என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • மீன்வளத்துறை அதிகாரி தாமோதர் அலுவலகத்திற்கு சென்றனர்.
    • மீனவர்கள் கலெக்டர் யாஸ்மின் பாஷாவிடம் புகார் அளித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மெடிப்பள்ளி மாவட்டம், கல்வ கோட்டையில் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரியாக இருப்பவர் தாமோதர்.

    அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் சங்கம் அமைக்க தாமோதரை அணுகினர். அனுமதி தராமல் அலைக்கழித்து வந்தார்.

    இந்த நிலையில் மீனவர்கள் சங்கம் அமைக்க அனுமதி வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என மீனவர்களிடம் தாமோதர் கேட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மீனவர் சங்க தலைவர் பிரவீன் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை அதிகாரி தாமோதர் அலுவலகத்திற்கு சென்றனர்.

    அலுவலகத்தில் இருந்த தாமோதரை அலுவலகத்திற்கு வெளியே இழுத்து வந்து ரூபாய் நோட்டு மாலைகளை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தாமோதர் எனக்கு பின்னால் அமைச்சர் ஒருவர் இருக்கிறார். இதனால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டி உள்ளார்.

    இதுகுறித்து மீனவர்கள் கலெக்டர் யாஸ்மின் பாஷாவிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • பொதுமக்கள் கடற்கரையில் குவிந்து சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டு ஆரவாரம் செய்தனர்.

    திருப்பதி:

    கடற்படை தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

    கடற்படை தினத்தை முன்னிட்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் 4-ந் தேதி சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    மிச்சாங் புயல் காரணமாக 4-ந் தேதி நடைபெற இருந்த சாகச நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு நேற்று மாலை நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    விமானப்படை பிரிவுகளை சேர்ந்த வீரர்கள் சாகசம் செய்தனர். விண்ணில் விமானத்தில் பறந்து தீப்பிழம்பை கக்கிய படியும், விமானங்கள் குறுக்கு நெடுக்காக சென்றும், வண்ணப் பொடிகளைத் தூவியும் சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர்.

    இதேபோல் கடற்படை வீரர்கள் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் சாகசங்களை செய்து காண்பித்தனர்.

    ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடற்கரையில் குவிந்து சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டு ஆரவாரம் செய்தனர். 

    • சுவாதி நட்சத்திரத்தையொட்டி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம்.
    • கார்த்திகை மாத கடைசி ஞாயிறு பேடிஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

    திருமலை:

    திருமலை-திருப்பதி முதலாவது மலைப்பாதையில் 7-வது மைல் அருகில் அலிபிரி நடைபாதை ஓரம் லட்சுமிநரசிம்மர் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தையொட்டி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம்.

    அதன்படி நேற்று காலை சுவாதி நட்சத்திரத்தில் மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், பன்னீர் ஆகிய சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. அதில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.

    அதேபோல் திருமலையில் ஏழுமலையான் கோவில் எதிரே உள்ள பேடிஆஞ்சநேயர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று மூலவர் பேடிஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம்.

    அதன்படி கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று பேடி ஆஞ்சநேயர் கோவிலில் மூலமூர்த்திக்கு காலை மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன் ஆகிய சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபராதனை காண்பிக்கப்பட்டது.

    அதில் திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, பறக்கும் படை அதிகாரி நந்தகிஷோர், பேஷ்கார் ஸ்ரீஹரி மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆந்திரா மற்றும் தமிழகத்தில் புயலால் பரவலான சேதங்களை மேற்கோள் காட்டினார்.
    • சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்கும் மத்திய குழுவை அனுப்பு வேண்டும்.

    மிச்சாங் புயலால் ஏற்பட்ட அழிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு இன்று கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

    ஆந்திரா மற்றும் தமிழகத்தில் புயலால் பரவலான சேதங்களை மேற்கோள் காட்டி, சந்திரபாபு நாயுடு அதன் பாதிப்பை பிரதமர் மோடியிடம் தெரிவித்தார்.

    இந்தச் சூழலில், "புயலின் தாக்கம் ஆந்திராவில் மட்டும் இல்லாமல், அண்டை மாநிலமான தமிழகத்தையும் பாதித்துள்ளது என்பதை உணர்ந்து, மிச்சாங் புயலை தேசியப் பேரிடராக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று சந்திரபாபு நாயுடு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்கும் மத்திய குழுவை அனுப்புமாறு பிரதமர் மோடியை அவர் வலியுறுத்தினார்.

