என் மலர்tooltip icon

    கேரளா

    • எம்புரான் படத்தின் டீசர் வெளியிட்டு விழா கேரளாவில் நடைபெற்றது.
    • இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மகிழ் திருமேனி கலந்துக் கொண்டார்.

    நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது. லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், எம்புரான் படத்தின் டீசர் வெளியிட்டு விழா கேரளாவில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மகிழ் திருமேனி கலந்துக் கொண்டார்.

    இந்நிகழ்வில் பேசிய மகிழ் திருமேனி, "உங்கள பத்தி பேசாம போக முடியாது. பத்ம பூஷன் விருது பெற்றிருக்கும் அஜித் சாருக்கு வாழ்த்துகள். அஜித் சார் கை கொடுத்து தூக்கி விட்ட எத்தனையோ பேர்களில் நானும் ஒருவன். பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி விடா முயற்சி வெளியாகிறது. அனைவருக்கும் பிடிக்கும் படமாக உருவாகி இருக்கிறது" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து பேசிய பிரித்விராஜ், "சமீபத்தில் தமிழ் சினிமாவில் நான் பார்த்த சிறந்த டிரெய்லர்களுள் ஒன்று 'விடாமுயற்சி' டிரெய்லர். அந்த படத்திற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • குடியரசு தின விழாவில் கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கொடியேற்றினார்.
    • மயங்கி விழுந்த காவல் ஆணையரை அங்கிருந்து தூக்கி சென்றனர்.

    நாட்டின் 76-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையாட்டி நாடு முழுக்க கொண்டாட்டங்கள் கலைகட்டியுள்ளன. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியேற்றி வைத்தனர்.

    அவ்வகையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கொடியேற்றினார். பின்னர் கேரள ஆளுநர் உரையாற்றும் போது அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த திருவனந்தபுரம் காவல் ஆணையர் தாமஸ் ஜோஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து அங்கிருந்த காவலர்கள் மயங்கி விழுந்த காவல் ஆணையரை அங்கிருந்து வேறு இடத்திற்கு தூக்கி சென்றனர். இதனையடுத்து ஆளுநர் தனது உரையை தொடர்ந்தார்.

    • இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களை எழுதி இயக்கியுள்ளார்.
    • நகைச்சுவை மிக்க திரைக்கதைக்கு ஷஃபி பெயர்போனவர்.

    பிரபல மலையாள இயக்குநர் ஷஃபி இன்று [ஜனவரி 26] தனது 56 ஆவது வயதில் காலமானார்.

    கடந்த ஜனவரி 16 அன்று பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஷஃபி, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை சுவாசக் கருவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியான 'ஒன் மேன் ஷோ' திரைப்படம் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் ஷஃபி. நகைச்சுவை மிக்க திரைக்கதைக்கு ஷஃபி பெயர்போனவர். இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களை எழுதி இயக்கியுள்ளார்.

    தமிழில் விக்ரம், பசுபதி, மணிவண்ணன் நடிப்பில் வெளியான மஜா படத்தை இயக்கியவரும் இவரே. மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் 'தொம்மானும் மக்களும்' என்ற தலைப்பில் இவர் எடுத்த படம் ஹிட்டானதை அடுத்து அதை தமிழில் மஜா என்ற பெயரில் இயக்கியிருந்தார்.

    கடைசியாக 2022 இல் ஆனந்தம் பரமானந்தம் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். இந்நிலையில் அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

    • கல்லூரி மாணவர்களை கார் ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தார்.
    • திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்ததாகவும், திருமணமும் செய்ய இருந்ததாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

    'மணவாளன்' (மாப்பிள்ளை) என்று அழைக்கப்படுபவர் 26 வயதான கேரள யூடியூபர் முகமது ஷாஹீன் ஷா. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள எரநெல்லூரில் வசிக்கும் இவர் கடந்த வருடம் ஏப்ரலில் கல்லூரி மாணவர்களை கார் ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தார்.

    இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் பதுங்கியிருந்த அவரை திருச்சூர் போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர்.

