என் மலர்tooltip icon

    கேரளா

    • பிரபல தொழிலதிபரான பாபி செம்மனூரை எர்ணாகுளம் மத்திய போலீசார் கடந்த 8-ந்தேதி கைது செய்தனர்.
    • சிறையில் பாபி செம்மனூருக்கு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகளும் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகை ஹனிரோசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரான பாபி செம்மனூரை எர்ணாகுளம் மத்திய போலீசார் கடந்த 8-ந்தேதி கைது செய்தனர்.

    பின்பு அவர் எர்ணாகுளம் காக்கநாட்டில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு சில நாட்களுக்கு பிறகு அவர் ஜெயிலில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே பாமி செம்மனூர், சிறையில் இருந்தபோது அவரை சந்திக்க வந்த முக்கிய பிரமுகர்களுடன் கேரள மாநில மத்திய பகுதி சிறைத்துறை டி.ஐ.ஜி. அஜய குமார் சென்றிருக்கிறார்.

    பின்பு ஜெயில் சூப்பிரண்டு ராஜூ ஆபிரகாம் அறையில் டி.ஐ.ஜி. அஜய குமார் மற்றும் அவருடன் சென்றிருந்த 3 முக்கிய பிரமுகர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பாமி செம்மனூரிடம் பேசியுள்ளனர். மேலும் சிறையில் பாபி செம்மனூருக்கு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகளும் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதுகுறித்து சிறைத்துறையின் உயர் அதிகாரி விசாரணை நடத்தினார். அதில் சிறையில் பாபி செம்மனூருக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து சிறைத்துறை டி.ஐ.ஜி. அஜய குமார், காக்கநாடு சிறை சூப்பிரண்டு ராஜூ ஆபிரகாம் ஆகிய இருவரையும் சஸ்பெண்டு செய்து மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    • ஆத்திரமடைந்த மாணவன், நேராக தலைமை ஆசிரியரின் அறைக்கு ஆவேசமாக வந்தான்.
    • மாணவன் கொலைமிரட்டல் விடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு அனக்கரா பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு மாணவர்கள் செல்போன் கொண்டுவரக்கூடாது என்ற உத்தரவு அனைத்து பள்ளிகளிலுமே அமலில் இருக்கிறது.

    இதே போன்று தான் அனக்கரா அரசு பள்ளியிலும் மாணவர்கள் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் அந்த பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் ஒரு மாணவன், பள்ளிக்கு செல்போன் கொண்டுவந்தபடி இருந்திருக்கிறான்.

    இதனை கவனித்த வகுப்பாசிரியர்கள், அந்த மாணவனை செல்போன் கொண்டுவரக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது. ஆனால் அந்த மாணவன், செல்போனை பள்ளிக்கு கொண்டுவந்து வகுப்பறையில் பயன்படுத்தியபடி இருந்திருக்கிறான்.

    சம்பவத்தன்றும் அந்த மாணவன் வகுப்பறையில் வைத்து செல்போனை பயன்படுத்தியிருக்கிறான். அதனைப் பார்த்த ஆசிரியர், அந்த மாணவனிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தார். ஆசிரியர் செல்போனை பறித்ததால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், ஆசிரியரிடம் தகராறு செய்திருக்கிறான்.

    பின்பு அந்த செல்போன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், நேராக தலைமை ஆசிரியரின் அறைக்கு ஆவேசமாக வந்தான். பின்பு தலைமை ஆசிரியரின் எதிரே இருந்த இருக்கையில் தோரணையாக அமர்ந்துகொண்டு பேசினான்.

    அப்போது தனது செல்போனை திருப்பி தந்து விடுமாறு தலைமை ஆசிரியரிடம் ஆக்ரோஷமாக சத்தமாக கேட்டான். மாணவனின் இந்த செயல்பாட்டை தலைமை ஆசிரியர் மற்றும் மற்ற ஆசிரியர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர். ஆக்ரோஷமாக பேசிய மாணவரிடம் தலைமை ஆசிரியர் எதுவும் பேசவில்லை.

