search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சபரிமலையில் முன்னேற்பாடு குளறுபடியால் சிக்கி தவிக்கும் ஐயப்ப பக்தர்கள்
    X

    மாளிகைபுரம் கோவிலில் காணப்பட்ட பக்தர்கள் கூட்டம் - பதினெட்டாம்படி ஏறுவதற்காக இருமுடியுடன் காத்திருந்த பக்தர்கள்

    சபரிமலையில் முன்னேற்பாடு குளறுபடியால் சிக்கி தவிக்கும் ஐயப்ப பக்தர்கள்

    • நிலக்கல், பம்பை, சன்னிதானம் மற்றும் மலைப்பாதைகள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
    • பம்பையிலேயே பக்தர்கள் நீண்ட நேரம் காத்து நின்று மலையேறினர்.

    திருவனந்தபுரம்:

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி பக்தர்கள் உடனடியாக முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    ஆன்லைனில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து சபரிமலைக்கு வந்த நிலையில், உடனடி முன்பதிவு செய்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தார்கள். இதன் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரித்தது.

    நிலக்கல், பம்பை, சன்னிதானம் மற்றும் மலைப்பாதைகள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டதால், சாமி தரிசனத்துக்கு பல மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    பம்பையிலேயே பக்தர்கள் நீண்ட நேரம் காத்து நின்று மலையேறினர். மரக்கூட்டம், பதினெட்டாம் படி, சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் கடும் நெரிசலும் ஏற்பட்டது. தரிசன நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும், பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருந்ததால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.

    ஆன்லைன் முன்பதிவு முறையில் ஆயிரக்கணக்கானோர் பதிவு செய்த நிலையில், உடனடி முன்பதிவு வசதியையும் பயன்படுத்தி ஏராளமானோர் வந்ததால் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியவில்லை. இதன் காரணமாக குழந்தைகளுடன் வந்தவர்கள், வயது முதிர்ந்தவர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை ஐகோர்ட்டு உத்தரவுப்படி குறைத்தும், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்லாமலேயே திரும்பிச் சென்ற சம்பவமும் அரங்கேறியது.

    நேற்று பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் நிறுத்தி நிறுத்தி அனுப்பப்பட்டனர். இதனால் 10 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக நிலக்கல்லியேயே பக்தர்கள் அதிக நேரம் நிறுத்தப்பட்டனர்.

    சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளில் ஏற்பட்ட குளறுபடியே பக்தர்களின் அவதிக்கு முக்கியமாக காரணமாக கூறப்படுகிறது. சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு கேரள அரசு மற்றும் தேவசம் போர்டை கேரள ஐகோர்ட்டு வலியுறுத்தியது.

    அதனடிப்படையில் பல்வேறு திட்டங்களை வகுத்தபோதிலும் கூட்ட நெரிசல் ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தநிலையில் இடுக்கியில் நடந்த நவ கேரள சதாஸ் மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்ற கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், சபரிமலை நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இதில் வனத்துறை மந்திரி சுசீந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் தேவஸ்தான தலைவர் பிரசாந்த், கேரள டி.ஜி.பி.ஷேக் தர்வேஷ்சாகிப் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியதாவது:-

    சபரிமலையில் கடந்த 6-ந்தேதி முதல் பக்தர்களின் எண்ணிக்கை தினசரி 88 ஆயிரமாக உயர்ந்தது. இதுதான் கூட்ட நெரிசலுக்கு காரணம். அதன்பிறகு தரிசன நேரம் 18 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு 90 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

    நிலக்கல்லில் நடந்துவரும் உடனடி முன்பதிவை நிறுத்தி வைக்கலாம். தேவைப்பட்டால் மட்டும் உடனடி முன்பதிவை தொடர்ந்து நடத்தலாம். பெண்கள், குழந்தைகளுக்கான தரிசனத்தில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    பம்பை முதல் சன்னிதானம் வரை மலையேறும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உடனுக்குடன் கிடைக்க தேவஸ்தான தலைவர் தலைமையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் பணிகளை ஒருங்கிணைந்த முறையில் செய்ய வேண்டும். பக்தர்கள் பாதிக்காத வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    சபரிமலைக்கு கடந்த ஆண்டைப்போல பக்தர்கள் அதிகளவில் வருகிறார்கள். மெய்நிகர் வரிசையில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக குறைக்கப்பட்டு உள்ளது. உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகள் கூட்ட நெரிசலை குறைக்க உதவும்.

    பக்தர்களின் யாத்திரை அமைதியாக நடந்து வருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது சிறுசிறு பிரச்சனைகள் எழுகின்றன. யாத்ரீகர்கள் சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க தயாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியதாவது:-

    கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் சபரிமலையில் பக்தர்களை கையாளுவதில் குளறுபடிகள் ஏற்பட்டது. அந்த குறுபடிகளை உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. எல்லா வருடமும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம் தான்.

    கூட்டம் அதிகரிக்கும்போது அனைவருக்கும் எல்லாம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. அதனை வரும் ஆண்டுகளில் எப்படி நிவர்த்தி செய்யவேண்டும் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கவும், அவர்களது வாகனங்களை நிறுத்த போதிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    நீதிபதிகள் அனில் நரேந்திரன், கிரிஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்திருப்பதாவது:-

    சபரிமலைக்கு செல்லும் கூட்டம் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வரிசை வளாகத்தில் பக்தர்களின் கூட்டத்தை அனுமதிக்க வேண்டாம். அதனை தினமும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் உள்ள என்.எஸ்.எஸ். தன்னார்வலர்களின் மூலமாக அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் உதவியுடன் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு பரிசீலிக்கும். குழந்தைகள் உள்ளிட்ட யாத்ரீகர்களுக்கு கோவிலில் கூடுதல் வதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    Next Story
    ×