என் மலர்
கேரளா
- நடிகர் தேவன் கேரள மக்கள் கட்சி என்ற பேரில் 2004-ல் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வந்தார்.
- பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் தேவனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் நடிகர் தேவன். இவர் ஏராளமான மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் பாட்ஷா படத்தில் வில்லனாக நடித்தது மிகவும் பேசப்பட்டது.
நடிகர் தேவன் கேரள மக்கள் கட்சி என்ற பேரில் 2004-ல் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு தனது கட்சியை பாரதிய ஜனதாவுடன் இணைத்தார். மேலும் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில் கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலை வராக நடிகர் தேவன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை மாநில தலைவர் சுரேந்திரன் அறிவித்தார். பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் தேவனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- விவசாயியை கொன்று சாப்பிட்ட புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
- பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களும் வைக்கப்பட்டன. இருந்த போதிலும் அந்த புலி சிக்கவில்லை.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே உள்ள மூடக்கொல்லி பகுதியை சேர்ந்தவர் பிரஜீஷ்(வயது36). விவசாயியான இவர் பசுமாடுகள் வளர்த்து வந்தார். கடந்த சில நாட்ளுக்கு முன்பு அவற்றிற்கு புல் அறுப்பதற்கு சென்ற போது, புலி அவரை அடித்துக் கொன்று சாப்பிட்டது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விவசாயியை கொன்று சாப்பிட்ட புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து விவசாயியை வேட்டையாடிய புலியை சுட்டுக்கொல்ல கேரள அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து விவசாயியை கொன்ற புலியை தேடும் நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். விவசாயி கொல்லப்பட்ட பகுதியையொட்டி உள்ள வனப்பகுதிகளில் புலியை தேடினர். மேலும் பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களும் வைக்கப்பட்டன. இருந்த போதிலும் அந்த புலி சிக்கவில்லை.
இந்நிலையில் புலியை சுட்டுக்கொல்லும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அதனை தள்ளுபடி செய்தது. மனிதனை கொன்ற புலியை சுட்டுக்கொல்லுவது தவறு இல்லை என்று கருத்து கூறிய ஐகோர்ட்டு, வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
இந்நிலையில் விவசாயியை கொன்ற புலியை பிடிக்க 80 பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படையினர் களம் இறக்கப்பட்டுள்ளனர். வனத்துறையைச் சேர்ந்த அவர்கள் புலி நடமாட்டம் கண்டறியப்பட்ட இடங்க ளில் 5-வது நாளாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
புலி சிக்குவதற்காக பல இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதனையும் வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். புலியை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டிருப்பதால் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் துப்பாக்கியுடன் வனப்பகுதியில் சுற்றி வருகின்றனர்.
- ஐகோர்ட்டு உத்தரவுப்படி பக்தர்கள் தரிசன முறையில் பல்வேறு மாற்றங்களை தேவசம்போர்டு எடுத்தது.
- பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் செல்வதற்கு போலீசாரும் நடவடிக்கை எடுத்தனர்.
திருவனந்தபுரம்:
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கோவில் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்தே ஐயப்ப பக்தர்களின் வருகை மிகவும் அதிகமாகவே உள்ளது. தினமும் 70ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தபடி இருந்ததால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்த நிலையில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமானது. மெய்நிகர் வரிசை முன்பதிவு மட்டுமின்றி, உடனடி முன்பதிவு செய்தும் ஏராளமானோர் சபரிமலைக்கு வந்ததால் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது.
இதன் காரணமாக சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் 10 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பம்பை, மரக்கூட்டம், சன்னிதான நடைப்பந்தல் உள்ளிட்ட பல இடங்களில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தே சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
இதனால் குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் என பக்தர்கள் அனைவருமே கடும் அவதிக்குள்ளாகினர். தரிசன நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதன் காரணமாகவும், பக்தர்கள் வருகைக்கு தகுந்தாற்போல் செய்ய வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாகவும் நிலக்கல் மற்றும் பம்பையில் பிரச்சனை ஏற்பட்டது. அவதிக்குள்ளான பக்தர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான நிலை நிலவியது.