    அதைத்தொடர்ந்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட அவரது தலைமுடி வெட்டப்பட்டு தாடி மழிக்கப்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான யூடியூபர் முகமது மன நலம் பாதிக்கப்பட்டு மன நல காப்பகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

     

    தண்டனை பெற்ற கைதிகளுக்கு கூட தலைமுடியை வெட்டுவதற்கு சிறிது நேரம் கொடுக்கப்பட்டது என்றும், ஆனால் யூடியூபர் வழக்கில், சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் அவரது தலைமுடியை வெட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தலைமுடி மற்றும் தாடி வெட்டப்பட்ட பின்னர் அவர் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    தங்களது மகன் ஒரு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்ததாகவும், திருமணமும் செய்ய இருந்ததாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். இதனால் முடி வெட்டப்படுவதற்கு எதிராக விண்ணப்பிக்க கால அவகாசம் தருமாறு அதிகாரிகளிடம் மகன் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதிகாரிகள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்றும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

     

    ஆனால் தனது முடியை வெட்ட அவர் ஒப்புக்கொண்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே மன நல காப்பகத்தில் உள்ள அவரை கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர் 

    • காபி தோட்டம் பணிக்கு சென்ற ராதா என்ற பெண் புலி தாக்கி பரிதாபமாக இறந்தார்.
    • மக்களை அச்சுறுத்தும் புலியை பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தலமான வயநாடு கடந்த சில ஆண்டுகளாக அச்சம் தரும் பகுதியாக மாறி உள்ளது. இங்குள்ள வன பகுதியை ஓட்டியுள்ள கிராமங்களில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்திருப்பது தான் மக்களின் அச்சத்திற்கு காரணமாக உள்ளது.

    வயநாட்டில் புலிகள் நடமாட்டம் அதிகம் என்றாலும் முன்பு அவை வனப்பகுதிக்குள் தான் இருந்தன. ஆனால் சமீப காலங்களில் இவை அடிக்கடி குடியிருப்பு மற்றும் அதனை ஓட்டியுள்ள பகுதிகளுக்கு வந்து மக்களை தாக்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை 8 பேர் புலி தாக்கி இறந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    நேற்று காபி தோட்டம் பணிக்கு சென்ற ராதா என்ற பெண் புலி தாக்கி பரிதாபமாக இறந்தார். வயநாடு மாவட்டம் மானந்த வாடி அருகே உள்ள பஞ்சரக்கொல்லி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தப் பகுதியில் யாரும் இதுவரை புலியை பார்த்தது இல்லை என்ற நிலையில் தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இதிலும் ராதாவை தாக்கிய புலி, அவரது உடலை சிறிது தூரம் இழுத்துச் சென்று கடித்து குதறிய பிறகு தான் விட்டுச் சென்றுள்ளது. அவரது உடலை பார்த்த பிறகு தான் புலியின் தாக்குதல் பற்றி தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் வயநாடு முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.


    பலியான ராதா வனக்காவலரின் மனைவி ஆவார். மேலும் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மின்னுமணியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. புலி தாக்கி பெண் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் வனத்துறையை கண்டித்து போராட்டத்திலும் இறங்கினர்.

    இதனை தொடர்ந்து மக்களை அச்சுறுத்தும் புலியை பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது. முதல் கட்டமாக புலியை பிடித்து மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் கொண்டு விட முடிவு செய்து அதற்கான முயற்சியில் வனத்துறை இறங்கி உள்ளது. இதற்காக 28 நிலையான கேமராக்கள், 4 நேரடி கேமராக்கள் வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

    தலைமை வன கால்நடை மருத்துவர் அருண் ஜக்காரியா மற்றும் வடக்கு வட்டத்தின் முதன்மை வன பாதுகாவலர் தீபா ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் புலி பாதுகாப்பு உடைகள் அணிந்து ஆயுதத்துடன் வனப்பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றனர்.

