search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலையில் 2,700 போலீசார் குவிப்பு
    X

    சபரிமலை சன்னிதானத்தில் ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களை காணலாம்.

    மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலையில் 2,700 போலீசார் குவிப்பு

    • சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது.
    • மண்டல பூஜைக்கு பின், மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந்தேதியில் இருந்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து சாமியை தரிசனம் செய்ய நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தபடி உள்ளனர். இதனால் கூட்டம் அலைமோதுகிறது.

    இந்தநிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளனர்.

    தற்போது சன்னிதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் போலீஸ், சி.ஆர்.பி.எப்., வெடிகுண்டு தடுப்பு பிரிவு என பல்வேறு துறைகளை சேர்ந்த 2,150 பேர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மண்டல பூஜையின் போது சபரிமலையில் மட்டும் 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    இந்தநிலையில் சபரிமலையில் 750 பேரின் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. அதற்கு பதிலாக புதிய அதிகாரிகள் பொறுப்பேற்றனர். சன்னிதானம் கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. ராகுல் ஆர்.நாயர் புதிய ராணுவ வீரர்களை வரவேற்றார். அவர் பேசும்போது, அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலில் போலீசார் அதிக முனைப்புடன் செயல்பட வேண்டும். பக்தர்களை மிகுந்த கண்ணியத்துடன் நடத்த வேண்டும். போலீசார் உரிய நேரத்தில் பணிக்கு வருகைதர வேண்டும். தற்போது சபரிமலைக்கு வரும் பக்தர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதால் போலீசாரின் பொறுப்பு அதிகரித்து வருகிறது என்றார்.

    சபரிமலையில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தலைமையில் 10 பிரிவுகளாக 35 இன்ஸ்பெக்டர்கள், 105 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோரின் மேற்பார்வையில் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    சிறப்பு அதிகாரி சுதர்சனன் கூறுகையில், "ஒரு மணி நேரத்திற்கு 4 ஆயிரம் பக்தர்கள் 18-ம் படி ஏறுகிறார்கள். அனைவருக்கும் சாமி தரிசனம் கிடைக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். பக்தர்கள் போலீசாரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்" என்றார்.

    மண்டல பூஜைக்கு பின், மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந் தேதி மகர சங்ரம பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஆகியவை நடைபெறுகிறது.

    Next Story
    ×