என் மலர்
கேரளா
- திருச்சூர் தொகுதி மக்கள் தனக்கு வெற்றியை தருவார்கள் என்று அவர் உறுதியாக தெரிவித்திருக்கிறார்.
- ஆவணங்களை திருநங்கைகளுக்கு அறுவை சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனையில் ஒப்படைத்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல திரைப்பட நடிகர் சுரேஷ்கோபி. இவர் நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டார். திருச்சூர் தொகுதி மக்கள் தனக்கு வெற்றியை தருவார்கள் என்று அவர் உறுதியாக தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் சுரேஷ்கோபி கேரள மாநிலத்தை சேர்ந்த 10 திருநங்கைகளுக்கு பாலின உறுதிப்படுத்துதல் அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி அளித்துள்ளார். அதற்காக அவர் ரூ.12லட்சத்தை டெபாசிட் செய்து, அதற்கான ஆவணங்களை திருநங்கைகளுக்கு அறுவை சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனையில் ஒப்படைத்தார்.
நிதியுதவி பெற்ற திருநங்கைகள் கூறும்போது, 'நடிகரின் இந்த ஆதரவு வெறும் கருணை மட்டும் அல்ல. சமூகத்தின் தேவை மற்றும் பொறுப்பாகும். நாங்கள் சமூகத்தில் சுதந்திரமாகவும், கண்ணியமாகவும் வாழ்வதற்கான ஒவ்வொரு தனிநபர் உரிமையின் தொடக்கமாகும்' என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
திருநங்கைகளுக்கு நிதியுதவி அளித்தது பற்றி நடிகர் சுரேஷ்கோபி கூறும்போது, 'பாலின உறுதிப்படுத்துதல் அறுவை சிகிச்சைக்கு ஒதுக்கப்படும் நிதியுதவியை அரசு தாமதப்படுத்தினால், மேலும் 10 பேரின் அறுவை சிகிச்சைக்கு நிதியளிக்க தயாராக இருக்கிறேன்' என்று கூறியிருக்கிறார்.
- சமீப கால ஆண்டுகளில் மாநிலத்தில் பெய்ததை போன்று மிக வலுவான மழையாக இருக்கும் என்றும், ஜூன் மாதத்தில் இயல்பை விட அதிக மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொச்சி, ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளிலும், பிரதான சாலைகளிலும் மழைநீர் தேங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்வதால் அங்கு கோடை வெப்பம் தணிந்து குளர்ச்சியான தட்பவெப்பநிலை நிலவி வருகிறது. மாநிலத்தில் கோடைமழை வெளுத்துவாங்கி வரும் நிலையில், வருகிற 31-ந் தேதிக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
கேரளாவில் ஒருசில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தினம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, திருச்சூர், கொல்லம் ஆகிய மாவட்டங்களில் நாளை(29-ந்தேதி) மற்றும் நாளை மறுதினம் ஆகிய 2 நாட்களும், இடுக்கியில் 31-ந்தேதியும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் வருகிற 31-ந்தேதி முதல் கேரள மாநிலத்தில் அதிகனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப கால ஆண்டுகளில் மாநிலத்தில் பெய்ததை போன்று மிக வலுவான மழையாக இருக்கும் என்றும், ஜூன் மாதத்தில் இயல்பை விட அதிக மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
- கவனக்குறைவு மற்றும் அதிக செயல்பாடு என்பது ஒரு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு ஆகும்.
- இது குழந்தைகளில் பொதுவானது. ஆனால் பெரியவர்களையும் பாதிக்கலாம் என கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
பிரபல தென்னிந்திய நடிகர் பகத் பாசில், தனது 41 வயதில் கவனக்குறைவு மற்றும் அதிக செயல்பாடு கோளாறு நோய் மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்டது என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொத்தமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆவேசம் மற்றும் புஷ்பா பட நடிகர் பகத் பாசில் கலந்து கொண்டார். அப்போது பேசிய பகத் பாசில், கிராமத்தில் சுற்றித் திரியும் குழந்தைகளுக்கு இந்த நோயைக் குணப்படுத்துவது எளிதா என டாக்டரிடம் கேட்டேன். சிறு வயதிலேயே இதைக் கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும் என அவர் கூறினார். 41 வயதில் கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியுமா என்றும் கேட்டேன் என தெரிவித்தார்.