    இருந்த போதிலும் அந்த மாணவன் ஆக்ரோஷம் பொங்கி பேசியபடியே இருந்தான். மேலும் தனது செல்போனை தந்து விடுமாறு கேட்டான். ஆனால் அதற்கு தலைமை ஆசிரியர் மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், "எனது செல்போனை திரும்ப தராவிட்டால் பள்ளியை விட்டு வெளியே வரும் போது கொன்று விடுவேன்" என்று தலைமை ஆசிரியரை பகிரங்கமாக மிரட்டினான்.

    பின்பு தலைமை ஆசிரியரின் அறையில் இருந்து வேகமாக வெளியேறினான். "கொன்று விடுவேன்" என்று பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த போதிலும், மாணவனின் எதிர்காலம் கருதி அவன் மீது பள்ளி தரப்பில் போலீஸ் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் அந்த மாணவனின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து, அவனது ஒழுக்கக்கேடான செயலை பற்றி கூறினர்.

    இந்தநிலையில் தலைமை ஆசிரியரின் அறைக்குள் சென்று, அவரிடம் ஆவேசமாக பேசி மாணவன் கொலைமிரட்டல் விடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. செல்போன் பயன்பாடு ஒரு மாணவனை எந்த அளவுக்கு ஆக்ரோஷமடைய செய்கிறது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அந்த வீடியோ இருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாது.



    • நிலச்சரிவால் மேற்கண்ட பகுதிகள் இருந்த இடமே தெரியாத அளவுக்கு வீடுகள் மண்ணில் புதைந்தும், உருக்குலைந்தும் போனது.
    • வயநாடு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி சில நாட்கள் நடந்த பின்னர் கைவிடப்பட்டது.

    வயநாடு:

    வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் கடந்த ஜூலை மாதம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதோடு ஊருக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்தது. நிலச்சரிவில் சிக்கி 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து மீட்கப்பட்டனர். இந்த நிலச்சரிவால் மேற்கண்ட பகுதிகள் இருந்த இடமே தெரியாத அளவுக்கு வீடுகள் மண்ணில் புதைந்தும், உருக்குலைந்தும் போனது.

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி சில நாட்கள் நடந்த பின்னர் கைவிடப்பட்டது. சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு பின்னர் காணாமல் போன 32 பேர் இதுவரை கண்டறியப் படவில்லை. இந்த நிலையில் அவர்களை வயநாடு மாவட்ட பேரிடர் ஆணையம் உயிரிழந்து விட்டதாக அங்கீகரித்து உள்ளது. இதுகுறித்து மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

    மாவட்ட பேரிடர் ஆணையம் அளித்துள்ள இந்த பட்டியலை உள்துறை செயலாளர், கூடுதல் தலைமை செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் ஆகியோர் சரிபார்த்து, மாநில பேரிடர் ஆணைய முதன்மை செயலாளருக்கு அனுப்புவார்கள். இவர்கள் அங்கீகரித்த அறிக்கையின் அடிப்படையில், மாநில குழு அதை சரிபார்த்து நிலச்சரிவில் காணாமல் போனவர்களை இறந்து போனவர்களாக அறிவிக்க பரிந்துரை செய்யப்படும்.

    அதன் பின்னர் கேரள அரசு 32 பேரை இறந்தவர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். இந்த உத்தரவின் அடிப்படையில், நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு கிடைக்கும் நிவாரணம் உள்ளிட்ட அனைத்து பயன்களும் வழங்கப்படும். மேலும் அவர்கள் மரணம் பதிவு செய்யப்பட்டு இறப்பு சான்றிதழ் வழங்கப்படும். பின்னர் நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • யுஜிசி புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

    பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) சமீபத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

    அதில் துணை வேந்தர்களை நியமனம் செய்ய கவர்னருக்கே அதிகாரம் உண்டு என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த புதிய விதிமுறைகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதனையடுத்து யுஜிசி புதிய வரைவு விதிகளை திரும்ப பெறுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

    பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம், கற்றல் முறை தொடர்பான எஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்கடிதத்தில் வலியுறுத்தினார்.

    யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்கடிதத்துடன் இணைத்து அனுப்பியிருந்தார்.

    இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு சமீபத்தில் வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதைப் போன்று, டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் தெலங்கானா மாநில சட்டமன்றங்களிலும் நிறைவேற்றிட வேண்டுமென்று கோரி அம்மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

    தமிழக முதல்வர் கடிதம் எழுதியதை தொடர்ந்து, இன்று கேரளா சட்டமன்றத்தில் யுஜிசி புதிய வரைவு விதிகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அப்போது சட்டமன்றத்தில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், "நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் அந்தந்த மாநில சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு இணங்க செயல்படுகின்றன,. மாநில அரசுகளிடம் முறையான ஆலோசனையின்றி மத்திய விதிமுறைகளைத் திணிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்குக் குந்தகம் விளைவிக்கும்" என்று தெரிவித்தார்.

    • பிடித்தவர்களை தேர்வு செய்து வாழ்த்து அட்டைகள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.
    • பள்ளி நிர்வாகத்தினர் நெகிழ்ச்சி.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பள்ளி மாணவ-மாணவிகளிடம் அஞ்சலகத்தை அறிமுகப்படுத்தும் வகையில், முக்கிய பிரமுகர்களுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பும் திட்டத்தை சில பள்ளிகள் செயல்படுத்தின. செனாடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் தங்களுக்கு பிடித்தவர்களை தேர்வு செய்து வாழ்த்து அட்டைகள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி ஒவ்வொரு வரும் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பினர். இந்த பள்ளியில் 4-ம் வகுப்பு படிப்பவர் ஸ்ரேயா சபின். ஆரம்மைல் பகுதியை சேர்ந்த சபின்-அஞ்சலி தம்பதியினரின் மகளான இவர், வயநாடு பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர் பிரியங்கா காந்திக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வாழ்த்து அட்டை அனுப்பினார்.

    அதன்பிறகு அவர் அதனை மறந்து விட்டார். இந்த நிலையில் 2 வாரங்களுக்கு பிறகு ஸ்ரேயா பெயருக்கு அவர் படிக்கும் பள்ளிக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தை பிரியங்கா காந்தி எம்.பி. தனது கைப்பட எழுதி அனுப்பி இருந்தார்.

    ஸ்ரேயா, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அதில் அவர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் பிஜூ, அந்த கடிதத்தை மாணவ-மாணவிகள் மத்தியில் ஸ்ரேயாவிடம் ஒப்படைத்தார். மாணவியின் வாழ்த்து கடிதத்துக்கு மதிப்பு அளித்து பிரியங்கா காந்தி பதில் கடிதம் அனுப்பிய சம்பவம் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பலரை நெகிழ்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.

    • திவ்யா பார்மசி வெளியிட்டதாக கேரளா முழுவதும் பல கிரிமினல் வழக்குகள் திவ்யா பார்மசி மீது தொடரப்பட்டன.
    • பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டும் மன்னிப்பு கேட்டனர். இ

    பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு கேரள உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

    பதஞ்சலி ஆயுர்வேதத்தின் துணை நிறுவனமான திவ்யா பார்மசியால் வெளியிடப்பட்ட விளம்பரங்கள், மருந்துகள் மற்றும் மேஜிக் மருந்துகள் (ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள்) சட்டம், 1954 இன் விதிகளை மீறியதாக அவர்கள் மீதான வழக்கு நடந்து வந்தது.

    அலோபதி உள்ளிட்ட நவீன மருத்துவத்தை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வெளியிட்டு, நோய்களைக் குணப்படுத்தும் ஆதாரமற்ற கருத்துகளை திவ்யா பார்மசி வெளியிட்டதாக கேரளா முழுவதும் பல கிரிமினல் வழக்குகள் திவ்யா பார்மசி மீது தொடரப்பட்டன.