இந்த விவகாரத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உடனடியாக தலையிட்டு, சபரிமலை வரக்கூடிய பக்தர்களுக்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் கேரள ஐகோர்ட்டும் ஐயப்ப பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்கவும், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு நடைமுறைகளையும் ஐகோர்ட்டு தெரிவித்தது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி பக்தர்கள் தரிசன முறையில் பல்வேறு மாற்றங்களை தேவசம்போர்டு எடுத்தது. பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் செல்வதற்கு போலீசாரும் நடவடிக்கை எடுத்தனர்.
கேரள ஐகோர்ட்டு நேற்று முன்தினம் பல்வேறு வழிமுறைகளை அறிவித்திருந்த நிலையில், மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க கேரள மாநில டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது. நீதிபதிகள் அனில் நரேந்திரன், கிரிஷ் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம் வருமாறு:-
சபரிமலையில் நிலவும் கூட்ட நெரிசலை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை நாள் ஒன்றுக்கு 90 ஆயிரமாக குறைக்க வேண்டும். மெய்நிகர் வரிசை முன்பதிவு மூலம் 80 ஆயிரம் பேருக்கும், உடனடி புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.
முன்பதிவு இல்லாதவர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை செல்ல அனுமதிக்கப்படாமல் இருப்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும். சன்னிதானம் மற்றும் பம்பையில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டால், எரிமேலி மற்றும் நிலக்கல் ஆகிய இடங்களில் அறிவிக்க வேண்டும்.
சபரிமலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் போது அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். உடனடி புக்கிங் மற்றும் மெய்நிகர் வரிசை முன்பதிவு ஆகியவை தினமும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.
மெய்நிகர் வரிசை முன்பதிவுகளில் குறைப்பு ஏற்பட்டால் அதிகமான பக்தர்களை உடனடி புக்கிங் மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கலாம். தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்களை பம்பையில் இருந்து அனுப்ப வேண்டும். இதற்காக நிலக்கல்லில் இருந்து காலியாக உள்ள பஸ்களை பம்பைக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு தனது உத்தரவில் கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் நிலக்கல் மற்றும் பம்பை இடையே கூடுதல் பஸ்கள் இயக்கம், பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் நிறுத்தி அனுப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக சபரிமலையில் நிலவி வந்த கூட்ட நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது.
இந்த பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுகின்றனர். இதனால் பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் சபரிமலைக்கு செல்கின்றனர். பக்தர்கள் காத்திருக்கும் இடங்களில், அவர்களுக்கு குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்படுகிறது.
- நிலக்கல், பம்பை, சன்னிதானம் மற்றும் மலைப்பாதைகள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
- பம்பையிலேயே பக்தர்கள் நீண்ட நேரம் காத்து நின்று மலையேறினர்.
திருவனந்தபுரம்:
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி பக்தர்கள் உடனடியாக முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆன்லைனில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து சபரிமலைக்கு வந்த நிலையில், உடனடி முன்பதிவு செய்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தார்கள். இதன் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரித்தது.
நிலக்கல், பம்பை, சன்னிதானம் மற்றும் மலைப்பாதைகள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டதால், சாமி தரிசனத்துக்கு பல மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
பம்பையிலேயே பக்தர்கள் நீண்ட நேரம் காத்து நின்று மலையேறினர். மரக்கூட்டம், பதினெட்டாம் படி, சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் கடும் நெரிசலும் ஏற்பட்டது. தரிசன நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும், பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருந்ததால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.
ஆன்லைன் முன்பதிவு முறையில் ஆயிரக்கணக்கானோர் பதிவு செய்த நிலையில், உடனடி முன்பதிவு வசதியையும் பயன்படுத்தி ஏராளமானோர் வந்ததால் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியவில்லை. இதன் காரணமாக குழந்தைகளுடன் வந்தவர்கள், வயது முதிர்ந்தவர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை ஐகோர்ட்டு உத்தரவுப்படி குறைத்தும், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்லாமலேயே திரும்பிச் சென்ற சம்பவமும் அரங்கேறியது.