கவனக்குறைவு மற்றும் அதிக செயல்பாடு என்பது ஒரு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு ஆகும். இது மூளையின் கவனம், நடத்தை மற்றும் உந்துவிசைக் கட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தும் திறனைப் பாதிக்கிறது. இது குழந்தைகளில் பொதுவானது. ஆனால் பெரியவர்களையும் பாதிக்கலாம் என கூறப்படுகிறது.
- பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரத்யேகமாக கட்டப்பட்ட தடுப்புகள் வழியாக அழைத்துச் செல்லப்படுவார்கள்.
- அப்பம்-அரவணை பிரசாதம் வழங்கும் கவுண்டர்களில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை ஒதுக்கப்படும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடக்கக்கூடிய மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள்.
சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான வசதிகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு செய்து வருகிறது. இந்நிலையில் வருகிற யாத்திரை காலங்களில் செய்யப்படவேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறியிருப்பதாவது:-
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டும், யாத்திரையின் போது ஏற்படும் அவசர தேவைக்காகவும் மெய்நிகர் வரிசை முறையை பயன்படுத்தும் பக்தர்களுக்கு காப்பீடு வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. வருகிற மாதாந்திர பூஜை யாத்திரை காலத்திலேயே இந்த முறை அமல்படுத்தப்படும்.
தரிசனத்துக்கு பக்தர்கள் மெய்நிகர் வரிசையில் முன்பதிவு செய்யும் போது காப்பீட்டுக்காக ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். சபரிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பக்தர்களின் பயணத்தின்போது, அவர்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தி கவரேஜை விரிவுபடுத்த காப்பீட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
மாதாந்திர பூஜை காலங்களில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் போது மெய்நிகர் வரிசை மூலமாக தினமும் 50ஆயிரம் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். நவம்பர் மாதம் தொடங்கும் புனித யாத்திரை காலத்தில் ஒரு நாளைக்கு 80ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
சுமூகமான ஏற்பாடுகளை உறுதி செய்வதற்காகவே இந்த வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரத்யேகமாக கட்டப்பட்ட தடுப்புகள் வழியாக அழைத்துச் செல்லப்படுவார்கள். அப்பம்-அரவணை பிரசாதம் வழங்கும் கவுண்டர்களில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை ஒதுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
- ஐதராபாத்தை சேர்ந்த 4 பேர் கேரள மாநிலம் மூணாறுக்கு காரில் சுற்றுலா புறப்பட்டனர்.
- உள்ளூர் மக்களிடம் விவரத்தைக் கூற, அக்கம் பக்கத்தினர் திரண்டு கால்வாய்க்குள் மூழ்கிய காரையும் அதில் இருந்த பெண் உள்பட 3 பேரையும் மீட்டனர்.
திருவனந்தபுரம்:
இன்றைய விஞ்ஞான உலகில் சுற்றுலா செல்பவர்கள் பலரும் மனித வழிகாட்டிகளை நம்புவதை விட, கூகுள் மேப்பை பயன்படுத்தியே பல இடங்களுக்கும் செல்கின்றனர். இது பல நேரங்களில் சரியாக இருந்தாலும், சில நேரங்களில் ஆபத்தில் கொண்டு விட்டு விடுகிறது.
