என் மலர்
இந்தியா

கோட்டயம், இடுக்கி உள்பட 3 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்
- தமிழகம், கேரளாவில் வரும் 21-ம் தேதி வரையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
- கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை 31-ம் தேதி தொடங்கும் என கருதப்படும் நிலையில், கடந்த ஒரு வார காலமாக மாநிலத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்துவருகிறது. இந்த மழையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு மாவட்டங்களுக்கும் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வுமையம் தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்துவருகிறது. பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு முதல் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்த வானிலை ஆய்வுமையம் தற்போது அதனை சிவப்பு எச்சரிக்கையாக மாற்றி அறிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி வரும் 20-ம் தேதி வரை பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், மலப்புரம், கோழிக்கோடு உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மாவட்டங்களில் ரெட் அலர்ட்டுக்கான மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், 2 நாட்களுக்கு காற்றின் வேகம் 30 முதல் 40 கி.மீட்டர் வேகத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் திடீர் வெள்ளம், மண் சரிவு போன்றவை ஏற்படலாம். எனவே மலைப்பாங்கான மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






