என் மலர்tooltip icon

    கேரளா

    • சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது.
    • மண்டல பூஜைக்கு பின், மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந்தேதியில் இருந்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து சாமியை தரிசனம் செய்ய நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தபடி உள்ளனர். இதனால் கூட்டம் அலைமோதுகிறது.

    இந்தநிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளனர்.

    தற்போது சன்னிதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் போலீஸ், சி.ஆர்.பி.எப்., வெடிகுண்டு தடுப்பு பிரிவு என பல்வேறு துறைகளை சேர்ந்த 2,150 பேர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மண்டல பூஜையின் போது சபரிமலையில் மட்டும் 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    இந்தநிலையில் சபரிமலையில் 750 பேரின் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. அதற்கு பதிலாக புதிய அதிகாரிகள் பொறுப்பேற்றனர். சன்னிதானம் கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. ராகுல் ஆர்.நாயர் புதிய ராணுவ வீரர்களை வரவேற்றார். அவர் பேசும்போது, அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலில் போலீசார் அதிக முனைப்புடன் செயல்பட வேண்டும். பக்தர்களை மிகுந்த கண்ணியத்துடன் நடத்த வேண்டும். போலீசார் உரிய நேரத்தில் பணிக்கு வருகைதர வேண்டும். தற்போது சபரிமலைக்கு வரும் பக்தர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதால் போலீசாரின் பொறுப்பு அதிகரித்து வருகிறது என்றார்.

    சபரிமலையில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தலைமையில் 10 பிரிவுகளாக 35 இன்ஸ்பெக்டர்கள், 105 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோரின் மேற்பார்வையில் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    சிறப்பு அதிகாரி சுதர்சனன் கூறுகையில், "ஒரு மணி நேரத்திற்கு 4 ஆயிரம் பக்தர்கள் 18-ம் படி ஏறுகிறார்கள். அனைவருக்கும் சாமி தரிசனம் கிடைக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். பக்தர்கள் போலீசாரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்" என்றார்.

    மண்டல பூஜைக்கு பின், மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந் தேதி மகர சங்ரம பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஆகியவை நடைபெறுகிறது.

    • ஒரே நாளில் புதிதாக 111பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
    • ஜெ.என்-1 வகை கொரோனா பரவலால் மக்கள் அச்சப்பட வேண்டாம்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஜெ.என்-1 என்ற வகை கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாநில சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இருந்தபோதிலும் தினமும் ஏராளமானோருக்கு தொற்று பாதித்து வருவதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் கேரளாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 111பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,634 ஆக உயர்ந்திருக்கிறது.

    அதே நேரத்தில் கேரளாவில் தற்போதைய கொரோனா பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகி இருக்கிறார். இந்நிலையில் ஜெ.என்-1 வகை கொரோனா பரவலால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • கேரள மாநில ஆளுநர் பல்கலைக் கழகங்களுக்காக பணிபுரிய வேண்டும்.
    • சர் பரிவார்களுக்காக அல்ல என எஸ்.எஃப்ஐ போராட்டம் நடத்தி வருகிறது.

    கேரளாவில் பினராயி விஜயன் தலைமையான அரசுக்கும் ஆளுநருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் அரசால் நிறைவேற்றப்படும் மசோதாவுக்கு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் ஒப்புதல் வழங்காமல் இருப்பதாக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள் பிரிவான எஸ்.எஃப்.ஐ., துணைவேந்தரான ஆளுநர் பல்கலைக்கழங்களுக்காக பணிபுரிய வேண்டும். சங் பரிவார்களுக்காக அல்ல என போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முதல்வர் என்னை தாக்க சதி செய்கிறார் என ஆளுநர் ஆரிஃப் முகமது கான் குற்றம்சாட்டியிருந்தார்.