நேற்று பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் நிறுத்தி நிறுத்தி அனுப்பப்பட்டனர். இதனால் 10 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக நிலக்கல்லியேயே பக்தர்கள் அதிக நேரம் நிறுத்தப்பட்டனர்.
சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளில் ஏற்பட்ட குளறுபடியே பக்தர்களின் அவதிக்கு முக்கியமாக காரணமாக கூறப்படுகிறது. சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு கேரள அரசு மற்றும் தேவசம் போர்டை கேரள ஐகோர்ட்டு வலியுறுத்தியது.
அதனடிப்படையில் பல்வேறு திட்டங்களை வகுத்தபோதிலும் கூட்ட நெரிசல் ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தநிலையில் இடுக்கியில் நடந்த நவ கேரள சதாஸ் மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்ற கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், சபரிமலை நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதில் வனத்துறை மந்திரி சுசீந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் தேவஸ்தான தலைவர் பிரசாந்த், கேரள டி.ஜி.பி.ஷேக் தர்வேஷ்சாகிப் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியதாவது:-
சபரிமலையில் கடந்த 6-ந்தேதி முதல் பக்தர்களின் எண்ணிக்கை தினசரி 88 ஆயிரமாக உயர்ந்தது. இதுதான் கூட்ட நெரிசலுக்கு காரணம். அதன்பிறகு தரிசன நேரம் 18 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு 90 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக குறைக்கப்பட்டது.
நிலக்கல்லில் நடந்துவரும் உடனடி முன்பதிவை நிறுத்தி வைக்கலாம். தேவைப்பட்டால் மட்டும் உடனடி முன்பதிவை தொடர்ந்து நடத்தலாம். பெண்கள், குழந்தைகளுக்கான தரிசனத்தில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பம்பை முதல் சன்னிதானம் வரை மலையேறும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உடனுக்குடன் கிடைக்க தேவஸ்தான தலைவர் தலைமையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் பணிகளை ஒருங்கிணைந்த முறையில் செய்ய வேண்டும். பக்தர்கள் பாதிக்காத வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
சபரிமலைக்கு கடந்த ஆண்டைப்போல பக்தர்கள் அதிகளவில் வருகிறார்கள். மெய்நிகர் வரிசையில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக குறைக்கப்பட்டு உள்ளது. உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகள் கூட்ட நெரிசலை குறைக்க உதவும்.
பக்தர்களின் யாத்திரை அமைதியாக நடந்து வருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது சிறுசிறு பிரச்சனைகள் எழுகின்றன. யாத்ரீகர்கள் சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியதாவது:-
கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் சபரிமலையில் பக்தர்களை கையாளுவதில் குளறுபடிகள் ஏற்பட்டது. அந்த குறுபடிகளை உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. எல்லா வருடமும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம் தான்.
கூட்டம் அதிகரிக்கும்போது அனைவருக்கும் எல்லாம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. அதனை வரும் ஆண்டுகளில் எப்படி நிவர்த்தி செய்யவேண்டும் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கவும், அவர்களது வாகனங்களை நிறுத்த போதிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் அனில் நரேந்திரன், கிரிஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்திருப்பதாவது:-
சபரிமலைக்கு செல்லும் கூட்டம் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வரிசை வளாகத்தில் பக்தர்களின் கூட்டத்தை அனுமதிக்க வேண்டாம். அதனை தினமும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் உள்ள என்.எஸ்.எஸ். தன்னார்வலர்களின் மூலமாக அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் உதவியுடன் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு பரிசீலிக்கும். குழந்தைகள் உள்ளிட்ட யாத்ரீகர்களுக்கு கோவிலில் கூடுதல் வதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- விண்வெளி ஆராய்ச்சியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்தக்கட்டத்தை கையில் எடுக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
- சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்ற ஆகஸ்டு 23-ந் தேதி, இந்தியாவின் தேசிய விண்வெளி தினமாக அன்றைய நாளை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரத்தில் மலையாள மனோரமா பத்திரிகைக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் சோம்நாத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
விண்வெளி ஆராய்ச்சியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்தக்கட்டத்தை கையில் எடுக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 2 முதல் 3 இந்திய விண்வெளி வீரர்கள் கொண்ட குழுவினரை குறைந்த தூரத்தில் உள்ள புவிவட்ட சுற்றுப்பாதைக்கு அனுப்பி மீண்டும் 3 நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சோதனைக்காக இந்திய விமானப்படையைச் சேர்ந்த 4 விமானிகள் தேர்வு செய்யப்பட்டு, பெங்களூருவில் உள்ள விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். ஆளில்லா பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை முடித்துக்கொண்டு வருகிற 2025-ம் ஆண்டு இந்த திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 2040-ம் ஆண்டுக்குள் முதல் முறையாக இந்திய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்துடன் இஸ்ரோ முழு வீச்சில் செயல்படுகிறது.