அதுவும் மழைக்காலங்களில் கூகுள் மேப் வழிகாட்டி மூலம் சென்ற வாகனங்கள் விபத்துக்களை அதிகம் சந்தித்துள்ளன. கேரளாவில் கடந்த ஆண்டு கூகுள் மேப்பை பயன்படுத்தி சென்ற கார், ஆற்றுக்குள் பாய்ந்ததில் 2 டாக்டர்கள் பரிதாபமாக இறந்தனர். இந்த நிலையில் இது போன்ற மற்றுமொரு சம்பவம் கேரளாவில் இன்று நிகழ்ந்துள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த 4 பேர் கேரள மாநிலம் மூணாறுக்கு காரில் சுற்றுலா புறப்பட்டனர். அவர்கள் இன்று அதிகாலை ஆலப்புழா பகுதியில் கூகுள்மேப் வழிகாட்டியை பார்த்து சென்றுள்ளனர். அவர்கள் 2 சாலைகள் பிரியும் இடத்தில் சென்ற போது, மேப் காட்டிய வழியில் காரை செலுத்தி உள்ளனர். ஆனால் அந்த வழி கால்வாய்க்கான வழியாகும். இது தெரியாமல் சென்றதால், கார் கால்வாய்க்குள் பாய்ந்து மூழ்கியது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த ஒருவர் தப்பினார். அவர் உள்ளூர் மக்களிடம் விவரத்தைக் கூற, அக்கம் பக்கத்தினர் திரண்டு கால்வாய்க்குள் மூழ்கிய காரையும் அதில் இருந்த பெண் உள்பட 3 பேரையும் மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
- கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து வருகிறது.
- கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்
திருவனந்தபுரம்:
வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு அடைந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது.

இதற்கிடையே, கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து வருகிறது. அதனடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. கேரளாவில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவில்லை என கேரள அரசு வாதம்.
- கேரளா அரசுக்கு உத்தரவிட்ட நிலையில், விசாரணை ஜூலை 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.
இந்த ஆற்று நீர் அமராவதி அணைக்கு வரும் துணை ஆறான தேனாற்றின் ஒரு பகுதி ஆகும்.
இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கேரளாவின் இந்த செயல், காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறும் செயல் என சமூக ஆவர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், உரிய அனுமதி பெறாமல் சிலந்தி ஆற்றில் மேற்கொள்ளப்படும் தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என கேரளா அரசுக்கு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
நாளிதழில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இதில், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவில்லை. நீரை தடுத்து உள்ளூர் மக்களுக்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான கலிங்கு தான் அமைப்பட்டு வருகிறது என கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எந்த கட்டுமானது மேற்கொள்வதாக இருந்தாலும், உரிய அனுமதி பெற்றபின் தான் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்நிலையில், உரிய அனுமதிகள் ஏற்கனவே பெறப்பட்டிருந்தால் அதனை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இல்லை என்றால், சிலந்தி ஆற்றில் மேற்கொள்ளப்படும் தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என கேரளா அரசுக்கு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், கேரளா அரசுக்கு உத்தரவிட்ட நிலையில், விசாரணை ஜூலை 23ம் தேதிக்கு தள்ளி வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
- கேரளாவில் பெய்துவரும் மழைக்கு 6 பேர் பலியாகினர்.
- மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு அடைந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது.
இதற்கிடையே, கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த விவரங்களை இந்திய வானிலை ஆய்வுமையம் அறிவித்து வருகிறது. அதனடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. கேரளாவில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மேலும் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.
கடலில் அலைகள் உயரமாக அடிக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்லக்கூடாது என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
- இரு அபுபக்கரின் தாய் மற்றும் தந்தையின் பெயர் ஒரே பெயராகும்.
- தன்னை தவறுதலாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கோர்ட்டை அபுபக்கர் அணுக உள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வெளியங்கோடு பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வெளியங்கோட்டில் வசித்து வருகின்றனர். வெளிநாட்டில் வேலைபார்க்கும் அபுபக்கர் குடும்ப செலவுக்கு பணம் தராமல் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆகவே அபுபக்கர் மீது அவரது மனைவி ஆயிஷாபி திரூர் குடும்பநல கோர்ட்டில் புகார் செய்தார். அவரது மனுவை விசாரித்த கோர்ட்டு, அபுபக்கருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. அது தொடர்பாக பொன்னானி போலீசார் விசாரணை நடத்தி அபுபக்கரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அவர்கள் ஆயிஷாபியின் கணவர் அபுபக்கரை கைது செய்வதற்கு பதிலாக, பக்கத்து வீட்டில் வசித்து வரும் மற்றொரு அபுபக்கரை கைது செய்தனர். மனைவியுடன் தகராறு செய்தது தொடர்பாக இவர் மீது வழக்கு இருக்கிறது. அந்த வழக்கில் தான் தன்னை கைது செய்திருக்கின்றனர் என்று அந்த நபர் நினைத்துக் கொண்டார்.