    இந்த நிலையில் துணைவேந்தரான ஆளுநர் பல்கலைக்கழங்களுக்காக வேலை செய்ய வேண்டும். சங் பரிவார்களுக்காக அல்ல என்பதை வலியுறுத்தி மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பேனர்கள் வைக்கப்படும் என எஸ்.எஃப்.ஐ. தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில்தான் அரசு சமஸ்கிருத கல்லூரிக்கு வெளியே பேனர் வைத்துள்ளனர். கவர்னர் தங்கியுள்ள பலைக்கலைகழகத்தின் விருந்தினர் மாளிகை அருகிலும் பேனர் வைத்திருந்தனர். அதனை போலீசார் அகற்றினர்.

    நேற்று பேனர் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் அவற்றை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் இங்கு தங்கியிருந்தால் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில பேனர் வைத்திருக்க முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.

    • பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் எந்தவித சிரமமுமின்றி சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது.
    • கடந்த 2 வாரங்களாக கட்டுக்கடங்காமல் இருந்த பக்தர்கள் கூட்டம், நேற்று வெகுவாக குறைந்தது.

    திருவனந்தபுரம்:

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்றுமுதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர்.

    இதனால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. சாமி தரிசனத்துக்கு 10 மணி நேரத்திற்கும் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருந்ததால் நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது.

    பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் எந்தவித சிரமமுமின்றி சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது. ஐகோர்ட் கூறிய அறிவுறுத்தல்களின் படி கூட்ட நெரிசலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து சபரிமலையில் நிலவிய கூட்ட நெரிசல் கட்டுக்குள் வந்தது.

    இந்தநிலையில் கேரளாவில் பத்தினம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. சபரிமலை வனப்பகுதியிலும் கனமழை கொட்டியது. இதன் காரணமாக பக்தர்கள் வருகை நேற்று குறைந்தது. கடந்த 2 வாரங்களாக கட்டுக்கடங்காமல் இருந்த பக்தர்கள் கூட்டம், நேற்று வெகுவாக குறைந்தது.

    நேற்று மெய்நிகர் வரிசை மற்றும் உடனடி முன்பதிவு மூலமாக 51,638 பக்தர்களும், புல்மேடு வழியாக வந்த 2,104 பக்தர்களும் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்ததால், அவர்கள் கூட்ட நெரிசலின்று தரிசனம் செய்தனர்.

    மேலும் சபரிமலைக்கு வரக்கூடிய குழந்தைகள் நெரிசலில் சிக்காமல் தரிசனம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக சிறப்பு வாயில் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வழியில் சென்று குழந்தைகள் நெரிசல் இல்லாமல் சாமி தரிசனம் செய்தார்கள்.

    குழந்தைகளுடன் அவர்களது பெற்றோரும் தரிசனத்துக்கு உடன் அனுப்பப்பட்டனர். இந்த முறையை பக்தர்கள் யாரும் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என்பதை கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கேரளாவில், மரபணு வரிசைப்படுத்தல் பரிசோதனை மூலம் இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
    • இணைநோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    பத்தனம்திட்டா:

    கேரளாவில், புதிதாக உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், பத்தனம்திட்டாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதியவகை கொரோனா குறித்து கேரள மக்கள் கவலைப்பட தேவையில்லை. இது இப்போதுதான் இங்கு கண்டறியப்பட்டுள்ளது.

    ஆனால் சில மாதங்களுக்கு முன்பே சிங்கப்பூர் விமான நிலையத்தில் சில இந்தியர்களிடம் காணப்பட்டது.

    கேரளாவில், மரபணு வரிசைப்படுத்தல் பரிசோதனை மூலம் இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

    நாட்டின் மற்ற பகுதிகளிலும் இந்த புதியவகை கொரோனா இருக்கிறது. இதுபற்றி கவலைப்பட வேண்டாம். நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. நமது சுகாதார கட்டமைப்பு பலமாக உள்ளது.அதே சமயத்தில், பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். குறிப்பாக, இணைநோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    • மிகக்குறைவான தூரத்தில் நடந்து சென்று திரும்பி விடுவதால் இந்த பாதையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    சபரிமலை ஐயப்பன்கோவிலுக்கு தமிழகம், வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருகின்றனர்.

    கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நிலக்கல், பம்பை, சன்னிதானம் என அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    திடீரென அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவசம் போர்டு, கேரள போலீசார் திணறி வருகின்றனர். சபரிமலைக்கு எரிமேலி, நிலக்கல், பம்பை வழியாக ஒரு பாதையும், எரிமேலியில் இருந்து அலுதாநதி, காளைகட்டி, கல்லிடம்குன்று வழியாக நடைபாதையும், வண்டிபெரியாறு வல்லக்கடவு, புல்மேடு, சத்திரம் வழியாக ஒரு பாதையும் என 3 பாதைகள் உள்ளன.

    பம்பையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் புல்மேடு வழியாக நடந்து செல்ல பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து கடந்த 2 நாட்களாக சத்திரம், புல்மேடு வழியாக அதிகளவு பக்தர்கள் நடந்து செல்கின்றனர். குமுளி, வண்டிபெரியாறில் இருந்து சுமார் 14 கி.மீ தூரத்திற்கு ஜீப்வசதி உள்ளது. அங்கிருந்து 6 கி.மீ வனப்பகுதியில் நடந்து சென்றால் சபரிமலை சன்னிதானத்தை அடைந்து விடலாம்.

    மிகக்குறைவான தூரத்தில் நடந்து சென்று திரும்பி விடுவதால் இந்த பாதையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. 

    • எவரெஸ்ட், தெனாலி (வட அமெரிக்கா), கிளிமாஞ்சாரோ (ஆப்பிரிக்கா), எல்ப்ரஸ் (ஐரோப்பா) ஆகிய சிகரங்களில் ஏறி கொடி நாட்டி உள்ளார்.
    • முற்றிலும் பனி சூழ்ந்திருக்கும் அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான சிகரமான வின்சனில் ஏற முடிவு செய்தார்.

    கேரளாவை சேர்ந்த ஷேக் ஹசன்கான் மாநில அரசில் பணியாற்றி வருகிறார். இவர் தனது ஓய்வு நாட்களில் உலகின் மிக உயர்ந்த மலை சிகரங்களில் ஏறி சாதனை படைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

    அந்தவகையில் எவரெஸ்ட், தெனாலி (வட அமெரிக்கா), கிளிமாஞ்சாரோ (ஆப்பிரிக்கா), எல்ப்ரஸ் (ஐரோப்பா) ஆகிய சிகரங்களில் ஏறி கொடி நாட்டி உள்ளார்.

    இதன் தொடர்ச்சியாக முற்றிலும் பனி சூழ்ந்திருக்கும் அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான சிகரமான வின்சனில் ஏற முடிவு செய்தார். இதற்காக அங்கு சென்ற ஷேக் ஹசன்கான், கடும் சவால்களை கடந்து வின்சன் சிகரத்தில் ஏறி இந்திய கொடியை பறக்க விட்டுள்ளார்.

    உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் வின்சன் சிகரத்தில் இந்திய கொடியை பறக்கவிட்டு நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள ஷேக் ஹசன்கானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    • 1980ல் தனது முதல் படத்தில் வில்லனாக அறிமுகமானவர் மோகன்லால்
    • எனது படங்கள் அனைத்தும் ஒரு கூட்டு முயற்சி என்றார் மோகன்லால்

    மலையாள திரைப்பட உலகின் முடிசூடா மன்னர்களாக விளங்குபவர்கள், மோகன்லால் மற்றும் மம்முட்டி.

    ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதிலும், இயக்குனர்களின் பணியில் தலையிடாமல் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவதிலும் மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் திறன் படைத்தவர்கள். இதனால், இவர்கள் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறும் போது அவை மிக பெரிய வெற்றியாகவும் பிற மொழி தயாரிப்பாளர்களும், நடிகர்களும் அவற்றின் உரிமத்தை வாங்கி தங்கள் மொழிகளில் எடுக்க விரும்புவதும் தொடர்கதையாகி வருகிறது.

    1980ல் வில்லனாக அறிமுகமாகி, இணை ஹீரோவாக பல படங்களில் நடித்து, பின் கதாநாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்து பல வெற்றிப்படங்களை தந்து கொண்டிருப்பவர் மோகன்லால்.