சூரியனின் மையப்பகுதி, சூரியனில் இருந்து வீசும் காற்று, சூரிய தீப்பிழம்புகள் மற்றும் கிரகங்களுக்கு இடையிலான காந்தப்புலங்களை அளவிடுவது உள்பட சூரியனுக்குள் பொதிந்துள்ள மர்மங்களைக் கண்டறிவதற்காக, இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு பணியாக ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 2-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் (15 லட்சம் கிலோ மீட்டர்) தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி (எல்.1) நோக்கி பயணித்து வருகிறது. வருகிற ஜனவரி மாதம் ஹாலோ சுற்றுப்பாதையில் ஆதித்யா எல்-1 விண்கலம் இணைக்கப்படும்.
சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்ற ஆகஸ்டு 23-ந் தேதி, இந்தியாவின் தேசிய விண்வெளி தினமாக அன்றைய நாளை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 14 புவி நாட்களில், இது நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணில் அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், கந்தகம், மாங்கனீசு, சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை இருப்பதைக் கண்டறிந்து நிலவு குறித்த மதிப்புமிக்க தரவுகளை வழங்கியது.
சிறிய செயற்கைகோள் ஏவுதல் வாகனம் (எஸ்.எஸ்.எல்.வி.), மறுபயன்பாட்டு ஏவுதல் வாகனம் (ஆர்.எல்.வி.) திட்டம், எக்ஸ்ரே வானியல் பணி எக்ஸ்போசாட் (எக்போசாட்- எக்ஸ்-ரே போலரி மீட்டர் (செயற்கைகோள்)), விண்வெளி டாக்ஸி பரிசோதனை மற்றும் லாக்ஸ்-மீத்தேன் எந்திரம் ஆகியவை இதில் அடங்கும்.
2023-2024-ம் ஆண்டுகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள எக்போசாட் இந்தியாவின் முதல் அர்ப்பணிப்பு அறிவியல் பணியாகும். ஸ்பேடக்ஸ் (ஸ்பேஸ் டக்கிங் சோதனை) என்ற அறிவியல் பூர்வமான கருவிகளைப் பயன்படுத்தி பிரகாசமான வானியல் எக்ஸ்ரே மூலங்களை இது ஆராயும். இது ஜனவரி 3-வது காலாண்டில் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
2035-ம் ஆண்டில் "இந்திய விண்வெளி நிலையம்" (பாரதிய அண்டாரிக்ஷா நிலையம்) தொடங்குவது மற்றும் உலக விண்வெளி அரங்கில் இந்தியாவின் இருப்பை மேலும் உறுதிப்படுத்த வெள்ளிக்கோளின் சுற்று வட்டப்பாதை ஆய்வு திட்டம் மற்றும் செவ்வாயில் ஆராய்ச்சி ஆகியவற்றைக் கொண்ட கிரகங்களுக்கு இடையேயான ஆராய்ச்சியை மேற்கொள்வது போன்ற லட்சிய இலக்குகளை பிரதமர் நிர்ணயித்துள்ளார்.
இந்தியாவின் விண்வெளி திட்டம் வரவிருக்கும் ஆண்டுகளில் புதிய உயரங்களை எட்ட தயாராக உள்ளது. தொடங்கப்பட்ட ஒவ்வொரு பணி மற்றும் ஒவ்வொரு கண்டுபிடிப்புடனும், இஸ்ரோ உலக அரங்கில் ஒரு சக்தியாக தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
தேசிய பெருமையைத் தூண்டுகிறது. அத்துடன் இந்தியாவின் தொழில்நுட்ப சாதனையை விரிவுபடுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவி வருகிறது.