    அதில் ஒரு வழக்கு கோழிக்கோடு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் தற்போது அவர்களுக்கு பிணையில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து இன்று [திங்கள்கிழமை] நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

     

    முன்னதாக பதஞ்சலி ஆயுர்வேத் விளம்பரங்களுக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இதைத்தொடர்ந்து பதஞ்சலி மருந்துகளின் விளம்பரங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

    மேலும் பொய்யான விளம்பரங்களின் மூலம் மக்களை தவறாகி வழிநடத்திய அதன் நிறுவனர்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது.

     

    தொடர்ந்து பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டனர். தொடர்ந்து உத்தரவின்படி பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டும் மன்னிப்பு கேட்டனர். இதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்தது குறிப்பிடத்தக்கது. 

    • ரூ. 5 லட்சம் செலவு செய்து 10 மாத சிகிச்சைக்குப் பிறகு சமீபத்தில் ஆஷிக் வீடு திரும்பினார்.
    • இதுவரை இரண்டு மூன்று முறை கொலை செய்ய முயன்றுள்ளார்

    கேரளாவில் தாமரசேரி அருகே உள்ள புதுப்பாடியை சேர்த்தவர் சுபைதா கைக்கால் (53). இவரது மகன் ஆஷிக்(25).

    சுபைதா தனது 23வது வயதில் கணவரை விவாகரத்து செய்தார். அப்போது ஆஷிக்கிற்கு 2 வயதுதான். அன்றிலிருந்து ஆஷிக்கை தனியாளாக சுபைதா வளர்த்து வந்தார்.

    திருமணங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் சமையலில் உதவி செய்து சுபைதா பணம் சம்பாதித்து வந்தார். அந்தப் பணத்தில் ஆஷிக்கை வளர்த்தார். ப்ளஸ் டூவுக்குப் பிறகு ஆஷிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தார்.

    அதுவரை நன்றாக இருந்த ஆஷிக் புதிய நண்பர்களின் அறிமுகத்தால் தடம் மாறினார். போதை மருந்து உட்கொள்ள ஆரம்பித்தார். அன்றிலிருந்து வீட்டில் தாயாரை பணம் கேட்டு துன்புறுத்தி வந்தார். ஆஷிக் தினமும் அம்மாவிடம் சண்டை போடுவது வழக்கம்.

    போதைக்கு அடிமையான ஆஷிக் பெங்களூருவில் உள்ள போதை ஒழிப்பு மையத்தில் சேர்க்கப்பட்டார்.  ரூ. 5 லட்சம் செலவு செய்து 10 மாத சிகிச்சைக்குப் பிறகு சமீபத்தில் ஆஷிக் வீடு திரும்பினார். தாய் சுபைதாவுக்கு சமீபத்தில் மூளையில் கட்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவர் தனது சகோதரி வீட்டில் தங்கியுள்ளார்.

    இந்நிலையில் கடந்த ஜனவரி18 அன்று ஆஷிக் தனது தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் ஆஷிக் பக்கத்து வீட்டிலிருந்து எடுத்துவந்த அரிவாளை கொண்டு சுபைதாவின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் சுபைதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தன்னைப் பெற்றெடுத்ததற்காக அவளைக் கொலை செய்தேன் என்று கூறி ஆஷிக் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அக்கம்பக்கத்தினர் ஆஷிக்கை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சுபைதாவின் உடல் உறவினர்கள் ஒப்படைக்கப்பட்டது.

    தாய்க்கும் மகனுக்கும் இடையில் பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது என்றும் சொத்தை விற்று பணத்தை தருமாறு தாயிடம் ஆஷிக் வற்புறுத்தியுள்ளார் என்றும், அவர் ஒப்புக்கொள்ளாததால் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் தாயை கொல்ல வேண்டும் என பலரிடம் கூறியுள்ள ஆஷிக், இதுவரை இரண்டு மூன்று முறை கொலை செய்ய முயன்றுள்ளார் என்றும் இந்தக் குற்றத்தைச் செய்யும்போது அவர் போதைப்பொருள் உட்கொண்டாரா? இல்லையா? என்பதை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

    • இரு சீசன்களிலும் மொத்தம் 53 லட்சம் பக்தர்கள் வந்து சென்றுள்ளனர்.
    • ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி தொடங்கி டிசம்பர் 26-ந்தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து மகரவிளக்கு பூஜைக்காக கடந்தமாதம் (டிசம்பர்) 30-ந்தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.

