என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • அணை கட்டும் பட்சத்தில் பாதிக்கப்படும் வனப்பகுதி நிலத்திற்கு மாற்று இடம் வழங்கும் பணியை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது.
    • 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் வனப்பகுதி நிலம் அழிக்கப்படுவதை காரணம் காட்டி சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்காமல் இருந்து வருகிறது.

    பெங்களூரு:

    காவிரி நதிநீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. அதாவது ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே தான் இந்த புதிய அணைகட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்காக ரூ.9 ஆயிரம் கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்துள்ளது.

    மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்கு மத்திய அரசும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி வழங்காமல் இருந்து வந்தாலும், தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி அணைகட்டும் திட்டத்திற்கான முன்னேற்பு பணிகளில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் வனப்பகுதி நிலம் அழிக்கப்படுவதை காரணம் காட்டி சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்காமல் இருந்து வருகிறது.

    இதனால் அணை கட்டும் பட்சத்தில் பாதிக்கப்படும் வனப்பகுதி நிலத்திற்கு மாற்று இடம் வழங்கும் பணியை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. அதாவது அணைக்காக கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு நிகராக 3 மாவட்டங்களில் மாற்று இடங்களை கர்நாடக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். அதன்படி, சாம்ராஜ்நகர், மண்டியா மற்றும் ராமநகர் மாவட்டத்தில் 7,404.62 ஏக்கர் நிலத்தை கர்நாடக அரசு தேர்வு செய்துள்ளது.

    இதன்மூலம் 5 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி அழிக்கப்பட்டாலும், அதற்கு மேலாக 7,404 ஏக்கர் நிலம் வனப்பகுதியாக மாற்றப்படும் என்றும், அதனால் சுற்றுச்சூழலுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்பதை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தெரிவிக்கவும், மேகதாதுவில் அணைகட்டுவதற்கு அனுமதி பெறுவதற்கும் கர்நாடக அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

    இதுபற்றி கர்நாடக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத பட்சத்திலும், மாற்று நிலத்தை வழங்க சத்தமில்லாமல் மேகதாது அணை திட்ட முன்னேற்பாட்டு பணிகளை மும்முரமாக்கி உள்ளது தெரியவந்துள்ளது. இது மேகதாது அண திட்டத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 4-2 என பெங்களூரு எப்.சி அணி வென்றது.
    • பெங்களூரு எப்.சி. அணியின் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்தார்.

    பெங்களூரு:

    13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இதில் பெங்களூருவில் நேற்று நடந்த லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, பெங்களூரு எப்.சி அணியுடன் மோதியது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், பெங்களூரு எப்.சி. அணியின் நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி ஐ.எஸ்.எல். தொடரில் ஹாட்ரிக் கோல் அடித்த வயதான வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

    இதன்மூலம் ஐதராபாத் எப்.சி. அணிக்காக 38 வயதில் ஹாட்ரிக் கோல் அடித்த நைஜீரிய வீரர் பார்தோலோமிவ் ஓக்பெச்சேவின் சாதனையை சுனில் சேத்ரி முறியடித்துள்ளார்.

    சுனில் சேத்ரியின் சமீபத்திய ஹாட்ரிக் ஐஎஸ்எல்லில் அவரது மூன்றாவது ஹாட்ரிக் ஆகும். இதற்கு முன் 2015ல் மும்பை சிட்டி எப்.சி.க்காகவும், 2018ல் பெங்களூரு எப்.சி.க்காகவும் ஹாட்ரிக் அடித்துள்ளார்.

    • மோகன்குமார் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து ரூ.80 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சாமராஜ்பேட்டை தேவன ஹள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 19 வயது சிறுமி ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு படித்து வந்தார். அப்போது மோகன்குமார் என்ற வாலிபருடன் அந்த மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து மோகன்குமார் அந்த பெண்ணை பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாவுக்கு அழைத்து சென்றார்.

    மேலும் மோகன்குமார், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய பெண்ணை, மோகன்குமார் அடிக்கடி வெளியே அழைத்து சென்று உல்லாசமாக இருந்து உள்ளார்.