    ஜீது ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் 2013ல் மலையாளத்தில் வெளி வந்து வசூலில் சக்கை போடு போட்ட "த்ரிஷ்யம்", தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு அந்தந்த மொழிகளில் வசூலை அள்ளி குவித்தது.


    2021ல் இதே போல் இவர்கள் இணைந்து உருவாக்கிய "த்ரிஷ்யம் 2" திரைப்படமும் வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

    மீண்டும் இந்த வெற்றி கூட்டணியில் உருவாகியுள்ள "நெரு" திரைப்படம் 21 அன்று ரிலீஸ் ஆகிறது.

    "எனது படங்களின் வெற்றி ஒரு கூட்டு முயற்சி. அதில் எனது தனிப்பட்ட பங்கு என எதுவும் இல்லை. எதிர்மறை விமர்சனங்களை நான் பொருட்படுத்துவதே இல்லை. விமர்சனங்களால் எனது நீண்ட 46-ஆண்டு கால திரைப்பயணத்தை பின்னுக்கு தள்ளி விட முடியாது" என விமர்சனங்களை குறித்து மோகன்லால் கருத்து தெரிவித்தார்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மோகன்லால் தோன்றுவதால் இப்படம் அவரது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

    • சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு முறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    • சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் காணப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு முறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மெய்நிகர் வரிசை மூலம் தினமும் 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் நிலையில், உடனடி முன்பதிவு மூலமாகவும் ஆயிரக்கணக்கானோர் பதிவு செய்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதனால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் காணப்பட்டது. கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரண்டதால் சபரிமலையில் கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    கூட்டநெரிசலை தவிர்க்க கேரள ஐகோர்ட்டு பல்வேறு அறிவுரைகளை வழங்கியது. அதன் அடிப்படையில் தேவசம்போர்டு மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனால் தற்போது சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    சபரிமலையில் இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிக அளவில் இருப்பதாக கூறப்பட்டாலும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைவானதே என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தில் தற்போதைய காலகட்டத்தில் 19 லட்சத்து 9 ஆயிரத்து 241 பேர் சபரிமலைக்கு வந்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு நடை திறக்கப்பட்டு 28 நாட்கள் ஆன நிலையில் 17 லட்சத்து 56 ஆயிரத்து 730 பக்தர்களே வந்திருக்கின்றனர்.

    இதே போல் வருவாயும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குறைவாகவே இருக்கிறது. அப்பம் மற்றும் அரவணை பிரசாத விற்பனை, உண்டியல் வருமானம் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு ரூ154.77 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    ஆனால் இந்த ஆண்டு அந்த வருவாய் ரூ134.44 கோடியே கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வருவாய் ரூ.20கோடி குறைந்திருக்கிறது. தற்போது கூட்டநெரிசலை தவிர்க்கும் நடவடிக்கையாக மெய் நிகர் வரிசை முன்பதிவு எண்ணிக்கை 90 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக பக்தர்கள் வருகை குறைந்திருக்கிறது. இதனால் வருவாய் மேலும் குறையும் என்று கூறப்படுகிறது.

    • பலியானவர்களின் 5 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மஞ்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • விபத்தில் பலியான தஸ்னிமா ஐக்கிய அரபு நாட்டில் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே உள்ள குட்டிப்பாறை பகுதியை சேர்ந்த 7 பேர் நேற்று மாலை ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அந்த ஆட்டோவை அப்துல் மஜித்(வயது55) என்பவர் ஓட்டிச்சென்றார்.

    அவர்களது ஆட்டோ செட்டியங்காடு என்ற பகுதியில் சென்ற போது, எதிரே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வந்த பஸ் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலுமாக நொறுங்கியது.

    இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் அப்துல் மஜித், தஸ்னிமா(33), அவரது குழந்தைகள் ரின்ஷா பாத்திமா(12), ரைஹா பாத்திமா(4), சகோதரி முஹ்சினா(35) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    ஆட்டோவில் இருந்த மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆட்டோவில் சிக்கிக் கிடந்தவர்களை மீட்டனர்.