- குழந்தைகளுடன் வந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய போலீசார் உதவி செய்தனர்.
திருவனந்தபுரம்:
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் (நவம்பர்) 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இருந்த போதிலும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டு வருகின்றனர். இதன் காரணமாக சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவி வருகிறது.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு தரிசன நேரம் அதிகரிப்பு, வரிசை வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை தேவசம்போர்டு செய்திருக்கிறது. இருந்த போதிலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக் கடங்காத வகையில் இருப்பதால், சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வெகுநேரம் காத்திருப்பது தொடர் கதையாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்கும் கேரள ஐகோர்ட்டு, சபரிமலையில் ஏற்படும் நெரிசல் குறித்து ஆய்வு செய்ய 12 பேர் அடங்கிய சட்டக்குழுவை நியமிக்க பரிசீலித்து வருகிறது. மேலும் பக்தர்களின் குறைகளை ஆய்வு செய்யவும், பக்தர்களுக்கான வசதிகளை மதிப்பீடு செய்யவும் சட்டக்குழு நியமிக்கப்படும் என்றும் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

கடந்த 2 நாட்களாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மிகவும் கட்டுக் கடங்காத வகையில் இருந்தது. இதன் காரணமாக பம்பையிலேயே பக்தர்கள் வரிசையில் காத்திருந்து மலையேற வேண்டிய நிலை நிலவியது. மலைப்பாதை எங்கும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
கோவிலில் நடைப்பந்தல், சன்னிதான பகுதி என அனைத்து பகுதியிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பதினெட்டாம் வழியாக ஒரு நிமிடத்திற்கு 80 முதல் 85 பேர் வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகளுடன் வந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய போலீசார் உதவி செய்தனர்.
கோவில் நடை திறக்கப்பட்ட 25 நாட்களில் 16 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்திருக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே தினமும் 90ஆயிரம் பக்தர்கள் மெய்நிகர் வரிசை வழியாக வந்து சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். அந்த எண்ணிக்கையை நீதிமன்றம் 80 ஆயிரமாக குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சாமி தரிசனத்துக்கான உடனடி முன்பதிவுக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இதனால் உடனடி முன்பதிவு செய்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். இதன்காரணமாகவே பக்தர்கள் கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காத வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் சாமி தரிசனத்துக்கான உடனடி முன்பதிவை நிறுத்த வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
- பல்கலைக்கழகங்களில் சங்பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுவதாக கூறி போராட்டம்.
- கேரள மாநில அரசு தனக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கவில்லை- ஆளுநர் குற்றச்சாட்டு
கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் திருவனந்தபுரத்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எஸ்.எஃப்.ஐ. மாணவர்கள் அவரது காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதனால் கோபம் அடைந்த ஆளுநர் ஆரிஃப் முகமது கான் காரில் இருந்து கீழே இறங்கி ஆவேசமாக பேசினார். அப்போது கேரள மாநில அரசு தனக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், "இது முதல்வரின் சதி. எனக்கு உடல் ரீதியாக காயம் ஏற்படுத்த முதல்வர் பினராயி விஜயன் ஆட்களை அனுப்புகிறார். அரசியலமைப்பு சீர்குலைவது போல் தெரிகிறது. அரசியலமைப்பு இயந்திரத்தின் சீர்குலைவை அனுமதிக்க முடியாது" என்றார்.