    கோவில் நடை திறக்கப் பட்டதில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சென்றார்கள். இதனால் மகரவிளக்கு பூஜை காலத்தில் சபரி மலையில் தினமும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. பக்தர்கள் நெரிசல் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.

    மகரவிளக்கு பூஜையின் சிகர நிகழ்ச்சியான மகர ஜோதி தரிசனம் கடந்த 14-ந்தேதி நடைபெற்றது. லட்சக் கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய் தார்கள்.

    இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான மகர விளக்கு பூஜை பந்தளம் அரண்டனை ராஜ பிரதிநிதி சாமி தரிசனத்துக்கு பிறகு இன்று நிறைவுக்கு வந்தது.

    இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்பு கோவில் தந்திரிகள் கண்ட ரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ஆகியோர் தலைமையில் கணபதிஹோமம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அபிஷேகம் மற்றும் நைவேத்திய பூஜைகள் நடந்தன.

    மகர விளக்கு வைப வத்தை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த திருவாபரணங்கள் பந்தள அரண் மனையிடமிருந்து கொண்டு வந்த திருவாபரண குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை அவர்கள் எடுத்துக் கொண்டு பதினெட்டாம்படி வழியாக இறங்கிச் சென்று பந்தளம் அரண்மனைக்கு புறப்பட்டனர்.

    அதே நேரத்தில் பந்தளம் அரண்மனை ராஜ பிரதிநிதி திருக்கேத்தநாள் ராஜராஜ வர்மா ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு மேல் சாந்தி அருண்குமார் நம்பூ திரி, ஐயப்பன் சிலைக்கு விபூதியாபிஷேகம் செய்தார்.

    பின்னர் ஐயப்பனின் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிவித்தல், கையில் யோக தடி வைத்து யோக நிலையில் அமர்த்தும் நிகழ்வு நடைபெற்றது.

    பின்பு ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது. கோவில் சாவியை பந்தள அரச பிரதி நிதியிடம் மேல்சாந்தி ஒப்படைத்தார். அதனை கையில் வைத்துக்கொண்டு அரச பிரதிநிதி பதினெட்டாம் படி வழியாக இறங்கிச் சென்றார்.

    பதினெட்டாம் படி இயங்கியதும் கோவில் சாவியை தேவசம் பிரதி நிதிகள் மற்றும் மேல்சாந்தி முன்னிலையில் சபரிமலை நிர்வாக அதிகாரி பிஜூ நாத்திடம் ஒப்படைத்தார். அப்போது மாதாந்திர பூஜை செலவுக்கான பணமும் வழங்கப்பட்டது.

    பின்னர் அரச பிரதிநிதி மற்றும் அவரது குழுவினர் பந்தளம் அரண்மனைக்கு புறப்பட்டனர். திருவாபரண ஊர்வலம் வருகிற 23-ந்தேதி பந்தளம் அரண்மனையை சென்றடைகிறது.

    இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் கடந்த ஆண்டை விட அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர். இந்த இரு சீசன்களிலும் மொத்தம் 53லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கிரீஷ்மாவுக்கு அவரது குடும்பத்தினர் ராணுவ வீரர் ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.
    • தனது திருமணத்துக்கு இடைஞ்சலாக இருப்பார் என கருதிய கிரீஷ்மா, காதலனை கொலை செய்ய முடிவு செய்தார்.

    கேரள மாநிலம் பாற சாலை மூரியங்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது23). இவர் குமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அவருக்கு, களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன் சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா(22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி ஷாரோன் ராஜூக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கேரளாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் 11 நாட்களுக்கு பிறகு இறந்தார்.

    நல்ல உடல்நிலையில் இருந்த தனது மகன் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்திருப்பதால் தங்களின் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக ஷாரோன்ராஜின் பெற்றோர், பாறசாலை போலீசில் புகார் செய்தனர். மேலும் அவனது காதலியான கிரீஷ்மா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.