    மேலும், "770 கிமீ சாலைகள் சேதம் மற்றும் குடிநீர், நீர்ப்பாசனம், மின்சாரம் மற்றும் பிற வசதிகளில் கணிசமான பாதிப்புகளுடன் ரூ. 10 ஆயிரம் கோடி வரை பயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப மதிப்பீடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

    பேரிடரை தேசிய பேரிடராக அங்கீகரிப்பது உடனடி நிவாரண முயற்சிகளுக்கு தேவையான உத்வேகத்தை வழங்கும், நீடித்த மற்றும் நீண்ட கால உள்கட்டமைப்பை நிறுவும்" என்று சந்திரபாபு நாயுடு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • வரும் 2024 சட்டமன்ற தேர்தலில் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெறுவது உறுதி.
    • ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் பெண்கள் போட்டி போட்டு சாதிக்க வேண்டும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மந்திரி ரோஜா காக்கிநாடா மாவட்டம் சமல் கோட்டில் உள்ள சாளுக்கிய குமார ராம பீமேஸ்வர சாமி கோவிலில் தரிசனம் செய்தார்.

    இதையடுத்து ராஜ நகரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியை தொடங்கி வைத்தார்.

    வரும் 2024 சட்டமன்ற தேர்தலில் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெறுவது உறுதி.

    தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் தோல்வி அடைவார்கள். தோல்வி அடைந்த பிறகு இருவரும் மனநல கோளாறுகளுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும்.

    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் முதல் மந்திரியாக வர வேண்டும் என்பதற்காக சாமியிடம் பிரார்த்தனை செய்தேன்.

    ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் பெண்கள் போட்டி போட்டு சாதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பார்வேடு மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன மஹோற்சவம் நடந்தது.
    • ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு அர்ச்சகர்கள் ஸ்நாபன திருமஞ்சனம் செய்தனர்.

    திருமலை:

    புனித கார்த்திகை மாதத்தில் சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வனபோஜன மஹோற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று திருப்பதியை அடுத்த ஸ்ரீவாரிமெட்டில் உள்ள பார்வேடு மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன மஹோற்சவம் நடந்தது.

    அதற்காக, காலை 7 மணியளவில் சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் இருந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க, பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக ஸ்ரீவாரிமெட்டில் உள்ள பார்வேடு மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

    அந்த மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு அர்ச்சகர்கள் ஸ்நாபன திருமஞ்சனம் செய்தனர். மதியம் 12 மணியில் இருந்து மாலை 3 மணி வரை கார்த்திகை வனபோஜன மஹோற்சவத்தை நடத்தினர்.

    அப்போது கோவில் அர்ச்சகர் நாராயணாச்சாரியார் கூறியதாவது:-

    மகாவிஷ்ணு புனித கார்த்திகை மாதத்தில் நெல்லிமரத்தின் கீழே அமர்ந்து உணவு சாப்பிடுவதை விரும்புவார். அதைக் கொண்டாடும் வகையில் வைணவ கோவில்களில் கார்த்திகை வனபோஜன மஹோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2013-2014ம் ஆண்டு முதல் தேவஸ்தானம் கார்த்திகை தாமோதர வனபோஜன உற்சவத்தை தொடங்கி நடத்தி வருகிறது.

    அதே ஆண்டில் இருந்து சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலிலும் கார்த்திகை வனபோஜன மஹோற்சவத்தை தொடங்கி தொடச்சியாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. வனபோஜனத்தில் பக்தர்கள் பங்கேற்று அன்னப்பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டால் நல்லது நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கார்த்திகை வனபோஜன மஹோற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அதிகாரிகள் அன்னப்பிரசாதம் வழங்கினர்.

    அதையொட்டி திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் அன்னமாச்சாரியார் திட்ட கலைஞர்கள் பலர் பங்ேகற்று அன்னமயாவின் சங்கீர்த்தனங்களை பாடினர்.

    • குடும்பத்துடன் ஓட்டலுக்கு சென்று ஐதராபாத் பிரியாணி சாப்பிட்டனர்.
    • பாகுபலி சாப்பாடு சாப்பிட்டால் ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும்

    திருப்பதி:

    ஐதராபாத் பிரியாணி பெயரைக் கேட்டாலே ருசிக்க தோன்றும். சுவையான இந்த பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

    இந்த நிலையில் ஐதராபாத்தில் பிரபல ஓட்டல் நிர்வாகம் ஒன்று தற்போது 3 இடங்களில் புதிய கிளைகளை திறந்தது. இங்கு 2 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டது.