    பின்பு படுகாயம் அடைந்தவர்கள் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பலியானவர்களின் 5 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மஞ்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பஸ்சில் வந்த ஐயப்ப பக்தர்கள் யாரும் காயம் அடையவில்லை. சாலை திருப்பத்தில் பஸ் வேகமாக திரும்பிய போது தவறுதலாக ஆட்டோ மீது மோதியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் விபத்தில் பலியானவர்கள் பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன. பலியான ஆட்டோ டிரைவர் அப்துல் மஜித் தனது மகளுக்கு திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், மகள் திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

    இதே போல் விபத்தில் பலியான தஸ்னிமா ஐக்கிய அரபு நாட்டில் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். அப்போது புல்லூரில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக சென்ற போது தனது 2 குழந்தைகள் மற்றும் சகோதரியுடன் பலியாகிவிட்டார்.

    இந்த விபத்து பலியானவர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி, விபத்து நடந்த பகுதியைச் சேர்ந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • புலியை தேடும் பணியில் 80 பேர் அடங்கிய வனத்துறையினர் ஈடுபட்டனர்.
    • புலி தென்பட்டால் மயக்க மருந்து செலுத்தி புலியை பிடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே உள்ள மூடக்கொல்லி பகுதியை சேர்ந்த விவசாயி பிரஜீஷ் (வயது36) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புல் அறுக்க வனத்துறையொட்டி உள்ள பகுதிக்கு சென்றார். அப்போது அவரை ஒரு புலி அடித்து கொன்று சாப்பிட்டது.

    இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்தது மட்டுமின்றி, பீதியையும் ஏற்படுத்தியது. விவசாயியை கொன்று தின்ற புலியை சுட்டு கொல்ல அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அந்த புலியை கண்டுபிடிக்கும் பணியில் வனத்துறையினர் களம் இறங்கினர்.

    புலி நடமாட்டத்தை கண்டறிய வனப்பகுதியில் பல இடங்களில் 25-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் வைக்கப்பட்டன. மேலும் புலியை சிக்க வைக்க கூண்டுகளும் அமைக்கப்பட்டன. புலியை தேடும் பணியில் 80 பேர் அடங்கிய வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    இருந்த போதிலும் இதுவரை அந்த புலி சிக்கவில்லை. வனத்துறை குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் விவசாயியை பிரஜீசை கொன்ற புலி 13 வயதுடைய ஆண் புலி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த புலியைப்பற்றிய தகவல்களின் அடிப்படையில் அதனை பிடிக்க வனத்துறையினர் வியூகம் வகுத்து வருகின்றனர்.

    விவசாயியை கொன்ற ஆள்கொல்லி புலியை கண்டுபிடிக்கும் பணிக்காக திணைக்களம் முத்தங்கா பகுதியில் இருந்து விக்ரம் மற்றும் பரத் ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவற்றை கொண்டு புலியை தேடும் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது புலி தென்பட்டால் மயக்க மருந்து செலுத்தி புலியை பிடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுப்பது முந்தைய காலம், தற்போதைய காலம் என்று பிரிக்க முடியாத அளவுக்கே தற்போதைய மாணவர்களும் உள்ளனர்.
    • தனது தொழிலில் தனித்துவத்துடன் இருக்கக்கூடிய ஆசிரியர்கள், அனைத்து மாணவர்களின் மனதையும் கொள்ளை கொண்டு விடுகின்றனர்.

    கல்வி என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்றாகும். அது ஒருவரை நல்வழிப்படுத்துவது மட்டுமின்றி, எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் தருவதாக இருக்கிறது. அப்படிப்பட்ட கல்வியை போதிக்கும் ஆசிரியர்கள் போற்றத்தக்கவர்கள் ஆவர்.