    அப்போது மோகன்குமார், அந்த பெண்ணுக்கு தெரியாமல் உல்லாச காட்சிகளை செல்போனில் ரகசியமாக எடுத்து உள்ளார். ஒரு கட்டத்தில் மோகன்குமார், அந்த பெண்ணிடம் உனது உல்லாச காட்சிகள் என்னிடம் இருக்கிறது. நீ எனக்கு பணம் தராவிட்டால் அந்த ஆபாச காட்சிகளை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மோகன்குமார் கேட்கும் போதெல்லாம் பணத்தை கொடுத்து உள்ளார். மேலும்தொடர்ந்து அந்த பெண்ணை மிரட்டி விலை உயர்ந்த கடிகாரங்கள், நகைகள், இருசக்கர வாகனம், கார் ஆகியவற்றை வாங்கி மோகன்குமார் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

    ஆனாலும் மோகன்குமார் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் இந்த விவகாரம் குறித்து தைரியமாக போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்ட ஒரு வங்கி கணக்குக்கு பல்வேறு முறை பணத்தை அனுப்பியதும், அந்த கணக்கில் இருந்து மோகன்குமாரின் வங்கி கணக்குக்கு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோகன்குமாரை கைது செய்தனர். இது குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த் கூறியதாவது:-

    காதலிக்கிறேன் என்று கூறி மோகன் குமார் இளம் பெண்ணை ஏமாற்றி அவரிடம் ஒன்றாக இருந்த வீடியோக்களை காட்டி மிரட்டி இதுவரை ரூ. 2 கோடியே 57 லட்சத்தை பறித்து உள்ளார். தொடர்ந்து அவர் பணம் கேட்டு மிரட்டியதால் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மோகன்குமார் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து ரூ.80 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்போது வந்தே பாரத் ரெயில் பெங்களூரு-சென்னை இடையே 4 மணி நேரம் 20 நிமிடம் பயண நேரமாகும்.
    • இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூரு- தமிழகத்தின் தலைநகர் சென்னை இடையே தினமும் 30-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் முக்கியமானது மைசூரு-பெங்களூரு வந்தேபாரத் ரெயில், சதாப்தி ரெயில் ஆகும்.

    இந்த நிலையில் பெங்களூரு-சென்னை இடையே இயக்கப்படும் சதாப்தி ரெயில்களின் வேகத்தை மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்தது. அதன்படி பெங்களூரு-ஜோலார்பேட்டை இடையேயான வழித்தடத்தில் 130 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கி நேற்று முன்தினம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    அதாவது, பெங்களூரு சிட்டி (கிராந்தி வீராசங்கொள்ளி ராயண்ணா) ரெயில் நிலையத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்ட ரெயில் ஜோலார்பேட்டையை காலை 9.28 மணிக்கு சென்றடைந்தது. பின்னர் ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்ட ரெயில் மாலை 4.30 மணிக்கு பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    தற்போது வந்தே பாரத் ரெயில் பெங்களூரு-சென்னை இடையே 4 மணி நேரம் 20 நிமிடம் பயண நேரமாகும். அதுபோல் சதாப்தி ரெயில் பயண நேரம் 4 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆகும். ரெயில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் பட்சத்தில் வந்தே பாரத் மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்களின் பயண நேரம் சுமார் 20 நிமிடங்கள் முதல் 25 நிமிடங்கள் குறையும் என்றும், விரைவில் இந்த ரெயில்களின் வேகம் அதிகரித்து இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சோம்நாத்சித்ரி ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.70 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை பணத்தை இழந்ததாக பெற்றோர் புகார் செய்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டம் பால்கி தாலுகா டோனகாபூர் கிராமத்தை சேர்ந்தவர் சோம்நாத்சித்ரி (23). இவர் கலபுரகி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. இறுதியாண்டு நர்சிங் படித்து வந்தார். இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட சோம்நாத் சித்ரி 4 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கடன் வாங்கி ஆன்லைனில் சூதாடினார்.

    ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 80 லட்சம் வரை இழந்த அவரிடம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டனர். இதனால் விரக்தி அடைந்த அவர் தான் தங்கி இருந்த விடுதியில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தெரியவந்ததும் கலபுரகி நகர போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கலபுரகி போலீஸ் கமிஷனர் ஷரணப்பா கூறும் போது, சோம்நாத்சித்ரி ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.70 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை பணத்தை இழந்ததாக பெற்றோர் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

    • பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சந்திரா அடைக்கப்பட்டார்.
    • 10 ஆண்டுகளாக அவர் ஆயுள் தண்டனை கைதியாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

    பொதுவாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறை தண்டனை அனுபவிக்கும் கைதிகள் தங்களது குடும்பத்தினர் உயிரிழப்பு, மகன், மகளின் திருமணத்திற்காகவும், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாலும் பரோல் கேட்பது வழக்கம். அதன்படி, கோர்ட்டுகளும் கைதிகளுக்கு பரோலில் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு அனுமதி வழங்கும்.

    இந்த நிலையில், கர்நாடக ஐகோர்ட் விவசாயம் செய்வதற்காக ஆயுள் தண்டனை கைதிக்கு 3 மாதம் பரோல் வழங்கி உள்ளது. அதாவது ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா சித்ததேவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா (வயது 36). இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. அந்த கள்ளத்தொடர்புக்கு இடையூறாக பெண்ணின் கணவர் இருந்துள்ளார்.

    இதையடுத்து, அந்த பெண்ணின் கணவரை சந்திரா கொலை செய்திருந்தார். இந்த கொலை வழக்கில் ராமநகர் மாவட்டம் கனகபுரா கூடுதல் செசன்சு கோர்ட்டு, கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி சந்திராவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறி இருந்தது. இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சந்திரா அடைக்கப்பட்டார். 10 ஆண்டுகளாக அவர் ஆயுள் தண்டனை கைதியாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

    இதற்கிடையில், கனகபுராவில் தனது தந்தை பெயரில் இருக்கும் நிலத்தில் விவசாயம் செய்யப் போவதாகவும், அதற்காக தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று கோரி சந்திரா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அவர் கடந்த 10 ஆண்டுகளாக சிறையில் இருந்து பரோலில் வெளியே வரவில்லை என்பதையும் மனுவில் சந்திரா குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட் நீதிபதி ஹேமந்த் சந்தனகவுடர் முன்னிலையில் நடைபெற்று வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சந்திரா கடந்த 10 ஆண்டுகளாக பரோலில் வெளியே வராமல் இருப்பதை கருத்தில் கொண்டும், தந்தைக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று நினைப்பதாலும், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இந்த 90 நாட்களில் விவசாய பணிகளை மட்டுமே சந்திரா மேற்கொள்ள வேண்டும் என்றும், வேறு எந்த விதமான சட்டவிரோத செயல்களிலும், குற்றங்களிலும் ஈடுபடக்கூடாது என்றும் நீதிபதி ஹேமந்த் சந்தனகவுடர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

    • கன்னடம் பேசும் பெண்ணை சவாரிக்கு ஏற்றி செல்வது போன்று காட்சிகள் உள்ளன.
    • வைரலான இந்த வீடியோ 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.

    பெங்களூருவில் ஆட்டோ டிரைவர்களின் செயல்கள் குறித்து சமூக வலைதளங்களில் அடிக்கடி வீடியோக்கள் வெளியாவது உண்டு. அது போன்று ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதில், பெங்களூருவில் 2 பெண்கள் தனித்தனியாக ஆட்டோ சவாரிக்காக ஏற முயற்சிக்கிறார்கள்.

    அதில் ஒரு பெண் இந்தி பேசுகிறார். மற்றொருவர் கன்னடம் பேசுகிறார். இந்தி பேசும் பெண்ணிடம் குறிப்பிட்ட தூரத்திற்கு ஆட்டோ டிரைவர் ரூ.300 கட்டணம் கேட்கிறார். ஆனால் கன்னடம் பேசும் பெண்ணிடம் அதே தூரத்திற்கு ரூ.200 மட்டும் கேட்கிறார். இதே போல ஒரு ஆட்டோ டிரைவரை இந்தி பேசும் பெண் அணுகிய போது, டிரைவர் அவரை அலட்சியப்படுத்துகிறார். ஆனால் கன்னடம் பேசும் பெண்ணை சவாரிக்கு ஏற்றி செல்வது போன்று காட்சிகள் உள்ளன.

