search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Navakerala sadas"

    • காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்கள் பயணம் செய்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் நேரில் எடுத்துக்கூறும் வகையில் நவகேரள சதாஸ் என்ற யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. காசர்கோட்டில் தொடங்கிய இந்த யாத்திரை, மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கு செல்லும் வகையில் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    இந்த யாத்திரையில் பிரத்யேக பஸ்சில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் பயணித்து வருகின்றனர். மக்களின் நிதியை வீணாக்கும் வகையில் இந்த யாத்திரை நடத்தப்படுவதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நவகேரள சதாஸ் யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் இளைஞர் காங்கிரசார் கருப்பு கொடி போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களுக்கும், இளைஞர் அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு மோதல் சம்பவம் அரங்கேறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பல்வேறு மாவட்டங்களில் தனது பயணத்தை நிறைவு செய்திருக்கும் நவ கேரள சதாஸ் யாத்திரை பஸ், நேற்று எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூருக்கு சென்றது. ஓடக்கலி என்ற இடத்தில் வந்த போது, யாத்திரைக்கு தடை ஏற்படுத்தும் வகையில் கேரள மாணவர் சங்கத்தினர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்கள் பயணம் செய்த பிரத்யேக பஸ்சின் மீது போராட்டக்காரர்கள், காலணியை வீசினர். இதனால் ஆத்திரமடைந்த இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பினர், போராட்டக்காரர்களை தாக்கினர்.

    போராட்டக்காரர்களை ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பினர் விரட்டி விரட்டி தாக்கினர். போலீசாரின் முன்னிலையிலேயே மாணவர் சங்கத்தினர் தாக்கப்பட்டனர். இதையடுத்து மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, அங்கிருந்து கலைந்து செல்லச் செய்தனர்.

    பின்பு முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்கள் பயணம் செய்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. நவகேரள சதாஸ் யாத்திரை வாகனத்தின் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறும்போது, இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தார்.

    அதேவேளையில் தங்களின் இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் தொடரும் என்று கேரள மாணவர் சங்க தலைவர் அலோசியஸ் சேவியர் தெரிவித்திருக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் சதீசன் கூறும்போது, காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கப்பட்டது தொடர்பான வழக்குகளில் முதல்-மந்திரியை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்றார்.

    இந்நிலையில் காலணி வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட கேரள மாணவர் சங்கத்தினர் சிலரை போலீசார் பிடித்துச் சென்றனர். அவர்களில் 4 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர். குரும்பப்பாடி போலீசார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    விசாரணைக்கு பிறகு அவர்கள் கைது குறித்து தகவல் வெளியாகும் என தெரிகிறது. காலணி வீசிய போராட்டக்காரர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், மாணவர் சங்கத்தினரை தாக்கிய இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பினர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×