    உயர்ந்தவன் தாழ்ந்தவன், வசதி படைத்தவன் வசதி இல்லாதவன் என அவர்கள் எதையும் பார்க்காமல் மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை கற்பித்து கொடுக்கிறார்கள். இதன் மூலம் ஒருவருக்கு சிறப்பான எதிர்காலத்தை கொடுப்பதே ஆசிரியர்கள் தான் என்றே கூறலாம்.

    இதனால் ஒருவர் யாரை மறந்தாலும் தனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களை மறப்பதில்லை. தாய்-தந்தை அடுத்தபடியாக ஆசிரியரை கூறுகிறார்கள். 2000-ம் ஆண்டுக்கு முந்தைய காலக்கட்டத்தை சேர்ந்தவர்கள் ஆசிரியர்களை தெய்வமாகவே மதித்தார்கள் என்று கூறலாம்.

    ஆசிரியர்களில் பலர் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது மட்டுமின்றி, நல்லது-கெட்டது, எதிர்காலத்துக்கு அவசியமானது என அனைத்தையும் சொல்லிக் கொடுத்து அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகவும் விளங்குகின்றனர் என்றால் மிகையல்ல. அப்படிப்பட்ட ஆசிரியர்களை யாரும் மறந்து விட முடியாது.

    நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத முந்தைய காலக்கட்டங்களில் படித்தவர்கள், தற்போது நடத்தும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் உடன் படித்த மாணவர்கள் மட்டுமின்றி, தங்களுக்கு கல்வியறிவை கொடுத்த ஆசிரியர்களை கவுரவிப்பதை காண முடிகிறது.

    ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுப்பது முந்தைய காலம், தற்போதைய காலம் என்று பிரிக்க முடியாத அளவுக்கே தற்போதைய மாணவர்களும் உள்ளனர். தனது தொழிலில் தனித்துவத்துடன் இருக்கக்கூடிய ஆசிரியர்கள், அனைத்து மாணவர்களின் மனதையும் கொள்ளை கொண்டு விடுகின்றனர்.

    அவர்களுக்கு தனது தாய்-தந்தைக்கு செய்வதைப் போன்று அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள். அப்படித்தான் கேரளாவில் கண் பார்வையற்ற ஒரு ஆசிரியருக்கு பஸ்சில் இருந்து இறங்கி பள்ளிக்கு வருவதற்கு, வகுப்பறைக்கு செல்வதற்கு என அனைத்து இடங்களுக்கும் கையை பிடித்து அழைத்துச் சென்று மாணவிகள் உதவி வருகிறார்கள்.

    கண் பார்வையற்ற ஆசிரியருக்கு உதவும் மாணவிகள் பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி கருக்குட்டி எடக்கன்னு பகுதியை சேர்ந்தவர் வேலாயுதன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயதில் இருந்தே படிப்பில் ஆர்வம் மிக்கவராக இருந்துள்ளார். இந்த நிலையில் தனது எட்டாவது வயதில் கண் பார்வையை முற்றிலும் இழந்தார்.

    கண் பார்வையை இழந்தாலும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் வேலாயுதன். அவர் கோட்டயத்தில் உள்ள பார்வையற்றோருக்கான பள்ளியில் தனது படிப்பை தொடர்ந்தார். அங்கு கண் பார்வையற்றோருக்கான பிரெய்லி முறையில் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டார்.

    பின்பு திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த அவர், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து சிறப்பாக படித்த அவர், ஆசிரியர் பணியில் சேருவதை இலக்காக நிர்ணயித்தார்.

    இதற்காக திருச்சூர் கேரள வர்மா கல்லூரியில் எம்.ஏ. படிப்பை முடித்தார். பின்பு பாலக்காடு மாவட்டம் ஒட்டப்பாலம் என்.எஸ்.எஸ். கல்லூரியில் பி.எட். படிப்பை முடித்தார். அதன் பிறகு வேலாயுதன் ஆசிரியர் பணிக்காக பல தனியார் பள்ளிகளின் கதவை தட்டினார்.

    ஆனால் யாரும் அவருக்கு வேலைகொடுக்க தயாராக இல்லை. இதனால் வேலாயுதன் வாழ்வாதாரத்திற்காக லாட்டரி சீட்டு விற்க தொடங்கினார். 11 ஆண்டுகளாக லாட்டரி விற்கும் தொழிலிலேயே ஈடுபட்டு வந்தார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வந்தார்.

