என் மலர்
இந்தியா

கோழிக்கோடு அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் 'தீ'- புகை மூட்டத்தில் சிக்கி 5 பேர் பலி?
- 200-க்கும் மேற்பட்டோர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இது நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 3,025 படுக்கைகளுடன் இந்தியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையாக திகழ்கிறது.
இங்கு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பல நவீன கருவிகள் இருக்கின்றன. இதனால் இந்த மருத்துவமனைக்கு கோழிக்கோடு மாவட்டம் மட்டுமின்றி, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்காக நோயாளிகள் வருகிறார்கள்.
இந்தநிலையில் கோழிக்கோடு அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தரை தளத்தில் உள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவுக்கு அருகில் இருந்த யு.பி.எஸ். அமைப்பில் தீப்பிடித்துள்ளது.
இதன் காரணமாக ஆஸ்பத்திரியில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. அவசர சிகிச்சை பிரிவை முழுவதுமாக புகை மூட்டம் சூழ்ந்தது. ஆஸ்பத்திரியில் இருந்த தீயணைப்பு கருவிகள் மூலமாக தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
ஆகவே தீவிபத்து குறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கடற்கரை மற்றும் வெள்ளிமடுக்குன்னு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்குள் அதிரடியாக சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளிகள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதலில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்பு புகைமூட்டம் இருந்த மற்ற வார்டுகளில் இருந்த நோயாளிகளும் வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர்.
பல்வேறு வார்டுகளில் சிகிச்சை பெற்று வந்த 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். அவர்களை வேறு மருத்துவமனைகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆம்புலன்சு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
முதலில் அவசர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் இருந்த 30 நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை தேவைப்பட்டதால், அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். மற்ற நோயாளிகள் பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மின் கசிவு காரணமாகவே இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த தீ விபத்தில் சிக்கி 5 நோயாளிகள் இறந்து விட்டதாக தகவல் பரவியது.
கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்து வந்த இளம்பெண் கங்கா (வயது34), கங்காதரன்(70), கோபாலன்(55), சுரேந்திரன்(59), நஜிரா(44) ஆகிய 5 நோயாளிகள் நேற்று இரவு இறந்தனர். அவர்கள் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கி இறந்துவிட்டதாக தகவல் வெளியானது.
புகை மூட்டத்தில் சிக்கிய நோயாளிகளை வேறு இடத்திற்கு மாற்றியபோது 5 பேர் இறந்திருப்பதாக சித்திக் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார். ஆனால் அவர்கள் 5 பேரும் புகை மூட்டத்தில் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியாகவில்லை என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஒரு பெண் நோயாளி ஏறகனவே வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்தவர் என்றும், 2 நோயாளிகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும், ஒரு நோயாளி கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர் என்றும், ஒரு நோயாளி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பெற்றவர் எனவும், அவரவர் உடல்நல பிரச்சனை காரணமாகவே அவர்கள் இறந்திருப்பதாக கோழிக்கோடு மருத்துவமனை கண்காணிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த தீவிபத்துக்காக விரிவான விசாரணை நடத்துமாறு மருத்துவக்கல்வி இயக்குனருக்கு கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டது. மேலும் பொறியாளர் குழுவும் ஆய்வை தொடங்கியுள்ளது.
5 நோயாளிகள் மரணத்துக்கான காரணத்தை உறுதிப்படுத்த மருத்துவ வாரியம் இன்று கூடுகிறது. மருத்துவ கல்வி இயக்குனர் விசாரணை மற்றும் மருத்துவ வாரிய ஆலோசனை உள்ளிட்டவைகள் முடிந்த பிறகே 5 நோயாளிகளின் இறப்புக்காக காரணம் வெளியிடப்படும் என தெரிகிறது.