     அதனடிப்படையில் பாறசாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். பின்பு இந்த வழக்கு திருவனந்தபுரம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் கிரீஷ்மாவை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் காதலன் ஷாரோன் ராஜூக்கு கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

    கிரீஷ்மாவுக்கு அவரது குடும்பத்தினர் ராணுவ வீரர் ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த கிரீஷ்மா, பின்பு தனது பெற்றோரின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்தார். மேலும் அதுபற்றி காதலன் ஷாரோன்ராஜிடம் தெரிவித்துள்ளார். ஆனால் உயிருக்கு உயிராக காதலித்து வந்த ஷாரோன்ராஜ், அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

    இதனால் தனது திருமணத்துக்கு இடைஞ்சலாக இருப்பார் என கருதிய கிரீஷ்மா, காதலனை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி தனது வீட்டுக்கு வரவழைத்து விஷம் கலந்த கசாயத்தை கொடுத்து காதலன் ஷாரோன்ராஜை கொலை செய்தார் என்பது தெரிய வந்தது.

     ஷாரோன்ராஜ் கொலை சம்பவம் கேரள மாநிலம் மற்றும் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காதலி கிரீஷ்மாவை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய்மாமன் நிர்மல்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    மாணவர் ஷாரோன்ராஜ் கொலை வழக்கு விசாரணை நெய்யாற்றின்கரை கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. அதில் கிரீஷ்மா மற்றும் அவரது தாய்மாமன் நிர்மல்குமாரும் ஆகியோர் குற்றவாளி என்று நீதிபதி பஷீர் தீர்ப்பளித்தார். அதே நேரத்தில் கிரீஷ்மாவின் தாய் சிந்துவை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில், கிரீஷ்மாவிற்கு மரண தண்டனை விதித்து கூடுதல் செசன்சு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. மேலும் கிரீஷ்மாவின் தாய்மாமன் நிர்மல்குமாருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரளாவில் மனிதர்களை யானைகள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
    • வயநாடு மாவட்டத்தில் ஒரு தம்பதி குழந்தையுடன் பைக்கில் சென்றுள்ளனர்.

    கேரளாவில் மலை மற்றும் வனப்பகுதிகள் அதிகமாக உள்ளதால் அங்கு யானைகளின் எண்ணிக்கையும் அதிகம். அதனால் கேரள மாநிலத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன.

    கேரளாவில் யானைகள் அதிகம் உள்ளதால் அடிக்கடி அவை மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

    அவ்வகையில் வயநாடு மாவட்டத்தில் உள்ள திருநெல்லி பகுதியில் குழந்தையுடன் பைக்கில் சென்ற ஒரு தம்பதியை காட்டு யானை துரத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆனால் நல்வாய்ப்பாக குழந்தையுடன் பைக்கில் சென்ற அந்த தம்பதி யானையிடம் சிக்காமல் பத்திரமாக தப்பித்து சென்றுள்ளனர்.

    இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    • வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை கடந்த 3-ந்தேதி நிறைவடைந்தது.
    • தண்டனை குறித்த இறுதி வாதம் இன்று நடந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாற சாலை மூரியங்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ்(வயது23). இவர் குமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அவருக்கு, களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன் சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா(22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி ஷாரோன் ராஜூக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கேரளாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் 11 நாட்களுக்கு பிறகு இறந்தார்.

    நல்ல உடல்நிலையில் இருந்த தனது மகன் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்திருப்பதால் தங்களின் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக ஷாரோன்ராஜின் பெற்றோர், பாறசாலை போலீசில் புகார் செய்தனர். மேலும் அவனது காதலியான கிரீஷ்மா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.

