என் மலர்
கேரளா
- 12,000 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய தேவசம் போர்டு டெண்டர் விடுவிப்பு.
- ஏலக்காய் சேர்க்கப்படாமல் கடந்தாண்டு பக்தர்களுக்கு அரவணை வழங்கப்பட்டது.
சபரிமலை கோவில் பிரசாதமான அரவணை பாயசம் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமானதாக இல்லை என ஐயப்பா மசாலா நிறுவனம் கடந்தாண்டு கேரளா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
இதனை விசாரித்த நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், ஏலக்காயின் தரம் குறித்து திருவனந்தபுரம் அரசு ஆய்வகம் பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பித்தது.
இந்த அறிக்கையில், அரவணை பாயசத்தில் பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமற்றது எனவும். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதால், ஏலக்காய் பாதுகாப்பானது அல்ல என தெரிவிக்கப்பட்டது.
அதனால் ஏலக்காய் சேர்க்காமல் அரவணை பாயாசம் தயாரிக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, ஏலக்காய் சேர்க்கப்படாமல் கடந்தாண்டு பக்தர்களுக்கு அரவணை வழங்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில் ஏலக்காய் கலக்காமல் இருந்தது குறித்து பல பக்தர்கள் அதிருப்தி அடைந்ததாகவும் பக்தர்களின் கோரிக்கையை அடுத்து தற்போது எந்த விதமான கெமிக்கலும் கலக்காத ஏலக்காய் கலக்க முடிவு செய்து இருப்பதாகவும் தேவஸ்தான வட்டாரத்தில் கூறப்பட்டது.
அதன்படி சபரிமலை கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில் மீண்டும் ஏலக்காய் சேர்க்கப்பட உள்ளது.
இதற்காக தீங்கு தரும் எந்த ரசாயனமும் இல்லாத 12,000 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய தேவசம் போர்டு டெண்டர் விடுவித்துள்ளது.
- அறையில் இருந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- போதை பொருட்கள் வியாபாரிகள் உள்ளிட்ட விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.
திருவனந்தபுரம்
கேரள மாநிலம் கருகப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் அந்த லாட்ஜில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு அறையில் கேரள மாநிலம் வரபுழாவை சேர்ந்த மாடல் அழகியான அல்கா போனி(வயது22), இடுக்கியை சேர்ந்த ஆஷிக் அன்சாரி(22), சூரஜ்(26), பாலக்காட்டை சேர்ந்த ரஞ்சித்(24), முகமது அசார்(18), திருச்சூரை சேர்ந்த அதுல்(18) ஆகிய 6 பேர் தங்கியிருந்தனர். அந்த அறையில சோதனை செய்தபோது கொக்கைன், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தன.
இதையடுத்து மாடல் அழகி உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களின் அறையில் இருந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட போது மாடல் அழகி உள்ளிட்ட 6 பேரும் போதையில் இருந்துள்ளனர். அவர்கள் போதை பொருட்களை பெங்களூருவில் இருந்து கொண்டு வந்து கேரளாவில் விற்பனை செய்து வந்திருக்கின்றனர்.
அவர்களது செல்போன் மூலம் அவர்களுடன் தொடர்பில் இருந்த போதை பொருட்கள் வியாபாரிகள் உள்ளிட்ட விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். அதனடிப்பைடையில் இந்த வழக்கில் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
- குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
- மலை-கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
திருவனந்தபுரம் நகரில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. திருவனந்தபுரம் சாக்கா தோப்பமுடுக்கு பகுதியை சேர்ந்த விக்ரமன்(வயது82) என்ற முதியவர் தனது வீட்டின் முன் தேங்கியிருந்த தண்ணீரில் இறந்துகிடந்தார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்தாரா? அல்லது மழை தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் மேலும் சில நாட்கள் கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது.

இந்நிலையில் கேரளாவில் 14 மாவட்டங்களில் இன்று முதல் புதன்கிழமை வரை பலத்த மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. இதனால் பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் அதிக அளவு மழை பெய்யும் என்பதால் நகர பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் மலையை ஒட்டிய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட லாம் என்பதால் மலை-கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- கேரள திருவனந்தபுரத்தில் மே 22 ஆம் தேதி வரை அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- இதனால் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரள திருவனந்தபுரத்தில் மே 22 ஆம் தேதி வரை அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனக் கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருவந்தபுரம் தற்பொழுது வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
இந்த எச்சரிக்கை திரும்பப் பெறும் வரை கடலோர மற்றும் மலை மாவட்ட மக்களும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
அதிகனமழையின் போது 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இடுக்கி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் வாகனங்கள் பயணிக்க கலெக்டர் தடை விதித்துள்ளார்.
நீர்வீழ்ச்சி, நீர்நிலைகள் தொடர்பான சுற்றுலா தலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிகனமழை எச்சரிக்கையால், எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்களில் சுரங்க பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் கொட்டி வரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதை அடுத்து, அதை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுஉள்ளனர்.