    அதன் பிறகு அட்டப்பாடியில் உள்ள ஒரு பள்ளியில் பாடம் எடுக்கும் வாய்ப்பு வேலாயுதனுக்கு கிடைத்தது. அங்கு சில நாட்கள் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்திய அவர் மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டார்.

    இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு உயர் நிலை ப்பள்ளி உதவியாளர் தரவரிசை பட்டியலில் வேலாயுதன் முதல் இடத்தை பிடித்தார். இதன்மூலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா முப்பத்தடம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார். அங்கு சமூக அறிவியல் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

    அங்கமாலியில் தங்கி இருந்த அவர், முப்பத்தடம் அரசு பள்ளிக்கு தினமும் ஒன்றரை மணி நேரம் பயணித்து வர வேண்டி இருந்தது. பார்வையற்றவரான அவருக்கு அந்த பயணம் மிகவும் சவாலாக இருந்தது. இதனால் தனது ஊருக்கு அருகில் உள்ள பள்ளியில் பணிபுரிய விரும்பினார்.

    அதற்கு தகுந்தாற் போல் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அவர் பணி மாறுதல் பெற்றார். கண் பார்வையற்றவராக இருந்தாலும் அவர் பாடம் எடுக்கும் முறை பெரும்பாவூர் பள்ளி மாணவிகளுக்கு மிகவும் பிடித்து விட்டது.

    இதனால் மாணவிகளுக்கு பிடித்த ஆசிரியராக வேலாயுதன் மாறிவிட்டார். கண் பார்வையற்ற அவருக்கு, தங்களின் தாய்-தந்தைக்கு செய்வது போன்று அனைத்து உதவிகளையும் செய்ய மாணவிகள் ஆர்வமுடன் முன் வந்தனர்.

    தினமும் காலையில் தனது ஊரிலிருந்து பஸ்ஸில் பள்ளிக்கு வரும் அவரை, பஸ் நிறுத்தத்தில் இருந்து பள்ளி வரை மாணவிகள் கையை பிடித்து அழைத்து வருகிறார்கள். பின்பு மாலையில் பள்ளி முடிந்ததும் பள்ளியில் இருந்து பஸ் நிறுத்தத்திற்கும் கையை பிடித்து அழைத்துச் சென்று பஸ்சில் ஏறிச் செல்ல உதவுகிறார்கள்.

    அதுமட்டுமின்றி பள்ளியில் இருக்கும்போது பணியாளர் அறையில் இருந்து வகுப்பறைக்கும் கையை பிடித்து அழைத்துச் சென்று உதவி செய்கிறார்கள். கண் பார்வையில்லாத ஆசிரியர் வேலாயுதனுக்கு, அவரிடம் படிக்கும் மாணவிகளே கண்களாக இருந்து வழிகாட்டியாக இருக்கிறார்கள்.

    இது பற்றி ஆசிரியர் வேலாயுதன் கூறும்போது, குழந்தைகள் என்னிடம் ஈடு இணையற்ற அன்பை கொடுக்கிறார்கள் என்று கூறினார். ஆசிரியர் வேலாயுதன் பற்றி மாணவிகள் கூறும்போது, மிகவும் அமைதியானவர். நன்கு பாடம் எடுப்பார். பாட்டும் பாடுவார். இதனால் அவரை எங்களுக்கு பிடிக்கும் என்றனர்.

    பார்வையற்ற ஆசிரியருக்கு மாணவிகள் செய்யும் இந்த சேவையை அதே பள்ளியில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் மட்டுமின்றி பெரும்பாவூர் பகுதியை சேர்ந்த பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

    மாணவிகளுக்கு பிடித்த ஆசிரியராக வேலாயுதன் உள்ளார். இதனால் அவரிடம் படிக்கும் மாணவிகள், கண் பார்வையில்லாத வேலாயுதனின் கண்களாக உள்ளனர் என்பதே மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.

    ×