பல்கலைக்கழகங்களில் சங்பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுவதாக குற்றம்சாட்டி எஸ்.எஃப்.ஐ. மாணவர்கள் கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள மாநில அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்கள் பயணம் செய்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் நேரில் எடுத்துக்கூறும் வகையில் நவகேரள சதாஸ் என்ற யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. காசர்கோட்டில் தொடங்கிய இந்த யாத்திரை, மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கு செல்லும் வகையில் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த யாத்திரையில் பிரத்யேக பஸ்சில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் பயணித்து வருகின்றனர். மக்களின் நிதியை வீணாக்கும் வகையில் இந்த யாத்திரை நடத்தப்படுவதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நவகேரள சதாஸ் யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் இளைஞர் காங்கிரசார் கருப்பு கொடி போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களுக்கும், இளைஞர் அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு மோதல் சம்பவம் அரங்கேறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் தனது பயணத்தை நிறைவு செய்திருக்கும் நவ கேரள சதாஸ் யாத்திரை பஸ், நேற்று எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூருக்கு சென்றது. ஓடக்கலி என்ற இடத்தில் வந்த போது, யாத்திரைக்கு தடை ஏற்படுத்தும் வகையில் கேரள மாணவர் சங்கத்தினர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்கள் பயணம் செய்த பிரத்யேக பஸ்சின் மீது போராட்டக்காரர்கள், காலணியை வீசினர். இதனால் ஆத்திரமடைந்த இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பினர், போராட்டக்காரர்களை தாக்கினர்.
போராட்டக்காரர்களை ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பினர் விரட்டி விரட்டி தாக்கினர். போலீசாரின் முன்னிலையிலேயே மாணவர் சங்கத்தினர் தாக்கப்பட்டனர். இதையடுத்து மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, அங்கிருந்து கலைந்து செல்லச் செய்தனர்.
பின்பு முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்கள் பயணம் செய்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. நவகேரள சதாஸ் யாத்திரை வாகனத்தின் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறும்போது, இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தார்.
அதேவேளையில் தங்களின் இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் தொடரும் என்று கேரள மாணவர் சங்க தலைவர் அலோசியஸ் சேவியர் தெரிவித்திருக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் சதீசன் கூறும்போது, காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கப்பட்டது தொடர்பான வழக்குகளில் முதல்-மந்திரியை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்றார்.
இந்நிலையில் காலணி வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட கேரள மாணவர் சங்கத்தினர் சிலரை போலீசார் பிடித்துச் சென்றனர். அவர்களில் 4 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர். குரும்பப்பாடி போலீசார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
விசாரணைக்கு பிறகு அவர்கள் கைது குறித்து தகவல் வெளியாகும் என தெரிகிறது. காலணி வீசிய போராட்டக்காரர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், மாணவர் சங்கத்தினரை தாக்கிய இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பினர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- தனியார் தொழில் முனைவோர் மற்றும் மத்திய அரசின் பங்களிப்புடன் உள்ள நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கலாம்.
- கொச்சி வழியாக இந்த கப்பல் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தை சேர்ந்த பலரும் வெளி நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் பெண்கள் உள்பட பலரும் பணியில் உள்ளனர். இவர்கள் தங்கள் பயணத்திற்கு விமான சேவையை மட்டுமே நம்பி உள்ளனர்.
இந்த நிலையில் விமான டிக்கெட் உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் இவர்களது பயணம் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கப்பல் சேவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலங்களாக உள்ளது. இதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பேப்பூர் பகுதியில் இருந்து கொச்சி வழியாக இந்த கப்பல் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடல்சார் வாரிய தலைவர் என்.எஸ்.பிள்ளை கூறுகையில், இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் ஆதரவு அளித்தால், கப்பல் சேவையை விரைவில் தொடங்க முடியும். இதற்கான டெண்டர் ஜனவரி மாதத்தில் கோரப்படும். தனியார் தொழில் முனைவோர் மற்றும் மத்திய அரசின் பங்களிப்புடன் உள்ள நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கலாம் என்றார்.
ஆயிரம் முதல் 2 ஆயிரம் பயணிகள் செல்லக்கூடிய வகையில் கப்பல் இயக்க பரிசீலித்து வருவதாகவும், பயண நாட்கள் 5 நாட்களாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
- ஷஹானா திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
- தற்கொலைக்கு தூண்டுதல், வரதட்சணை தடை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு ரூவைசை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் அசீஸ் என்பவரின் மகள் ஷஹானா (வயது26). எம்.பி.பி.எஸ். படித்துள்ள இவர், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், தான் தங்கியிருந்த குடியிருப்பில் கடந்த 4-ந்தேதி மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவருடைய தற்கொலைக்கு அவரது நண்பரான டாக்டர் ரூவைஸ் தான் காரணம் என்பது தெரியவந்தது. இருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கேட்ட அதிக வரதட்சணையை தர முன்வராத காரணத்தால் திருமணம் செய்துகொள்ள ரூவைஸ் மறுத்திருக்கிறார். இதில் வேதனையடைந்த மாணவி ஷஹானா தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தற்கொலைக்கு தூண்டுதல், வரதட்சணை தடை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு ரூவைசை போலீசார் கைது செய்தனர். பின்பு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ரூவைசை இந்திய மருத்துவ சங்கம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.