தொடர் மழையால் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து அங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுஉள்ளது.
- சிலந்தி ஆற்று நீர் அமராவதி அணைக்கு வரும் துணை ஆறான தேனாற்றின் ஒரு பகுதி ஆகும்.
- தடுப்பணை கட்டப்படுவது, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளின் ஆய்வில் உறுதி.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.
இந்த ஆற்று நீர் அமராவதி அணைக்கு வரும் துணை ஆறான தேனாற்றின் ஒரு பகுதி ஆகும்.
இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவது, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவின் இந்த செயல், காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறும் செயல் என சமூக ஆவர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், குடிநீருக்காக என கூறி சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- குழந்தையின் கையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்ததால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சர்ச்சையில் சிக்கியது.
- இந்த சம்பவம் நிகழ்ந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையின் கேரள அரசு மருத்துவமனை மீண்டும் தவறான அறுவை சிகிச்சை செய்ததாக புகார் எழுந்துள்ளது.
குழந்தையின் கையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்ததால் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சர்ச்சையில் சிக்கியது. இந்த சம்பவத்துக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவரை மருத்துவமனை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது.

இந்த சம்பவம் நிகழ்ந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையின் கேரள அரசு மருத்துவமனை மீண்டும் தவறான அறுவை சிகிச்சை செய்ததாக புகார் எழுந்துள்ளது. சாலை விபத்தில் சிக்கிய அந்த நபர் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு எடுக்கப்பட்ட எக்ஸ்ரேயில் சிகிச்சையில் நடந்த பிழை கண்டறியப்பட்டுள்ளது. தனது கையில் மர்மமான பொருளை வைத்து மருத்துவர்கள் தைத்துள்ளதாக அந்த குற்றம் சாட்டியுள்ளார்.
தனது கையை எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கும்பொழுது அதில் மர்மமான வடிவத்தில் பொருள் ஒன்று இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ள அவர், இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பபோவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
- கேரளாவில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் புகார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக இளைஞர் காங்கிரஸ் கட்சியினர், ஆளும் கட்சி மீது புகார் கூறி வருகின்றனர். மேலும் இதற்கு பொறுப்பேற்று முதல்-மந்திரி பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முதல்-மந்திரி பினராயி விஜயன் வீட்டுக்கு பேரணி யாக சென்ற இளைஞர் காங்கிரசார், அங்கு அவரது உருவப்பொம்மையையும் எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ள நிலையில், முதல்-மந்திரி பினராயி விஜயன் குடும்பத்தினருடன் விடுமுறையில் வெளிநாடு சென்றதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்களும் எழுப்பப் பட்டன.
- ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களே கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.
- சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வைகாசி மாத பூஜைக்காக கடந்த 14-ந் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. கோவில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். உடனடி முன்பதிவு நிறுத்தப் பட்டுள்ளதால், ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களே கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.
நேற்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் சகஸ்ர கலச சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சபரிமலையில் மழை கொட்டியது. இருப்பினும் பக்தர்கள் மழையில் நனைந்த படியே காத்திருந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வைகாசி மாத பூஜை நிறைவையொட்டி இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படுகிறது.
- தமிழகம், கேரளாவில் வரும் 21-ம் தேதி வரையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
- கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை 31-ம் தேதி தொடங்கும் என கருதப்படும் நிலையில், கடந்த ஒரு வார காலமாக மாநிலத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்துவருகிறது. இந்த மழையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு மாவட்டங்களுக்கும் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வுமையம் தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்துவருகிறது. பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு முதல் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்த வானிலை ஆய்வுமையம் தற்போது அதனை சிவப்பு எச்சரிக்கையாக மாற்றி அறிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி வரும் 20-ம் தேதி வரை பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், மலப்புரம், கோழிக்கோடு உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மாவட்டங்களில் ரெட் அலர்ட்டுக்கான மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், 2 நாட்களுக்கு காற்றின் வேகம் 30 முதல் 40 கி.மீட்டர் வேகத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் திடீர் வெள்ளம், மண் சரிவு போன்றவை ஏற்படலாம். எனவே மலைப்பாங்கான மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 2013-ல் சீனா இந்தியாவின் 640 சதுர கிலோ மீட்டர் நிலத்தை ஆக்கிரமித்தது.
- உடனடியாக இந்தியா மற்றொரு எல்லையில் சீனா இடத்தை ஆக்கிரமித்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
இந்தியா- சீனா எல்லையில் சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டும் திடீரென இந்திய எல்லைக்குள் ஊடுருவினர். இந்திய எல்லைக்குள் புகுந்த அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.
அப்போது இருதரப்பு வீரர்களுக்கும் இடையில் கடும் சண்டை நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் அதிக இழப்பு ஏற்பட்டது. அதன்பின் அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் கட்டமைப்புகளை வலுப்படுத்தியது.