    வைரலான இந்த வீடியோ 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. ஒரு பயனர், நீங்கள் ஐதராபாத் வாருங்கள். இங்கு யாரும் எந்த மொழியையும் கற்பதற்காக உங்களை வற்புறுத்த மாட்டார்கள். ஆட்டோ டிரைவர்கள் அவர்கள் வேலையை செய்வார்கள் என பதிவிட்டுள்ளார். மற்றொருவர், நாம் அனைவரும் முதலில் இந்தியர்கள். ஒவ்வொரு மொழியையும் மதிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். இதே போன்று பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட இந்த வீடியோ விவாதத்தை தூண்டியது.



    • மைசூருவில் உள்ள கர்நாடக போலீஸ் அகாடமியில் பயிற்சியை முடித்தார்
    • 'பல வருட கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும் போது இப்படி நடந்திருக்கக் கூடாது'

    யுபிஎஸ்சி தேர்வில் வென்று பயிற்சியை முடித்து முதல் முதலாக பொறுப்பேற்க வந்துகொண்டிருந்த ஐபிஎஸ் அதிகாரி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த 26 வயது இளைஞர் ஹர்ஷ் பர்தன், கர்நாடகாவில் கேடராக 2023 பேட்ச் ஐபிஎஸ் பேட்சில் பயிற்சி பெற்றவர் ஆவார். மைசூருவில் உள்ள கர்நாடக போலீஸ் அகாடமியில் அவர் நான்கு வார பயிற்சியை சமீபத்தில் முடித்தார்.'

    பயிற்சிக்காலம் முடித்த நிலையில் ஹோலேநரசிபூரில் புரபேஷனரி உதவிக் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்க ஹாசன் மாவட்டத்துக்கு நேற்று [ஞாயிற்றுக்கிழமை] ஹர்ஷ் பர்தன் போலீஸ் வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.

    ஹாசன்-மைசூரு நெடுஞ்சாலையின் கிட்டானே எல்லைக்கு அருகே அவர் பயணித்த போலீஸ் வாகனத்தில் டயர் திடீரென வெடித்ததில் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் சாலையோரம் இருந்த வீடு மற்றும் மரத்தின் மீது மோதியுள்ளது.

     

    இதில் டிரைவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில் ஹர்ஸ் பர்தனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில் இளம் அதிகாரி ஹர்ஸ் பர்தன் மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளார். 'ஐபிஎஸ் அதிகாரி ஹர்ஷ் பர்தன் இறந்த செய்தி கேட்டு வருந்துகிறேன். ஐபிஎஸ் பொறுப்பேற்கச் செல்லும் போது இதுபோன்ற விபத்து நடந்தது மிகவும் வருத்தமளிக்கிறது.

    பல வருட கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும் போது இப்படி நடந்திருக்கக் கூடாது. ஹர்ஷ் பர்தனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தனது X பக்கத்தில் சித்தராமையா பதிவிட்டுள்ளார்.

    • படுகாயமடைந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் சாலையை இருபக்கமும் கவனிக்காமல் கடந்த சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதிய அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் மங்களூரு எல்லைக்குட்பட்ட மஞ்சேஷ்வர் பகுதியில் நிகழ்ந்துள்ளது.

    56 வினாடிகள் ஓடும் வீடியோவில், பள்ளியில் இருந்து வெளியே வரும் மாணவர்கள் வீட்டிற்கும் செல்லும் உற்சாகத்தில் சாலையில் ஓடுகின்றனர். அப்போது 7 வயதுடைய ஒரு சிறுவன் இருபக்கமும் கவனிக்காமல் சாலையை கடந்த போது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்படுகிறார்.

    இதையடுத்து சுயநினைவை இழந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு படுகாயமடைந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக வீடியோவை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



    • அறைக்குள் சென்றவர்கள் இரண்டு நாட்களாக வெளியே வராமல் இருந்தனர்
    • அறையில் இருந்த சமயத்தில் நைலான் கயிறு ஒன்றையும் செப்ட்டோவில் ஆர்டர் செய்துள்ளார் ஆரவ்.

    பெங்களூரில் யூடியூபெர் காதலியை ஹோட்டல் ரூமில் வைத்து கொலை செய்து நாள் முழுவதும் காதலன் உடலுடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அசாம் மாநிலத்தை சேர்ந்த மாயா கோகாய் என்ற 19 வயது இளம்பெண் தனது கடந்த 23-ந்தேதி [சனிக்கிழமை] கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்திராநகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தனது காதலன் ஆரவ் ஹர்னி என்பவருடன் ரூம் எடுத்து தங்கியுள்ளார். 