போலீஸ் நிலையத்துக்கு சென்றதும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டதால் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் அவரிடம் தெரிவித்தனர். அது தொடர்பான ஆவணங்களை அபுபக்கர் பார்த்தது, இது எனது மீதான வழக்கு இல்லை எனவும், தனது மீது பிடிவாரண்டு எதுவும் கிடையாது என்றும் தெரிவித்தார்.
ஆனால் அவர் கூறியதை போலீசார் கேட்காமல், அவரை திரூர் குடும்பநல கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது ரூ. 4 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் தன்னால் அபராதம் செலுத்த முடியாது என்று அபுபக்கர் கூறினார். இதையடுத்து அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்பேரில் அபுபக்கர் சிறையில் அடைக்கப்பட்டார். அபுபக்கர் சிறையில் அடைக்கப்பட்ட விவரம் அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. அவர்கள் தலையிட்டு விசாரணை நடத்தியபோது ஆயிஷாபியின் கணவர் அபுபக்கருக்கு பதிலாக பக்கத்து வீட்டு அபுபக்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது தெரியவந்தது.
இரு அபுபக்கரின் தாய் மற்றும் தந்தையின் பெயர் ஒரே பெயராகும். இதனால் உண்மையான நபருக்கு பதிலாக மற்றொரு நபரை போலீசார் கைது செய்து விட்டது தெரியவந்தது. இதுபற்றி தவறுதலாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அபுபக்கரின் உறவினர்கள் கோர்ட்டில் கூறினர். மேலும் அதற்கான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து அபுபக்கரை போலீசார் தவறுதலாக கைது செய்து சிறையில் அடைத்தது உறுதியானது. ஆகவே தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்ட அபுபக்கரை உடனடியாக விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் அபுபக்கர் 4 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
விசாரணை நடத்தியபோது அபுபக்கர், அந்த அபுபக்கர் நான் இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் அதனை போலீசார் கண்டுகொள்ளாமல் நடந்துகொண்டதே இந்த தவறுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தன்னை தவறுதலாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கோர்ட்டை அபுபக்கர் அணுக உள்ளார்.
- கேரளாவில் பெய்துவரும் மழைக்கு 4 பேர் பலியாகி இருந்த நிலையில் நேற்று மேலும் 2 பேர் இறந்துள்ளனர்.
- கடலில் அலைகள் உயரமாக அடிக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
புயல் சுழற்சி மற்றும் வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது. கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் தினமும் அறிவித்து வருகிறது. அதனடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று கொச்சி மற்றும் திருச்சூரில் பல மணி நேரம் தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக பிரதான சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான இருசக்கர வாகனங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின.

கோழிக்கோட்டில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. அங்கும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் மழை வெள்ளம் புகுந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் வார்டு, தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட இடங்களுக்குள் தண்ணீர் சென்றது.
இதனால் நோயாளிகள், பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அவதிக்குள்ளாகினர். வார்டுகளுக்குள் தேங்கிய தண்ணீர் மோட்டார்கள் மூலமாக அகற்றப்பட்டன. ஆஸ்பத்திரி வார்டுகள் முழுவதும் சகதியாக காணப்பட்டது. இதனால் துப்புரவு பணியாளர்கள் இரவு முழுவதும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்கள்.
கேரளாவில் பெய்துவரும் மழைக்கு 4 பேர் பலியாகி இருந்த நிலையில் நேற்று மேலும் 2 பேர் இறந்துள்ளனர். காசர்கோடு நீலேஸ்வரம் பகுதியை சேர்ந்த பாலன்(வயது70), பூத்தோட்ட புத்தன்காவு பகுதியை சேர்ந்த சரசன்(62) ஆகிய இருவரும் மின்னல் தாக்கி பலியாகினர்.
