என் மலர்tooltip icon

    டெல்லி

    • பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 15-ம் தேதி வெளியிட்டது.
    • பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. இதுதொடர்பான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 15-ம் தேதி வெளியிட்டது.

    முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

    இதற்கிடையே, நடப்பாண்டின் யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு மே 26-ம் தேதி நாடு முழுதும் நடத்திட திட்டமிடப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதன்மை தேர்வுகளை ஜூன் 16-ம் தேதி நடத்திட திட்டமிட்டுள்ளதாக யு.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

    • ஏழு கட்டமாக நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டம் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது.
    • வாக்குபதிவு நாளன்று பணியில் உள்ள ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்குகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.

    இந்நிலையில், தேர்தல் வாக்குபதிவு நாளன்று பணியில் உள்ள ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது

    இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், தேர்தல் வாக்குபதிவு நாளன்று பணிபுரியும் ஊடகத் துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பல ஆண்டாக கோரிக்கை விடுத்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

    • சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.
    • கார்த்தி சிதம்பரம் மீதான 3-வது பண மோசடி வழக்கு இதுவாகும்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய மந்திரியாக இருந்தபோது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாகவும், இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து இருந்தது.

    பஞ்சாப்பில் வேதாந்தா குழுமத்தை சேர்ந்த டி.எஸ்.பி.எல். நிறுவனம் மின் நிலைய பணிகளில் ஈடுபடுவதற்காக 263 சீனர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்று தர அந்த நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவருக்கு நெருக்கமானவருமான பாஸ்கரன் என்பவருக்கும் லஞ்சம் கொடுத்தாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    தன் மீதான குற்றச்சாட்டுகளை கார்த்தி சிதம்பரம் நிராகரித்து இருந்தார். சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அமலாக்கத்துறை சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இருந்தது. இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று டெல்லி ரோஸ் அவின்யூ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கார்த்தி சிதம்பரம், அவரது உதவியாளர் எஸ்.பாஸ்கரராமன் மற்றும் ஒரு சில நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்பட 6 பேருக்கு கோர்ட் சம்மன் அனுப்பியது. அவர்கள் அனைவரும் அடுத்த மாதம் 5-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

    ஐ.என்.எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல்-மேக்சிஸ் வழக்குகளில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தது. அவர் மீதான 3-வது பண மோசடி வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாசுபட்ட நாடுகளின் தரவரிசையில் வங்காளதேசம் முதலிடத்தில் உள்ளது.
    • பாகிஸ்தான் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

    புதுடெல்லி:

    மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு காற்று மாசுபாடு மிகப்பெரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சராசரி ஆயுட்காலத்திற்கு முன்னதாக இறக்கும் 7 மில்லியன் நபர்களின் மரணங்களுக்கு காற்று மாசுபாடு காரணமாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

    இதற்கிடையே, சுவிட்சர்லாந்தில் உள்ள காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐ.க்யு.ஏர் உலகம் முழுவதும் காற்றின் தரம் குறித்த அளவீடுகளுடன் புள்ளிவிவர பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான உலக காற்று தர அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. மொத்தம் 134 நாடுகளில் ஆய்வு நடத்தி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் விவரம் வருமாறு:

    உலகிலேயே மாசுபட்ட தலைநகரங்கள் பட்டியலில் டெல்லி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது. டெல்லி நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    டெல்லியில் காற்று மாசை ஏற்படுத்தும் பிஎம்2.5 துகள்களின் செறிவு 2022-ல் ஒரு கன மீட்டருக்கு 89.1 மைக்ரோகிராம் என்ற அளவில் இருந்தது. அது, 2023-ல் 92.7 மைக்ரோகிராமாக மோசம் அடைந்துள்ளது.

    இதேபோல், காற்று மாசு மிகவும் மோசமான பெருநகரங்களில் பீகார் மாநிலம் பெகுசராய் முதலிடத்தில் உள்ளது. இந்த நகரத்தில் பி.எம்.2.5 துகள்களின் செறிவு ஒரு கனமீட்டருக்கு 118.9 மைக்ரோகிராமாக உள்ளது. 2022-ம் ஆண்டுக்கான தரவரிசையில் இந்த நகரம் இடம்பெறாத நிலையில் 2023-ல் மிகவும் மோசம் அடைந்துள்ளது.