    2 டிரோன்கள் பயன்படுத்தியும் புலி இருப்பிடத்தை வனத்துறையினர் தேடி வருகின்றனர். இதற்கிடையில் புலியை சுட்டுப் பிடிக்கவும் தலைமை வன உயிரின காப்பாளர் பிரமோத் கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் ஸ்டாண்டர்ட் ஆப்ப ரேட்டிங் நடைமுறைப்படி அமைக்கப்பட்ட சிறப்புக்குழு கூடி நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கூண்டுகள் அல்லது அமைதிப்படுத்தும் கருவிகளை கொண்டு புலியை பிடிக்க முடியாத பட்சத்தில் அதனை சுட்டுக் கொல்லலாம் என்று வன உயிரின காப்பாளர் தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார். இதனை தொடர்ந்து இரவு முழுவதும் சிறப்பு குழுவினர் ஆயுதங்களுடன் வனப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக அவர்கள் புலியை தேடி வருகின்றனர்.

    • மகன் இல்லாத உலகில் வாழ பிடிக்காத அவர்கள், தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.
    • கணவன்-மனைவி பிணமாக கிடந்த இடத்தில் அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சினேகா தேவ். இவரது மனைவி ஸ்ரீலதா. இவர்களது ஒரே மகன் ஸ்ரீதேவ் கல்லூரியில் படித்துவந்த நிலையில், கடந்த ஆண்டு விபத்து ஒன்றில் சிக்கி பலியானார்.

    தங்களுக்கு இருந்த ஒரே மகனின் மரணத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் மகன் இறந்தததில் இருந்தே இருவரும் கவலையுடன் இருந்திருக்கின்றனர். மகன் இல்லாத உலகில் வாழ பிடிக்காத அவர்கள், தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி கணவன்-மனைவி இருவரும் திருவனந்தபுரம் நெய்யாற்றுக்கு சென்றனர். பின்பு அவர்கள் தங்களின் கைகளை ஒன்றாக கயிற்றால் சேர்த்து கட்டிக் கொண்டு ஆற்றில் குதித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் ஆற்றில் மூழ்கி பலியாகினர்.

    கணவன்-மனைவி இருவரும் ஆற்றில் பிணமாக கிடந்ததை பார்த்த மக்கள் அதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கணவன்-மனைவி பிணமாக கிடந்த இடத்தில் அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் தங்களது மகனின் பிரிவை தாங்க முடியாமல் தற்கொலை முடிவை எடுத்திருப்பதாக எழுதியிருந்தனர். மேலும் சினேகா தேவின் உடலில் அவர்களது மகனின் பெல்ட்டும் கிடந்தது.

    மகன் இறந்த துக்கம் தாங்காமல் ஆற்றில் குதித்து கணவன்-மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • அறுவை சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
    • இதயத்துக்கு செல்லக் கூடிய முக்கிய நரம்பு சேதமடைந்ததால் உயிரிழப்பு.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கலுர் பகுதியை சேர்ந்தவர் நசீர். காய்கறி வியாபாரி. இவரது மகன் தோயிப் நசீர் (வயது26). எம்.ஏ. பட்டதாரியான தோயிப், தனது தந்தைக்கு உதவியாக காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.

    இந்தநிலையில் அவருக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. தனது மகனுக்கு கல்லீரல் தானம் வழங்க தந்தை நசீர் முன்வந்தார். இதையடுத்து தந்தை-மகன் இருவரும் அறுவை சிகிச்சைக்காக ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டனர்.

    நசீரின் கல்லீரலில் இருந்து ஒரு பகுதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, அவரது மகன் தோயிப்புக்கு பொருத்தப்பட்டது. இந்தநிலையில் அறுவை கிச்சைக்கு பிறகு நசீரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    அறுவை சிகிச்சையின் போது இதயத்துக்கு செல்லக் கூடிய முக்கிய நரம்பு சேதமடைந்ததால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நசீர் பரிதாபமாக இறந்துவிட்டார். தந்தையிடம் இருந்து கல்லீரல் தானம் பெற்ற தோயிப், அறுவை சிகிச்சை நடந்த மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பலனளிக்காமல் தோயிப்பும் பரிதாபமாக இறந்தார்.