- 27-ந் தேதி மண்டல பூஜைக்கு பிறகு அன்று இரவு கோவில் நடை அடைக்கப்படும்.
- சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சபரிமலை:
மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வருகிற 27-ந் தேதி நடக்கிறது. மண்டல பூஜையின் முன்னோடியாக 26-ந் தேதி மாலையில் தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். இதற்கான தங்க அங்கி ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து 23-ந் தேதி ஊர்வலமாக பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்படுகிறது.
27-ந் தேதி மண்டல பூஜைக்கு பிறகு அன்று இரவு கோவில் நடை அடைக்கப்படும். பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந் தேதி மாலையில் நடை திறக்கப்படும். பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந் தேதி நடைபெறும். அன்றைய தினம் சாமிக்கு பந்தளத்தில் இருந்து எடுத்து வரப்படும் தங்க ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் தோன்றும் மகர ஜோதியை பக்தர்கள் பார்த்து வழிபடுவார்கள்.
இந்தநிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடப்பு சீசனில் நேற்று வரை 13 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சென்னையில், மழை காரணமாக ஏராளமான ரெயில்கள் ரத்தானது. இதனால் ஐயப்ப பக்தர்களின் சபரிமலை பயணமும் எதிர்பாராத விதமாக ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது ரெயில் போக்குவரத்து சீராகி வரும் நிலையில் தென் மாநில பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் 10 மணிநேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே சபரிமலையில் அதிகரித்து வரும் கூட்டத்தினால் நெரிசலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு கேரள ஐகோர்ட்டு சிறப்பு அமர்வு அறிவுறுத்தி உள்ளது.
- தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சபரிமலைக்கு வருகின்றனர்.
- பக்தர்கள் காத்திருக்கக் கூடிய வரிசை வளாகங்களில் கழிப்பறை வசதி செய்யப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்:
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் விரதமிருக்கும் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தே சாமி தரிசனம் செய்ய முடிகிறது. பம்பை, சன்னிதான பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது.
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் சிரமத்தை போக்க தேவசம்போர்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பதி கோவிலில் இருப்பது போன்று வரிசை வளாக முறையை சபரிமலையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அந்த முறை கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை அடிப்படையில் செயல்படுத்தி பார்க்கப்பட்டது. அது வெற்றிகரமாக முடிந்ததால், வரிசை வளாகங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் இந்த முறையை பயன்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
தற்போது தினமும் ஐயப்ப பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருக்கிறது. தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். இதனால் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை நிலவியது.
ஆகையால் வரிசை வளாகங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதற்கு மரக்கூட்டம் மற்றும் சரங்குத்தி இடையே கடந்த 8 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த 18 அரங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. பக்தர்கள் இதற்கு முன் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.
வரிசை வளாகங்கள் செயல்பாட்டுக்கு வந்திருப்பதன் மூலம் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரிசை வளாகத்தில் பக்தர்கள் வரிசையாக செல்வதை கண்காணிக்க வயர்லெஸ் கருவியுடன் ஏராளமான போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பக்தர்கள் காத்திருக்கக் கூடிய வரிசை வளாகங்களில் கழிப்பறை வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களுக்கு குடிநீர், பிஸ்கெட் வினியோகிக்கப்படுகிறது. காத்திருக்க வேண்டிய நேரத்தை பக்தர்கள் அறிந்துகொள்ள வசதியாக எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில் அறிவிப்புகள் ஒளிபரப்பப்படுகிறது. சன்னிதானத்தில் நிலவும் கூட்ட நெரிசலை பொறுத்து, பக்தர்கள் ஒவ்வொரு அரங்குகளுக்கு மாற்றப்பட்டு சாமி தரிசனத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.