    மாசுபட்ட நாடுகளின் தரவரிசையைப் பொருத்தவரை இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் சராசரியாக பிஎம்2.5 துகள்களின் செறிவு ஒரு கன மீட்டருக்கு 54.4 மைக்ரோகிராம் என்ற அளவில் உள்ளது. 2022-ம் ஆண்டு 53.3 மைக்ரோகிராம் என்ற அளவுடன் 8-வது இடத்தில் இருந்த நிலையில் கடந்த ஆண்டு மேலும் மோசமடைந்துள்ளது.

    இந்தப் பட்டியலில் வங்காளதேசம் முதலிடத்திலும், பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

    • ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் மும்பையில் நிறைவடைந்தது.
    • அப்போது பேசிய அவர், நாங்கள் சக்தியை எதிர்த்து போராடுகிறோம் என்றார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் மும்பையில் நிறைவடைந்தது.

    அப்போது பேசிய ராகுல் காந்தி, நாங்கள் தனியொரு நபரான மோடி அல்லது பா.ஜ.க.வை எதிர்த்துப் போராடவில்லை. சக்தியை எதிர்த்து போராடுகிறோம். இந்த சக்தி வாக்குப்பதிவு இயந்திரம், வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் வசம் உள்ளது என பேசினார்.

    இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி. ரவிசங்கர் பிரசாத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ராகுல் காந்தி நேற்று இந்து கலாசாரத்தை அவமதித்தார். அவர் தன் தவறை உணர்ந்து கொள்வார் என நினைத்தோம்.

    ஒருநாள் ஆன பிறகும் அந்த அறிக்கையை சரிசெய்யும் முயற்சிகள் இல்லை. கூட்டணி கட்சியினர் அவரது கருத்துக்கு அர்த்தத்தைத் தேடி, அதை நியாயப்படுத்த முயல்கின்றனர்.

    ராகுல் காந்தியின் கீழ் உள்ள காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும் லட்சியங்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சியாக இல்லை.

    பிரிவினை மனப்பான்மையும், மாவோயிஸ்ட் சிந்தனையும், இந்து விரோத சிந்தனையும் கொண்ட காங்கிரஸ் கட்சி இது. ராகுல் காந்தி இந்தக் கூறுகளின் ஆதிக்கத்தில் முழுமையாக இருக்கிறார்.

    பிற மத எண்ணங்கள் அல்லது கடவுள்களின் நம்பிக்கையின் அடிப்படைக் கொள்கைகள் குறித்து அதே இழிவான வார்த்தைகளில் பேச உங்களுக்கு தைரியம் உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.

    • டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுதீர் குமார் சிரோஹி முன்னிலையில் வழக்கு விசாரணை.
    • நீதிமன்ற காவல் விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

    ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய வழக்கில் கடந்த 9ம் தேதி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்.

    டெல்லியில் இருந்து உணவுப் பொருட்களை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அனுப்புவது போல ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்தி இருப்பது அம்பலமானதை அடுத்து அவர் மீதான பிடி இறுகி உள்ளது.

    டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுதீர் குமார் சிரோஹி முன்னிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது.

    இந்நிலையில், ஜாபர் சாதிக்கிற்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையே, ஜாபர் சாதிக் வீட்டில் போடப்பட்டுள்ள சீலை அகற்றக்கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    • மத்திய மந்திரி அமித்ஷாவை மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே நேரில் சந்தித்தார்.
    • இதனால் மக்களவை தேர்தலில் பாஜக-மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா இடையே கூட்டணி உறுதியாக வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, டெல்லியில் இன்று உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே உடனிருந்தார்.

    இந்தச் சந்திப்பின் மூலம் மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா இடையே கூட்டணி உறுதியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த கூட்டணி உறுதியானால் மகராஷ்டிர தலைநகர் மும்பையில் போட்டியிட நவநிர்மாண் சேனாவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேசமயம், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு மும்பை தொகுதியில் குறிப்பிடத்தக்க ஆதரவு உள்ளது. சிவசேனாவில் இருந்து பிரிந்த பிறகு நவநிர்மாண் சேனாவால் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

    • கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி குடியுரிமை திருத்த சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
    • பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவசரமாக குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவசரமாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான இச்சட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் 237 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு (DYFI), காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ், திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி மஹுவா மொய்த்ரா மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் ஒவைசி ஆகியோர் ஆகியோரின் மனுக்களும் அடங்கும்.

    இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (CAA) தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஏப்ரல் 8-ம் தேதிக்குள் ஒன்றிய அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.

    இதன்படி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹேமந்த் சோரன் மனைவியை முதல் மந்திரி ஆக்குவதற்கு அண்ணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
    • 2019 தேர்தலுக்குப் பிறகு தான் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டேன் எனவும் குற்றம் சாட்டினார்.

    புதுடெல்லி:

    ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன் மீதான நில மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அப்போது சோரனின் மனைவி கல்பனாவை முதல் மந்திரி ஆக்குவதற்கு ஹேமந்த் சோரனின் அண்ணியான சீதா சோரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    2019 தேர்தலுக்குப் பிறகு தான் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டேன். வளர்ந்து விட்ட தனது 2 மகள்களையும் ஹேமந்த் சோரன் கண்டு கொள்வதில்லை என சீதா சோரன் குற்றம் சாட்டினார்.

    இதற்கிடையே, சீதா சோரன் கட்சியில் இருந்து திடீரென விலகினார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் சீதா சோரன் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். அவரை பாஜகவினர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

    • அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோருடன் இணைந்து கவிதா முறைகேடு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
    • வியாபாரிகளிடம் இருந்து வந்த பணத்தை ஆம் ஆத்மி கட்சியினர் பங்கு போட்டு கொண்டனர்

    ஐதராபாத்:

    டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் கடந்த 15-ந்தேதி தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகள் கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரை வருகிற 23-ந்தேதி வரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    இந்நிலையில் அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், மதுபான கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோருடன் இணைந்து கவிதா முறைகேடு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

    மொத்த வியாபாரிகளிடம் இருந்து வந்த பணத்தை ஆம் ஆத்மி கட்சியினர் பங்கு போட்டு கொண்டனர். ஆம் ஆத்மி கட்சிக்கு கவிதா ரூ.100 கோடி வழங்கி உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
    • உத்தரவை மீறி மீண்டும் விளம்பரப்படுத்தப்பட்டதால் அவமதிப்பு வழக்கு.

    பதஞ்சலி தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி மீண்டும் விளம்பரப்படுத்தியதாக, பதஞ்சலி நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இது தொடர்பாக நிர்வாக இயக்குர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இருவரும் பதில் அளிக்கவில்லை. அதேவேளையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு இன்று ஹீமா கோலி, அசானுதீன் அமானுல்லா ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அவமதிப்பு தொடர்பாக விளக்கம் அளிக்க கேட்டுக்கொண்ட போதிலும், விளக்கம் அளிக்காமல் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளீர்கள். ஆனால் நீதிமன்றத்தில் பதில் அளிக்கவில்லை என நீதிபதிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

    மேலும், பதஞ்சலி நிர்வாக இயக்குர் ஆச்சார்யா பால்கிருஷ்ணாவுக்கு நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதேபோல் பதஞ்சலின் துணை நிறுவனரான ராம்தேவ் அடுத்த விசாரணையின்போது ஆஜராக வேண்டும். நாங்கள் தேதி அறிவிப்வோம் என நீதிபதிகள் அறிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.
    • தெலுங்கானா-புதுச்சேரி கவர்னர் பொறுப்புகளை ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதா கிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார்.

    புதுடெல்லி:

    தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.

    அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இதையடுத்து தெலுங்கானா-புதுச்சேரி கவர்னர் பொறுப்புகளை ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதா கிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இரு மாநிலங்களுக்கும் புதிய கவர்னர் நியமனம் செய்யும் வரை அவர் இந்த பொறுப்புகளை வகிப்பார்.

    தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் பதவி விலகியதை தொடர்ந்து அதே பதவியை கவனிக்கும் பொறுப்பு மற்றொரு தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×