    மகனுக்கு கல்லீரல் தானம் கொடுத்த நசீர், அவரிடமிருந்து கல்லீரல் தானம் பெற்ற தோயிப் என தந்தை-மகன் இருவரும் பலியான சம்பவம் கொச்சியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • 5 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக இருமல் இருந்தால் “வாக்கிங் நிமோனியா” பாதிப்பாக இருக்கலாம்.
    • பொதுவாக இந்த நோய் 5 முதல் 15 வயதுடைய குழந்தைகளை அதிகமாக பாதிக்கிறது.

    தற்போது "வாக்கிங் நிமோனியா" என்ற வித்தியாசமான நோய் பரவி வருகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் இந்த நோய் பாதிக்கிறது. லேசான காய்ச்சல், தொடர் இருமல், மூச்சுத்திணறல், தொண்டை புண் மற்றும் தோல் வெடிப்பு உள்ளிட்ட வைகள் "வாக்கிங் நிமோனியா" தொற்றின் அறிகுறிகளாகும்.

    5 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக இருமல் இருந்தால் "வாக்கிங் நிமோனியா" பாதிப்பாக இருக்கலாம். ஆகவே அந்த அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    மேலும் "வாக்கிங் நிமோனியா" பாதித்தவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் பாக்டீரியா சுவாசத்துளிகள் மூலம் பரவுகிறது. ஆகவே இந்த நோய் பாதித்தவர்கள் முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டும். பொதுவாக இந்த நோய் 5 முதல் 15 வயதுடைய குழந்தைகளை அதிகமாக பாதிக்கிறது. ஆனால் கேரளாவில் 5 வயதுக்கு குறைவான குழந்தைகளும் "வாக்கிங் நிமோனியா" தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். 

    • 2 பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் நிதிஷ் பாபு மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • நம்பிக்கை மீறல், கற்பழிப்பு, குடும்ப வன்முறை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    'நான் அவன் இல்லை' என்ற திரைப்படத்தில் நகைகள் மற்றும் பணத்துக்காக நடிகர் ஜீவன் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்வார். அதுபோன்ற ஒரு சம்பவம் கேரள மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.

    வாலிபர் ஒருவர் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு, 5-வது திருமணத்துக்கு முயன்ற போது சிக்கினார். அது பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள தண்ணிமூடு பகுதியை சேர்ந்த வாலிபர் நிதீஷ் பாபு(வயது31). இவர் தனக்கு திருமணமாகவில்லை என்று கூறி கேரள மாநிலத்தின் வெவ்வேறு பகுதியை சேர்ந்த 4 இளம்பெண்களை திருமணம் செய்திருக்கிறார்.

    திருவனந்தபுரம் நகரூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணைத்தான் 4-வது திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். இந்நிலையில் நிதிஷ் பாபு மற்றொரு இளம்பெண்ணை 5-வது திருமணம் செய்ய திட்டமிட்டிருக்கிறார். அது அவரது 4-வது மனைவிக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் தனது கணவரின் மீது வர்க்கலா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், வாலிபர் நிதிஷ் பாபு திருமணம் என்ற போர்வையில் பல பெண்களை ஏமாற்றி நகைகள் மற்றும் பணத்தை பறித்தது தெரியவந்தது.

    மேலும் அவர் இதுவரை 4 பெண்களை திருமணம் செய்திருக்கிறார். ஆனால் எந்த திருமணத்தையும் முறைப்படி பதிவு எதுவும் செய்யவில்லை. ஒருவரிடம் நகைகள் மற்றும் பணத்தை பறித்தபிறகு தலைமறைவாகி விடுவாராம். பின்பு வேறொரு பெண்ணுடன் நட்பை ஏற்படுத்தி அவரை திருமணம் செய்திருக்கிறார்.

    இப்படியாக 4 பெண்களை திருமணம் செய்துள்ளது விசாரணையில் வெளியானது. இதையடுத்து நிதிஷ் பாபுவை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் நிதிஷ்பாபு மீது மேலும் 2 பெண்கள் புகார் கொடுத்தனர். தங்களை ஏமாற்றி நகைகள் மற்றும் பணத்தை மோசடி செய்துவிட்டதாக புகார் தெரிவித்தனர்.