    மதியம் 12.30 மணியளவில் அறைக்குள் சென்றவர்கள் இரண்டு நாட்களாக வெளியே வராமல் இருந்த நேற்று [செவ்வாய்க்கிழமை] காலை 8.30 மணியளவில் காதலன் ஆரவ் ஹர்னி மட்டும் வெளியே வந்துள்ளார். அவர் அங்கிருந்து சென்ற பின்னர் அறைக்குள் இருந்த துர்நாற்றம் வந்ததால் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளே சென்ற பார்த்தபோது மாயா கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடப்பதை பார்த்துள்ளனர்.

    போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த அவர்கள் மாயாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மாயா கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். கொலை செய்த பின்னர் 2 நாட்களாக அறைக்குள்ளேயே மாயா உடலுடன் இருந்த ஆரவ் நேற்று [செவ்வாய்க்கிழமை] அங்கிருந்து வெளியேறியுள்ளார் .

    உடலுடன் இரண்டு நாட்களாக இருந்த அவர் பெரும்பாலான நேரம் சடலத்தின் முன் அமர்ந்து சிகரெட் புகைத்தபடி கழித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.மாயாவின்உடலில் தலை உட்பட பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்துள்ளன. அவரது மார்பில் கத்தியால் குத்தப்பட்ட நிலயில் இருந்துள்ளார்.

     

    கொலையை செய்துவிட்டு உடலை துண்டு துண்டாக வெட்டி வேறு இடத்தில் போடுவதற்கு ஆரவ் திட்டமிட்டிருந்தாரா? என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அறையில் இருந்த சமயத்தில் நைலான் கயிறு ஒன்றையும் செப்ட்டோவில் ஆர்டர் செய்துள்ளார் ஆரவ். அரையில் இருந்த பொருட்களை வைத்து இவர்களது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாயா கோகாய் யூடியூபில் vlogging வலோக்கிங் செய்பவர்  என்று தெரியவந்துள்ளது.

    கொலை திட்டமிட்டு செய்யப்பட்டதை இது உறுதிப்படுத்துகிறது. நவம்பர் 23 முதல் 26 வரை அறைக்குள் வேறு யாரும் நுழைந்ததாக சிசிடிவி காட்சிகள் காட்டவில்லை. எனவே ஆரவ் தான் கொலையாளி என்பது உறுதியாகியுள்ள நிலையில் போனை ஸ்விட்ச் ஆப் செய்து தலைமறைவான அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்

     

    • அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி.

    ஒகேனக்கல்:

    கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து ள்ளது.

    இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 5500 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று காலையும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.


    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • பொருட்கள் ஏலம் விடுவதற்கு தடை நீடிப்பு.
    • விசாரணை ஜனவரி 3-ந் தேதிக்கு ஒத்திவைப்பு.

    பெங்களூரு:

    மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

    ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்றவர்களுக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது.

    மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் கர்நாடக அரசு வசம் உள்ளது. அந்த பொருட்களை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை ஜெயலலிதாவின் அபராத தொகையை செலுத்தும்படி பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்காக ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி கர்நாடக அரசுக்கு அந்த கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கிடையே ஜெயலலிதாவின் வாரிசு என்பதால் அவரது பொருட்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஜெ.தீபா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து அவர் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற சிறப்பு கோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

    இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் ஜெ.தீபாவின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசின் சிறப்பு வக்கீல் கிரண் ஜவளி ஆஜரானார்.

    அப்போது அவர், தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜராகி வாதிட மூத்த வக்கீல் சந்தேஷ் சவுட்டா தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி ஒரு கடிதத்தை நீதிபதியிடம் வழங்கினார். அதை நீதிபதி சிவசங்கர அமரன்னவர் ஏற்றுக் கொண்டார்.

    இதையடுத்து இந்த வழக்கின் இறுதி விசாரணையை வருகிற ஜனவரி மாதம் 3-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    எனவே ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்கள் ஏலம் விடுவதற்கு தொடர்ந்து தடை நீடிக்கிறது.

    ×