கால்நடைகளுக்கு வைக்கோல் எடுத்துக்கொண்டு படகில் வந்த போது சரசனை மின்னல் தாக்கியது. இவர்கள் இருவரையும் சேர்த்து கேரள மாநிலத்தில் மழைக்கு பலியானோர் எணணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மீதமுள்ள 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் கடலில் அலைகள் உயரமாக அடிக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.
- நேற்று காலை பத்தளம் அணைக்கட்டு மற்றும் கீழக்கரையில் அதிகளவில் மீன்கள் செத்து மிதந்தன.
- பத்தளம் அணைக்கு அருகில் உள்ள ஆறுகள் கருப்பாக மாறி உள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள பெரியாறு ஆற்றில் நேற்று முன்தினம் இரவு ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. திடீரென ஆற்றில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மீன்கள் உயிரிழப்புக்கு காரணம் அப்பகுதியில் உள்ள ஏலூர்-எடையார் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை பத்தளம் அணைக்கட்டு மற்றும் கீழக்கரையில் அதிகளவில் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் பெரியாற்றில் கூண்டு அமைத்து மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கனமழையைத் தொடர்ந்து மே 20-ந்தேதி அணையின் ஷட்டர்கள் திறக்கப்பட்டதையடுத்து, பத்தளம் அணைக்கு அருகில் உள்ள ஆறுகள் கருப்பாக மாறி உள்ளது.
கேரள தொழில்துறை அமைச்சர் ராஜீவ், பெரியாற்றில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
- பூஜப்புரா மத்திய ஜெயிலில் உள்ள 12 பிளாக்குகளிலும் இரு மடங்குக்கும் அதிகமான கைதிகள் உள்ளனர்.
- கைதிகள் உட்காரக் கூட இடம் இல்லாத நிலையே அனைத்து ஜெயில்களிலும் இருப்பதாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், தேடப்படும் குற்றவாளிகள், போதை பொருட்கள் விற்பவர்கள் சுதந்திரமாக சுற்றித்திரிவதாகவும், இதனால் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் ரவுடிகளை பிடிப்பதற்காக அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
ஆபரேசன் ஏ.ஏ.ஜி. மற்றும் ஆபரேசன்-டி என்ற பெயரில் கடந்த 6 நாட்களாக மாநிலம் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். போலீசாரின் இந்த ஆபரேசனில் ரவடிகள், தலைமறைவு குற்றவாளிகள், போதை பொருட்கள் விற்றவர்கள், குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என 12ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் கேரள மாநில ஜெயில்களில் கைதிகளை அடைக்க இடம் இல்லை. இதன் காரணமாக போலீசார் நடத்திய சிறப்பு ஆபரேசனில் கைது செய்யப்பட்டவர்களை சிறைகளில் அடைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
பூஜப்புரா மத்திய ஜெயிலில் உள்ள 12 பிளாக்குகளிலும் இரு மடங்குக்கும் அதிகமான கைதிகள் உள்ளனர். கண்ணூர், விய்யூர் ஜெயில்களிலும் இதே நிலைதான் நிலவுகிறது. கைதிகள் உட்காரக் கூட இடம் இல்லாத நிலையே அனைத்து ஜெயில்களிலும் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் தற்போது கைது செய்யப்பட்ட 12 ஆயிரம் பேரில் 500 பேர் மட்டுமே ஜெயிலிகளில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ள 11 ஆயிரத்து 500 பேர் போலீஸ் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தினமும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு செல்ல வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமினில் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
727 கைதிகள் அடைக்கப்பட வேண்டிய பூஜப்புரா மத்திய ஜெயிலில் 1,350 கைதிகளும், 585 கைதிகள் அடைக்கப்படவேண்டிய விய்யூர் ஜெயிலில் 1,110 கைதிகளும், 856 கைதிகள் அடைக்கப்படவேண்டிய கண்ணூர் ஜெயிலில் 1,140 கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