    அதன்பேரில் விசாரித்த போது, பல பெண்களிடம் 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.8 லட்சம் பணத்தை நிதிஷ் பாபு மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் நிதிஷ் பாபு மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    அவர் மீது நம்பிக்கை மீறல், கற்பழிப்பு, குடும்ப வன்முறை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. அவர் எத்தனை பெண்களை இதுபோன்று ஏமாற்றினார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரபல தொழிலதிபரான பாபி செம்மனூரை எர்ணாகுளம் மத்திய போலீசார் கடந்த 8-ந்தேதி கைது செய்தனர்.
    • சிறையில் பாபி செம்மனூருக்கு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகளும் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகை ஹனிரோசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரான பாபி செம்மனூரை எர்ணாகுளம் மத்திய போலீசார் கடந்த 8-ந்தேதி கைது செய்தனர்.

    பின்பு அவர் எர்ணாகுளம் காக்கநாட்டில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு சில நாட்களுக்கு பிறகு அவர் ஜெயிலில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே பாமி செம்மனூர், சிறையில் இருந்தபோது அவரை சந்திக்க வந்த முக்கிய பிரமுகர்களுடன் கேரள மாநில மத்திய பகுதி சிறைத்துறை டி.ஐ.ஜி. அஜய குமார் சென்றிருக்கிறார்.

    பின்பு ஜெயில் சூப்பிரண்டு ராஜூ ஆபிரகாம் அறையில் டி.ஐ.ஜி. அஜய குமார் மற்றும் அவருடன் சென்றிருந்த 3 முக்கிய பிரமுகர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பாமி செம்மனூரிடம் பேசியுள்ளனர். மேலும் சிறையில் பாபி செம்மனூருக்கு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகளும் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதுகுறித்து சிறைத்துறையின் உயர் அதிகாரி விசாரணை நடத்தினார். அதில் சிறையில் பாபி செம்மனூருக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து சிறைத்துறை டி.ஐ.ஜி. அஜய குமார், காக்கநாடு சிறை சூப்பிரண்டு ராஜூ ஆபிரகாம் ஆகிய இருவரையும் சஸ்பெண்டு செய்து மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    • ஆத்திரமடைந்த மாணவன், நேராக தலைமை ஆசிரியரின் அறைக்கு ஆவேசமாக வந்தான்.
    • மாணவன் கொலைமிரட்டல் விடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு அனக்கரா பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு மாணவர்கள் செல்போன் கொண்டுவரக்கூடாது என்ற உத்தரவு அனைத்து பள்ளிகளிலுமே அமலில் இருக்கிறது.

    இதே போன்று தான் அனக்கரா அரசு பள்ளியிலும் மாணவர்கள் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் அந்த பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் ஒரு மாணவன், பள்ளிக்கு செல்போன் கொண்டுவந்தபடி இருந்திருக்கிறான்.

    இதனை கவனித்த வகுப்பாசிரியர்கள், அந்த மாணவனை செல்போன் கொண்டுவரக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது. ஆனால் அந்த மாணவன், செல்போனை பள்ளிக்கு கொண்டுவந்து வகுப்பறையில் பயன்படுத்தியபடி இருந்திருக்கிறான்.

    சம்பவத்தன்றும் அந்த மாணவன் வகுப்பறையில் வைத்து செல்போனை பயன்படுத்தியிருக்கிறான். அதனைப் பார்த்த ஆசிரியர், அந்த மாணவனிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தார். ஆசிரியர் செல்போனை பறித்ததால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், ஆசிரியரிடம் தகராறு செய்திருக்கிறான்.

    பின்பு அந்த செல்போன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், நேராக தலைமை ஆசிரியரின் அறைக்கு ஆவேசமாக வந்தான். பின்பு தலைமை ஆசிரியரின் எதிரே இருந்த இருக்கையில் தோரணையாக அமர்ந்துகொண்டு பேசினான்.