    இதனைக் கண்ட அசைவ பிரியர்கள் ஓட்டல் முன்பு குவிந்தனர். அப்போதுதான் ஓட்டல் நிர்வாகம் ஒரு நிபந்தனையை விதித்தது. அது என்னவென்றால் பழைய 2 ரூபாய் நோட்டுகள் தந்தால் மட்டுமே 2 ரூபாய்க்கான பிரியாணி வழங்கப்படும் என தெரிவித்தது.

    இதனை கேட்ட வாடிக்கையாளர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஒரு சிலர் தங்கள் வீடுகளில் வைத்திருந்த பழைய 2 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் ஓட்டலுக்கு சென்று ஐதராபாத் பிரியாணி சாப்பிட்டனர்.

    இது குறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் கூறுகையில்:-

    பொதுமக்களிடம் இன்னும் பழைய 2 ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா என்பதை கண்டறிய இந்த நூதன விற்பனையை தொடங்கினோம். இதுவரை எங்களிடம் 120 ரூபாய் மதிப்பிலான 2 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

    எங்கள் உணவகம் சார்பில் 30 நிமிடங்களில் 30-க்கும் மேற்பட்ட உணவுகள் கொண்ட பாகுபலி சாப்பாடு சாப்பிட்டால் ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளோம்.

    இதன் விலை ரூ.1,999 இந்த கட்டணத்தை செலுத்தி 30 நிமிடங்களில் 30-க்கும் மேற்பட்ட உணவுகளை சாப்பிட்டவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்க பரிசை வழங்கி வருகிறோம். இதுவரை இந்த போட்டியில் 7 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல்-மந்திரி ஜெகன்மோகன் திருப்பதி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
    • சீரான நிலை அடையும் வரை அரசு அனைத்து வழிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக நிற்கும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் உள்ள கடலோரப் பகுதியில் மிச்சாங் புயல் காரணமாக கனமழை பெய்தது.

    இதில் நெல்லூர், திருப்பதி, கிழக்கு கோதாவரி, பிரகாசம், என்.டி.ஆர். உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டது. ஆயிரக்காணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது.

    இந்நிலையில், முதல்-மந்திரி ஜெகன்மோகன் திருப்பதி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

    மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், மின்சாரம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்டவை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சீரான நிலை அடையும் வரை அரசு அனைத்து வழிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக நிற்கும்.

    மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,500 நிவாரண தொகை உடனடியாக வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஒரு வாரமாக திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளது.
    • திருப்பதியில் நேற்று 54,523 பேர் தரிசனம் செய்தனர். 20,817 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    திருப்பதி:

    மிச்சாங் புயல் கோர தாண்டவம் ஆடியதால் தமிழகம் மற்றும் ஆந்திராவில் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    புயல் மழை ஓய்ந்து 4 நாட்களுக்கு மேல் ஆகியும் மழை தாக்கம் நீடிக்கிறது. மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

    இதனால் கடந்த ஒரு வாரமாக திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளது. இதனால் பக்தர்கள் அறைகளில் தங்க வைக்காமல் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    பக்தர்கள் கூட்டம் குறைந்ததால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு உண்டியல் வருவாய், தங்கும் அறை வாடகை உள்ளிட்ட இதர வருவாய்கள் குறைந்தது.

    ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டில் வந்த பக்தர்கள் 2 மணி நேரத்திலும், நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 5 மணி நேரத்திலும் தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 54,523 பேர் தரிசனம் செய்தனர். 20,817 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • தெலுங்கு தேசம் கட்சியினர் அப்பகுதியில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • என்.டி.ராமராவை மக்களின் இதயங்களில் இருந்து அகற்ற முடியாது.

     திருப்பதி:

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி நிறுவனரும், முன்னாள் முதல் மந்திரியுமான என்.டி. ராமராவ் உருவ சிலைகள் மாநிலம் முழுவதும் உள்ளன.

    இந்த நிலையில் பாபட்லா மாவட்டம் பர்திபுடி சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த என்.டி. ராமராவ் சிலையின் தலையை இரவு மர்ம நபர்கள் துண்டித்து கீழே வீசி சென்றனர்.

    இதனை கண்ட தெலுங்கு தேசம் கட்சியினர் அப்பகுதியில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். என்.டி. ராமராவ் சிலையின் தலை துண்டிக்கப்பட்டது வெட்கக்கேடான செயல். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கோழைத்தனமான செயலில் ஈடுபட்டு உள்ளனர்.

    சிலையின் தலையை துண்டித்தவர்களை கண்டுபிடித்து கிரிமினல் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் கூறுகையில்:-

    வரும் தேர்தலில் தோல்வியை சந்திக்க நேரிடும் என்ற கவலையில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

    இதுபோன்ற செயல்களால் என்.டி.ராமராவை மக்களின் இதயங்களில் இருந்து அகற்ற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்

    • குறவைய்யாவை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்தது சம்பந்தமாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், தாடி பத்திரி, சி.பி.ஐ காலனியை சேர்ந்தவர் ராம குறவைய்யா. கடந்த மாதம் 25-ந் தேதி ராம குறவைய்யாவுக்கும் அவரது நண்பருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் காயம் அடைந்த நண்பர் இது குறித்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அமீத்கான் வழக்கு பதிவு செய்து குறவைய்யாவை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தார்.

    பின்னர் போலீஸ் நிலையத்தில் வைத்து குறவைய்யாவின் மூக்கு மற்றும் காதில் மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்தார். இதில் குறவைய்யாவின் மூக்கு மற்றும் காதில் காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து குறவைய்யாவை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து குறவைய்யா அனந்தபூர் போலீஸ் சூப்பிரண்டு அன்புராஜனிடம் புகார் செய்தார். மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்தது சம்பந்தமாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

    விசாரணையில் இன்ஸ்பெக்டர் அமித்கான் என்பவர் மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்தது தெரிய வந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அன்பு ராஜன் தெரிவித்தார்.

    • உற்சவர் கங்கையம்மன்களுக்கு சிறப்புப் பூஜைகள் நடந்தன.
    • திருவிழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இதனால் நகரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏழு கங்கையம்மன் கோவிலில் உற்சவர் கங்கையம்மன்களுக்கு சிறப்புப் பூஜைகள் நடந்தன. பூஜைகள் முடிந்ததும் உற்சவர்களான ஏழு கங்கையம்மன்கள் எதிரே போடப்பட்டு இருந்த திரைகள் அகற்றப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    இதையடுத்து உற்சவர் கங்கையம்மன்கள் அங்கிருந்து சிவன் கோவில் திருக்கல்யாண மண்டபம் நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய உற்சவர்கள் ஊர்வலம் ஏழு பகுதிகளான ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் திருக்கல்யாண மண்டபம், பேரிவாரி மண்டபம், ஜெயராம் ராவ் வீதி, சன்னதி வீதி, பிராமண வீதி எனப்படும் தேர் வீதி, காந்தி வீதி, கொத்தப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்ல சுமார் 3 மணி நேரம் ஆனது. உற்சவர் ஏழு கங்கையம்மன்கள் அந்தந்த நிலையை அடைந்ததும், அங்கு உற்சவர் ஏழு கங்கையம்மன்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டன.

    திருவிழாவில் ஸ்ரீகாளஹஸ்தி நகர மக்கள், பக்தர்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவர் ஏழு கங்கையம்மன் மற்றும் உற்சவர் ஏழு கங்கையம்மன்களை தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆடுகள், கோழிகள் பலியிட்டனர். ஒருசில பக்தர்கள் கோவில் வாசலில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    நிறைவாக உற்சவர் ஏழு கங்கையம்மன்களுக்கு பல்வேறு பூஜைகள் முடிந்ததும் இரவு 9 மணியளவில் மேளதாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு உற்சவர் ஏழு கங்கையம்மன்கள் மற்றும் மூலவர் ஏழு கங்கையம்மனுக்கு சிறப்புப்பூஜைகள் செய்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று இன்று (வியாழக்கிழமை) நீரில் கரைக்கப்படுகின்றன. இதோடு கோவில் திருவிழா நிறைவடைகிறது.

    கோவில் திருவிழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. திருவிழாவின்போது அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஸ்ரீகாளஹஸ்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நேற்று முன்தினத்தில் இருந்து இன்று காலை வரை நகருக்குள் பஸ்கள், லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கனரக வாகனங்கள் புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. சிவன் கோவில் நான்கு மாட வீதிகளில் ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தன.

    ×