கல்வான் பள்ளத்தாக்கில் பல சதுர கிலோ மீட்டர் வரையிலான இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்ததாக இந்திய எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், இந்திய பிரதமர் ஒரு அங்குல நிலம் கூட சீன ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்படவில்லை என பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் மோடி தெரிவித்ததை சீன பத்திரிகைள் பெரிய அளவில் செய்தியாக வெளியிட்டனர். இந்திய பிரதமர் எந்தவித எதிர்ப்பும் இன்றி இந்திய நிலத்தை தாரைவார்த்ததாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் சியாம் சரண், எந்தவித போராட்டமின்றி இந்திய நிலத்தை தாரைவார்த்து விட்டடதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசியதாக கேரள மாநில காங்கிரஸ் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு செய்தியில் கூறியிருப்பதாவது:-
2013-ல் சீனா இந்தியாவின் 640 சதுர கிலோ மீட்டர் நிலத்தை ஆக்கிரமித்தது. உடனடி பதிலடியாக எல்லையின் மற்றொரு பகுதியில் நாம் சீனாவின் இடத்தை ஆக்கிரமித்தோம். இதனால் சீனா பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது.
அப்போது இரு தரப்பிலும் தங்களது பழைய இடத்திற்கு திரும்பிச் செல்ல ஒப்புக் கொள்ளப்பட்டது. எந்தவித போராட்டம் இன்றி 4067 சதுர கிலோ மீட்டர் இந்திய நிலத்தைர பிரதமர் மோடி சீனாவுக்கு தாரைவார்த்துவிட்டார்.
இவ்வாறு முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் சியாம் சரண் தெரிவித்துள்ளார்.
- குடும்பத்தினருடன் 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
- பினராயி விஜயனின் வெளிநாட்டு பயணம் விமர்சனத்துக்குள்ளானது.
திருவனந்தபுரம்:
கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், விடுமுறைக்காக தனது குடும்பத்தினருடன் கடந்த 6-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, சிங்கம்பூர் ஆகிய 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
பினராயி விஜயனுடன் அவரது மனைவி கமலா, பேரன், மகள் வீணா விஜயன், அவரது கணவரும் மாநில சுற்றுலாத்துறை மந்திரியுமான முகமது ரியாஸ் உள்ளிடடோரும் சென்றனர்.
மக்களவை தேர்தலுக்கு மத்தியில் பினராயி விஜயனின் இந்த வெளிநாட்டு பயணம் குறித்து காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் கேள்வி எழுப்பின.
மேலும் அவரது வெளிநாட்டு பயணத்துக்கு ஸ்பான்சர் செய்தது யார்? என்பதை தெரிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் பினராயி விஜயனின் வெளிநாட்டு பயணம் விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில் பினராயி விஜயன் திட்டமிட்டிருந்தபடி இல்லாமல், 2 நாட்களுக்கு முன்னதாகவே வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு கேரளா திரும்பினார். பயண நாட்களை குறைத்துக்கொண்டு திரும்பியது குறித்து கேட்டதற்கு பினராயி விஜயன் பதிலளிக்கவில்லை.
- இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது.
- ஆபாசமான கருத்துகள் தெரிவித்த விவகாரத்தில் ஹரிஹரனை போலீசார் கைது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் செயல்படும் புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இடம்பெற்றிருக்கிறது. இந்த கட்சியின் தலைவர் ஹரிஹரன்.
இவர் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் வடகரா தொகுதியில் இடது சாரி ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் மந்திரி சைலஜா மற்றும் நடிகை மஞ்சு வாரியர் ஆகியோரை தொடர்புபடுத்தி ஆபாசமான கருத்துக்களை தெரி வித்தார். அவரது அந்த கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஹரிஹரன் மீது 509, 153 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
தனக்கு எதிராக கண்ட னங்கள் அதிகமானதையடுத்து ஹரிஹரன், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவை வெளியிட்டார். இந்நிலையில் கோழிக்கோட்டில் உள்ள ஹரிஹரனின் வீட்டின் மீது கடந்த 12-ந்தேதி மர்மநபர்கள் வெடிகுண்டுகளை வீசினர்.
அவை வீட்டின் சுற்றுச்சுவரில் விழுந்து வெடித்தன. இதுதொடர்பாகவும் போலீசார் வழக்குபபதிந்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் முன்னாள் மந்திரி சைலஜா மற்றும் நடிகை மஞ்சுவாரியர் பற்றி ஆபாசமான கருத்துகள் தெரிவித்த விவகாரத்தில் ஹரிஹரனை போலீசார் கைது செய்தனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்பு போலீஸ் நிலைய ஜாமீனில் ஹரிஹரன் விடுவிக்கப்பட்டார்.
ஜாமீனில் வெளியே வந்த ஹரிஹரன் கூறும்போது, 'கேரளாவில் நிறையபேர் தங்களது பேச்சில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் மீது வழக்கு பதியப்படுவதில்லை' என்றார்.






