search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சபரிமலையில் தினமும் 90 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க ஐகோர்ட்டு உத்தரவு
    X

    சபரிமலையில் தினமும் 90 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க ஐகோர்ட்டு உத்தரவு

    • ஐகோர்ட்டு உத்தரவுப்படி பக்தர்கள் தரிசன முறையில் பல்வேறு மாற்றங்களை தேவசம்போர்டு எடுத்தது.
    • பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் செல்வதற்கு போலீசாரும் நடவடிக்கை எடுத்தனர்.

    திருவனந்தபுரம்:

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    கோவில் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்தே ஐயப்ப பக்தர்களின் வருகை மிகவும் அதிகமாகவே உள்ளது. தினமும் 70ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தபடி இருந்ததால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இந்த நிலையில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமானது. மெய்நிகர் வரிசை முன்பதிவு மட்டுமின்றி, உடனடி முன்பதிவு செய்தும் ஏராளமானோர் சபரிமலைக்கு வந்ததால் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது.

    இதன் காரணமாக சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் 10 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பம்பை, மரக்கூட்டம், சன்னிதான நடைப்பந்தல் உள்ளிட்ட பல இடங்களில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தே சாமி தரிசனம் செய்ய முடிந்தது.

    இதனால் குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் என பக்தர்கள் அனைவருமே கடும் அவதிக்குள்ளாகினர். தரிசன நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதன் காரணமாகவும், பக்தர்கள் வருகைக்கு தகுந்தாற்போல் செய்ய வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாகவும் நிலக்கல் மற்றும் பம்பையில் பிரச்சனை ஏற்பட்டது. அவதிக்குள்ளான பக்தர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான நிலை நிலவியது.

    இந்த விவகாரத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உடனடியாக தலையிட்டு, சபரிமலை வரக்கூடிய பக்தர்களுக்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் கேரள ஐகோர்ட்டும் ஐயப்ப பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்கவும், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

    மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு நடைமுறைகளையும் ஐகோர்ட்டு தெரிவித்தது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி பக்தர்கள் தரிசன முறையில் பல்வேறு மாற்றங்களை தேவசம்போர்டு எடுத்தது. பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் செல்வதற்கு போலீசாரும் நடவடிக்கை எடுத்தனர்.

    கேரள ஐகோர்ட்டு நேற்று முன்தினம் பல்வேறு வழிமுறைகளை அறிவித்திருந்த நிலையில், மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க கேரள மாநில டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது. நீதிபதிகள் அனில் நரேந்திரன், கிரிஷ் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம் வருமாறு:-

    சபரிமலையில் நிலவும் கூட்ட நெரிசலை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை நாள் ஒன்றுக்கு 90 ஆயிரமாக குறைக்க வேண்டும். மெய்நிகர் வரிசை முன்பதிவு மூலம் 80 ஆயிரம் பேருக்கும், உடனடி புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.

    முன்பதிவு இல்லாதவர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை செல்ல அனுமதிக்கப்படாமல் இருப்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும். சன்னிதானம் மற்றும் பம்பையில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டால், எரிமேலி மற்றும் நிலக்கல் ஆகிய இடங்களில் அறிவிக்க வேண்டும்.

    சபரிமலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் போது அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். உடனடி புக்கிங் மற்றும் மெய்நிகர் வரிசை முன்பதிவு ஆகியவை தினமும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.

    மெய்நிகர் வரிசை முன்பதிவுகளில் குறைப்பு ஏற்பட்டால் அதிகமான பக்தர்களை உடனடி புக்கிங் மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கலாம். தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்களை பம்பையில் இருந்து அனுப்ப வேண்டும். இதற்காக நிலக்கல்லில் இருந்து காலியாக உள்ள பஸ்களை பம்பைக்கு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு தனது உத்தரவில் கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

    இந்தநிலையில் நிலக்கல் மற்றும் பம்பை இடையே கூடுதல் பஸ்கள் இயக்கம், பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் நிறுத்தி அனுப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக சபரிமலையில் நிலவி வந்த கூட்ட நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது.

    இந்த பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுகின்றனர். இதனால் பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் சபரிமலைக்கு செல்கின்றனர். பக்தர்கள் காத்திருக்கும் இடங்களில், அவர்களுக்கு குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×