    அதனடிப்படையில் பாறசாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். பின்பு இந்த வழக்கு திருவனந்தபுரம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் கிரீஷ்மாவை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் காதலன் ஷாரோன் ராஜூக்கு கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

    கிரீஷ்மாவுக்கு அவரது குடும்பத்தினர் ராணுவ வீரர் ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த கிரீஷ்மா, பின்பு தனது பெற்றோரின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்தார். மேலும் அதுபற்றி காதலன் ஷாரோன்ராஜிடம் தெரிவித்துள்ளார். ஆனால் உயிருக்கு உயிராக காதலித்து வந்த ஷாரோன்ராஜ், அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

    இதனால் தனது திருமணத்துக்கு இடைஞ்சலாக இருப்பார் என கருதிய கிரீஷ்மா, காதலனை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி தனது வீட்டுக்கு வரவழைத்து விஷம் கலந்த கசாயத்தை கொடுத்து காதலன் ஷாரோன்ராஜை கொலை செய்தார் என்பது தெரிய வந்தது.

    ஷாரோன்ராஜ் கொலை சம்பவம் கேரள மாநிலம் மற்றும் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காதலி கிரீஷ்மாவை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய்மாமன் நிர்மல்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    மாணவர் ஷாரோன்ராஜ் கொலை வழக்கு விசாரணை நெய்யாற்றின்கரை கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. 2023-ம் ஆண்டு ஜனவரி 25-ந்தேதி, கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 95 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை கடந்த 3-ந்தேதி நிறைவடைந்தது.

    இதையடுத்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் கிரீஷ்மா மற்றும் அவரது தாய்மாமன் நிர்மல்குமாரும் ஆகியோர் குற்றவாளி என்று நீதிபதி பஷீர் தீர்ப்பளித்தார். அதே நேரத்தில் கிரீஷ்மாவின் தாய் சிந்துவை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

    கிரீஷ்மா மற்றும் அவரது தாய்மாமன் நிர்மல் குமாருக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து தண்டனை குறித்த இறுதி வாதம் இன்று நடந்தது.

    காதலனை திட்டமிட்டு கொலை செய்த கிரீஷ்மாவுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. எம்.ஏ. இலக்கியத்தில் சிறப்பு தேர்ச்சி பெற்றிருப்பது, குறைந்த வயது, பெற்றோருக்கு ஒரே மகள், எதிர்காலம் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு தண்டனையில் அதிகபட்ச தளர்வு வழங்க வேண்டும் என்று கிரீஷ்மா தரப்பு வக்கீல்கள் வாதிட்டனர்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பஷீர், கிரீஷ்மா மற்றும் அவரது தாய்மாமன் நிர்மல்குமார் ஆகியோருக்கான தண்டனை விவரம் நாளைமறுநாள் (20-ந்தேதி) அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • அனுமதி வழங்கப்பட்ட ஒயாசிஸ் நிறுவனம் மீது டெல்லியில் மதுபான மோசடி வழக்கு உள்ளது.
    • பஞ்பாப் மாநிலத்தில் நிலத்தடி நீரை மாசுப்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    கேரளா மாநிலத்தில் மதுபான தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை கடந்த 25 வருடமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மதுபான தொழிற்சாலை தொடங்க அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் வி.டி. சதீஷன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், கொள்கையை மீறியதாக அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான வி.டி. சதீஷன் கூறியதாவது:-

    கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கொள்கையை அரசு மீறியுள்ளதாக நாங்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளோம். மதுபான தொழிற்சாலை தொடங்க ஒயாசிஸ் (Oasis) நிறுவத்தினத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    டெல்லியில் இந்த நிறுவனம் மதுபான முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. பஞ்சாபில் ஒயாசிஸ் நிறுவனத்தின் ஆலை அமைந்துள்ள இடத்தில் நிலத்தடி நீர் மற்றும் மேற்பரப்பு நீரை மாசுபடுத்தியதாக பஞ்சாப் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த நிறுவனத்திற்கு அரசு உரிமம் வழங்கியுள்ளதில் ஊழல் நடைபெற்றுள்ளது தெளிவாக தெரிகிறது. கலால் துறை அமைச்சரிடமிருந்து ஒரு தகுந்த பதிலை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு சதீஷன் தெரிவித்தார்.

    ×