    அப்போது தனது செல்போனை திருப்பி தந்து விடுமாறு தலைமை ஆசிரியரிடம் ஆக்ரோஷமாக சத்தமாக கேட்டான். மாணவனின் இந்த செயல்பாட்டை தலைமை ஆசிரியர் மற்றும் மற்ற ஆசிரியர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர். ஆக்ரோஷமாக பேசிய மாணவரிடம் தலைமை ஆசிரியர் எதுவும் பேசவில்லை.

    இருந்த போதிலும் அந்த மாணவன் ஆக்ரோஷம் பொங்கி பேசியபடியே இருந்தான். மேலும் தனது செல்போனை தந்து விடுமாறு கேட்டான். ஆனால் அதற்கு தலைமை ஆசிரியர் மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், "எனது செல்போனை திரும்ப தராவிட்டால் பள்ளியை விட்டு வெளியே வரும் போது கொன்று விடுவேன்" என்று தலைமை ஆசிரியரை பகிரங்கமாக மிரட்டினான்.

    பின்பு தலைமை ஆசிரியரின் அறையில் இருந்து வேகமாக வெளியேறினான். "கொன்று விடுவேன்" என்று பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த போதிலும், மாணவனின் எதிர்காலம் கருதி அவன் மீது பள்ளி தரப்பில் போலீஸ் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் அந்த மாணவனின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து, அவனது ஒழுக்கக்கேடான செயலை பற்றி கூறினர்.

    இந்தநிலையில் தலைமை ஆசிரியரின் அறைக்குள் சென்று, அவரிடம் ஆவேசமாக பேசி மாணவன் கொலைமிரட்டல் விடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. செல்போன் பயன்பாடு ஒரு மாணவனை எந்த அளவுக்கு ஆக்ரோஷமடைய செய்கிறது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அந்த வீடியோ இருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாது.



    • நிலச்சரிவால் மேற்கண்ட பகுதிகள் இருந்த இடமே தெரியாத அளவுக்கு வீடுகள் மண்ணில் புதைந்தும், உருக்குலைந்தும் போனது.
    • வயநாடு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி சில நாட்கள் நடந்த பின்னர் கைவிடப்பட்டது.

    வயநாடு:

    வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் கடந்த ஜூலை மாதம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதோடு ஊருக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்தது. நிலச்சரிவில் சிக்கி 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து மீட்கப்பட்டனர். இந்த நிலச்சரிவால் மேற்கண்ட பகுதிகள் இருந்த இடமே தெரியாத அளவுக்கு வீடுகள் மண்ணில் புதைந்தும், உருக்குலைந்தும் போனது.

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி சில நாட்கள் நடந்த பின்னர் கைவிடப்பட்டது. சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு பின்னர் காணாமல் போன 32 பேர் இதுவரை கண்டறியப் படவில்லை. இந்த நிலையில் அவர்களை வயநாடு மாவட்ட பேரிடர் ஆணையம் உயிரிழந்து விட்டதாக அங்கீகரித்து உள்ளது. இதுகுறித்து மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

    மாவட்ட பேரிடர் ஆணையம் அளித்துள்ள இந்த பட்டியலை உள்துறை செயலாளர், கூடுதல் தலைமை செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் ஆகியோர் சரிபார்த்து, மாநில பேரிடர் ஆணைய முதன்மை செயலாளருக்கு அனுப்புவார்கள். இவர்கள் அங்கீகரித்த அறிக்கையின் அடிப்படையில், மாநில குழு அதை சரிபார்த்து நிலச்சரிவில் காணாமல் போனவர்களை இறந்து போனவர்களாக அறிவிக்க பரிந்துரை செய்யப்படும்.

    அதன் பின்னர் கேரள அரசு 32 பேரை இறந்தவர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். இந்த உத்தரவின் அடிப்படையில், நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு கிடைக்கும் நிவாரணம் உள்ளிட்ட அனைத்து பயன்களும் வழங்கப்படும். மேலும் அவர்கள் மரணம் பதிவு செய்யப்பட்டு இறப்பு சான்றிதழ் வழங்கப்படும். பின்னர் நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ×