல்ல. எனவே, முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்க முடியாத எனது இயலாமையை நான் வெளிப்படுத்தினேன்.
இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.
- மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
- நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் மும்பையில் வெள்ளம் சூழ்ந்த சாலையில் 'ஸ்பைடர் மேன்' உடையணிந்த ஒரு நபர் வைப்பரைக் கொண்டு தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் காட்சி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
'இன்னும் நிறைய தண்ணீரை அகற்ற வேண்டும்' என்ற நகைச்சுவையான தலைப்புடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, கிட்டத்தட்ட 2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
இந்த வீடியோவுக்கு மும்பைவாசிகள், நகைச்சுவையாகவும், மும்பையின் உள்கட்டமைப்பை அரசு மேம்படுத்தாததால் ஏற்படும் இன்னல்கள் குறித்தும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- பேட்ஸ்மேன்களுக்கான புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது.
- இதில் ரோகித் சர்மா, விராட் கோலி பெயர்கள் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மும்பை:
பேட்ஸ்மேன்களுக்கான புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில் ரோகித் சர்மா, விராட் கோலி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெளியான பட்டியலில் முதல் 100 இடங்களில் கூட இருவரது பெயர்களும் இடம்பெறவில்லை.
கடந்த வாரம் வரை இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 2-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் நீடித்து வந்தனர்.
ஐ.சி.சி. விதிமுறைப்படி, சுமார் 9 மாத காலம் ஒரு விளையாட்டு வீரர் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றால் அவரது பெயர் தரவரிசை பட்டியலில் இருந்து நீக்கப்படும் அல்லது ஓய்வு அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டும் இவர்கள் விஷயத்தில்
நடக்கவில்லை.
இந்தச் செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீயாகப் பரவி, பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
தரவரிசைப் பட்டியலில் இருந்து அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டது ஒருவேளை இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார்களோ என்ற வதந்தி பரவியது.
2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான அணியில் இருவருக்கும் என்பதை பிசிசிஐ மறைமுகமாக தெரிவிக்கிறதா எனவும் சாடி வருகின்றனர்.
பி.சி.சி.ஐ. இருவரையும் ஓய்வுபெறும்படி கட்டாயப்படுத்திவிட்டதா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ரசிகர்களின் பதற்றம் உச்சத்தை எட்டிய நிலையில் சில மணி நேரங்களுக்குப் பிறகு ஐசிசி தனது தவறைத் திருத்தியது. இது ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட குழப்பம் எனத் தெரியவந்தது. அதன்பின் ஐசிசி வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் ரோகித் சர்மா 2-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் இடம்பெற்றனர்.
- வினோத் காம்ப்ளி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
- உடல்நிலை சீராகி வந்தாலும் அவருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது.
மும்பை:
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான வினோத் காம்ப்ளி (53), உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
சிறுநீர் தொற்று காரணமாக டிசம்பர் 2024-ல் தானே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின், அவர் வீட்டிற்குத் திரும்பியிருந்தாலும், அவரது குணமடைதல் மெதுவாகவும் கடினமாகவும் உள்ளது. உடல்நிலை சீராகி வந்தாலும் அவருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அவரது இளைய சகோதரர் வீரேந்திர காம்ப்ளி தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
வினோத் காம்ப்ளி கடுமையான போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறார். ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அவருக்காக பிரார்த்தனை செய்யவேண்டும்.
அவருக்கு பேசுவதில் சிரமம் உள்ளது. அவர் குணமடைய நேரம் எடுக்கும். ஆனால் அவர் ஒரு சாம்பியன், அவர் திரும்பி வருவார். அவர் நடக்கவும் ஓடவும் தொடங்குவார். அவர்மீது எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது. நீங்கள் அவரை மீண்டும் மைதானத்தில் பார்க்க முடியும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
வினோத் காம்ப்ளி இந்தியாவுக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- உணவு வீணாவதைத் தடுப்பதற்கான ஒரு முன்னோக்கிய படி.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒரு ஓட்டலில் யாராவது உணவை வீணாக்கினால், அவர்கள் ரூ.20 அபராதம் செலுத்த வேண்டும் என்ற விதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
உணவு வீணாவதைத் தடுக்க இந்த புதுமையான முடிவை எடுத்துள்ளது. உணவை வீணாக்குவதற்கு அபராதம் விதித்து கையால் எழுதப்பட்ட உணவக அறிவிப்பு கார்டு புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளிலும் இதே போன்ற விதி இருந்தால் உணவு வீணாவதை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். உணவு வீணாவதைத் தடுப்பதற்கான ஒரு முன்னோக்கிய படி.
உணவை வீணாக்கக்கூடாது என்பது சரிதான் ஆனால் ஒருவர் எப்படி தங்களுக்குப் பிடிக்காத உணவை உண்ணும்படி கட்டாயப்படுத்த முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் வாடிக்கையாளர்கள் பொறுப்புடன் செயல்பட ஊக்குவிக்கும் நோக்கில் உணவகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.






